அணிந்துரை
தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் இலக்கியம் பல கிளைகளைக் கொண்டது. இலக்கியம், செய்யுள் வடிவத்திலும் உரைநடை வடிவாகவும் படைக்கப்படுகின்றன. இவை கலை வடிவம் கொண்டவை.
இலக்கியம், காலத்தை வென்று வாழக்கூடியது. உலக வரலாற்றையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது.
இலக்கியம் படைப்பாசிரயரோடு தொடர்புடையது. படைப்பாளர் அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்வுகள், கிடைக்கும் அனுபவங்கள், உணர்ச்சிமிக்க கலை வடிவங்களாக வடிக்கப்பெற்று, அவை கவிதையாக, புதினமாக, நாடகமாக, சிறுகதையாக அமைகின்றன.
இக்கால இலக்கியங்களில் புதினமும் சிறுகதையும் சிறந்து விளங்குகின்றன.
புதினம் நெடுங்கதை அல்லது பெருங்கதை என்றும், சிறுகதை சிறியகதை என்றும் பொருள்படும்.
புதினத்தை விட சிறுகதையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சுவையான ஒரு நிகழ்ச்சி, கவர்ச்சியான ஒரு காட்சி, ஒருவரின் தனிப்பண்பு, ஒரு சிறு அனுபவம், வாழ்க்கையில் பெறுகின்ற வெற்றி, அறவுணர்வு ஆகிய இவற்றை உணர்த்தும் கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும்.
“மழைச்சாரல்…” என்ற இத்தொகுப்பு பதினெட்டு சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவமாக அமைந்துள்ளன. படைப்பாளருக்கு கிடைக்கின்ற சூழல் அனுபவத்தின் பயனைப் படிப்பவ்ர்களும் பெறக்கூடும்.
இத்தொகுப்பிலுள்ள கதைகளில் கதாசிரியரே பாத்திரமாகிவிடுகிறார். படைப்பாளரே கதைமாந்தர்களில் ஒருவராகி கதை கூறும் முறை, கதை கூறும் உத்திகளில் ஒன்றாகும். இம்முறையினை அறிஞர் மு.வ. அவர்களின் புதினங்களில் காணலாம்.
திரு என் சுரேஷ் அவர்களின் சிறுகதை முதல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் அணிவகுப்பில் இவர் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!
இச்சிறுகதைகளில் குறிப்பிடக்கூடிய பகுதிகள் பல இருப்பினும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
“ சென்னை கிராமம் இன்னமும் மிச்சம் இருப்பது இங்கிருக்கும் ஓலை வீடுகளில் தான்” என்று சிங்காரச் சென்னையை ஆய்வு செய்கிறார்.
“அரசே மது விற்கிறது” என்று ஒரு கேள்வியும், “ கள்ளச் சாராயம் ஏழைகளின் உயிரை அழித்தால் பரவாயில்லையா?” என்றொரு எதிர் கேள்வியையே பதிலாகவும் தருகிறார், “மழைச்சாரல்” எனும் கதையில்.
“விமான நிலையத்தில்” எனும் தலைப்பில், கோட்டை கட்டி ஆண்ட சரித்திரம் கம்பி வலைக்குள்ளும், அகதிகளாகவும் வாழும் நிலையைச் சுருக்கியுரைத்து சுருக்கென்று சுடுகிறது.
“ஓர் அலைபேசி அழைப்பில்”, “நீங்கள், அலைபேசி வழியாக, ‘ அம்மா சாப்பிட்டீர்களா?’ என்று ஒற்றைக் கேள்வியைத் தூக்கி வீசுகிறது. நெஞ்சம் பற்றி எரிகிறது. நாம் ஒரு பொழுதுகூட இவ்வாறு எண்ணிப் பார்க்கவில்லையே என்று நெஞ்சம் பதைக்க வைக்கிறது. தாய்ப்பாசத்தை நாம் மிகவும் சாதாரணமாகக் கருதிக் கொண்டிருக்கின்றோம்! என்று நமது குறையைத் திருத்துகிறது. இதனை படைப்பாளரின் வெற்றியாகக் கருதலாம்.
“பூங்காவில் ரிஸ்வானா” எனும் கதையில்,
‘பூங்காவில் ஆங்காங்கே பச்சை நிழல்’
‘அவள் கண்ணின் அழகே அவள் இளமையானவள், அழகி, இனிமையானவள் என்னும் செய்தி’
‘மாற்றங்களை நான் ஆசைப்பட்டால் அது முதலில் என்னிடமிருந்தல்லவா ஆரம்பிக்க வேண்டும்?” என்னும் இடங்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.
‘ உயர்ந்த சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் அரசின் நலத்திட்டங்களில் பல உயர்சாதி ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை’ எனும் சமூகச்சிந்தனை கருத்துக்கள் நெஞ்சைத் தொடுகின்றன.
பலவிடங்களில் ஆசிரியரின் மனக்குமுறலைக் காணமுடிகிறது. அத்தகைய குமுறலே அவரின் படைப்புகளுக்கு மூலமாக இருக்கக் காண்கிறேன்.
திரு. என் சுரேஷ் அவர்களின் படைப்புக்கு வாசகர்கள் அவரை ஆதரித்து மேலும் மேலும் எழுதத்தூண்ட வேண்டும்.
வாழ்த்துக்களுடன்,
முனைவர் இர. வாசுதேவன் MA., Mphil., Ph.d.
2 comments:
பூங்கொத்தும் வாழ்த்துக்களும்!!!
சிறப்பான அணிந்துரை. பகிர்வுக்கு நன்றி.
நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Post a Comment