உலகத் தமிழ் மக்கள் எல்லோருக்கும் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்களை நன்றாகவே தெரியும். 1950 ல் சிறுவனாக இலங்கை வானொலியில் கால்ப்பதிவு. 1951 ல் ஆடிசன் இல்லாமலே நாடகத்திற்கு தேர்வு. 1962ல் இந்தியா திரும்பி, அகில இந்திய வானொலியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ச்சி. 1980 முதல் ஒலிபரப்பில் ஒரு புதியமுகம். கிரிக்கெட் நேர்முக வர்ணனை தமிழில். 1986 உலகக் கோப்பையின்போது பி.பி.சியில்,. 1999 உலகக்கோப்பை வர்ணனை லண்டன் 24 மணிநேர ஒலிபரப்பில் ஐ,பி.சி - தமிழில். 1993 ல் இலங்கை அரசு கலாச்சார அமைச்சரவையின் "பதுருல் மில்லத்" பட்டம் - விருது - பொற்கிழி. 1997 அகில இந்திய வானொலியின் சுதந்திர தின பொன்விழாவை ஒட்டி "மிகச்சிறந்த ஒலிபரப்புக் கலைஞன்" என்ற விருது. இலண்டன் ஐ.பி.சியில் வாரந்தோரும் தொடர்ச்சியாக "இந்தியக் கண்ணோட்டம்". இதுபோல லண்டன் தீபம் தொலைக்காட்சியில் "அரங்கம் - அந்தரங்கம்" நிகழ்ச்சி. நாடகம் இலக்கியம் - விளையாட்டு என்று தொடரும் இவரது கலைப்பணிக்கு வயது ஐபத்தி எட்டிற்கும் மேல்!
திரு அப்துள் ஜப்பார் ஐயா அவர்கள் "காற்று வெளியினிலே... என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மித்ரா ஆர்ட்ஸ் என்ற நிறுவனம், இந்த புத்தகத்தை 2003 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டுள்ளது.
அன்புக் கவிஞர் அறிவுமதியும், கலைமாமணி வி.கேடி பாலன் அவர்களும், அன்பு அறிவிப்பாளர் திரு பி.எச். அப்துல் ஹமீத் அவர்களும் இந்த புத்தகத்திற்கு அணிந்துரை, முன்னுரை எல்லாம் கொடுத்து வாசகரை அன்போடு வரவேற்கிறது.
" ஓவ்வொருவரையும் அவரவர் கலைத்துறையில் அவரவருக்கு நேர்ந்த அனுபவங்களை குறிப்பெடுத்து எழுதும்படி கேட்கப் போகிறேன், நாளை ஒரு சமயம் அந்தந்த துறைகளின் வளர்ச்சி - வீழ்ச்சிகளையும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்களிப்புகளையும் மதிப்பீடு செய்ய இது பெரிதும் உதவும், பிஸ்மில்லா நீ முதலில் துவங்கு" என்று முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள், தான் கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி பார்த்துக் கொண்டே எழுத்துக்களால் வரைந்த நல்ல ஓர் ஓவியம் தான் இந்த காற்று வெளியினிலே... என்ற அழகிய புத்தகம்.
அதனால் இந்த புத்தகத்தில் ஒரு சுயசரிதையின் கொடுமையில்லை. திரும்பிப்பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு ஒருவன் கண்ட காணக்கூடாதவைகளின் தேவையற்ற அலங்கரிப்புகளுமில்லை.
மிக மிக மென்மையான கருத்தோட்டம். மிக அழகான தமிழ் - இவைகள் இரண்டும் இந்த அழகிய ஓவியத்திற்கு பேரழகான இரு கண்களாக அமைந்துள்ளது.
" நான் ஒரு நல்ல மகனாக இருந்தேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தேன் ஒரு நல்ல தந்தையாக - கணவனாக இருந்து வருகிறேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் மேல்படிப்புக்கு வசதி இருக்கவில்லை. கலை உலகிலும் கால் ஊன்றி இருக்கிறேன். தொழில் துறையிலும் நின்று பிடித்திருக்கிறேன். எளியவனாகவே இருக்கிறேன். என் உழைப்புக்கும், ஈடுபாடுக்கும் எங்கோ போயிருக்கவேண்டியவன். எனினும் கார்-பங்களா என்றில்லாவிட்டாலும் கடன் இல்லாத வாழ்வு - பசி இல்லாத வாழ்வு என்பது இன்று வரை எனக்கு கை கூடி வந்திருக்கிறது. அரசர்களோடு உலவும் - குலவும் வாய்ப்பிருந்தும் சாமன்யர்களோடு சரிசமமாகப் பழகும் பண்பு இன்றும் அன்றும் எனக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. கேரளத்தில் நாற்பத்தி இரண்டு காலம் நான்கு பெரிய நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும், எந்த ஒரு காரணத்துக்காகவும் தொழிலாளர்கள் போராட்டக் கொடி உயர்த்தாமல் பார்த்துக்கொண்டது என் மனிதாபிமான அணுகுமுறைக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன்."
இந்த ஒரு பகுதி வாசித்தாலே திரு அப்துல் ஜப்பார் ஐயாவைப் பற்றி ஓரளவிற்கு யாருக்கும் யூக்கிக்கக் கூடும்.
இலங்கையில் இவரது சிறுவர் காலம் முதல் இளமைக்காலம் வரை நடந்த நிகழ்வுகளில் முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றி அதிகமாக வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். அன்று முதல் கிடைத்த நண்பர்கள். நாடக அமைப்பு, நாடகத்தின் சில் தொழில்நுட்பங்கள் என பல சம்பவங்களையும் பல கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி நமது மனதில் பதிவு செய்கிறார்.
தன்னுடன் எந்த நிகழ்ச்சிகளானாலும் சரி, பங்கேற்கும் கலைஞர்களில் ஒருவன் எத்தனை சோப்ளாங்கியானாலும் சரியே அவனை தட்டிக் கொடுத்து அரவணைப்பார், ஒரு போதும் இவர் யாரையும் தட்டிக்கழித்து வேதனைப்படுத்துவதில்லை. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகவே இன்றும் கடைபிடித்து வருகிறார் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் என்பதை இந்த புத்தகத்தில் அவர் எடுத்துச் சொன்ன பல நிகழ்ச்சிகளும் சாட்சி சொல்லி மகிழ்கின்றன.
நிறைய நாடகங்களை எழுதி நடித்துள்ளார். இவரது குடும்பத்தார்கள் (மனைவி, மகன், மகள்) எழுதின நாடகங்களிலும் நடித்துள்ளார். நாற்பது வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்த பின்னர் தன்னுடைய பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மீண்டும் ஊடகத்துரையில் தனது சேவைகளை தொடர்ந்து செய்து மகிழ்கிறார்.
இவர் சில சம்பவங்களைப் பற்றி எழுதி, தான் அப்போது கற்றுக்கொண்ட பாடங்களை வாசகரோடு பல இடங்களில் பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக
" இருட்டறையில் அடைக்கப்பட்ட இருவருக்கு வெளி உலகைக் காண ஒரு சிறு துவாரம் மட்டும் இருந்தது. ஒருவன் கீழே தெரியும் சாக்கடையைப் பார்த்து "சீச்சீ இது என்ன உலகம்?" என்றான், மற்றவன் வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து " ஆஹா என்ன அற்புத உலகம்" என்றான் "
பல வசிஷ்ட்டர்களின் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற இவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்த அனுபவங்களை பங்கு வைக்கும் வரிகள் ஒவ்வொன்றிலும் வாசகனை அந்த நிகழ்ச்சிக்கே நேரடியாக கொண்டு செல்லும் வண்ணம் இருக்கும்.
"உதாரணத்துக்கு ஒன்று: பழைய காதலன் அவனுடைய காதலியை சந்திக்கிறான். "நம் காதல் பிரகாசமாக ஒளிவிடும் என்று நினைத்தேன்" என்று சொல்லும்போதே சிகரட் லைட்டரை பற்ற வைப்பார், பிறகு "ஆனால்..." என்று ஒரு பெருமூச்சு விடும்போது அதை அணைக்க வேண்டும்"
என்ன அழகாக இந்த காட்சியை தன்னுடைய வார்த்தைகளால் எழுதி படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்!
தன்னோடு வாழ்ந்த/பணிசெய்த பலரை குறிப்பிட்டு ரசிக்கிறார், கவலைப்படுகிறார், நன்றி தெரிவிக்கிறார்ர். அதில் திரு பிச்சையப்பா என்கிற ஒரு கலைஞனைப் பற்றி சொல்லும்போது " அந்த கலைஞனுக்கு என் உள்ளத்தில் ஏற்பட்ட மதிப்பு அவர் மாண்டு மறைந்து விட்டாலும் என் உள்ளதிலிருந்து என்றும் மாளாது - மாறாது - மறையாது" - என்கிறார்.
தனது காதலைப் பற்றி ஐயா குறிப்பிடுகையில்
"ஒரு நாள் மாலை ஒரு "பெர்த்டே" பார்டிக்கு வருமாறு எனக்கும் எனது நண்பன் மக்கீனுக்கும் சேர்த்துக் கடிதம் வந்தது. இருவரும் சென்றோம் வீட்டில் ஆள் ஆரவமே இல்லை. அந்தப் பெண் குறும்பாகச் சொன்னாள் "பேர்த்டே பார்ட்டி இங்கல்ல, வேறோர் இடத்தில். குடும்பமே போய் இருக்கிறது. நான் மட்டும் தனியே. துணையாக இருக்கத் தான் வரச்சொல்லி எழுதினேன்" என்றபோது இனம் புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். ஆனால் எதையோ புரிந்து கொண்டது போல், " சரி இருவரும் பேசிக்கொண்டிருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது கொஞ்ச நெரத்தில் வந்து விடுகிறேன்" என்று மக்கீன் நைசாக நழுவி விட்டான். ஒரு பெண்ணுடன் - அதிலும் என்னை மிகவும் நேசிக்கும் - நானும் விரும்பும் ஒரு பெண்ணுடன் - என் வாழ்நாளில் முதன் முறையாக யாருமில்லாத தனி வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறேன். இளமைத் துடிப்புடன் வாலிபத்தின் தலைவாயிலில் நிற்பவர்கள் நாங்கள், ஆனால் தவறான ஒரு பார்வையோ பேச்சோ கூட இல்லை.
என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக சொன்னாள். என்னை மணந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்தாள். எனக்கும் அந்த விருப்பம் இல்லாமல் இல்லை. என் நிலமைகளை எடுத்துச் சொன்னேன். என்னைப் போலவே அவருக்கும் பல சகோதரிகள் என்பதை எடுத்துக் காட்டினேன். வெவ்வேறு மதம் - இனம், பொருளாதாரத்திலும் என்னை விட உயர்வானது அவர்களுடைய நிலை அதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றை எடுத்துச் சொன்ன போது அழுத அழுகை என்னை குலுக்கியது. கண்ணீரைத் துடைத்துவிட்டேன் ----கைக்குட்டையால். அப்போது கூட அந்தப் பெண்ணைத் தொடவில்லை என்பதே இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. சப்தமில்லாமல் குமுறிக் குமுறி அழும் அந்தப்ப் பெண் என் தோளில் அப்யம் தெடினாள்... இக்கட்டான நிலை, ஆபத்பாந்தவனாக மக்கீன் வந்து சேர்ந்தான். உள்ளே சென்று அந்தப் பெண் முகம் கழுவி பவுடர் போட்டு சிரித்த முககமாக வெளிவந்தாள்; நாங்கள் விடைபெற்றோம்"
என்று அந்த காட்சி அனைத்தையும் ஐயா நமது கண்முன்னே கொண்டு வர, இந்த மக்கீன் மீது கோபம் கொள்வதா, நன்றி சொல்வதா என்ற குழப்பத்தில் இந்த இடத்தில் வாசகர்கள் குழம்பி விட வாய்ப்புண்டு.
பிறகு அடுத்த பக்கத்தில் இவர் தன்னுடைய காதலைப் பற்றி இப்படி நினைத்துப் பார்க்கிறார்.
" நான் செய்தது சரி தானா? காதலை மதிக்கத் தெரியாமல் போய் விட்டதா? அல்லது ஏற்கத் துணிவில்லாது போய் விட்டதா? அல்லது ஒரு நடுத்தர குடும்பத்தின் பொறுப்புள்ள தலைமகனாக நடந்து கொண்டேனா? இன்று வரை விடை தெரியவில்லை. ஆனால் உள்ளத்தின் அடித்தளத்தில் மாறாத ஓர் ஊமை வேதனை இருந்து கொண்டே இருந்தது. இறைவனின் அருட் கொடைபோல் ஓர் நல்ல துணை வாய்க்கும் வரை - வாய்த்தாள்"
ஈழத்தின் தமிழ் இலக்கிய பிதாமகர் என்று எஸ்.போ அவர்களை போற்றுகிறார்.
"சுயநலத்தை விட சில அடிப்படையான கொள்கைகளை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்கிற உண்மையை எனக்கு உணர்த்திய பெரியவ்ர் திரு கே.எஸ். நடாராஜா" என்று அவரைப் போற்றுகிறார்.
இப்படி பல கதாபாத்திரங்களையும் அவருடை அழகான தமிழில் வர்ணனை செய்து அவர்களை எல்லாம் பாராட்டி மகிழ்கிறார், திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள்.
ஐயாவிடம் எதை யார் சொன்னாலும் அவர் முதலில் சொல்கிற பதில் "லெட் மி திங்க்".
"கலை எமக்களிப்பது ஊதியமல்ல உயிர்" என்ற சொற்றொடரை அவருடைய நாடகக் குழுவிற்கு வழங்கவும் நன்றாக யோசித்திருப்பார் என்றே தோன்றுகிறது.
நீண்ட பட்டியலிட்டு ஐயா இப்படி யோசிக்கிறார்.
"என்னிடம் பிரதிபலன் எதிர்ப்பார்த்தா இதைச் செய்தார்கள்? - இல்லை நிச்சயமாக இல்லை. என் மீது அவர்களுக்குள்ள அன்பின் ஆழத்தின் பிரதிபலிப்பாகவே இதைச் செய்தார்கள். இவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? ஒன்றைச் செய்யலாம், என்னை தகுதி உடையவன் என்றெண்ணி, தங்கள், தங்கள் தனிப்பட்ட திறமைகளை இவர்கள் முன்னிறுத்தி எனக்கு உதவியது போல் நான் பிறருக்கு உதவலாம். திறமைசாலிகளை இனம் கண்டு அவர்களை வளர உதவலாம். அதைச் செய்திருக்கிறேன் - செய்கிறேன் - இன்ஷா அல்லா இனியும் செய்வேன்"
சமுதாயம் சம்பந்தமாக சொல்லும்போது
"லாப நோக்கு" என்பது மனிதனின் அடிப்படை குணம். முற்றும் துறந்த முனவருக்குக் கூட "முக்தி" என்கிற லாபநோக்கு உண்டு. எனவே அதை கிள்ளி எறிய நினைக்கும் எந்த சக்தியும் நிலைக்காது. மேலும் மனிதன் சுதந்திரப் பறவை. அவன் சிறகுகளை சிறிது காலத்துக்குத் தான் ஒடித்துப் போட இயலும். ஒரு நாள் அவன் சீற்றம் கொள்ளும் போது சிறைக்கதவுகள் தூளாகும். காலத்தின் கணக்குகளில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.
உழைப்பவனின் வியர்வை உலரும் முன்பே அவனது கூலியைக் கொடுத்து விடுங்கள்" என்கிற எல்லோருக்கும் ஏற்புடைய இஸ்லாத்தின் கொள்கை மாத்திரமல்ல அதை அமுல் படுத்துவதில் ஆன்மீகம் கலந்த ஜனநாயக முறைகள் மீதுள்ள என் பிடிமானம் மேலும் இறுகியது. வட்டியை ஹராமாகவும் (வெறுக்கத் தக்கது) வியாபாரத்தை ஹலாலாகவும் (விரும்பத் தக்கது) ஆக்கி அதன் மூலம் பொருலீட்டும் முதலாளிகளை சமூகத்தின் தர்மகர்த்தாக்களாக - அறங்காவலர்களாக - நடந்து கொள்ளச் சொல்லும் முறை சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அமுல் நடத்தப்பட்டால் ஏழ்மையே இருக்காது என்பது என் திடமான எண்ணம்
இளைய தலைமுறை என்பது ஒரு மாபெரும் சக்தி, உண்மையில் அது அதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு சிம்ம சொப்பனம். இந்த நிலையில் ஐம்பத்தி எட்டு வருட அனுபவம் என்பது தலையில் சூடப்பட்ட கிரீடமா அல்லது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட கல்லா என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. முன்பை விட இப்போது அதிக உழைப்பு தேவை. உத்வேகம் தேவை. மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் ஆற்றின் ஒழுக்கை அனுசரித்து நீந்தும் வல்லமையும் தேவை. அல்லது காலச்சுழியில் அகப்பட்டு மூச்சுத் திணறி மூழ்கிப்போக நேரிடலாம். ஒரு பெண்ணின் வயது அவள் தோற்றத்தைப் பொறுத்தது. ஒரு ஆணின் வயது அவன் சிந்தனையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்" .
வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்கையில்...." மேடையை அநேகமாக விட்ட மாதிரி தான். ஆனால் வானொலியை விடுவேனோ என்பது சந்தேகமே. அன்றாட வாழ்வின் ஆய்வு - சோர்வு - அலைச்சல் - உழைப்பு - டென்ஷன் இவற்றுக்கு மத்தியில் ஏதோ சில மாத இடைவெளிக்கு பிறகாவது வானொலி நிலையத்தில் சென்று செலவாகும் அந்த ஒரு நாள் எனக்கு புத்துயிரும் புது உணர்வும் நல்குகிறது என்பது தான் காரணம்" என்பதை வாசித்ததும் இவரில் இருக்கும் கலை உணர்வை அறிந்து வாசகர் இவரை போற்றுவார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அச்சாணி, ஆணிவேர், யாராலும் நெருங்க முடியாது என்று கருதப்படும் சூப்பர் மேன் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் திரு அப்துல் ஜப்பார் ஐயாவை, அவரே நேரடியாக வந்து சந்தித்து அன்புடன் கரங்களை பற்றி ஆதரவுடன் தோள்களை பற்றி மலர்ந்த முகத்துடன் " நான் உங்கள் ரசிகன் ஐயா" என்று சொல்லும் அந்த சந்திப்பைப் பற்றி மிக அழகாக ஐயா எழுதியுள்ளார்.
மீண்டு மனம் திறந்து இப்படி எழுதுகிறார்
"வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. எனினும் என்னுள் ஒரு "தேடல்" ஆரம்பமாகி உள்ளது. "நினைவு கூர்தல்" என்கிற இந்தக் கட்டுரைத் தொடர் கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம். கொஞ்சம் மென்மையாகிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது. என் கெட்ட குணங்களில் ஒன்றான முன் கோபத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டேன் என்று கூட சொல்லலாம். எனவே இந்த வயதில் இயல்பாக வரக்கூடிய இரத்த அழுத்தம் கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. "இளமையில் ஒழுக்கம், முதுமையில் ஆரோக்கியம்" என்ற பழஞ்சொல், என் வரை, இது வரை உண்மை ஆகி இருக்கிறது. இன்றும் அதிகாலையில் நான்கைந்து கேம்கள் "ஷட்டில்" ஆடுகிறேன். நடக்கிறேன்"
இந்த புத்தகத்தில் ரசித்தவைகளை எல்லாமே எழுதித் தான் ஆக வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை அப்படியே தட்டச்சிடத் தான் வேண்டும்!
அது தவறு என்பதால், அப்படி செய்யாமல், இதை வாசிப்பவர்களுக்கு இந்த புத்தகத்தின் விற்பனையாளரின் விலாசத்தைத் தருவதே நன்று. விசாரிக்கையில் 2003 இல் வெளியிடப்பட்டதால் 200 புத்தகங்கள் மட்டுமே இருக்கும் என்று இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர் திரு எஸ்போ ஐயா தெரிவித்தார்.
புத்தகம் கிடக்க அனுக வேண்டின விலாசம்:
Mithra Arts and Communication
32/9 Arcot Road, Chennai 24
Telephone: 23723182 / 9444357173
Email: mithra2001in@yahoo.co.in / itheijo@hotmail.com
இந்த புத்தகத்தின் விலை இப்போதும் ருபாய் 60/= மட்டுமே.
"இலங்கை வானொலி ஸ்டைலில் உங்களை மீண்டு சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்புக்குறிய ஏ.எம்.அப்துல் ஜப்பார். அதாவது சாத்தான்குளம் அப்துள் ஜப்பார்" என்றெழுதி இந்த புத்தகத்தை மிக அழகாக அன்புள்ள ஐயா முடித்துள்ளார்.
நன்றி, வணக்கம்
தோழமையுடன் என் சுரேஷ்