இயேசுவைப்போல் வாழ்வதைப்பற்றி வேதபுத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும் நிக்கதேமுவிற்கும் இயேசுவிற்குமிடையே நடந்த உரையாடல் மிகவும் சிறப்பானது
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கதேமு, இயேசுவினடத்தில் வந்து கிறிஸ்துவ வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கண்டறிய வந்தபோது இயேசு “ஓருவர் மறுபடியும் பிறவாவிடில் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன்" என்றார் (யோவான் 3:3)
கர்த்தருக்குள் புதியவனாகி இயேசுவைப்போல் வாழ ஆரம்பிப்பதே கிறுஸ்துவ வாழ்க்கையின் முதற்படி. யோவான் 4:16-இல் இயேசு “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று மிகத்தெளிவாக சொல்கிறார்.
இயேசு பூமியில் வாழ்ந்தகாலம் தந்தையான கர்த்தரிடம் வைத்திருந்த நல்லுறவு, அதீத நம்பிக்கை, சமர்ப்பண மனநிலை, கீழ்ப்படிதல் இவைகளை நாமும் நமது வாழ்க்கையில் கடைபிடிக்க அன்புள்ள இயேசு நம்மை உபதேசிக்கிறார். இந்த உபதேசத்தின்படி வாழ்வதே கிறிஸ்துவ வாழ்க்கையின் சாராம்சம்.
யோவான் 14:21 -இல் இயேசு சொல்கிறார், “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு
அவைகளை கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருக்கிறான்; நானும் அவனில் அன்பாயிருந்து அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்”
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது ஒரு பட்டியலில் சில சட்ட திட்டங்களை மட்டுமிட்டுவிட்டு அதன்படி இறுக்கமாக சமாதானமில்லாமல் வாழ்வதல்ல. கிறுஸ்துவ வாழ்க்கை என்பது உன்னதமான இனிமையான சுதந்திரமான அன்பான வாழ்க்கைமுறை என்பதை இயேசு இந்த பூமியில் வாழ்ந்து காட்டினார். இயேசு கீழ்க்காணும் உபதேசங்களில் அதை தெளிவுபடுத்துகிறார்.
கர்த்தருக்குள் புதிதாய் பிறந்த புரிதலில் வாழ்தல் ( 2 கொரிந்தியர் 5:17)
======================================
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போகின, எல்லாம் புதிதாயின”
தேவனின் சித்தம் பகுத்தறிந்து மனம் புதிதாகி வாழ்தல் (ரோமர் 12:2)
============================================
“நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாயிருங்கள்”
மற்றவர்களோடு அன்புடன் வாழ்தல் (பிலிப்பியர் 2:3-4)
============================
“ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையிலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேலானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக”
கர்த்தருடைய உபதேசம் படி வாழ்தல் ( மத்தேயு 5: 3-10)
==============================
“ஆவியில் எளிமையுள்ளவன் பாக்கியவான்; பரலோகராஜ்ஜியம் அவனுடையது
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் திருப்தியடைவார்கள்
இரக்ககுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவ்னுடைய புத்திரர் எனப்படுவார்கள்
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகரஜ்யம் அவர்களுடையது”
கர்த்தர் மீதுள்ள நம்பிக்கையை மற்றவர்களிடம் தெரிவித்து வாழ்தல் (யோவான் 15:14-16)
=====================================================
“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மீது இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக்கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல் விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்”
இயேசு இந்த பூமியில் மனித உருவிலிருந்த காலத்தில் வாழ்ந்த அன்பின் வாழ்க்கையை பின்பற்றி அவரின் உபதேசங்கள்படி வாழும் வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். அதுவே கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை!
கர்த்தருக்கு பிரியமான தூயவாழ்க்கை வாழும் எல்லோருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களும் சமாதானமும் மகிழ்ச்சியும் நேற்றும் இன்றும் என்றும் நிச்சயம்!