Monday, December 31, 2007
Friday, December 28, 2007
மறக்க முடியுமா?
வேதாந்தமாகின வேதனைகளிட்ட
நிழல்களின் ரேகைகளை
என் காதலியின் முகத்தில் காண
தேடிச்செல்கிறேன்!
வாழ்க்கை பளீரென்று
புன்னகைத்தது!
சொல்லமுடியா உணர்வுகளை
மனம் சுமந்த நிலையில்
என்னில் எத்தனையெத்தனை
ஞாபகங்கள், சிந்தனைகள்!
பயணத்தின் வழியெங்கும்
கடந்தகால சந்தோஷங்களுக்கு
திடமில்லாத சாட்சிகள்!
எதிர்காலத்தை
என்றோ தொலைத்துவிட்ட
கவலையில்
வழியோர மரங்களின்
பச்சைநிழல்களும்!
கதவைத்திறந்தாள்
ஒற்றைப்பார்வையில்
என் மனதையும்!
நான் இன்னொருவளுக்கு
கணவனாகியும்
அவள் மனதின்
காதலனும் கணவனும் -அது
நானே என்றறிந்ததும்
அறிவு கலாச்சாரம் நீதி நியாயம்
இவையெல்லாம்
தோல்வியுடன்
கடலில் கரைந்த நீர்க்குமிழி போல்
கரைந்துபோனதை
மறக்க முடியுமா?
மறைக்க முடியுமா?
என்னுயிர் காதலியே
நீயொரு மின்னலாய் வந்தாய் என்னில்
என் தனிமையின் கொடுமை விடுதலையானது!
என்னில் காதலின் வெளிச்சம் தந்து
மறைந்து சென்றது ஏனோ
உன்னையே தேடுமென்
விழிகளின் தவிப்பைக்காணவோ?
இருக்காது
நீயென்னன காதலிக்கிறாய்!
மரபுகள் மட்டும்
எனக்குத் தெரியாமல் இருந்திருந்தல்
உனதாசைப்படி அன்றே நான்
கலந்திருப்பேன் உன்னில்!
கப்பலைக் காத்து
கடல் அலைகளையே பார்த்துப் பார்த்து
விசனமாய் மயங்கிக் கிடக்கும் - இந்த
கடல் தீரத்தின் கண்ணீரை
உனையன்றி யாருக்கு
உணரமுடியும்!
Saturday, December 1, 2007
மழை!
தொடர்ந்து மூன்று நாள் மழை !
ஊர் முழுக்க மழைவெள்ளத்தால் மூழ்கின அந்த மாலை வேளையில் மாதவன் தனது ஸ்கூட்டரை மீட்க முயன்று தளர்ந்து போனான். அவனை மழையின் தாக்குதலிருந்து காப்பாற்றினாள் தேவதை போல் அவனருகே வந்த வசந்தா!
அருகிலுள்ள தனது இல்லத்திற்கு மாதவனை அழைத்துச் சென்றாள் வசந்தா. ஆடை மாற்றி வசந்தா வருவதற்குள், வரவேற்பறையில் அமர்ந்திருந்த மாதவனின் மனதில் தான் எத்தனை கேள்விகள்! "
அழகிய வீட்டில் இவள் தனிமையிலா? என்னை ஏற்கனவே இவளுக்கு தெரியுமா? என்ன தான் மனதமிருந்தாலும் இவ்வளவு தைரியுமா? என் மீது இத்தனை கரிசனமா? எனது நெஞ்சார்ந்த நன்றிகளை எப்படிச் சொல்வேன்..." - ஆனால் அத்தனை கேள்விகளையும் தனது மனதிற்குள்ளையே பூட்டி வைத்தான், மாதவன்.
புன்னகையுடன் ஓடி வந்த வசந்தா, மாதவனுக்கு தலை துவட்ட துண்டும், குடிக்க சூடான தேநீரும் கொடுத்தாள்.
மாதவன், "நன்றி..." என்று சொல்லி பேச ஆரம்பித்த சில நொடிகளில் வசந்தா ஒரு ஊமையென்ற உண்மையை அறிந்தான். அவனின் மனது கனத்தது.
பொறியியல் வல்லுனர், வசந்தா, மேற்படிப்பிற்காக அடுத்த நாள் விடியற்காலை லண்டனுக்கு செல்லும் செய்தியை மாதவனுக்கு அவளின் அழகிய எழுத்துக்கள் சொன்னது.
மழை நின்றதும் மாதவனை அழைத்துச் செல்ல அவனின் தந்தை கார் எடுத்து வந்தார். தந்தையை அறிமுகப்படுத்தினான், மாதவன்.
புன்னகை வணக்கமிட்டு காலில் விழுந்து மாதவனின் தந்தையை வணங்கினாள் வசந்தி.
மாதவனுக்கும் வசந்திக்கும் ஏற்பட்ட ஏதோ சொல்ல முடியாதொரு உணர்வுகளின் பதற்றத்தில் இருவரும் தங்களின் தொலைபேசி எண்களையோ விலாசங்களையோ பரிமாறிக்கொள்ள மறந்து விட்டார்கள்.
வருடங்கள் பல கடந்து சென்றாலும் இன்றும் மழையைக் காணும்போதெல்லாம் இருவரின் கண்ணீரிலும் அந்த சந்திப்பின் நினைவுகள் புன்னகைக்கிறது!
இயேசுவைப்போல் வாழ்தல்
இயேசுவைப்போல் வாழ்வதைப்பற்றி வேதபுத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும் நிக்கதேமுவிற்கும் இயேசுவிற்குமிடையே நடந்த உரையாடல் மிகவும் சிறப்பானது
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கதேமு, இயேசுவினடத்தில் வந்து கிறிஸ்துவ வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கண்டறிய வந்தபோது இயேசு “ஓருவர் மறுபடியும் பிறவாவிடில் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன்" என்றார் (யோவான் 3:3)
கர்த்தருக்குள் புதியவனாகி இயேசுவைப்போல் வாழ ஆரம்பிப்பதே கிறுஸ்துவ வாழ்க்கையின் முதற்படி. யோவான் 4:16-இல் இயேசு “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று மிகத்தெளிவாக சொல்கிறார்.
இயேசு பூமியில் வாழ்ந்தகாலம் தந்தையான கர்த்தரிடம் வைத்திருந்த நல்லுறவு, அதீத நம்பிக்கை, சமர்ப்பண மனநிலை, கீழ்ப்படிதல் இவைகளை நாமும் நமது வாழ்க்கையில் கடைபிடிக்க அன்புள்ள இயேசு நம்மை உபதேசிக்கிறார். இந்த உபதேசத்தின்படி வாழ்வதே கிறிஸ்துவ வாழ்க்கையின் சாராம்சம்.
யோவான் 14:21 -இல் இயேசு சொல்கிறார், “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு
அவைகளை கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருக்கிறான்; நானும் அவனில் அன்பாயிருந்து அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்”
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது ஒரு பட்டியலில் சில சட்ட திட்டங்களை மட்டுமிட்டுவிட்டு அதன்படி இறுக்கமாக சமாதானமில்லாமல் வாழ்வதல்ல. கிறுஸ்துவ வாழ்க்கை என்பது உன்னதமான இனிமையான சுதந்திரமான அன்பான வாழ்க்கைமுறை என்பதை இயேசு இந்த பூமியில் வாழ்ந்து காட்டினார். இயேசு கீழ்க்காணும் உபதேசங்களில் அதை தெளிவுபடுத்துகிறார்.
கர்த்தருக்குள் புதிதாய் பிறந்த புரிதலில் வாழ்தல் ( 2 கொரிந்தியர் 5:17)
======================================
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போகின, எல்லாம் புதிதாயின”
தேவனின் சித்தம் பகுத்தறிந்து மனம் புதிதாகி வாழ்தல் (ரோமர் 12:2)
============================================
“நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாயிருங்கள்”
மற்றவர்களோடு அன்புடன் வாழ்தல் (பிலிப்பியர் 2:3-4)
============================
“ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையிலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேலானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக”
கர்த்தருடைய உபதேசம் படி வாழ்தல் ( மத்தேயு 5: 3-10)
==============================
“ஆவியில் எளிமையுள்ளவன் பாக்கியவான்; பரலோகராஜ்ஜியம் அவனுடையது
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் திருப்தியடைவார்கள்
இரக்ககுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவ்னுடைய புத்திரர் எனப்படுவார்கள்
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகரஜ்யம் அவர்களுடையது”
கர்த்தர் மீதுள்ள நம்பிக்கையை மற்றவர்களிடம் தெரிவித்து வாழ்தல் (யோவான் 15:14-16)
=====================================================
“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மீது இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக்கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல் விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்”
இயேசு இந்த பூமியில் மனித உருவிலிருந்த காலத்தில் வாழ்ந்த அன்பின் வாழ்க்கையை பின்பற்றி அவரின் உபதேசங்கள்படி வாழும் வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். அதுவே கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை!
கர்த்தருக்கு பிரியமான தூயவாழ்க்கை வாழும் எல்லோருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களும் சமாதானமும் மகிழ்ச்சியும் நேற்றும் இன்றும் என்றும் நிச்சயம்!
Tuesday, November 20, 2007
Wednesday, November 14, 2007
Tuesday, November 13, 2007
இனிய நாள்
ஜன்னலின் ஆடைகளை
நான்
விலக்கினேன்
முத்தமிட்டு சூரியகிரணங்கள்
என்னை எழுப்பியதும்!
மீண்டும் ஒரு நாள்
எனக்கு இதோ என்று
மந்தஹாசத்துடன்
பரிசளிக்கிறதே வாழ்க்கை!
ஏழ்மை ஒழிக்க
அடிமைச் சங்கிலிகள் உடைக்க
அன்பும் சமாதானமும் நிலைநாட்ட
இதோ இந்த பொடியன்
மாமலைகளோடு
பேச்சுவார்த்தைக்குத்
தயாராகிறான்!
இந்த நாளும்
இனிய நாளாக
என்னை வாழ்த்துங்கள்
அன்பு உள்ளங்களே!
பாவம் அவள்
கனகமனமொன்று உருகுகிறது
கண்மூடி கண்ணீர் உறைகிறது
முகமூடி உடைகிறது
அவள் மனதின் நிஜமுகமும் அழுகிறது!
பிள்ளைகள் நான்கிற்கு
கோலமிட்ட கணவன் மனம்
தன்னலத்தில் மகிழச்செல்ல
பிரிவின் கோபத்தில்
வாடிய மங்கையவள்
பரிவின் வறுமையாலும்
வாடியும் சுவசிக்கிறாள்!
பிளவுண்ட தன்மனதை
மறைக்க முடியா நிலையிலின்று
சிரித்து நடித்ததில் முச்சுமுட்ட
குமுறுதலில் பாவமின்று!
இறுக்கங்கள் இன்னமும் இறுக்க
உச்சத்தில் கவலைகள் திளைக்க
தெரிந்ததெல்லாம் நேர்வழியே
இன்றிவளுக்கு ஆறுதல்பெற ஏதுவழி?
உருகுமிந்த தங்கமனதிற்கு
தேவை வைத்தியமாம்
ஊர்கூடி சொல்கிறது
அவளுக்கு பைத்தியமாம்!
கண்ணீரின் விலாசம் தெரியாமல்
கண்களை இன்னமும் குருடாக்குகிறதே
கனிவற்ற இந்த கொடுமைச் சமுதாயம்!
Friday, November 9, 2007
கண்ணாடி
என்னை எனக்கு
அடையாளம் காட்டின
மனசாட்சி!
என் உணர்வுகளுக்கு
ஆறுதல் சொல்லும் தோழி!
என் காதலிக்கு
கொடுத்த முதல் முத்தத்தை
நானே காண
வெட்கத்துடன்
படமெடுத்த சூரியன்!
எனை
ரசிக்கும் நிலா!
ஒரு நாளே
எனக்கு காய்ச்சலென்றாலும் கூட
எனைக் கண்டதும்
அழுதுவிடும் நண்பன்!
ஒவ்வொரு நாளும்
என் வயதின் நாட்காட்டி!
எனை காணாமல் தவிக்கும்
காதலியின் இதயம்!
என்
நிர்வாணத்தை மட்டுமா
என் மனதின் வேதனைகளையும்
படம் பிடித்த அதிசயம் நீ!
என்னில் உனக்கும்
உன்னில் எனக்கும்
எவ்வளவு
நாகரீக
புனித
அன்பான
உறவுகள் என் கண்ணாடியே!
இருப்பினும்
நீயேனின்று
வாடிப்போனாயோ!
நான் இல்லாமல் நீயிருக்கலாம்
நீயில்லாமல் நானிருக்கலாகுமா?
இதோ உனது உடையை
உன் சம்மதத்தோடு விலக்குகிறேன்
ஆகா!
புன்னகையில்
மலர்கிறதே உன் முகம்!
Wednesday, October 10, 2007
Wednesday, September 5, 2007
நிஜங்களின் கோலங்கள்
அவளையின்று அழைக்க
அடைபட்ட கிளிமொழி
பதற்றமாய் சொன்னது
" அவர் இருக்கார்"....!
உயிர் தோழிக்கா இந்நிலை!
புன்னகையின் பெட்டகம்
சுதந்திரத்தின் விரிந்த சிறகுகளென
எத்தனை வியப்புகளிருந்தது அவளில்..!
தோழியவளின் திருமணமிட்ட வேலியால்
எத்தனையோ வருடங்களாய் இந்நிலையிது
அவனில் பற்றவைத்தது கவலைகளை!
புன்னகையால் மறைத்தாளவள்
அடிமையென்பதை!
பிள்ளைகளால் இருக்கிறது இல்லறம்
என்கிறது நிஜம்!
பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
ஒளிந்துகொள்ளும் அவளின் வேதனைகள்!
பெண் சுதந்திரப் போராட்டம்
இவளிலிருந்து இனி என்று ஆரம்பித்து.....!!!!
Tuesday, September 4, 2007
மீண்டும் கல்விக்கூடத்தில்...!
நேரமும் செல்வமும் அன்று தடைசெய்த
கல்விப்பயணம்
தொடர்கிறதின்று
மீண்டும் மாணவனல்ல
நீயென்றும் மாணவனேயென்று
மறந்துபோன அந்தகால நினைவுகள்
மறவாமல் மனமெங்கும் பூக்களைத்தூவ
மனதின் வர்ணங்களெல்லாம் தெளிந்துணர்த்த
மறக்கவில்லை எதையும் நானின்று!
நிஜங்கள்
மனதின் மென்மையான பிரதேசங்களில்
தியானத்திலிருப்பதை
மறதியென்று பெயரிடல்
சரியாயென்று
கலைந்த தவங்கள் மகிழ்ச்சியிலின்று!
Monday, September 3, 2007
இறைவா...!!!
நீ என்னை மறப்பதுமில்லை
என்னை விட்டு விலகுவதுமில்லை!
சிரித்தால் என்னோடு சிரிக்கும் உலகம்
அழுதால் எனக்கு தனிமையை அனுப்பும்
என்னோடு நீயிருப்பதை அறியாமல்!
உமையென்றும் நினைத்து வாழும்
உள்ளமெனக்கென்றும் தாரும்
என்னுயிர் இறைவா!
உம்மை அறிவதால்
உண்மை அறிகிறேன்
உமது பணிகளைச் செய்வதிலேயே
நான் நிஜ மகிழ்ச்சியடைகிறேன்
உமது சித்தத்தின்படி வாழ்வதினாலென்
கவலைகள் கரைந்து மகிழ்கிறது
எனது மறைவான பிரதேசங்களிலுமென்
தவறுகளை வெளிப்படுத்துகிறீர்
நகையாக ஆசைப்பட்ட உலோகமெனக்கு
சோதனைகளும் கவலைகளும் - இனி
கொஞ்சகாலமே
சோதனைகளை வெல்ல
உமது கிருபைகள் மட்டும் போதும்
சோதனைகளில் வென்றுதும்
என்னிலுள்ள உம்மை காண்கிறேன்
இறைவா
என்னை உமது கண்களென்றாய்
எனக்கினி ஏது பயம்!
Thursday, August 30, 2007
Wednesday, August 29, 2007
பறந்து சென்றது
அவளை
அடித்துதைத்து தன்னுடலே
வலிக்கத் துவங்கியதும் அவனது
ஆத்திரம் தீர்ந்ததாம்!
உதை வாங்கி வாங்கி விழுந்து
மயக்க நிலையிலினி திட்டித்தீர்க்க
சக்தியோ வார்த்தைகளோயின்றி
வாடிய நிலையில்
பாவமவளின் கவலைகள் தீரவில்லை
அடங்காத ஆத்திரம் மயக்கதிலிருந்து
வெளிவரவில்லை!
அவன் கணவனாம்
அவனின் தாலி அணிந்ததால்
இவள் மனைவியாம்!
இந்த கொடூரம் கண்டு கலங்கி
பயந்து நடுங்கும்
பாவம் குழந்தைகளின் கண்ணீர்
தொடர்ந்து கேட்கும் கேள்வி
" ஏன் பிறந்தோம் "
மேகமூட்டம் கொண்ட அந்த
உணர்ச்சி நொடிகளில்
கூண்டுக்குள் சிறையிடப்பட்ட
பறவைகளைக் கண்டு
பூக்களுக்கு முத்தமிடவந்த
வண்ணத்துப்பூச்சியொன்று
கவலையாய் பறந்து சென்றது!
Saturday, August 18, 2007
எறிந்து விட்டீர்களே...
எஜமானரே
எங்களை எறிந்து வீட்டீர்களே!
ஆண்டுகள் பல
அயராமல் உழைத்தும்
அந்நியராகிவிட
நாங்களின்று விலாசம் தெரியாத சொற்கள்
ஆம்!
நேற்று எறியப்பட உங்களின் பற்கள்!
நினைத்துப் பார்க்கிறோம்...
உங்களில் எத்தனை நினைவுகள்!
எங்களைக் கண்டபோது தான்
உங்களுக்கு அறிவு பிறந்ததென்றார்கள்!
உங்களின் கோபங்களில்
எங்களில் எத்தனை துடிப்புகள்!
உங்களின் ருசிக்கென உணவை அரைத்துழைத்த
இயந்திரச் சக்கரங்களில் மூத்தவர்கள் நாங்கள்
இன்று ஒருவேளை எங்கள் நிலைகண்டு
இன்பமாய் சிரிக்கலாம் நீங்கள்!
இனி வரும் இனிய உணவுப்பொழுதுகளில்
இனியவரே எங்களை நீங்கள் நினைப்பீர்கள்!
எங்களில் காயம் வந்ததற்கு
எப்படி ஐயா நாங்கள் காரணம்?
பாசத்தை நீங்கள் காட்டியதெல்லாம்
எங்களை சுத்தம் செய்வதில் மட்டும் தானே?
வந்து
இரண்டே நாட்களில் அழகிழக்க
ஒவ்வொரு நாளும் முறையிடும்
பாவமந்த பல்துலக்கி!
முன்வரிசை கீழ்வரிசை அழகர்களுக்காவது
நல்லதோர் பலதுலக்கியை
வேலைக்கு வையுங்கள்..
மாதமொன்று போதும் - அதை
மென்மையாய் பயன்படுத்துங்கள்
அந்த வரிசை அழகர்களுக்காவது
எங்கள் நிலை வராமலிருக்கட்டும்!
உங்களின் எத்தனை சந்தோஷங்களிலும்
துக்கங்களிலும் உங்களோடு
பயணித்திருக்கிறோம்?
நீங்கள் பேசின யாவும்
எங்களுக்குத் தெரியும்
பற்கள் எங்களை பயந்தே பலவேளை
நீங்கள் சத்தமாகச் சிந்திக்கவில்லை!
இத்தனை வருட சேவைக்கு பின்
எங்களின் ஓய்வின்று
உங்கள் மருத்தவரின்
குப்பைத்தொட்டியில் தான்!
அவருக்குத் தெரியுமா
நாங்கள் குப்பையிலிருக்கும்
வைரங்களென்று!
ஒரு சமாதானம்!
எங்களை எறிவதற்கு முன்னால்
நகைச்சுவையாய் பலரிடம்
எங்களுக்கு நன்றி சொன்னீர்கள்!
நன்றி ஐயா
நன்றி..!!!!
ஒரு மொழி
அதன் பழைமையாகி விட்ட
அகராதி புத்தகமொன்றை
எறிந்து விட்டது!
இன்று குப்பையிலிருக்கும் நாங்கள்
நாளை எங்கிருப்போமோ!
உங்களுக்கு சேவை செய்ததில்
எங்களுக்கு மகிழ்ச்சியே!
மீண்டுமொரு சமாதானம்
உங்கள் மகிழ்ச்சியில் மகிழ்ந்தே...
நீங்கள் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்தி
உங்களுக்கு முன்னமே
பற்களில் மூத்தவர் நாங்கள்
மங்களமாய்
சென்றுவிட்டோம்!
இருப்பினும் எஜமானரே
எங்களை எறிந்து விட்டீர்களே!
Wednesday, August 15, 2007
ஆகஸ்ட் 15
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியை நினைவுபடுத்தும் ஆகஸ்ட் பதினைந்திற்கு ஒவ்வவொரு வருடமும் எத்தனை எதிர்பார்ப்புகள்! ஆனால் ரோஜாத்தோட்டம் வாங்கி மகிழ ஆசைப்பட்ட ஒருவருக்கு ஒரே ஒரு ரோஜா மட்டும் வாங்க அனுமதி கிடைத்தது போல், மனநிறைவின்றி கவலையாய் அடுத்த வருடத்தை நோக்கி ஒவ்வொரு வருடமும் தனது பயணத்தை தொடர்கிறது, பாவம் ஆகஸ்ட பதினைந்து!
அவ்வப்போது ஆங்காங்கே எடுக்கப்படுகின்ற புள்ளி விவரங்களில் அதிகமும் ஏதோ குறிப்பிட்ட சிலரை மட்டும் சில கேள்விகள் கேட்டு அதை மிகவும் சரியென்று வாதம் செய்கின்றவைகளாக இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. உதாரணமாக, சென்னை போன்ற ஒரு நகரத்தை ஒரு தனியார் புள்ளிவிவர நிறுவனம் எடுத்துக்கொண்டு சிலரிடம் சில கேள்விகள் மட்டும் கேட்ட்விட்டு, “இன்று பெண்களில் அதிகம் பேர் வேலைக்கு செல்கிறார்கள். கடந்த வருடத்தை விட இந்த வருடம் பெண்களின் முன்னேற்றம் மிக அதிகமாக உள்ளது” என்றெல்லாம் சொன்னதும் பொதுவாக எல்லோருக்கும் இந்தியா முழுக்க மாபெரும் வளர்ச்சி அடைந்து விட்டது போல் ஒரு எண்ணம் தவறாக வந்து விடுகிறது. இதைக்கண்டு கோபப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமமும், கிராம மக்களும், விவசாயமும் சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்களாகியும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தானுள்ளது. அவ்வப்போது மேலே வருவது போல் தோன்றினாலும் வறுமைக் கோட்டை இது வரை முழுமையாகத் தாண்டவேயில்லையே! கிராமத்துப் பெண்களில் இந்த அறுபது வருட சுதந்திர வருடங்களில் மருத்துவர்களாக அல்லது பொறியாளர்களாக அல்லது மற்ற உயர் பதவிகளைப் பெற்றோர்களாக எத்தனைபேர்கள் முன்னேறியிருக்கிறார்கள், என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்குமென்பதில் சந்தேகமே இல்லை. அது சரி தான் என்கிறது ஆகஸ்ட பதினைந்து!
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால் உயர்கல்வி இந்தியத் திருநாட்டில் ஏழைகளுக்கு, அதிலும் முக்கியமாக கிராமத்து ஏழை மக்களுக்கு எட்டாத ஒரு கனியாகவே இன்றும் இருப்பதால், அதிகமும் குலத்தொழில் செய்தே ஒவ்வொரு தலைமுறையினரும் வாழ வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது. ஏழையின் மகன் பரம ஏழையாகவும், லட்சாதிபதியின் மகன் கோடீஸ்வரனாகவும் பரிணாமம் அடைகின்ற ஒரு பத்தை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. இதை கவலையோடு பார்க்கிறது, ஆகஸ்ட் பதினைந்து!
கிராமத்து மக்கள் கல்விபெற படும் பெரும்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதிலும் முக்கியமாக மாணவிகள் மிக மிக சிரமப்பட்டு வறுமையின் கொடுமையிலும் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நகரத்தில் வாழ்வோருக்கு இணையாக நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பின்றியும், கோடீஸ்வரர்களுக்கு இணையாக பணம் கொடுத்து கல்வி கற்க வசதியின்றியும் கவலைக் கடலிற்குள் புதைந்து போகிறாகள். ஏழை கிராமத்து மாணவிக்கு பொறியியலும் மருத்துவமும் கரைந்து போன கனவாகியதும், படித்த படிப்பையெல்லாம் நினைத்து அழுது அழுது, வேறு வழியின்றி வீட்டு வேலைக்காரியாக, சித்தாளாக, விவசாயம் அல்லது வேறு தொழிற்சாலைகளில் கூலி வேலைக்காரியாக தனது இளமையின் ஆரோக்கியத்தை கரைத்து கிடைக்கும் கொஞ்சம் கூலியை நோக்கி தனது வாழ்க்கை பயணத்தைத் துவங்குகிறாள். ஒரு தாலி வாங்கும் அளவிற்கு சேமிப்பு சேர்ந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் சமுதாயம், ஒரே வருடத்தில் குழந்தை மட்டும் அவளுக்கு பிறக்கவில்லையென்றால் மலடி என்ற பட்டம் கொடுக்கிறதே இது நியாயமா என்று கேட்கிறது ஆகஸ்ட் பதினைந்து!
கீழ்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதே, அவங்க அந்த பதவியில் வந்தார்களே, இவங்களுக்கெல்லாம் வேலை கிடைத்ததே என்றெல்லாம் சொல்லி உண்மையை மறைக்க யாராலும் முடியாது. அறுபது வருடங்களில் பிற்படுத்தப்பட்டோரில் எத்தனை குடும்பங்கள் இந்தியாவில் முன்னேறியுள்ளது அதில் பெண்களின் முன்னேற்றம் என்ன என்று பார்த்தால் அது வியப்பைத் தவிற வேறென்ன தரமுடியும். சில பெண்கள் விமானம் ஓட்டினாலோ, சில பெண்கள் இராணுவத்தில் சேர்ந்தாலோ இந்தியா ஒலிர்கறது என்று சொல்ல முடியுமா. சில அதிசயங்களைக் கண்டு எல்லாமே மாறிவிட்டது என்று சொலவது மிகவும் தவறு. இங்கே ஒரு பெண் குடியரசுத் தலைவராய் வர எத்தனை போராட்டங்கள்! இதிலிருந்தே யாருக்கும் இன்றைய இந்திய ஏழைப்பெண்களின் நிலையை புரிந்து கொள்ளலாம்! மற்ற நாடுகளை வைத்துப் பார்த்தால், அறுபது வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சி திருப்தி தராத ஒரு கசப்பு தான் என்பது நிதர்சனமான உண்மை. சரி.. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி என்ன செய்ய என்ற கேள்வியை தனது பார்வையில் வெளிப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!
இந்தியா வளர்ந்து வெற்றிபெற வேண்டுமென்றால் இந்தியாவில் இந்தியப்பெண்கள் முதலில் முன்னேற வேண்டும். அதற்கு எல்லோருக்கும் கல்வி என்ற திட்டம் நூறு விழுக்காடு வெற்றி பெற வேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் கொடூரத்தை உடனடி அழித்து, தாய் மொழியிலேயே எல்லா உயர் படிப்புகளும் படிக்க தேவையான வசதிகளை அரசே பொறுப்பெடுத்து உடனே செய்து வெற்றி பெற வேண்டும் இதை மட்டும் செய்தால் போதும், கண்டிப்பாக இந்தியா உலகத்திலேயே உயர்ந்த வல்லரசாக ஒளிரும் என்றதும் உண்மையுணர்ந்து சந்தோஷமாய் சிரித்து மகிழ்கிறது ஆகஸ்ட் பதினைந்து!
Tuesday, August 14, 2007
இயற்கையின் ஆசை
இயற்கையின் ஆசை
எனக்கோர் இறக்கையும்
உனக்கோர் இறக்கையும் தந்து
படைத்தை இயற்கையின்
ஆசையெல்லாம் - நாம்
தழுவியணைத்தே
வாழவேண்டுமென்பதே!
ரோஜா ரோஜா....
ஒரே நாளில்
வாடினால் என்ன!
நான்
ரோஜாவாகவே
பிறந்திருக்கலாம்
உன்னோடு வாழ!
விடிந்த பிறகும்
மறைந்து போகாமல்
தவமிருக்கும் நிலாவிற்கு
நம்மீது இவ்வளவு
பிரியமா!
உணர்வுகள் நிறைந்த - உன்
ஒற்றைப்பார்வை சொன்னது
சொல்லத்துடிக்குமுன்
காதல்..
உனக்காகவே பிறந்தவன்
நானேயென்று
உணர்ந்தேனின்று!
எனக்கு ரோஜா பிடிக்குமென்பதால்
நீ இப்போதெல்லாம்
குளிதண்ணீரிலென் நினைவுகளாய்
ரோஜா இதழ்களை
தூவித் தான்
குளிக்கச் செல்கிறாய்....
ஒவ்வொரு இதழும் என் இதழ்களாய்
நீ மகிழ்ந்து சுகித்திட!
ரோஜாவை சிநேகித்த நான்
உன்னைக் கண்ட
பிறகுதான் உணர்ந்தேன்
ரோஜாவை விட அழகானவள்
நீயொருவள் மட்டும் தானென்று
நான்
சிநேகிப்பதும்
காதலிப்பதும்
காதலியின் பெயரும்
கொடுத்த முதல் பரிசும்
கிடைத்த முதல் பரிசும்
இறுதிப்படுக்கையில் காத்திருப்பதும்
ரோஜா ரோஜா ரோஜாவே !
மறக்க முடியுமா இந்த இடம்
நாம் முதன்முதலாய் சந்தித்த சொர்கம்!
நீ முத்தமிட ஓடி வந்ததும்
வெட்கத்திலன்று கண்மூடின
செடிகளும் மரங்களும்
இன்றும் நமை நினைத்தாலே
பெருமகிழ்ச்சியில் பெருமிதமடைகிறதே!
என் காதலுக்கு நீ
சம்மதம் தெரிவித்ததால்
நான் மனநல மருத்துவரானேன்!
நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்
இதோ எந்தன் தோட்டத்து
ரோஜாப்பூக்கள்...
காதலின் பாலைவனத்தில்
நான்!
நிலாவாக நீ
என்னைக்காண ரோஜாயேந்தி
நடந்து வர.. வர..
பாலைவனம் நந்தவனமாகிறது...!
சொல்லுங்கள்...?
காதலியை நினைத்து
கவலையில் மகிழ்பவன்
முட்டாளென்றால்
மற்றவர்களெல்லாம்
நடிகர்களா!
என் காத்லியே
எந்தன் நினைவிலென்றும்
புன்னகைக்குமென் காதலியே!
உன்னாலென்னில் மலர்ந்த
கவலைகளெல்லாம் ஒன்றுகூடி
வானத்தில் கோலமிட
வானத்துக் கண்ணீரையும் நீ இரசிக்கிறாய்
நான் மரணத்தை நெருங்குவதை
அறிந்தோ அறியாமலோ!
ஞாபகப்பூக்கள்
ஞாபக விதைகள் பூக்காளனதுமெந்தன்
காதலைத் தெரிவிக்க நான் வந்தேன்
மன்னித்து விடுங்களென்றாய்
விரகவேதனையில் என்னோடு
வாடித்தவிக்கிறதே
உந்தன் ஞாபகப்பூக்களும்!
மனிதம்
உடலே - நீ
மக்கள்சேவை செய்தே மகிழ்ந்திடு
மனமே
அன்பை பரிமாறியே மகிழ்ந்துகொள்
புத்தியே
அறிவைச் சேகரித்தே மகிழ்ந்துகொள்
செழிக்கட்டும் மனிதம்!
மௌனம்
பிரிந்து வாழ்வதை விட
சேர்ந்தே வாழ்வோமென்று
முதலில் யார் சொல்ல வேண்டுமென்ற
போட்டியில் மௌனம்!
செல்ல மகளே..
வேலை பாரங்கள்
மனக் கவலைகள்
உடல் வலிகள்
இவைகளணைத்தும்
செல்லமகளே!
உனை அணைத்ததும்
மறந்தே பொனது!
மொழி
என்றுமெந்தன் இதயத்தின் மொழி
புரிந்துகொள்ளும் நீ
நானுன்னை காதலிப்பதையறிந்தும்
அறியாதது போலேனோ நடிக்கிறாய்!
காதலிக்கிறேனென்ற
உண்மையைச் சொன்னால்
பொய்யாகி விடுமோயென் வாழ்க்கையென்ற
பயத்தில் நான்...
உனக்கும் அந்த பயம் தானோ!
Sunday, August 12, 2007
தங்கை யாஸ்மினுக்கென் இதயத்திலிருந்து ஒரு கடிதம்
அன்பிற்கினிய யாஸ்மின்
விண்ண்கத்திலிருக்கும் உனக்கு இன்று தான் ஒரு கடிதமெழுத எனக்கு கொஞ்சம் மனபலம் வந்துள்ளது. அதனால் தான் தாமதம், மன்னிக்கவும்..
உனக்கு யாஸ்மினென்று பெயர் வைத்த திரு அப்துள் ஜப்பார் ஐயா அவர்கள் தான் எனக்கும்
"மகன்" என்று பெயர் சூட்டினார்.
ஷார்ஜாவிலிருக்கும் உனதில்லத்திற்கு வந்தயென் சில சகோதரர்கள், தாய்வீடு சென்று தங்கைபாசமும், தங்கையின் ருசியான உணவும் சாப்பிட்டு வந்தோமென்று சொன்ன போதெல்லாம் அந்த பாசதேவதை, அவள், எனை அதீதமாய் நேசிக்கும் ஆசிப் அண்ண்னின் மனைவி நீ தானென்று நானறியேன்.
அப்பா என்னை "மகன்" என்று பெயரிட்டு அழைத்தபோதும் ஆசிப் அண்ணனின் தந்தை தான்
திரு அப்துல் ஜபார் ஐயா என்பதும் ஆரம்பத்தில் எனக்கு தெரிந்ததாக நினைவில்லை.
இன்று நினைத்து பார்த்தால், நமக்குள் தான் எத்தனை உறவுகள், யாஸ்மின்!
நண்பனின் மனைவி,
அண்ணி,
எனைவிட வயதில் சின்னவள் நீயென்பதால் தங்கை,
எனது சகோதரர்களுக்கு பாசமும் அன்னமுமிட்டதால், தாய்!
இத்தனை உறவுகள் நம்மில் மலர்ந்தும் ஒருநாளும் நாம் தொலைபேசியில் கூட பேசியதில்லையே!
இதை சரி செய்ய இந்த வருட உங்களின் சென்னையில் செலவிடப்படும் விடுமுறை நாட்களொன்றில்
எனது இல்லத்திற்கு உங்களின் மொத்த குடும்பத்தாரையும் விருந்திற்கு அழைக்க இருந்தேன், யாஸ்மின்!.
கடந்த மாதம் 11 ஆம் தேதி, ஒரு திருமணத்தில் ஆசிப் அண்ணனும் நானும் சந்தித்தோம்.
இரண்டு மணிநேரம் பல விஷயங்கள் பேசினோம். கண்டவர் வியந்தனர்.
அன்று பேசியதில் முக்கியமானதொன்று, கவலை மறைத்து ஆசிப் அண்ணன் சொன்ன
உனது முதுகு வலியைப் பற்றினது தான்.
அவர் சொன்னார், " யாஸ்மினோட இடுப்புலெ ஒரு பெல்ட் கட்டியிருக்காங்க.. பாவம் அவளுக்கு ரொம்ப வலிக்குது... சுரேஷ், நீங்க சொல்றது போலத்தான் நானும் சொல்றேன், ஆனா, பிஸியோத்தெரப்பிஸ்ட் சொன்ன பயிற்சிகளை என்ன தான் சொன்னாலும் சரியா செய்ய மாட்டேங்குறாங்க" -
"இல்லை இல்லை அண்ணா, கண்டிப்பாக மருத்துவர் சொன்ன பயிற்சிகள் செய்து தான் ஆக வேண்டும். நானும் கூட எனது முதுகு வலியை அந்த பயிற்சிகளால் தான் சரி செய்து வருகிறேன். கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள் " என்றேன்.
யாஸ்மின்! கோபத்தாலும் கவலையாலும் இன்று கதறுகிறேன், மன்னிக்கவும்.. அந்த பயிற்சி ஏன் நீ தொடர்ந்து ஆரம்பம் முதல் செய்யவில்லை? அதன் விளைவைக் கண்டாயா? எத்தனை கண்ணீர்க் கடல்கள் உனது நினைவுகளைச் சுற்றி!
ஒரு நொடி எனக்கு உனது மருத்துவ அறுவைச் சிகிட்சைப் பற்றி சொல்லியிருந்தால் நான் உடனடி அதை தடுத்திருந்திருப்பேனே!. இது உண்மை, யாஸ்மின்.
தீடீரென்று அந்த கவலைக்காலைப் பொழுதில் உனது மரணத்தைப் பற்றின செய்தி என் காதில் இடிபோல் வெடித்தது. மனம் உடைந்து போனது.
காலையிலேயே விரைந்து வந்தேன், கண்ணீரூடன் ஆசிப் அண்ணன் எனை அழைத்துச் சென்று... இதோ பாருங்கள் என்று உனைக் காட்டினார்.
முதன்முதலாய் நானுன்னைப் பார்த்தேன், ஆனால் நீ மட்டும் என்னை பார்க்காமல் கண்மூடி
நித்திய உறக்கத்திலிருந்தாய்.
ஓர் அழகிய ரோஜாப்பூ உன் மீது, வெள்ளைத்துணியொன்றை போத்திவிட்டதிலும்
நீ மிக அழகாக இருந்தாய்! அழுதேன் அழுதேன் ஆசிப் அண்ணனையும் அப்பாவையும் கட்டியணைத்து குழந்தைபோல் அழுதேன். என் சத்தம் கேட்டு " அண்ணா" என்றழைத்து நீ வரமாட்டாயா என்று முட்டாள் போல் ஏங்கி அழுதேன்.
அழாத உன் பிள்ளைகளின் பக்குவம் எனது பக்குவத்தை உடைத்தெறிந்தது.
உனக்கு இறுதிமரியாதை செலுத்த உன்னோடு எத்தனை நூறு அன்பு நெஞ்சங்கள், யாஸ்மின்.
நீ மட்டும் உயிரோடிருந்திருந்தால், முதன்முதலாய் எனைக் கண்ட மகிழ்ச்சியில் எப்படியெல்லாம் பாசமுடன் என்னிடம் பேசியிருப்பாய் என்று இன்றும் நினைக்கிறேன்.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் திறமைவாய்ந்தவன் என்ற ஆணவக்காரன் நான் உனைக்கண்டு கதறிப்போனேனே!
நகைச்சுவைக்கே இலக்கணமான என் ஆசிப் அண்ணனுக்கு இந்நிலையா? எல்லோரையும் நேசிக்கும் ஜப்பார் ஐயாவின் இந்த அன்பு குடும்பத்தில் இவ்வளவு பெரிய சோகமா என பல்லாயிரம் கேள்விகள் ஒன்று கூடி என்னை என்னன்னவோ செய்தது, யாஸ்மின். அதை சொல்ல இயலவில்லை.
பல இழப்புகளை சந்தித்தவன் நான். அதிகமாய் அழுதவன் நான். இருப்பினும் உன் மரணத்தன்று எனது மனக்குமறல்கலை எனக்கு சொல்ல இயலவில்லை. ஆனால் அதை நீ அறிந்திருப்பாய்!
"இறைவனுக்கு நிகராக சொன்னால் பாவமில்லையென்றால் நான் இவளை கடவுள் என்று சொல்வேன்" என்று உன் மீது நன்றியும் பாசமும் நிறைந்த நல்லதோர் மனிதன் சொன்னதை நீ அன்று கேட்டாயா யாஸ்மின்?
ஆசிப் அண்ணனின் மகிழ்ச்சிக்கும் அவரின் வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒரு இயக்குனராக உனது இறுதி மூச்சுவரை நீ இருந்திருப்பதை அறிந்து வியந்து போனேன்.
விண்ணகத்திலிருக்கும் ஒரு தேவதையை சிலகாலம் இந்த பாசக்குடும்பத்திற்கு அனுப்பின இறைவன் குறித்த வேளையில், தேவதையே நீ சென்றுவிட்டாய், அது உண்மை தான். இருப்பினும் உன்னிரு பிள்ளைகளுக்காக கொஞ்சகாலம் கூட இந்த பூமியில் வாழ கால அவகாசம் கேட்டிருந்திருக்கலாமே யாஸ்மின்.
இந்த சுரேஷ் அண்ணனுக்கு பிள்ளைகளில்லை என்பதால் அதைச் செய்யவில்லையோ..
துபாய்க்கும் ஷார்ஜாவிற்கும் வர இருந்த எனது ஆசையை பல மாதங்களுக்கு இல்லையென்று அங்கிருக்கும் எனது சொந்தபந்தங்களுக்கு சொல்லிவிட்டேன்.
நீ நித்திய உறக்கத்திலிருக்கும் போதும் அப்பா அவர்கள், திருமறை குறான் படித்து பிரார்த்தனைகளை தொடர்ந்து செய்வது கண்டு வியந்து போனேன். அந்நேரமும் அவரின் பிரார்த்தனையில் அதிகமாய் உனக்காகத் தான் அவர் பிரார்த்தனை செய்திருப்பார்.
"அதிகமாக கனவு கண்டவள் அவள்" என்று அப்பா அழுது சொன்னார், எங்களின் கவலையை நீ ஒரு போதும் கனவு கண்டிருக்க மாட்டாயே, பிறகு ஏன் இப்படி நடந்தது யாஸ்மின்?
திறளாக உனது சகோதரர்கள் நாங்களும், உன் சொந்தபந்தங்களும் பள்ளிவாசல் வந்து தொழுகை முடிந்து உன்னை கண்ணீரோடு விதைத்தோம். அந்த நேரத்தின் ஒவ்வொரு நொடிகளும் நான் ஆசிப் அண்ணனையே பார்த்து அப்படியே கண்ணீரின்றி அழுது கரைந்து போனேன். முதிற்சி அடைந்தவர்கள் போல் அங்குள்ளோர் எல்லோரும் நன்றாகவே தங்களை கட்டுப்படுத்தினார்கள்.
இனியுனை என்று காண்போம், என்று உன்னோடு பேசுவோம், நீ தரும் தேநீர்
குடிக்கும் வாய்ப்பெங்கே என்ற பல லட்சம் கேள்விகள் எங்களை மௌனிகளாக்கியது..
எல்லோர் மனதிலும் கண்ணீர்மழை பொழிந்து கொண்டிருந்ததால், வானம் மாலையிலேயே இருண்ட முகில்களை காட்டி தனது கவலையை தெரிவித்து விட்டு சூரியனை மறுபிரதேசத்திற்கு செல்லச் சொல்லி நிலாவை அழைத்தது. அன்றிரவு நிலாவும் அதன் நிலாச்சாரலால் அழுதிருக்கும் யாஸ்மின்!
உன்மீது மல்லிகை பூக்களைத் தான் தூவ வேண்டுமென்று யாரோ சொன்னார்கள். யாஸ்மின் என்றால் மல்லிகை தானே? உனக்கு பிடித்த மல்லிகை பூக்களையும் சேர்த்தல்லவா நீ விதைக்கப்பட்டாய்!
எல்லாம் நடந்தேறி விட்ட பிறகும் நான் மீண்டும் நீ இல்லத்தில் படுத்திருந்த அதே இடத்தில் ஆசிப் அண்ணனோடும் மகளோடும் சேர்ந்தமர்ந்து பேசியிருந்தேன். அப்பொழுதும் எங்களால் அழாமல் இருக்க முடியவில்லையே.
நமக்குள் பலவருடம் பழக்கமில்லை; நாம் சந்தித்ததில்லை; தொலைபேசியில் கூட பேசியதேயில்லை; இருப்பினும் என் மனதில், உனது மரணம் எப்படி ஒரு பேரதிர்வை தந்திருக்குமென்று என்னால் யூகிக்க முடியவில்லை.
உண்மைதான் நீ ஒரு பாசதேவதையே தான்.
ஆனால், முடிவில் மட்டும் எங்களை அழவைத்த தேவதை நீ..
தேவதையே...
இறைவனிடம் ஆசிப் அண்ணனுக்கும் குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் உனது பிரிவின் கவலையைத் தாங்க சக்தி தர மன்றாடு.
அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளதே அதை ஓர் அதிசயக்குறியாக மாற்ற இறைவனிடம் பரிந்துரை செய். இதை நீ செய்து தான் ஆகவேண்டும் யாஸ்மின்.
உன்னுடனான பல ஞாபகங்களில் எல்லோரும்! ஆனால் உனது நித்திய உறக்கத்தின் நாளன்று உனை ஒரு நொடி பார்த்த ஒரு சகோதரனின் வேதனையின் நான்!
உன் மரணம் என்னை உருக்கியது யாஸ்மின்! மருத்துவரிடம் எனைக்கொண்டு காட்டும் நிலை எட்டும் வரை. எனது மனைவியும் சில கவிஞர்களும், ஆசிப் அண்ணனும் மற்றும் அன்புடன் அன்பு தம்பிகளும் என்னை தேற்றி ( பாசமுடன் திட்டி) இப்போது உன் அண்ணன் நான் நலமே!
இந்த கடிதம் எழுதும்போது மட்டும்.. கொஞ்சம் அழுதுவிட்டேன். உனை நினைப்போர் யாருக்கும் இனி நீ தரப்போகும் பரிசும் அது தானே, யாஸ்மின்!
ம்ம்... யாஸ்மின் ஒரு நற்செய்தி எனது தம்பி, ரசிகவ் ஞானியாரின் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.10-ஆம் தேதி தான் மருத்துவர்கள் முதலில் சொன்னார்கள். ஒரு நாள் தள்ளி நேற்று 11/ஆகஸ்ட்/2007 அந்த குழந்தை பிறந்தது. (சுகப்பிரசவம்! - இறைவனுக்கு நன்றி)
உடனே என் தம்பி ரசிகவை அழைத்து நான் பேசினேன், " ரசிகவ், நீ அப்பா ஆனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! என்னை பெரியப்பா என்றழைக்கும் இன்னுமொரு குழந்தை... சரி... எனக்கு உன்னிடமொரு விண்ணப்பமுண்டு" என்றேன். "சொல்லுங்கள் அண்ணா, உங்களுக்கு எதையும் செய்ய சித்தமாக உள்ளேன்" என்றான் என் அன்புத் தம்பி.
"தம்பி, மகளுக்கு " யாஸ்மின் " என்ற பெயர் வைக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்" என்றேன்.
சில நொடிகள் மௌனம்...
பிறகு சொன்னான், "அண்ணா எனக்கும் அந்த பெயர் தான் வைக்க வேண்டுமென்று ஆசை!, கண்டிப்பாக அந்த பெயரை வைப்போம்" என்றான்
யாஸ்மின் நீ எங்கும் செல்லவில்லை எங்கள் வீட்டில் மீண்டும் வந்திருக்கிறாய், பல நூறு வருடங்கள் வாழ.
சந்தோஷம் தாங்க முடியாமல், உடனே ஆசிப் அண்ணனை அழைத்து, "அண்ணா நம்ம யாஸ்மின் எங்கும்போகவில்லை ரசிகவ் வீட்டில் பிறந்திருக்கிறாள், நீங்கள் அந்த குழந்தையை சந்தித்து பிரார்த்த்னை செய்து ஆசீரவதிக்க வேண்டுமென்றேன்" கண்டிப்பாக செய்கிறேன் சுரேஷ் என்றார் ஆசிப் அண்ணன்.
விண்ணகத்திலிருக்கும் நீ நாங்கள் செய்வதையெல்லாம் கண்டு சிரிக்கிறாயோ பாராட்டுகிறாயோ,
ஆனாலின்று இறைவனோடு இருக்கும் நீ உண்மையை உணரமுடிபவள்!
சில அன்புச் சகோதரர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையில்லை என்று திருமறை சொல்கிறது என்றார்கள், அதை இப்போது நானும் நம்புகிறேன். ஏதோ எனது மன உணர்வுகளையெல்லாம் அப்படியே கொட்டித் தீர்த்து விட்டேன். தவறுகள் இருந்தால் இந்த அண்ணனை மன்னிக்கவும்.
இறைவனின் முழு கிருபையிலின்று இருக்கும் நீ இந்த அண்ணனின் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.
இன்றிரவின் உறக்கத்தில் எனக்கு நீ தரப்போகும் பதில்-மடலை எதிர்பார்த்து!
பாசமுடன்
உன்
என் சுரேஷ் அண்ணன்
Monday, August 6, 2007
Friday, August 3, 2007
மௌனம்
மௌனம் அரங்கேறிய அவ்வீட்டில் - சில
குழந்தைகளின் சத்தம் மட்டும்....
அதீத சோகத்தால் மனம் விட்டு
அழத்துடிக்கும் நண்பன்...
அழுது வரண்டுபோன கண்களோடு
அவனினிரு பிள்ளைகள்...
அந்த பிள்ளைகளின் பார்வைகள் கேட்கும்
பல்லாயிரம் கேள்விகளுக்கு பதிலின்றி
அங்குள்ளோர் எல்லோரும்...
கவலையைத் தேற்றவந்து கவலையிலாழும்
சொந்தபந்தங்களும் நண்பர்களும்...
நிர்பந்தமாயந்த வீட்டிற்குள்ளெனை
அழைத்துச் சென்றயென் நண்பன்
ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது போலிருக்கும்
அவனின் தேவதையைக் காட்டி
கதறிச்சொன்னான்..
"மனைவி இறந்து விட்டாள்"
Monday, July 30, 2007
குழந்தை...
இறைவா!
எனது
தாயும் தந்தையும்
விவாகரத்தால்
ஒருபோதும் பிரியாமல்
வாழ வேண்டுமென்ற
பிரார்த்தனை தான்
குழந்தையின் முதல் அழுகை!
Wednesday, July 25, 2007
பூவழகே
புன்னகைத் தோட்டத்தில் மலர்ந்தும்
பூவழகே
ஏன் மறந்தாய்
உன் பொன்சிரிப்பை
பேசிடவும் வேண்டுமோ
அன்புமனம் அமைதியுற்றால்
மொழிவேண்டாமென விலகி
மலர்கிறதோ உன் மௌனம்?
உந்தன் மௌனம் கண்டு
நினைத்தேனே ஆணவமென்று...
நீ பேச இயலாதவளோ?
வினவுமுன்னே முணுமுணுத்தாய்
இல்லை இல்லையென்று
அதிலுன் புன்னகை
முந்திவரக்கண்டு
மகிழ்ச்சிக்கடலில் என்மனம்!
Thursday, July 19, 2007
தெளிவான நம்பிக்கை!
நானுனைத் தேடும் வேளைகளில் நீயோ
நீயெனைத் தேடும் வேளைகளில் நானோ
ஒருபோதும் ஒருவருக்கொருவர்
சந்தித்ததேயில்லை!
நட்சத்திரக்கூட்டங்களிலிருந்து
ஒரு நட்சத்திரம்
நிலாவைப் பார்ப்பதுபோல்
நீயும் நானும்
நானும் நீயும்!
என்றாவது
சந்திக்குமந்த எண்ணிலடங்கா
சந்தோஷ நொடிகளில்
காதலை
நம் காதலிடம் சொல்வதைத் தவிற
சகலமும் பேச
உறக்கம் வராத இரவுகளில்
விளங்கமுடியா சொப்பனங்கள்!
ஒற்றை தரிசனத்தில்
உலகின் அத்தனை
புத்தகங்களையும் படித்துவிட
ஞானியாகிறேன்!
உனைத்தேடும் என்மனத்தவத்தில்
என்னையே மறக்கும் நிலையடைய
உன்னிலுறுதியாய்
நிலைத்து மகிழ்கிறதெந்தன் காதல்
உன் மனதில் நானேயென்ற
தெளிவான நம்பிக்கையில்!
Monday, July 16, 2007
அனாதை...
அனாதை நான்
அனாதை ஒருவளைத்
திருமணம் செய்ததும்
மகிழ்ந்த என் மனம்
சித்தி சித்தப்பா
அத்தை தாய்மாமா என
உறவுகளேதுமில்லா நிலையில்
கோடைவிடுமுறைக்கு
எங்கு செல்ல
என
பதற்றமாய் கதறுமென்
மகளைக் கண்டு
உருகித் தவிக்கிறதே!
Wednesday, July 11, 2007
Monday, July 2, 2007
Wednesday, June 20, 2007
Saturday, June 16, 2007
கனகமணி
(கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று, விபத்து ஒன்றில், பார்வையற்ற எனது தோழியின் இறப்புச் செய்தி கேட்டதும் எனது மனதில் எழுந்த உணர்வுகள்...)
கனக இதயமும்
மணியான சொல்லும்
இணைந்த பெண்மணி
எங்கள் கனகமணி!
ஒவ்வொரு சிந்தனையிலும்
புதுப்பார்வைகளைப் பொழிந்த
தைரியத் திருமகள் உனக்கு ஏனோ
பார்வை தரவில்லையே இயற்கை!
அக்கா! தோழி!
என்ற பாச உறவில்
எனைப் பார்த்த கனகமணி
என்றோ இறந்து போனதை
இன்றே நானறிய
நானுமின்று
குருடனாகிவிட்டேனே!
கடைசியில்
எங்கள்
கனகத்தை
மணியை
கனகமணியை
இந்த உலகம்
தகனம் செய்து விட்டதே!
மனமுருகும் மனமுடையோள் - நீ
எரிந்துருக
நெருப்பும் உருகியிருக்குமே!
அழுதேன்!
அழுத கண்ணீரில்
அதிசயமாய் - நீ
அவதரிக்க மாட்டாயா
என்று
இன்றெல்லாம்
அழுதேனே!
அழுது ஓயாத என்
இதயத்தின் கண்ணீர்
மௌனமென்று
இன்றுதானே
நானுணர்ந்தேன்!
மனசில் மெல்லிய
பிரதேசங்களெங்கும்
நிறைந்த
நினைவுகள் மறக்குமா
உந்தன்
சிரிக்கும் சத்தம்!
காதுகள் மறந்து விடுமோ
உந்தன்
கர்ஜிக்கும் உரிமைக்குரல்!
மணிக்கணக்காய்
என்னிடம் நீ
தொலைபேசியில்
ஒரு வருடமாய் பேசினபோது
என்னையுந்தன்
குறிப்பேடாய் மாற்றுகிறாய்
என்பதை
நான் உணரவில்லையே!
உன் வாழ்க்கை
முடிந்து விட்டது
என் வாழ்க்கையில்
நான் உன்னை
ஒரு முறை கூட
காணாமல்!
நீ
சொன்ன எதையும்
கேட்க - அதற்கு
நேரம் ஒதுக்க
உன்னோடு அழ
சிரிக்க
தைரியம் தர
சமாதானம் செய்ய
இதற்கு தான்
எனது பிறப்போ!
அப்படியென்றால்
எனக்கெதற்கு
இனி வாழ்க்கை!
உன்னை இடித்த அந்த
ஓட்டுனர் தான் குருடன்
எங்கள் மெல்லிய பூவின் மீது
மலையை வீழ்த்தின மூடன்!
எப்படியெல்லாம்
துடி துடித்தாயோ
அழுதாயோ - எங்கள்
தங்கமே!
ஓர் ஆயுள் முழுதும்
பேசவேண்டியதை
தொலைபேசியிலேயே
ஒரு வருடமாய்
என்னிடமே பேசின நீ
எனை விட்டுத் தொலைந்து போனாயே!
இறுதியாக நீ பயணித்த போது
உன் தம்பி என்னை
உன் தோழன் என்னை
தேடியிருப்பாயே!
நீ
உயிரோடிருந்தபோது
உன் இல்லத்திற்கு
எத்த்னையோ முறை
நீ அழைத்தும்
உனைக்காண
வரவில்லையே
ஒரு நாளும் நான்!
நீ
உயிரிழந்த செய்தி
அறியாததால்
உந்தன்
இறுதிப் பயணத்திற்கு
மௌனமாய்
அழுது வழியனுப்பவும்
வரவில்லையே நான்!
என்னை மன்னித்து விடு
என்னை மன்னித்து விடு...
இன்று
என்னிடமே
நான்
முடிவாய்
ஒரு பொய் சொன்னேன்
"கனகமணி இன்றும் உயிரோடு தான் இருக்கிறாள்"!
Wednesday, June 13, 2007
ஓவியம் வரைந்த கவிதைகள்...
Tuesday, June 12, 2007
Friday, June 1, 2007
வாழ்க்கை!
எனக்காக அழுதவனின் கண்களில்
என் கண்களில் கண்ணீரைக் கண்டு மகிழ்ந்த
சுயவிலாசமற்ற அனாதைகள்
இனி எதற்கு வாழ்க்கையென்ற முடிவிற்கு வருவோர்
நான் வாழ வேண்டும்; நீண்ட ஆயுள் எனக்கு வேண்டும்
இது போன்ற அறிக்கைகளையும் ஆசைகளையும்
என் உயிரே!
உந்தனுயிர்
வாழ்ந்த காலத்தில்
Friday, May 25, 2007
ஏங்கே நீ....
Monday, May 21, 2007
பூஞ்சோலை...
பூஞ்சோலை கிராமம்
மழை பொழிய மறுக்கிறது
முகில்களெல்லாம் இங்கு மட்டும்
தென்றலும் தொலைந்து போனது
மரங்களெல்லாம் சிலைகளாகிட
கோபத்தின் வெப்பம் தொடர்கிறது
சூரியன் கடலிற்குள் மூழ்கினபின்னும்
வெப்பம் நிலவுகிறது
நிலா மழையிலும்
தண்ணீர் வேண்டாமென்ற கோஷமிடுகிறது
வறண்ட நிலங்களெல்லாம்
என்னுயிர் காதலியே!
எங்கள் மண்ணிலுந்தன்
மலர்பாதம் முத்தமிட்டால்
பூஞ்சோலை கிராமம்
பூஞ்சோலையாகும்!
Sunday, May 13, 2007
பார்வை அறியாது...
மௌனத்தின் செய்தியுந்தன்
பார்வை அறியாது!
மெல்லிய குரலின் கோபமுந்தன்
காதுகள் கேட்காது!
ஸ்பரிசத்தின் தேவையுந்தன்
மேனி உணராது!
சுருங்கிக் கிழிந்த
ஆடைகளுந்தன் கனிவைத் தீண்டாது!
வரண்டுபோன கண்ணீரின் ஆவியுந்தன்
நாசிக்குச் செல்லாது!
வாடின மலர்மனதின் கவலையுந்தன்
நினவுக்கு எட்டாது!
கணவனே!
மதுவிற்கு அடிமையுந்தன்
கொடுமை தாங்கி மன்னிக்க
இனிமேலும் நான் கோழையல்ல...
புறப்படுகிறேன்
மரணத்தை நோக்கியல்ல..
இனிமேலாவது வாழ்வதற்கு!
Friday, May 11, 2007
நீ சொல்...
Thursday, May 10, 2007
Wednesday, May 9, 2007
Tuesday, May 8, 2007
காதலிக்கு...
உன்னை விட
உன் மனதையும்
என் கண்ணீர் துடைத்த
உந்தன் விரல்களையும்
நன்றியால் நேசிக்கிறது
பார்வை இழந்த என்
காதல் கண்கள்!
Monday, May 7, 2007
கிறுக்கல்...
Sunday, May 6, 2007
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|