கடந்து போனவள்
உனை மறந்து
மகிழ்ச்சி வானத்தில்
பறந்துகொண்டிருக்கிறாள்!
சகபயணி என் தம்பி நீயோ
கவலைக்கடலில்
வானத்தைப் பார்த்தபடி!
இது சரியோ?
ஓடி ஓடிச் சென்றாய் நீ - ஆனால்
உனை விட்டுப் பறந்து சென்றது அந்த இரயில்!
இதனால் வேதனை ஏனோ இன்னும் உன்னில்?
கவலையை விடு!
அடுத்த இரயில்
உனக்காகவே வந்து கொண்டிருக்கிறது!
உனைத் தேடி வரும் இரயிலில் பயணிப்பது
தண்டவாளத்தில் தலைவைப்பதை விட மேல்!
எதையும் எப்போதும் எப்படியும்
சொல்லும் இந்த உலகம்
உன்னை ஒரு நாள் புத்தியுடன் வாழ்த்தும்
கொஞ்சம் பொறு என் கறுப்புத் தங்கமே
விரைவில் நீ ஓர் அழகிய ஆபரணமாகிவிடுவாய்!
உந்தன் கவிதையின் அழகை ரசிப்போர் சிலர் -ஆனால்
உந்தன் கவிதையின் கவலைகளில் கரைபவன் நான்!
நீ எழுதும் கவிதைகள் உனது கவலைகளை
வெளியேற்றுவதாய் சொல்கிறாய்
அது உந்தன் இதயத்திலிருந்து சுரக்கும்
இரத்தத்தால் எழுதப்படுகிறதென்று
ஏனோ அறியாமல்!
உந்தன் கவிதைகளுக்கும் நீ
புத்தாடையும் புத்துணர்வும் கொடு
புதிய மனிதனாய் நீ மீண்டும் இவ்வுலகைப் பார்!
காதலும் இரயிலும் ஒன்றா? - என்போரிடம்
"வாழ்க்கையே ஓர் இரயில் பயணம்" - என்று
புன்னகையோடு சொல்!
சித்தனென்று இவ்வுலகம்
உந்தன் காலில் விழும்
அந்த கூட்டத்தில் அவளும் இருப்பாள்
"மன்னிப்பு" என்ற பேராயுதத்தால்
அவளையும் அன்போடு தண்டித்து விடு!
அமைதி நிச்சயம்
என் தம்பி உனக்கு - அதனால்
மகிழ்ச்சி எனக்கும் நம் இல்லத்தாருக்கும்!
எந்தன் கண்ணீர் மட்டும்
உந்தன் மனக்காயத்திற்கெல்லாம்
மருந்தாக மாறியிருப்பின்
என்றோ தேறியிருப்பாய்
என் அன்புத் தம்பியே நீ!
அன்புடன் ஓர் செய்தி, என் தம்பி!
இதற்குமேலும் நீ மாறவில்லை எனில்
உனை மாற்ற நீ முயற்சிக்கவில்லை எனில்
உனை நினைத்தே உருகி உருகி உறங்குமென்னை
விரைவில் ஒரு பூமாலையோடு நீ சந்திக்ககூடும்!
நான் எங்கிருந்தாலும்
உந்தன் மகிழ்ச்சியை மட்டும்
காணத்துடிக்கும்
பாசமுடன் உன் அண்ணன்
என் சுரேஷ்