அன்புத் தம்பி சுரேஷ்,
என் அன்புத் தம்பியின் பிறந்தநாளுக்கான தமதமான வாழ்த்துக்கள். அண்ணனின் அன்பு கலந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
அன்புடன் அண்ணன்
சக்தி
வாழிய ! வாழிய ! பல்லாண்டு வாழியவே !
புன்னகை சிந்திய முகமே
உன்னகை என்று கொண்டவனே
என்னகத்தே வாழும் தம்பி
தென்னகத்தின் மைந்தன் வாழ்க !
யார்யாரோ பிறக்கின்றார் இறக்கின்றார்
இகத்தினில் பிறப்பால் சிறப்பினை
இயல்பாய் படைப்போர் சிலரே
இவர்களுள் தம்பி நீ ஒரு முத்தே !
செந்தமிழ் கொண்டு கவிதை தீட்டி
தீந்தமிழ் நிறைந்த கருணை மனத்தால்
தம்பி நீ ஆற்றிடும் சேவைகள் ஆயிரமன்றோ
அண்ணனிவன் மனம் பெருமையில் பூத்திடும்
தம்பி எனக்கில்லை என்றொரு குறையை
தமிழன்னை தீர்த்தாள் என் தவப்பயனே
தந்தனள் அவள் தம் தம்பியர் பலரை
தம்பி நீ அவர்களுள் முதல்வன்
பாசத்தை அள்ளி வீசி நான் உலகில்
மோசத்தை வாங்கிய நிகழ்வுகள் பலவே
வேசம் எதுவுமின்றி தம்பி நீ வைத்தாய்
பாசம் என்மீது அது என் தவமே !
நல்லவனுக்கு ஏற்றது போல தங்கை
நல்மங்கை விஜி உனை சீராட்ட
நல்நிறை நண்பர்கள் பலரும் உனக்கு
நற்றுணையாக வருவார் உலகில்
பிறந்தநாள் வாழ்த்து இது தம்பிக்கே
பிந்தியதாக இருந்தாலும் என் மனதின்
பிணைப்பின் ராகமாய் விளைந்தது
சிறப்புற வாழ்ந்திடுக என் தம்பி சுரேஷ்
இல்லற வாழ்க்கை நன்றே சிறக்க
இனிய எழுத்துக்கள் உலகெங்கும் பரவ
இதயத்து மொழியாம் தமிழில் சிறந்து
இனிய தம்பி சுரேஷ் நீடுழி வாழ்க
வாழிய ! தம்பி சுரேஷ் பல்லாண்டு வாழிய !
அன்புடன் அண்ணன்
சக்தி
Tuesday, February 12, 2008
சக்தி அண்ணனின் வாழ்த்துக்கள்
Sunday, February 10, 2008
Saturday, February 9, 2008
சங்கமம்
மதத்தின்
விலாசங்கள்
புரிந்ததும்
அசிங்கமாகிறது
மனிதத்தின்
சங்கமங்கள்!
மனிதன்
மனிதனை
மனிதனாக
காணும்
மனம்
காண
காத்திருக்கிறோம்
நானும்
வானமும்!
தமிழ்
தமிழ்
அழிந்துவிடுமென்று
தமிழுக்கு
கவலையில்லை
தமிழை
உணர்ந்த
மனிதர்கள்
தமிழுக்கு
உயிராக
இருப்பதால்!
திறப்பு
என் மனதின் கதவுகளை
விஸ்தாரமாய் திறக்கிறேன்
என்னை நான் முதலில்
மன்னிக்க!
தவறுகள் மனிதரில் இயற்கை
மன்னித்தல் தெய்வீகம்
மன்னிப்பை வெறுப்பவனுக்கும்!
ஏகலைவம்
கட்டை விரல்கலை மட்டும்
உயிரோடு
திருட முடிந்திருந்தால் - பல
அரசியல் கட்சிகளுக்கு
செலவின்றி
வெற்றி நிச்சயம் என்கிறது
கட்டை விரல்களின்
அனுபவ ரேகைகள்!
நரை
நரை ஆரம்பித்ததும்
உடல்நலம் பற்றின
கவலையின்
சிறை
மனதை மீட்டு
என் இளமைக்கு
ஊக்கம் தருகின்றன
உந்தன்
தேனமுத முத்தங்கள்
நீ என்னோடு இருக்கும் வரை
எனது நரை ஒவ்வொன்றும்
எனை மீண்டும்
இளமையை நோக்கி பயணிக்க
வெள்ளைக்கொடி காட்டி
மகிழ்ந்து கொண்டேயிருக்கும்
ஆசிரியர்கள்
அறிவின் வெளிச்சம் தர
உருகும் சூரிய கிரணங்கள்
ஏணிகளாகவே வாழ்ந்து
தங்களின்
மனதின் முதுகில்
படிக்கட்டுகளை
சேகரித்தவர்கள்
மாணவர்களின்
வருங்கால நிஜங்களுக்கு
இன்றே
அவர்களில்
வெற்றிக்கனவின்
விதைகளை
விதைத்து மகிழ்பவர்கள்
விளைச்சல் காலத்தில்
மறக்கப்படுபவர்கள் - அதில்
கவலை கொள்ளாதவர்கள்
நரகாசுரன்
ஒரு மரணத்தை
கொண்டாடுவதில்
நியாயமென்ன?
நரகாசுரனுக்கும்
திருந்திவிட
வாய்ப்பொன்று
வழங்கப்பட்டதா?
சரி
இந்த
கொண்டாட்டம்
மகிழ்ந்திட
குழந்தைத்
தொழிலாளர்களை
வெடிக்காமல்
காப்போம்!
மின்னல்கள்
வானம் அழுதுகொண்டிருக்க
ஆறுதல் தரும் மேகக்கரங்களின்
வெள்ளி ரேகைகளைப் பார்த்து
வருங்கால அறுவடைப் பற்றின
ஜோதிடம் பார்க்கிறது
ஈரமான மண்வாசனையின்
உபதேசத்தை எதிர்த்து
ஆங்காங்கே காணும்
ஜோதிட நிலைய
பெயர்ப்பலகைகள்!
தாகம்
கட்டின தாலியை மறந்தவினிடம்
தாலி தாகமென்றாள்
ஆண்களால் வேசியாக்கப்பட்ட
பாவம் அவள்!
காலத்தின் கோலத்தில்
புயல் வீசின சோகமிவளக்கு
குலமகளாக ஆசையில்லாமலா?
மறுவாழ்வு பெற
மருத்துவமனைகளின் கதவுகளும்
மணமுடிக்கும் பொன்மனங்களின் கதவுகளும்
திறக்கட்டும்!
சிறைவாசம்
தலைவர்களை
புத்தக
ஆசிரியர்களாக்கிறது
தோழர்களை
நோயாளியாக்கிறது
கோடீஸ்வரனுக்கு
ஓயவுகாலமாகிறது
நிரபராதிக்கு?
இங்குபேட்டரில் இங்குலாப்
இங்குபேட்டரில்
இங்குலாப்
கேட்ட
தாய்க்கு
சமாதானம்
பிள்ளை
இருளிலிருந்தாலும்
உயிருடன்
இருப்பதை
அறிந்து
உன்னையே நீ அறிவாய்
உன்னைப்போல்
நீ
வாழ்வதில்
சுகமே
ஆனாலது
கடினம்
முயற்சித்தால்
வெற்றி
நிச்சயம்!
வறுமையின் கோடை வாசஸ்தலம்
கோடீஸ்வரர்களின்
கறுப்பு வங்கி
சில அரசியல் தலைவர்களின்
பணப்பெட்டிகள் நிறைந்த ரகசிய அறை
உணரப்பட்ட மனிதர்களின்
கருணை உள்ளங்கள்
உணர்த்தும்
புரட்சி எழுத்துக்கள்
நல்ல கல்வி
உழைக்கும் மனம்
போதை தெளிந்த
அறிவு
வறுமையை கிழிக்கும்
மன எழுச்சி
மூவண்ணக் கொடி
ஜாதி மத பேதமற்ற
வேற்றுமையில் ஒற்றுமை காண
உதயமான கொடிகளின்
நிறங்களுக்குள் யுத்தம்
தாங்க முடியாமல்
கிழிக்கப் பறக்கிறது
அதோ கவலையில்
அங்கொரு மூவண்ணக்கொடி
பிரிவினை வாதிகள்
பிரிவினை வாதிகள் என
யாரும் பிறக்கவில்லை
கொடுமையால்
புயலான
தென்றலிவர்கள்
நியாயம் என்ற
வரம் பெறும்வரை
ஓயாத
அக்னிமழை இவர்கள்!
நிவாரணம்
இயற்கை
பூகம்பங்களாலும்
பேரழிவுகளாலும்
சில மனிதர்களை
நிர்வாணிகளாக்கினாலும்
பல
நிவாரணப் பணியாளர்களால்
நிர்வாணம் மறைக்கப்படுகிறது
இழந்தவர்களை நினைத்து
நிம்மதியாய் அழுதிட!
இருளும் ஒளியும்
இதற்குமேல்
தோற்க மனமில்லை
இருளை அகற்ற - இனி
முயற்சிக்க மாட்டேன்
வெற்றி பெற
ஒரே ஒரு வழியை
புரிந்து கொண்டேன்
இனி
வெளிச்சத்தை
வர வைத்து
வரவேற்பேன்!
ஒன்றில் ஒன்று
ஜீவாத்மா
பரமாத்மா
பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவி
மனிதன் மனிதன்
மனிதம் மனிதம்
இதுவே
தெய்வீகம்!
காதலுக்கு மரியாதை
காதலுக்கு மரியாதையை
பயந்து போய் கொடுத்து
விடத்தான்
கல்லூரியில்
காதலின் தோல்விக் கதைகளை
அப்படி போதித்தார்களோ?
இதயங்களில்
காதலின் கருப்புப் பதாகை
எல்லோரிலும்
மௌனமாய் அழுதுகொண்டிருப்பது
உண்மை தான்
ஆனால்
காதலுக்கு ஒரு போதும்
தோல்வியில்லை - அதன்
வெற்றிக்குத் தான் மரியாதை!
விளக்கு
பட்டினியால் நடக்கும்
வேசித்தனத்திற்கு
சிவப்பு விளக்கா?
மாடிவீட்டு கொழுப்பிற்கு
என்ன விளக்கு?
ஆண் ஆணுக்கு போதுமென்றும்
பெண் பெண்ணுக்கு போதுமென்றும்
வாழ்ந்து
போதித்து
சமுதாயத்தின் சிந்தனையில்
தங்களின்
சாக்கடை சிந்தனைகளை ஊற்றும்
மிருகத்தன வக்கிர முட்டாள்களுக்கு
என்ன விளக்கு!
பீனிக்ஸ்
வார்த்தைகளின் அம்புகளால்
உடைந்தயென் இதயத்தின் துகல்கள்
இரத்தவெள்ளத்தில்
பயணம் செய்துகொண்டிருக்கிறது!
மருந்து கண்டுபிடிக்கப்பட்ட
நோய்களில் அதிகமும்
ஒவ்வொன்றாய்
எனை தாக்க மகிழ்ச்சியுடன்
காத்திருக்கிறது!
இறந்து கொண்டே இருக்கின்ற நான்
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!
உண்மை தான்!
பீனிக்ஸ் எனது சீடன் தான்!
Friday, February 8, 2008
அக்டோபர் 2
இந்தியாவின் அடிமைச்சங்கிலியை
மனதிற்கொண்டு
அகிம்சை
அவதரித்த திருநாள்!
தனக்கென்று வாழாமல் - தன்
கொள்கைக்காய்
உயிரையும் கொடுக்க மலர்ந்த
திருமகனை
பூமித்தாயும்
காத்திருந்து முத்தமிட்ட
பொன்னாள்!
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|