Friday, July 11, 2008

திரு.மைக்கில்ராஜ் அவர்கள்


திரு மைக்கல் ராஜ் 24/10/1943 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராமபுரம் என்ற ஊரில் திருமதி லூர்து அம்மாவிற்கும் திரு சவரி முத்து பிள்ளைக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.

தூத்துக்குடியில் உள்ள தூய சவேரியர் பள்ளியில் பள்ளிப்படிப்பும், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் கல்லூரியில் பி.ஏ (பொருளாதாரம்) பட்டப் படிப்பும் (1963) - முடித்தார்.
1963 முதல் 1966 வரை ஆங்கில ஆசிரியராக, சிவகாசியில் உள்ள ஐய்யநாடார் ஜானகி அம்மாள் காலேஜில் பணிபுரிந்தார்.

1/3/1967 அன்று இவர் எல்.ஐ.ஸி -யில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி, எல்.ஐ.ஸியின் அனைத்து பாடங்களிலும் வெற்றி கண்டு 37 வருடகால சேவை முடித்து அக்டோபர் 2003-ல் "முகவர்களுக்கு பயிற்சியாளார்" என்ற சந்தோஷமான பதவியில் இருக்கும் நேரம், வயது 60 ஐ தாண்டியதை தெரியவில்லை, அலுவலக மடல் தெரிவித்தது, வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவரைப் பற்றின ஒரு ப்ளாஷ் பாக் (கடந்தகால நிகழ்வுகள்) பார்ப்போமா!

இவரோடு பிறந்த ஒரே ஒரு சகோதரன் (அண்ணன்) திரு அமலதாஸ், அவர் 6-ஆவது வயதிலேயே காலமானதும், தனது சிறு பிராயத்திலேயே இவரின் தந்தை குடும்பத்தை விட்டு விட்டுச் சென்றதும் தான் இவருடைய வாழ்க்கை எனும் மொட்டு மலரும் வேளை அதன் மீது இடியாக விழுந்த சம்பவங்கள். ஆனால் இவரின் தாய் இந்த சின்ன பாலன் மீது விழுந்த இடிகளைத் தாங்கி காப்பாற்றினார்கள்.

தந்தையால் கைவிடப்பட்ட இந்த குடும்பம், தூத்துக்குடியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்த தாய்மாமன் வீட்டில் அடைக்கலம் பெற்றது. எட்டு குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மாமன் - மாமி தம்பதியருக்கு உதவி செய்தே இவருடைய அன்புத்தாய் கரைந்ததின் பலனாக திரு மைக்கல்ராஜிற்கு பி.ஏ வரை படிக்க முடிந்தது. கரைந்து கரைந்து முடிவில் இறந்தே போன தாய் பற்றி நினைக்கையில் கண்ணீர் முந்தும் உணர்வோடு திரு மைக்கல் ராஜ் தன்னை படிக்க வைத்த தாய்மாமன் மற்றும் குடும்பத்தாரோடு இருக்கும் நன்றியை என்றுமே மறக்க முடியாது என்கிறார்.

எல்.ஐ.ஸி யில் வேலை கிடைத்து ஏறத்தாழ ஒன்றறை வருடகாலம் முடிந்ததும், பெரியோர்கள் பார்த்து நிச்சயம் செய்த சுமதி என்ற பெயருள்ள ஒருவரை 18/ஜனவரி/1968- ல் திருமணம் செய்தார். இந்த திருமணம் மதுரையில் நடந்தது என்பதில் திரு மைக்கல் ராஜ் அவர்களக்கு அப்படி ஒரு சந்தோஷம். பெஸ்ட் & கிராம்படன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு உதவியாளாராக திருமதி சுமதி மைக்கல்ராஜ் 25 வருடகாலங்கள் வேலை செய்த பின்னர் வேலையிலிருந்து சுய ஓய்வு பெற்றார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள், மகள்- மகன் - மகன்!

மகள், சுகந்தி எல்.ஐ.ஸி-யில் அலுவலக அதிகாரியாகவும் அவரின் கணவர் வங்கியில் அதிகாரியாகவும் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு 1993 -ல் திருமணம் நடந்தேறியது. இந்த தம்பதியருக்கு பெண்-இரட்டைக் குழந்தைகள், நிஷிதா & நிகிதா!!! - இருவரும் UKG யில் படிக்கிறார்கள்

மகன், சுரேஷ், பெல்ஜியத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் (கணினி) துறையில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுதா. இவர்களுக்கு 2002 - இல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், அவன் பெயர் ஸ்டீபன். இந்த பிள்ளை இப்போது LKG வகுப்பில் படித்து வருகிறான்.

அடுத்த மகன் ரஞ்சித், டி.சி.எஸ்-இல் மென்பொருள்(கணினி) துறையில் நல்ல வேலையில் இருக்கிறார். அடிக்கடி அமெரிக்காவிற்கு வேலை விஷயமாக சென்று வரும் இவருக்கு வரும் ஜுலை 2008 -இல் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. ரஞ்சித்திற்கு முறைப்பெண்ணே
( பங்களூரில் உள்ள மாமா மகளை) மனைவியாக வரும் பாக்கியம் கிடைத்துள்ளது!

திரு மைக்கல்ராஜ் அவர்கள், 37 வருட காலம் எல்.ஐ.ஸியில் பணிபுரிந்த பின்னர் இப்போது திரும்பி பார்க்கையில் அநேக அனுபவங்களும் நிகழ்வுகளும் பாடங்களும் நினைவிற்கு வந்தாலும் பன்னிறண்டாயிறத்திற்கு மேல் முகவர்களை பயிற்சி கொடுக்க முடிந்ததும், இரண்டாயிரத்திற்கு மேல் குடும்பங்களுக்கு எல்.ஐ.ஸி வழியாக வீடு கட்ட கடனுதவி செய்ய முடிந்ததும் தான் மறக்கமுடியாத பெருமிதம் என்று சந்தோஷமுடன் சொல்கிறார்.

இன்றும் நன்றியோடு நினைவுகோர்ந்து தன்னை தொலைபேசியிலும் நேரிலும் கண்டு அன்பைத் தெரிவிக்கும் முகவர்களைப் பற்றியும், தன்னோடு பணியாற்றினவர்களைப் பற்றியும், கடனுதவி பெற்றவர்களைப் பற்றியும் சொல்கையில் சந்தோஷத்தால் இவர் முகம் மலர்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறுஸ்து தான், தான் நேசிப்பவர்களில் முதல், அது அன்றும், இன்றும் என்றும் என்று சொன்ன பிறகு.. அடுத்தது தனது மனைவி திருமதி சுமதியை மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். 40 வருடங்கள் கடந்து பயணிக்கும் எங்கள் மணவாழ்க்கை நேற்று துவங்கியது போல் உள்ளது என்று இவர் சொல்ல ஒரு புன்னகையால் அது சரி தான் என்கிறார்கள், திருமதி சுமதி மைக்கல்ராஜ் அவர்களும்.

1/9/1987 - உலகம் இதயநாளாக கொண்டாடும் நாளன்று திரு மைக்கல்ராஜ் அவர்களுக்கு இருதய அறுவைச் சிகிட்சை செய்யப்பட்டது. மருத்துவரின் நிர்பந்தத்திற்கு, வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டேன் என்கிறார்.

பிறகு இரண்டு முறை இதயத்தில் பாதிப்பு (அட்டேக்) வந்த பின்னரும் மருத்தவர்களின் உபதேசப்படி மருந்துகள் எடுத்தாலும், எல்லாவற்றிலும் மூத்த மருத்துவரான கர்த்தராகிய இயேசு கிறுஸ்துவின் கிருபையால் நலமோடு வாழ்ந்து வருகிறேன் என்று சொல்லும் இவருக்கு இறைவனின் கட்டளைபடி வாழ்ந்த அன்னை தெரேசா மீது அப்படி ஒரு மரியாதை.

அன்னை தெரேசாவை நேரடியாக சந்தித்து தனது இதயநோய் பற்றி சொல்லிட, அன்போடு அந்த அன்னை இவர் மார்பில் கனிவான கரங்களால் தொட்டு, கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்ன தருணம் முதல் " அட! அன்னை தெரேசா தொட்ட எனது உடலில் எனக்கு இனி ஒரு நோயும் வராது" என்று சொல்கையில் யாருக்கும் அந்த அன்புத் தாயின் முகம் கண்முன்னே வந்து போகும்!

ஓய்வு பெற்ற நேரத்தை பயன்படுத்தி, 125 க்கும் மேற்பட்ட தம்பதியருக்கு "கௌன்சிலிங்" கொடுத்து அவர்கள் வாழ்க்கையை ஒரு தந்தையின்/தாயின் ஸ்தானத்திலிருந்து இனிப்பாக மாற்றினார். விவாகரத்து வேண்டாம் என்று மனம் மாறி அவர்களெல்லோரும் சந்தோஷமுடன் வாழ்வதில் இவருக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி!. மருத்துவர்களின் உபதேசப்படி இப்போது இந்த கௌன்ஸிலிங் செய்வதை நிறுத்திவிட்டார்.

காலையும் மாலையும் தனது இல்லத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் திருச்சபைக்கு செல்வது, அங்கிருக்கும் சொசைட்டியில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வது, அனாதை மற்றும் முதியோர் இல்லங்கள் சென்று உதவிவருவது, ஏழைப் பிள்ளைகளுக்காக நடத்தும் மாலை டியூஷன் செண்டரில் சென்று உதவி செய்வது, இப்போதும் முகவர்களுக்காக பல இடங்களில் சென்றும் பேசி ஊக்கம் கொடுப்பது, மற்றும், தன்னை அனுகுவோருக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையோடே வாழும் இவர் இளைஞர்களை நோக்கி இப்படி சொல்கிறார்.

"எல்லோருக்கும் தேவையான திறமைகளை கொடுத்து தான் இறைவன் படைக்கிறார். அந்த திறமைகளை எல்லோரும் முடிந்த அளவிற்கு அதிகமாக உபயோகித்து முன்னேறி அடுத்தவர்களுக்கு உதவி வாழும் நல்லதோர் வாழ்க்கை வாழ்தல் இறைவனின் நோக்கம் வெற்றியடையச் செய்யும்!" - என்பதே இவர் எல்லோருக்கும் சொல்லும் பொதுவான ஓர் உபதேசம்!

உடல்நிலையைப் பற்றி மறந்து, புன்னகையும், துடிப்பும், முதிற்சியான பேச்சும் கண்டால் யாருக்கும் இன்னும் ஒரு முறை கூட இவரிடம் பேசத் தோன்றும்! ஒரு முறை கூட காணத் தோன்றும்.

வாழ்க திரு மைக்கல்ராஜ் அவர்கள்

அன்புடன் என் சுரேஷ்

Tuesday, July 8, 2008

வாகீசா...!!!!


(இந்த சமூகம் எனக்கு அளித்த தம்பிகளில் ஒருவன் நேற்று காலை, சாலை விபத்தொன்றில் இறந்து விட்டான். அவன் பெயர் வாகீசன். சென்னையில் வெளியான ஹிந்து பத்திரிகையில் இன்று-(08/07/2008) இந்த விபத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தால் எனது கவலை மேகங்கள் அதன் வார்த்தைகளால் ஒரு சித்திரம் வரைந்து என்னை சமாதானப்படுத்துகிறது இப்படியாக!!! ஆனால் என் கண்ணீர் இன்னமும் ஓயவில்லை...!)

ஈஸ்வரனிடம் சென்ற என் வாகீசா
இனி உன்னை என்று காணும் என் கண்கள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
கொரியர் சேவகனாய்
முதன் முதலாய் உனைக் கண்டேன் நான்!
"அண்ணா" என்றழைத்தாய்
அன்புடன் நீயென்னை
"அண்ணி" என்றழைத்தாய்
என்னுயிர் மனைவியை நீ!

மகிழ்ந்து சென்ற
உனது வாழ்க்கைப் பயணத்தில் - உன்
மனைவியின் மரணம் என்ற
மாபெரும் துயரொன்று உனைத் தாக்க
கலங்கின எல்லோரையும் நீ
சமாதானப்படுத்தினாய்
ஆர்க்கிட் என்ற நிறுவனம்
கண்ணீரைத் துடைத்தது என்றாய்!
மாதா, பிதா குரு தெய்வம் பட்டியலில்
ஆர்கிட்டை சேர்த்திடென்றேன்;
மகிழ்ந்து சிரித்தாய்!

உன் வளர்ச்சியில் நான் மகிழ்ந்தேன்;
உன் வீழ்ச்சியில் நான் உடைந்தேன்
நான் மகிழ நீ சிரித்தாய்;
நான் வீழ நீ சமாதானப்படுத்தினாய்;
ஆனால் இன்று ??

கனவுகள் பல சுமந்தவன் நீ;
மகன் ஒருவனுக்காய் வாழ்ந்தவன் நீ;
ஆனால் இன்று ??

ஆர்க்கிட் சாம்ராஜ்ஜியம்
அதன் முன்வரிசையில்
உனை வைத்து பெருமை கொண்டதே!
ஆனால் இன்று ??

வாழவேண்டியவன் உன்னை
கொன்று விட்டதே விபத்து!
உன் பிரிவில் வாடும்
பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும்
ஆறுதல் சொல்ல
வார்த்தைகளே இல்லையே என் தம்பி!

நெஞ்சு பொறுக்கவில்லை;
இதயத்தின் கண்ணீரின் ஊற்றை
கட்டுப்படுத்த இயலவில்லை - ஆனால்
நீ மட்டும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்!

உன் குழந்தைக்கும் பெற்றோருக்கும்
நல்வாழ்த்து சொல்லிவிட்டு
உன் ஆர்க்கிட் நண்பர்களுக்கு
கடைசி புன்னகையை தந்துவிட்டு
நீ மட்டும் உறங்கிக்கொண்டிருக்கிறாய்!

முப்பத்தி நான்கு வயதில்
இவ்வுறக்கம் தேவை தானா
என்னுயிர் தம்பி?

உந்தன் ஆத்மா
நிச்சயம் சாந்தியடையும்!
இனி சொர்கத்தில் சந்திப்போம்!

உனது இறுதிப்பயணத்திற்கு
எங்கள் மௌனமொழிகளில்
கண்ணீருடன்
வாழ்த்து சொல்கிறோம்..!!!

நீ வாழ்க மனமகிழ்ச்சியுடன்
சொர்கத்திலாவது!!!!

கண்ணீருடன்... உன்...


"சுரேஷ்" அண்ணனும் "விஜி சுரேஷ்" அண்ணியும்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments