இம்மாதம் 3-ஆம் தேதி எனது பிறந்தநாளை இனிதாக கொண்டாடினோம். வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பிறந்த நாள்ன்று அண்ணனோடு கோவில்களுக்கு சென்று மதிய உணவு தாமதமாகவே எடுத்தோம்.
அடுத்த நாள் 4 ஆம் தேதி மாலை அண்ணனோடு ஒரு துணிக்கடைக்கு சென்றோம். துணி வாங்க அல்ல: அதன் உரிமையாளர்கள் இருவரை அண்ணன் சந்திக்க வேண்டும் என்பதற்காக. அந்த உரிமையாளர்களின் மூத்தவருக்கு வயது 85 இளையவருக்கு 76. இருவரும் பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடும் இந்நாளிலும் ஒரே குடும்பத்தில் இருவரின் குடும்பத்தார் யாவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். அண்ணன் மீது தம்பிக்கு உயர்ந்த மரியாதையும், தம்பி மீது அண்ணனுக்கு அளவு கடந்த பாசமும்!
இந்த சந்திப்பில் அந்த இரு பெரியவர்களும் என் அண்ணனும் பேசிக்கொண்டிருக்க நான் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்தேன். திடீரென்று எனக்கு கொஞ்சம் வியர்வை வருவது போலும் மயக்கம் வருவது போலும் அதீத ஒற்றைத் தலைவலியாகவும் இருந்தது. சந்திப்பு முடியும் வரை எப்படியோ சமாளித்து காத்திருந்தேன், பிறகு அண்ணனின் உதவியோடு வீடு வந்து சேர்ந்தேன்.
ஒன்றுமிருக்காது என்ற நம்பிக்கையில் அடுத்த நாள் 5 ஆம் தேதி இரவு ஏற்கனவே முன்பதிவு செய்தது படி பேருந்தில் ஊருக்கு புறப்பட்டு சென்றேன். 9 ஆம் தேதி அண்ணனின் மகளுக்கு திருமணம். சென்னை திரும்பி வரவும் கூட விமானம், இரயில் என ஒன்றும் இல்லாமல் 13 ஆம் தேதி இரவில் பேருந்தில் புறப்பட்டு 14 ஆம் தேதி காலை சென்னை வந்து சேர்ந்தேன்.
வழக்கமாக ஊருக்கு சென்றதும் நான் எப்போதும் செல்லும் ஒரு கான்வெண்டு (ஏழைகளை நேசித்து உணவளிக்கும் கன்னியஸ்த்ரீகள்(தாய் தெய்வங்களின்) அமைப்பு, புத்தகக்கடைகள், பிரபல எழுத்தாளர்கள், சில அரசியல் பிரமுகங்கள் (நல்லவர்கள்-ஏழைகள்) – என இருக்கும் பட்டியல்களில் எங்கும் எனக்கு செல்ல இயலவில்லை.
9 ஆம் தேதி அண்ணன் மகளின் திருமணத்திற்கு சென்று வந்தேன்.
11 ஆம் தேதி 80 வயதான ஒரு பெரியவரை அவரின் வீடு சென்று கண்டு வந்தேன். சம்பாதித்து பிள்ளைகளை வளர்த்தி பெரிய மனிதர்களாக்கி தற்போது ஓய்வூதியத்தால் தன்மானமாகவும் ஆனால் கவலையை மறைக்கத் தெரியாமலும் கலங்கி வாழும் ஒரு வாழ்க்கை-பல்கலைக்கழகம் அவர்.
பிறகு இரண்டு நண்பர்களை சந்திக்க வெளியே சென்றேன், அவ்வளவு தான்!
மற்றபடி எப்போதும் வீட்டில் தான் இருந்தேன். கல்யாண வீட்டிற்கு வந்த எல்லோருடனும் அன்போடு பேசினேன். தொடர்ந்து எனக்கு அசௌகரியம் இருந்ததால் அவ்வப்போது என் அறையிலேயே ஓய்வெடுத்து வந்தேன்.
4 ஆம் தேதி தாக்கின ஒற்றைத் தலைவலி என்னில் ஏற்பெடுத்தின பயத்தில் என்னுள் தான் எத்தனை கேள்விகள்??? நானே எனக்கு தைரியம் தர எத்தனை பதில்கள்!!!
ஐயோ எனது இடது பக்கம் அப்படியே செயலிழந்து போய்விடுமோ? கொஞ்சம் நடந்தாலே தலை சுற்றுகிறதே? இது அந்த நோயோ இந்த நோயோ? சர்க்கரையின் அளவு அதிகமாக குறைந்ததோ? ஏறினதோ? என் இதயம் இன்றே நின்று போய்விடுமோ? இனி நான் கணினி உபயோகிக்க இயலுமோ? இடது பக்கம் இப்படி ஏன் மறுத்துப்போகிறது? இடது கண்ணும் வலிக்கிறதே!!!!
பயமே நோய்.. ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிடும் என்று சொல்லி என்னை தேற்றி வந்தேன்.
அங்குள்ளோரிடம் எனது உடல்நிலை பற்றி சொன்னால் என்னை உடனே ஒரு மருத்துவமனையில் சேர்த்து லட்சங்கள் செலவு செய்வார்கள். கல்யாண வீட்டின் சந்தோஷங்கள் என்னால் ஏன் பாதிப்பிற்குள்ளாக வேண்டும் என்று நான் எனது அசௌகரியங்களை எனக்குள்ளேயே வைத்திருந்து எனது பிறந்த ஊர் சென்னைக்கு வந்து விட காத்திருந்தேன்.
12 ஆம் தேதி எனது அண்ணி (என் தாயை விட அதிகமாக பாசம் தரும் அதிசயம்)… "தம்பி… நாளைக்கு நீங்க ஊருக்கு போகவேண்டும். இன்றைக்கு நீங்க இங்கே ஒரு மருத்துவரை தயவாக பாருங்கள், எப்போதும் சந்தோஷமாக இருந்து, எங்களை சிரிக்கவைத்து வயிற்றுவலி தரும் உங்களை இப்போது இப்படி பார்க்க முடியவில்லை" என்று அழுது சொன்னதும்… சரி அண்ணி!!! மருத்துவரிடம் செல்கிறேன் என்றேன். அண்ணன் மகனோடு அந்த மருத்துவரைக் கண்டேன். தீவிர சோதனை! "ஒன்றும் பயப்படாதீர்கள். நீங்கள் தாராளமாக சென்னைக்கு பயணம் செய்யலாம்" என்று தைரியம் தந்தார்கள், அந்த மருத்துவர்.
அப்படி 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நகர்ந்தது.
14 ஆம் தேதி சென்னை வந்ததிலிர்ருந்து 22 ஆம் தேதி வரை… ஒன்பது நாட்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம், இஸிஜி, இ இ ஜி, என எல்லா சோதனைகளும் செய்து… முடிவில் வெர்டிகோ காரணம் தான் இந்த அசௌகரியம் என்று கண்டறிந்து அதற்கு ஒரு மாதத்திற்கு மருந்து தந்து மருத்துவர்கள் என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க சொன்னார்கள்… நேற்று 23 முதல் மீண்டும் பழைய என் சுரேஷாக இதோ முகநூலில் நான்!!!
இந்த அனுபவத்தை நான் ஏன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்?
எனக்குத் தெரிந்தவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களோடு பேசுகையில் எப்படியாவது எனது பேச்சில் அவர்களை சிரிக்க வைப்பது எனது வழக்கம். (நன்றி – பைபிள்)
பலர் என்னை பிறகு அழைத்து, “நீங்க வந்தாலே நம்ம உடம்பு சரியாகிடும்” என்பார்கள். அதை ஏதோ ஒரு அன்பின் வெளிப்படுத்தல் என்றே எண்ணி வந்தேன்.
ஆனால் நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒவ்வொரு முறையும் என்னை நேரடியாக சந்தித்து எனக்கு ஆறுதல் கூறிச் சென்ற இறைவனின் செல்வங்களின் முகங்கள் எனது கண்முன்னே வந்தன…. அவர்கள் மட்டும் எனை சந்திக்க வரவில்லை என்றால் நான் மீண்டும் எழும்ப ஒரு சக்தி ( காஸ்மிக் எனர்ஜி) எனக்கு வந்திருக்காது என்று மிக உறுதியாக உண்ர்கிறேன்.
கடந்த ஞாயிறு 20 ஆம் தேதி மதியம் என்னை சந்தித்து எனக்கு ஆறுதல் தந்து பிரார்த்தனை செய்து சென்ற சகோதரர் திரு இமேனுவேல் என்பவர் வந்த பிறகே நான் மீண்டும் நானானேன்! சகோதரர் திரு இமேனுவேல் அவர்களை ஆறுதல் தர எனக்களித்த இறைவனுக்கு நன்றி.
எனது அண்ணன்- சக்தி அவர்கள், அண்ணி, மற்றும் ஊரிலுள்ள சொந்தங்க்கள் இங்குள்ள சொந்தங்கள், பலமுறை தொலைபேசியில் பேசின/ குறுஞ்செய்தி அனுப்பின என்னுயிர் தோழர்கள், தோழிகள்… இவர்களை எல்லோரையும் நன்றியோடு நான் நினைவுகொருகிறேன்.
உங்களை எல்லோரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
ஆக! உங்கள் சொந்த பந்தங்களுக்கோ நண்பர்களுக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களை உடனே சந்தியுங்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்.
சென்னையில் உள்ளவர்களுக்கு சொந்தங்களோ நண்பர்களோ இல்லை எனில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்!
இன்னொரு மனிதன் உயிரோடு இருக்க யாரும் அனாதை அல்ல!
எல்லோருக்கும் தந்தை இறைவன்! இறைவன்! இறைவன்!
அன்பு நன்றி வணக்கம்
என் சுரேஷ்