Monday, March 31, 2008

இதோ ஒரு மாமனிதர்....!


மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் தீவிரவாதிகள் என முத்திரைக்
குத்தப்படுவார்களேயாயின், அந்தத் தியாக தீவிரவாதிகள் என்றென்றும் வாழ்க! மக்களையும் அவர்களது உரிமையையும், மக்களின் அமைதியையும், அவர்களது வாழ்வாதாரஙக்ளையும் சிதைக்கும் பயங்கரவாத தீவிரவாதிகள் ஒழிக! ஒழிக!....
என்று திரு வி.கே.டி பாலன் அவர்கள், "தாகம்" - இதழில் அவரின் கட்டுரையொன்றின் கடைசி பத்தியில் இப்படி எழுதியதை வாசித்தபோதே என் கண்களுக்குள் அனல் அடித்தது.

தமிழ் நாட்டின் தெற்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் திருச்செந்தூர் என்ற கிராமத்தில் 26.01.1954 அன்று திரு. பாலன் பிறந்தார். இவரது பெற்றோர் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாவர். அவர்கள் கூலி வேலை செய்யும் இடத்தில் கிடைக்கக்கூடிய உணவும் உடைகளுமே அவர்களது அத்தியாவசிய தேவைகளைப் பூரத்தி செய்வனவாக இருந்தன.

கிராமத்து ஆரம்பக் கல்விகளின் அடிப்படையில் இவருக்கு 8- ஆம் வகுப்பு வரையிலும் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நடந்த சமூகக் கொடுமைகளும் பரம்பரையாக செய்து வந்த அடிமை மனப்பானமை கொண்ட கூலித்தொழிலையும் செய்ய திரு பாலனது மனம் இடம் தரவில்லை. உடுத்தியிருந்த வேட்டி, சட்டையோடு வெறும்கையுடன் பெற்றோரிடமும், ஊராரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைப் பட்டினத்தை நோக்கி பயணச் சீட்டும் இன்றி இரயிலேறினார், திரு. பாலன்.

1981-ம் வருடம் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அங்குள்ள நடைபாதைகள் தாம் வசதியில்லாத பலருக்கு வாசஸ்தலம். எழும்பூர் இரயில் நிலையமே அவருக்கும் வசிப்பிடமாகியது.

ஒரு நாள் இரவு 12 மணியளவில் உறங்கிக்கொண்டிருந்த, இல்லை! பசி மயக்கத்தில் இருந்த திரு பாலனின் உடம்பில் அடி விழுந்தது. விழித்துப் பார்த்தால் எதிரில் ஒரு போலீஸ்காரர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த போலீஸ்காரர் சிறிது தூரத்தில் இன்னொருவனை அடித்து எழுப்பிக் கொண்டிருந்தார். இதுவே சரியான சமயம் என நினைத்து பிடித்தார் ஓட்டம். சிறிது நேரத்தில் திரும்பிப் பார்த்த போது, போலீஸ்காரரை காணவில்லை.

ஓடி ஓடிக் களைத்துப்போன திரு பாலன், திசை தெரியாமல் நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் ஒரு இடத்தில் வரிசையாக ஆட்கள் அமர்ந்து கொண்டும், உறங்கிக்கொண்டும் இருந்ததை பார்த்தார். அந்த வரிசையில் அவரும் போய் அமர்ந்து கொண்டார். அந்த இடமே பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதி அங்கேயே அமர்ந்து உறங்கிப் போனார். பொழுது புலர்ந்தது. விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20பேர், பின்னால் 200பேர்.

அப்போது ஒருவர் அருகில் வந்து "இடம் தருவாயா தம்பி, ரூ2/- தருகிறேன்" என்றார். (அப்போது முழுச்சாப்பாடு ஒன்றின் விலை ரூ2/- ஆகும்). பணத்தைப் பெற்றுக்கொண்டு இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தை விட்டு வெளியே வந்த திரு பாலன் சுற்றும் பார்த்தார், அப்போது தான் அவர் கண்ணில் பட்டது "அமெரிக்க தூதராலயம்" என்ற பெயர்ப்பலகை!
பாதுகாப்புக்கும் உறங்குவதற்கும் வருமானத்துக்கும் இனி இதுவே சிறந்த வேலை என முடிவெடுத்து விடுகிறார், திரு. பாலன்.

தூதராலயத்திற்கு வரும் பயண முகவர்களுடன் பழக்கம் ஏற்படுகிறது. அங்கு வரிசையில் நிற்கும் மற்றவர்களுக்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுக்கவும் மற்றும் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யவும், விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளைச் சுமந்து சென்று வழியனுப்புவது வரையிலும் பாலன் பொறுப்பேற்கிறார்.

திரு.பாலனை நம்பி எத்தனை இலட்சங்களும் கடன் கொடுக்கப் பல விமான முகவர்கள் முன்வந்தனர். இவற்றையே மூலதனமாகக் கொண்டு 17.01.1986 அன்று மதுரா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.

தமிழகத்தில் முதன் முறையாக பயணச் சுற்றுலாத் துறையில் 365 நாட்களும், 24 மணி நேர சேவையை அறிமுகப்படுத்தினார். எந்த நாட்டிற்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திலும், உடனடியாக அனைத்து உள்ளூர் மற்றும், சர்வதேச விமானச் சீட்டுகளைத் தரும் நிறுவனமாக மதுரா டிராவல்ஸை உயர்த்தியுள்ளார்.

தமிழக அரசின் சுற்றுலாக் கழக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருப்பது இவருடைய அனுபவத்திற்கு கிடைத்த கௌரவமாகும். தமிழக முதல்வருக்கு எனது நன்றிகள்!

1987 முதல் 2007 வரை உலக நாடுகளில், கலை நிகழ்ச்சிகள் பலவற்றை இவர் நடத்தினதால்
LIMCA Book of Records இதை பதிவு செய்து இவருடைய நிறுவனத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமையாகும்.

இவருக்கு தமிழக அரசின் பண்பாட்டுக்கலைப் பரப்புநருக்கான " கலைமாமணி" விருதினை மேதகு ஆளுநர் பாத்திமா பீவி வழங்க, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் பொன்னாடை போர்த்தித் தங்கப் பதக்கம் வழங்கினார். மீண்டும் தமிழக முதல்வருக்கு நன்றிகள்!

இவரை ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் கொண்டு வெளிவரும் "மதுரா வெல்கம்" என்ற ஆங்கிலக் காலாண்டு சுற்றுலா வழிகாட்டி இதழ் மிகவும் பிரபலமானது.

இவரது மதுரா வெளியீடு ( Madura Publication) தமிழ்நூல் பதிப்புரையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

Madura Institute எனும் சுற்றுலாப் பயணம் தொடர்பான பயிற்சிப் பள்ளியையும் நிறுவியுள்ளார். இதில் உடல் ஊனமுற்றவர்களுக்குக் கட்டணமின்றிப் பயிற்சி அளிப்பதோடு உடனடி வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

2001 ஆம் ஆண்டில் இணையத்தில் www.worldtamilnews.com "தமிழ்க் குரல்" எனும் வானொலியை உருவாக்கினார். இந்தியாவின் முதல் இணைய வானொலியாகவும் உலகின் முதல் தமிழ் இணைய வானொலி எனும் பெருமையையும் தமதாக்கி கொண்டார், திரு. வி.கே.டி. பாலன்!

"தூர்தர்ஷன்" சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் பொதிகை லைவரிசையில் "வெளிச்சத்தின் மறுபக்கம்" எனும் மனித நேயத் தொடர் முந்நூறாவது வாரத்தைத் தாண்டி சாதனை செய்தது. இப்போது அதே நிகழ்ச்சி "இவர்கள்" என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சியில் தொடர்கிறது.

சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டே தன்னை வழிநடத்திக் கொண்டு வரும் இவர் சுற்றுலா - மனிதம் என்பவைகளுக்கு மாத்திரமே அதிகம் முன்னுரிமை தந்து வாழ்பவர்.

இவரது தாய் திருமதி இசக்கியம்மாள், தந்தை அமரர் திரு கன்னையா, மனைவி திருமதி. சுசீலா, பிள்ளைகள் இருவர் மகள் சரண்யா, மகன் ஸ்ரீஹரன்.

இன்றும் எளிமையான கதர் சட்டை, கதர் வேட்டி, நெற்றியில் சந்தனம்- குங்குமம் காலில் இரப்பர் செருப்புடன் உழைத்து வரும் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் ( பி ) லிமிட்டெடின் தலைவர், நிர்வாக இயக்குனர். திரு.வி.கே.டி பாலன் பாராட்டுக்குறியவர்.

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு!

நமது தமிழ்மணத்தில் திரு அந்தோணி என்ற சகோதரனைப் பற்றி "யாரிவர்" என்ற தலைப்பில் நானும் என்னோடு கவிஞர் மதுமிதா, திருமதி அருணா, என்றும் அன்புடன் திரு பாலா, என பலரும் எழுதி, திரு அந்தோணிக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டதும்,
பலர் திரு அந்தோணிக்கு உதவினதும், தொடர்ந்து உதவி வருவதும் பலருக்கும் அறிந்ததே!

கழுத்திற்கு கீழ் உணர்வில்லாமல் தலையும் இரு கைகளும் மட்டும் வைத்துக் கொண்டு எப்படியாவது ஒரு வேலை செய்ய வேண்டும், சம்பாதிக்க வேண்டும், என்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் திரு அந்தோணி போராடி வருகிறார்.

அழகி.காம் www.azhagi.com நிறுவனர், திரு பா. விஸ்வநாதன் இரவு பகலாக தொடர்ந்து வேலை செய்து வெகு சில நாட்களுக்குள்ளாகவே திரு அந்தோணியைப் பற்றின தகவல்கள் அனைத்தும் கொண்ட வலைதளம்(website) ஒன்றை தயார் செய்தார். அதையும் தமிழ்மணம் வழியாக பலரும் அறிந்திருப்பீர்கள், அந்த வலைதளத்தையும் பார்த்திருப்பீர்கள்.

திரு அப்துல் ஜப்பார் ஐயா, (பிரபல கிரிகக்ட் வர்ணனையாளர்,
நமது இணைய நண்பர்/சகோதரர் திரு ஆசிப் மீறான் அவர்களின் தந்தை), "இவர்கள்"
என்ற மக்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியில் திரு அந்தோணியை நேர்காணல் செய்யக்கோரி திரு.வி.கே.டி பாலனிடம் பேச சொன்னார்.

நான் "அப்பா" என்று அன்புடன் அழைக்கும் திரு அப்துல் ஜப்பார்
ஐயாவின் உபதேசம் படி திரு வி.கே.டி பாலன் அவர்களை தொடர்பு கொண்டேன்.

"உடனே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார் திரு வி.கே.டி. பாலன்! நான் வியந்து போனேன்!

நேர்காணல் பதிவிற்கு சென்றதும், திரு அந்தோணிக்கு, வீட்டிலிருந்தே கணினி வழியாக
மாதம் 3000 ருபாய் சம்பளத்திற்கு ஒரு வேலைக்கு தனது நிறுவனத்தில் தேர்வு செய்த
நியமனக் கடிததை கொடுத்தார் திரு. வி.கே.டி பாலன்!

கடந்த 25 வருட காலங்களுக்கு மேல் இருந்த இருள் சூழ்ந்த வறுமைக்கு விடுதலை தந்து
தனது வாழ்க்கையில் நம்பிக்கையின் விளக்கேற்றி வைத்த திரு. வி.கே.டி பாலன் ஐயாவின் கருணை உள்ளம் கண்டு நெகிழ்ந்து போனார், திரு. அந்தோணி!

இந்த நற்செய்தியைக் கேட்டு இணையதளத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து வரும் பதிவர்கள்
எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். தமிழ்மண நிர்வாகிகள் அனைவரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்!

பலவேறு இடங்களில் பதிவர்கள் பலர் இருப்பதனால், பதிவர்கள் & தமிழ்மணம் சார்பில் இதயம் நிறைந்த நன்றிகளை நான் தாழ்மையோடு திரு வி.கே.டி பாலன் அவர்களுக்கு
இங்கே சமர்ப்பிக்கிறேன். திரு.வி.கே.டி பாலன் ஐயாவை போற்றுகிறேன்!
இறைவன் அவரைத் தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டுமென்று பிரார்த்திக்கிறேன்!

இவருக்கு மடல் அனுப்ப நினைக்கும் நல்ல உள்ளங்களே, அவரின் மின்னஞ்சல்:
india@maduratravel.com

தோழமையுடன்
என் சுரேஷ்

ஆகஸ்ட் பதினைந்தின் மீது ஒரு பருந்துப் பார்வை


பொதுவாக ஆகஸ்ட் 15 அன்று, அல்லது அந்த மாதத்தில் தான் இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் ஒரே நேரத்தில் பலர் எழுதுவார்கள். அதனால் அதில் எதையும் யாரும் அதிகமாக வாசிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அன்றைய சொற்பொழிவைப் போல் அவைகளை பலரும் கண்டுகொள்வதில்லை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியை நினைவுபடுத்தும் ஆகஸ்ட் பதினைந்திற்கு ஒவ்வவொரு வருடமும் எத்தனை எதிர்பார்ப்புகள்! ஆனால் ரோஜாத்தோட்டம் வாங்கி மகிழ ஆசைப்பட்ட ஒருவருக்கு ஒரே ஒரு ரோஜா மட்டும் வாங்க அனுமதி கிடைத்தது போல் மனநிறைவின்றி கவலையாய் அடுத்த வருடத்தை நோக்கி ஒவ்வொரு வருடமும் தனது பயணத்தை தொடர்கிறது. பாவம் ஆகஸ்ட பதினைந்து!

அவ்வப்போது ஆங்காங்கே எடுக்கப்படுகின்ற புள்ளி விவரங்களில் அதிகமும் ஏதோ குறிப்பிட்ட சிலரை மட்டும் சில கேள்விகள் கேட்டு அதை மிகவும் சரியென்று வாதம் செய்கின்றவைகளாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. உதாரணமாக, சென்னை போன்ற ஒரு நகரத்தை ஒரு தனியார் புள்ளிவிவர நிறுவனம் எடுத்துக்கொண்டு சிலரிடம் சில கேள்விகள் மட்டும் கேட்ட்விட்டு, “இன்று பெண்களில் அதிகம் பேர் வேலைக்கு போகிறார்கள். கடந்த வருடத்தை விட இந்த வருடம் பெண்களின் முன்னேற்றம் மிக அதிகமாக உள்ளது” என்றெல்லாம் சொன்னதும் பொதுவாக எல்லோருக்கும் இந்தியா முழுக்க மாபெரும் வளர்ச்சி அடைந்து விட்டது போல் ஒரு எண்ணம் தவறாக வந்து விடுகிறது. இதைக்கண்டு கோபப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமமும் கிராம மக்களும் விவசாயமும் சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்களாகியும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தானுள்ளனர். அவ்வப்போது மேலே வருவது போல் தோன்றினாலும் வறுமைக் கோட்டை இது வரை முழுமையாகத் தாண்டவேயில்லையே! கிராமத்துப் பெண்களில் இந்த அறுபது வருட சுதந்திர வருடங்களில் மருத்துவர்களாக அல்லது பொறியாளர்களாக அல்லது மற்ற உயர் பதவிகளைப் பெற்றோர்களாக எத்தனை பேர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்குமென்பதில் சந்தேகமே இல்லை. அது சரி தான் என்கிறது ஆகஸ்ட பதினைந்து!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால் உயர்கல்வி இந்தியத் திருநாட்டில் ஏழைகளுக்கு அதிலும் முக்கியமாக கிராமத்து ஏழை மக்களுக்கு எட்டாத ஒரு கனியாகவே இன்றும் இருப்பதால அதிகமும் குலத்தொழில் செய்தே ஒவ்வொரு தலைமுறையினரும் வாழ வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது. ஏழையின் மகன் பரம ஏழையாகவும் லட்சாதிபதியின் மகன் கோடீஸ்வரனாகவும் பரிணாமம் அடைகின்ற ஒரு நிலையை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. இதை கவலையோடு பார்க்கிறது, ஆகஸ்ட் பதினைந்து!

கிராமத்து மக்கள் கல்விபெற படும் பெரும்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதிலும் முக்கியமாக மாணவிகள் மிக மிக சிரமப்பட்டு வறுமையின் கொடுமையிலும் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நகரத்தில் வாழ்வோருக்கு இணையாக நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பின்றியும் கோடீஸ்வரர்களுக்கு இணையாக பணம் கொடுத்து கல்வி கற்க வசதியின்றியும் கவலைக் கடலிற்குள் புதைந்து போகிறாகள். ஏழை கிராமத்து மாணவிக்கு பொறியியலும் மருத்துவமும் கரைந்து போன கனவாகியதும் படித்த படிப்பையெல்லாம் நினைத்து அழுது அழுது வேறு வழியின்றி வீட்டு வேலைக்காரியாக சித்தாளாக விவசாயம் அல்லது வேறு தொழிற்சாலைகளில் கூலி வேலைக்காரியாக தனது இளமையின் ஆரோக்கியத்தை கரைத்து கிடைக்கும் கொஞ்சம் கூலியை நோக்கி தனது வாழ்க்கை பயணத்தைத் துவங்குகிறாள். ஒரு தாலி வாங்கும் அளவிற்கு சேமிப்பு சேர்ந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் சமுதாயம் ஒரே வருடத்தில் குழந்தை மட்டும் அவளுக்கு பிறக்கவில்லையென்றால் மலடி என்ற பட்டம் கொடுக்கிறதே இது நியாயமா என்று கேட்கிறது ஆகஸ்ட் பதினைந்து!

"கீழ்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதே அவங்க அந்த பதவியில் வந்தார்களே இவங்களுக்கெல்லாம் வேலை கிடைத்ததே" என்றெல்லாம் சொல்லி உண்மையை மறைக்க யாராலும் முடியாது. அறுபது வருடங்களில் பிற்படுத்தப்பட்டோரில் எத்தனை குடும்பங்கள் இந்தியாவில் முன்னேறியுள்ளது அதில் பெண்களின் முன்னேற்றம் என்ன என்று பார்த்தால் அது வியப்பைத் தவிர வேறென்ன தரமுடியும். சில பெண்கள் விமானம் ஓட்டினாலோ சில பெண்கள் இராணுவத்தில் சேர்ந்தாலோ இந்தியா ஒளிர்கறது என்று சொல்ல முடியுமா? சில அதிசயங்களைக் கண்டு எல்லாமே மாறிவிட்டது என்று சொலவது மிகவும் தவறு. இங்கே ஒரு பெண் குடியரசுத் தலைவராய் வர எத்தனை போராட்டங்கள்! இதிலிருந்தே யாருக்கும் இன்றைய இந்திய ஏழைப் பெண்களின் நிலையை புரிந்து கொள்ளலாம்! மற்ற நாடுகளை வைத்துப் பார்த்தால் அறுபது வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சி திருப்தி தராத ஒரு கசப்பு தான் என்பது நிதர்சனமான உண்மை. சரி.. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி என்ன செய்ய என்ற கேள்வியை தனது பார்வையில் வெளிப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!

இந்தியா வளர்ந்து வெற்றிபெற வேண்டுமென்றால் இந்தியாவில் இந்தியப் பெண்கள் முதலில் முன்னேற வேண்டும். அதற்கு எல்லோருக்கும் கல்வி என்ற திட்டம் நூறு விழுக்காடு வெற்றி பெற வேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் கொடூரத்தை உடனடி அழித்து தாய் மொழியிலேயே எல்லா உயர் படிப்புகளும் படிக்க தேவையான வசதிகளை அரசே பொறுப்பெடுத்து உடனே செய்து தரவேண்டும். இதை மட்டும் செய்தால் போதும் கண்டிப்பாக இந்தியா உலக அரங்கில் ஒளிரும் என்றதும் உண்மையை உணர்ந்து சந்தோஷமாய் சிரித்து மகிழ்கிறது ஆகஸ்ட் பதினைந்து!

தோழமையுடன்
என் சுரேஷ்

கல்வி




இந்தியாவில் தனியார் கலிவிக் கூடங்களுக்கும், அரசின் கல்விக் கூடங்களுக்கும் மாபெரும் வேருபாடுகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. பொருளாதாரத்தில்
உயர்ந்தவர்களும் ஓரளவிற்கு நடுத்தர வருமானத்தில் கசங்கி மூச்சு பிடித்து வெளிவர முடிவோருக்கும் மட்டும்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடிகிறது.

நகர்ப்புறங்களில் தெருவிற்குத் தெரு தனியார் பள்ளிக்கூடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்தும் பலருக்கும், இன்று கல்வியைக்
கற்பிப்பது என்பது ஒரு சேவையல்ல; வணிகம்.

இவர்களில் சிலர் ஆறக்கட்டளை என்ற போர்வையில் தங்களின் இந்த கல்வி வணிகத்தைத் தொடங்கி வருமான வரி கட்டாமல் / அல்லது குறைவாக கட்டி அரசை ஏமாற்றி வருகிறார்கள்.

ஆனால் நமது அரசு கல்விக்கூடங்களில் அதிகம் சுண்ணாம்பு கூட பூசாத பழைய கட்டடங்களாகவே காட்சியளிக்கிறது. தமிழ் நாட்டின் வெப்பநிலை எல்லோரும் அறிந்ததே. அரசு கல்விக்கூடங்களில் மின்விசிறிகள் போதுமானதாக இல்லை; பழைய மேசைகள்; உடைந்த நாற்காலிகள், என அவல நிலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

புதிய தனியார் பள்ளிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகும்
வேகத்திற்கு அரசின் கல்விக்கூடங்களின் வளர்ச்சி மிக மிகக் குறைவு.

இன்றும் சிற்றூர்ப்புறங்களில் செருப்புக் கூட இல்லாமல் ஏழைக் குழந்தைகள் சாலைகள் வழியே கல்விக்கூடங்களுக்குப் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று வரும் காட்சி எல்லோர் மனதையும் உருக்கும். கல்வியைக் கற்றுக்கொடுக்க; கற்றுக்கொள்ள நல்ல சூழ்நிலைகள் அரசு கல்விக்கூடங்களில் அதிகம் இருப்பதில்லை.

இது போன்ற கல்விச் சார்ந்த சிக்கல்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமது ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி உயர்தரமாக இருந்தால் தான் வருங்காலத்தில் உயர்ந்த படிப்பிற்குச் சென்று வெற்றி பெற முடியும்.

கோடீசுவரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகள் மற்றும் கல்வி கற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளில் ஒரு பத்து விழுக்காடு கூட அரசின் கல்விக்கூடங்களில் இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது.

அரசு கல்விக்கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் வசதியானவர்களைப் பார்த்து வருந்துவதால், இளம் வயதிலேயே இவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கை குறைந்து விடுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுகிறது மாணவிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனையும் ஆங்கிலப் பள்ளியில் (கான்வென்டில்) படிக்கும் மாணவன் ஒருவனையும் சந்தித்துப் பேசிப் பார்த்தால் அந்த இருவருக்கிடையில்
பேச்சாற்றலிலும், அறிவுத்திறனிலும் பல வேறுபாடுகளை நாம் அறிந்து கொள்ள முடியும். கல்வியின் தரத்தால்த் தான் இந்த இரண்டு மாணவர்களிலும் இதுபோன்ற வேறுபாடுகளுக்கு காரணம் என்ற உண்மையை எல்லோராலும் உணர முடியும்.

பல காவல் நிலையங்களையும் அரசு செப்பனிட்டு புத்தம் புதிய கட்டடங்களாக
அவைகளை அழகு படுத்தின என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் அதற்கு பதிலாகவோ அல்லது அந்த செலவோடு செலவாகவோ ஏன் கலிவிக்கூடங்களை செப்பனிடுவதில் அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது பொதுமக்களுக்கு புரியாத ஒரு புதிராகவே உள்ளது.

வெகுவிரைவாக அரசின் எல்லா கல்விக் கூடங்களையும் தனியார் நிறுவனத்தினர்களின் கட்டடங்களை விட எல்லா வசதிகளும் நிறைந்த கட்ட்டங்களாக, கல்வி கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் ஏற்ற அழகிய சூழ்நிலைகளை அமைத்து இன்றைய அரசு விரைவில் மாற்றுமென்று நம்புவோம்.

சரி.. தமிழ்நாட்டிலிலுள்ள கல்விக்கூடங்களில் தமிழ் வழிக் கல்வியைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்!

வெள்ளையர்கள் இந்நாட்டை விட்டு சென்ற பிறகும் அந்தக் கொள்ளையர்களின் மொழியில் பேசினால்தான் தங்களுடைய பிள்ளைகள் அறிவாளிகள் என்று போற்றப்படுவார்கள் என்ற சிந்தனை நமது சமுதாயத்தில் படித்தோருக்கும் படிக்காதோருக்கும் பொதுவாக இன்னமும் மனதில் பதிந்துள்ள ஒரு முட்டாள்தனம்.

அதே நேரத்தில் ஆங்கிலம் சுத்தமாக தேவையில்லை என்று சொல்லவும் முடியாத
நிலைக்கு இந்திய மக்கள் எல்லோருமே தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்ற உணமையை மறுக்கவும் முடியவில்லை.

தமிழை இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றாக்கியது இப்போதைய தமிழக அரசின் மிக
மிக பெருமைக்குறியதோர் சரித்திரமே! ஆனால் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலேயே தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றென பறைசாற்றி பல ஆண்டுகளாகியும் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக நமது தமிழை இன்று வரை தமிழ் மக்களாகிய நம்மால் உயர்த்த முடியவில்லையே என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இருப்பினும் இதற்காக கடுமையான முயற்சிகள் செய்துவரும் எல்லோரையும் நாம் வாழ்த்தி வணங்கி பாராட்டாமல் இருக்கவும் முடியாது. ஆனால் தமிழ் மொழியை இந்திய நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டுமென்ற ஒரு நிருபந்தம் என்றோ உருவாகி விட்டது என்பதை யாராலும் என்றும் மறுக்கவே முடியாது.

ஏன்? எப்படி?

தாய்மொழியான தமிழிலேயே பன்னின்ரண்டாவது வரை அல்லது பட்டப் படிப்பு வரை படித்த பிறகு தமிழ் மொழியிலேயே மருத்துவம், பொறியியல் போன்ற அனேகத் துறைகளில் தமிழ்ல் படிக்கத் தமிழ்நாட்டிற்குள்ளோ அல்லது இந்தியாவில் எங்காவதோ படிக்க மாபெரும் வசதிகள் நமக்குள்ளதா?

தமிழை இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக உயர்த்தினால் தான் இந்தியாவில் இருக்கும் எல்லா பல்கலைக் கழகங்களிலும் மருத்துவம் உட்பட எல்லாத் துறைகளுக்கும் தனித்தனி பாடங்கள் அமைக்கப்பட்டு எல்லோரும் தமிழிலேயே தங்கள் கல்வியைப் படித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஆதலால், இன்று செம்மொழியாய் விளங்கும் நமது தமிழ் மொழி, இந்தியாவின்
ஆட்சி மொழியாகும் பொன்னாள் வருவதற்குள் எல்லாத் துறைகளிலும் தமிழிலேயே பாடங்கள் பயில் எல்லா ஏற்பாடுகளையும் நமது அரசாங்கமும் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து தமிழ் மொழியின் மீது நேசம் கொண்ட எல்லோரும் முன் வந்து செயல்பட்டால் நம் தமிழுக்கும், நமது தமிழ் இனத்திற்கும் வெற்றி நிச்சயம்!

தோழமையுடன்
என் சுரேஷ்

Saturday, March 29, 2008

எல்லோருக்கும் தந்தை இறைவன்!



மேல்நாட்டு கலாச்சாரங்களுக்கு அடிமையாகிக் கொண்டே போகும் நமது சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கிய உறவின் பெயரிலும் வருடத்தில் ஓர் நாள் என்று கொண்டாடும் பழக்கம் கடந்த பத்து-பதினைந்து வருடங்களாக நமது நாட்டிலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

"காதலர் தினம்" எனத் தொடங்கி பெற்றோர்களுக்கும் வருடத்தில் ஒரு நாளென "அன்னையர் தினம்", "தந்தையர் தினம்" என்று கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட்டங்களின் மீது சமுதாய சீர்திருத்த நல்லோர்களுக்கு எதிர்ப்பிருந்தாலும் அவர்கள் இதைப் பற்றி ஒரு கருத்தும் சொல்லாமலிருக்க காரணம் என்னவென்றால் வருடத்தில் ஒரு நாளாவது தாய்-தந்தையருக்கு அனபைத் தெரிவித்து இந்த காலத்து பிள்ளைகளில் சிலர் மகிழவைப்பதை ஏன் தடுக்க வேண்டும் என்ற நல்லதோர் சிந்தனைக்கு தள்ளப்பட்டதினால் தான்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை "தந்தையர் தினம்" கொண்டாட 1924-இல் அமெரிக்க அதிபர் கால்லின் கூலிட்ஜ் தனது ஆதரவை தெரிவிக்க 1966-இல் அதிபர் லிண்டன் ஜான்ஸன் அதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆயினும் அவ்வருடத்திற்கு மட்டுமே இருந்தது. பின்னர் ஏப்ரில் 24, 1972-இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், "தந்தையர் தினம்" ஒவ்வொரு வருடமும் நினைவுகூரத் தக்கதாக அறிவித்தார்.

தந்தையர் தினத்தன்று தந்தையார் உயிருடன் இருப்பின் சிவப்பு நிற ரோஜாவும், தந்தையர் மறைந்துவிட்டால் வெள்ளை நிற ரோஜாவும் அணிவார்கள். தந்தையர் தின உணவை தந்தையே சமைத்து பரிமாறுவது இத்தினத்தில் மற்றுமோர் சிறப்பாகும்.

அனாதை இல்லத்துக் குழந்தைகள் எந்த நிற ரோஜாவை அணிய வேண்டும்?

தந்தை யாரென்றே தெரியாமல், அவரின் அன்பை உணர முடியாமல், தாயின் பாச ஸ்பரிசமென்றால் என்னவென்று கேட்கும் அனாதை இல்லத்துக் குழந்தைகளுக்கு இந்த "தந்தையர் தினம்" எவ்வளவு மனவலியை தரும் என்று யோசித்தால் யாருக்கும் மனமுருகும்; கண்ணீர் முந்தி விடும்.

இன்று உலகமெங்கும் எத்தனை கோடி அனாதைக் குழந்தைகள்!

இவர்களைக் காண வரும் பொதுமக்களில் எத்தனை பேர் உண்மைத் தாய்ப் பாசத்தோடும் தந்தைப் பாசத்தோடும் வருகிறார்கள்?

தங்களின் குடும்பத்தில் யாருக்காவது பிறந்த நாளென்றால், அந்த நாளன்று புண்ணியம் வேண்டுமென்ற சுயநலத்தின் எதிர்பார்ப்போடு என்று பிறந்தோம் யாருக்கு பிறந்தோம் என்ற உண்மை கூடத் தெரியாத அனாதைக் குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்களையோ, இனிப்புப் பொட்டலங்களையோ செயற்கைப் புன்னகையோடு வீசியெறிந்து அல்லது அதற்கான பணத்தைக் கொடுத்து ரசீதை வாங்கி, கண்டிப்பாய் ரசீது வாங்கி ( வறுமான வரி விலக்கு பயன்பெற!) வீடு திரும்புவோர் பலர்!

ஆனால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனமுள்ளவர்கள் எத்தனை பேர்?

அனாதை இல்லத்திற்கு வருகின்றவர்களைக் காணும்போது "இன்றாவது தனக்கு ஒரு தாயும் தந்தையும் குடும்பமும் கிடைக்காதா" என்ற எதிர்பார்ப்பையும் ஏக்கங்களையும் ஒவ்வொரு அனாதைக் குழந்தையுடைய கண்களிலும் காணலாம். அனால் அந்த எதிர்பர்ப்புகளுக்கு பரிசாக அதிக வேளைகளும் இவர்களுக்கு கிடைப்பது விலை குறைந்த உணவுப் பொட்டலங்களும், இனிப்புப் பொட்டலங்களும், ஆங்காங்கே கிழிந்த பழைய ஆடைகளும் தான்.

அனாதை இல்லத்துக் குழந்தைகளுக்கு அதிகமும் தேவை அன்பும் ஆதரவும் நிறைந்த மனிதர்களின் நேசம் மட்டும் தான்.

அனாதை இல்லத்தார் தங்களால் முடிந்த உணவும், ஆடையும், கல்வியும் அந்த குழைந்தகளுக்குக் கொடுத்து வருகிறார்கள். ஆனாதை இல்லங்களுக்காக தங்களையே அர்ப்பணம் செய்து வேலை செய்து வரும் சிலருக்கு அங்கிருக்கும் வேலைகளை செய்யவே நேரமில்லாத ஒரு நிலை. அதனால் பொதுமக்கள் இந்த பிஞ்சுக் குழந்தைகளைக் காணும்போது அவர்களை அள்ளியெடுத்து முத்தமிட்டு, எவ்வளவு பாசம் கொடுக்க முடியுமோ அவ்வளவு பாசம் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். இதைத் தான் அந்த இல்லத்துக் குழந்தைகளின் மனங்கள் எதிர்பார்க்கின்றன.

பிள்ளைகள் இல்லாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் இருந்தும் செல்வச் செழிப்பில் மகிழ்ந்து வாழும் தம்பதியர்கள் அனாதை இல்லத்திலிருந்து குழந்தைகளை தத்தெடுத்து அந்தக் குழந்தைகளையும் அன்புடன் நேசிக்கும் மனம் உலகமெங்கும் மிகவும் குறைவாகவே உள்ளது.

பொதுமக்கள் அனாதைப் பிள்ளைகளை அதிகமாக நேசிப்பது குறைவு என்பதை விட, எந்த குழந்தையும் தான் ஒரு அனாதையாக விரும்புவதில்லை, என்ற உண்மையை அறியாமல் இருப்பதே மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மை!

அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போகும்போதே அனாதைகள் போலப் பிள்ளைகள் இருக்கிறார்களே என்று கவலை சங்கீதம் இசைக்கும் இந்த தன்னல சமுதாயம், பெற்றோர்கள் யாரென்றே தெரியாமல் கவலையில் வாடும் இந்த மழலைச் செல்வங்களின் நிலையைப் பற்றி அதிகமாய் ஏனோ யோசிப்பதே இல்லை.

நான், எனது குடும்பம், எனது பிள்ளைகள் எனது வேலை, எனது மகிழ்ச்சி இவைகளைத் தாண்டி, மனிதன், தனது நேசத்தின் வட்டத்தை பெரிதாக்க முயற்சி எடுப்பதே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தங்களுக்கு யாருமில்லையே என்று கவலையில் வாழும் அனாதைக் குழந்தைகளோடு பொதுமக்கள் அன்பான நேரத்தை செலவிட்டால், இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் அனாதையல்ல என்ற உண்மை, உண்மையாகும்.

அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு அன்பில் தான் வறுமை உள்ளது. அதனால் அந்த வறுமையைப் போக்க நல்வழியை எல்லோரும் யோசித்துச் செயல் படுத்தினால் அந்த பிஞ்சு மனங்களில் புத்துணர்வின் ரோஜாத்தோட்டம் தழைத்து வளர்ந்திடும்.

என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments