Wednesday, September 7, 2011
Monday, August 15, 2011
ஏன் இப்படி நானும் என் வாழ்த்துக்களும்...
நேற்று முதல் இந்த நொடி வரை எனக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் அனுப்பினோருக்கு மட்டும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அறிவித்து வருகிறேன்.
64 வருடங்களுக்கு முன் கிடைத்த சுதந்திரம் வைத்து இன்னமும் நாம் இந்தியர்கள் ஏன் முன்னேறவில்லை!
ஒரு கூட்டம் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்ற சிந்தனை ஒவ்வொரு வருடமும் என் நெஞ்சில் வில்லெனப் பாயும்; அது இன்றும்!
குட்டி நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டிருந்த போது வணிகம் வழி வந்து ஒவ்வொரு நாடாக ஆட்சி பிடித்து பிறகு எல்லா நாடுகளையும் சேர்த்து இந்தியா என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர் என்று சரித்திரம் சொல்கிறது.
அவன் கொள்ளை அடிக்க, அடிமைப் படுத்த, ஆட்சி செய்ய சௌகரியம் கருதி செய்திருப்பினும், அந்த செயலால் தானே இன்று இந்தியா என்றொரு நாடு என்று ஒரு சிந்தனையும் மலர்கிறது.
அவன் அவனுடைய வசதிக்காக கட்டி அமைத்த கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இவைகளுக்கு அதிகமாக 64 வருடங்களில் இந்நாடு சாதித்துள்ளதா?
வெறுத்துப் போகும் நொடிகளில் வெள்ளையர்களே இந்த நாட்டை ஆண்டிருக்கலாம் என்று சொன்னோர்களிடம் நான் அன்றெல்லாம் ஏன் சண்டையிட்டேன் என்றும் என் மனசாட்சி என்னிடம் கேட்கிறது! இந்தியனே இந்தியாவை ஆளட்டும் என்று சமாதானமும் செய்கிறது என் மனம்!
இதற்கு நியாயம் காட்டியும் முரணான கருத்தோடும் உதவி செய்ய வருகிறது Hong Kong நாட்டின் சரித்திரம். வெள்ளையர்கள் அந்நாட்டை சீனத்திடம் கொடுத்து புறப்படுகையில் ஏன் கவலையுடன் ஆழ்ந்தனர் அந்நாட்டு மக்கள்?
தமிழ்நாட்டில் வாழும் சிலர் இன்னமும் தங்களின் குழந்தைகள் பாணிடிச்சேரியில் பிறந்திருக்கும் சான்றிதழ் கிடைக்க ஏன் ஆசைப்படுகின்றனர். பிரஞ்சு நாடு மீது பாணிடிச்சேரி மக்களுக்கு இன்னமும் ஏன் அப்படி ஒரு பற்று?
எரிந்த விறகுகளைப் பற்றி கவலைப்படாமல் ருசியான உணவு அருந்துவது போலத்தான் நாம் மகாத்மா காந்தித் தலமையிலான சுதந்திரம் வாங்கித் தந்தோரை மறந்து சுதந்திரம் அனுபவிக்கிறோமா?
இன்று மட்டும் தான் தேசீயத்தலைவர்களின் சிலைகள் குளிக்க வேண்டுமா?
இன்று மட்டும் தான் தேசீயக் கொடிகள் விற்கப்பட வேண்டுமா?
நாளை காலையில் ஒரு மாணவன் தேசியக்கொடியை தன் சட்டைப்பைய்யில் ஏந்தி சென்றால் அவனை கிண்டல் செய்யும் சகமாணவர்கள் மீதா குற்றம் ? அல்லது இப்படி குழப்பின கல்வித்திட்டம் மற்றும் சமூகம் செய்வதா குற்றம்!
தேசத்தில் எங்கும் பசி, பட்டினி, பஞ்சம் இவைகள்இன்னமும் இருப்பதை தெரிவிக்காத ஊடகங்களுக்கு மட்டும் வளர்ந்த இந்தியாவின் எத்தனையோ அழகான புகைப்படங்கள்!
இனத்தை காப்பவர் என்று நம்பினோர்கள், அதை உறுதி மொழியாக சொன்னவர்கள் எல்லோரும் திசை மாறிச் சென்று சுயநலக் கரையில் கட்டிடங்களாகினரே!
1947 இல் சுதந்திர தின விழாவில் மகாத்மா காந்தி ஏன் பங்குகொள்ளவில்லை!
பெரியார் ஐயா ஏன் சுதந்திர தினத்தை எதிர்த்தார். வெள்ளையர்களிடமிருந்து தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் உயர்ந்த ஜாதிகளின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லையே என்ற அவரின் கேள்வி, இன்னமும் ஜாதி மதங்களை முன் நிறுத்துவோருக்கும் ஏழைகளை அடிமைகளாக்கி தொழிலாளி என்ற போர்வையில் அழைப்பவனுக்குமாக பதிலின்றி நிற்கிறதே!
சுதந்திர தினம் என்றால் இனொரு நாள்; இந்த வருடத்தில் கிடைத்த இன்னொரு விடுமுறை நாள் என்று தானே ஒரு சாதாரணனின் மகிழ்ச்சி!
வருடத்தின் ஒரு நாள் கொண்டாட்டமா இது?
கோழைகளின் மனைவிகள் குங்குமத்துடன் இருக்க வீரர்களின் மனைவிகள் இன்னமும் விதவையாகி வரும் கொடுமை இன்னமும் தொடர்கிறதே!
அறப்போர் செய்யக்கூட உரிமை மறுக்கப்படுகிறதே!
இயக்கங்களின்றி இந்த நாடு கட்சிகளால் நிரம்பியுள்ளதே!
இந்தியாவிற்கு வெளியுள்ளோரின் இந்திய நாடு மீதுள்ள பற்று கண்டு வியக்கிறேன். ஆனால் அதில் பலரிடமிருந்தும் " இந்த ஏழை நாடு முன்னேற என்ன உதவி செய்தீர்கள்?| என்ற கேள்விக்கு பதில் ஒன்றும் பெரிதாக கிடைகக்வில்லை, அவர்களின் கோப உணர்ச்சிகள் தவிற!
இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இயக்குனர் அந்த படங்களின் கடைசியில் வைத்துள்ள வசனங்கள் எவ்வளவு சிறப்பானவை ! இதில் தவறுகுகள் இருப்பின் அதை அகற்றி அதில் இருக்கும் சிறப்புகளை அறிந்து அதை இந்த நாட்டு மாணவர்களுக்கு அரசோ தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ பரப்புரை செய்யலாமே!
அந்நியன் மற்றும் இந்தியன் தாத்தா செய்தது போல யாரும் யாரையும் கொலைகள் செய்யவே வேண்டாம். ஆனால் அறப்போராட்டத்தால் சுதந்திர தினம் பெற்றும் அதைக் கொண்டாடும் 64 ஆவது வருடம் விஜய் தொலைக் காட்சியில் இன்று " யுத்தம் செய்" என்ற படம் ஏன் என்று யோசிக்கலாம். யுத்தம் செய் என்ற படம் நான் பார்க்கவில்லை. அதன கதையும் எனக்குத் தெரியாது. ஆனால் அதன் சில காட்சிகள் விளம்பரமிட்டு காண்பிக்கையில் அதில் உண்மையாகவே கொலைவெறி உள்ளதாக உணர்ந்தேன்.
இந்தியாவில் நேர்மையாக சம்பாதிப்பவனுக்கு 11 மாதம் மட்டுமே சம்பளம். 12 ஆவது மாத சம்பளம் வருமான வரியாக எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் எத்தனை கோடி மக்கள் உண்மையாக வருமான வரி கெட்டுகிறார்கள்? அப்படி உண்மையாக கொடுத்த பணத்தை கொள்ளை அடித்து சிறைவாசம் அனுபவிப்போர் ஆயிரத்தில் ஒன்றோ இரண்டோ? வெளிச்சத்திற்கு வராமால் போன ஊழல்கள் இந்த 64 வருடங்களில் எத்தனை என்று யாருக்குத் தெரியும்?
குறிப்பிட்ட ஒரு கல்லூரி என்னை இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அங்கு செல்ல மறுத்தேன். கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல நண்பர் கேட்டார். " படித்ததை என்றும் மறக்காமல் இருங்கள்! நல்ல நிர்வாகத்தில் வேலைக்கு செல்லுங்கள். தனிமனிதனுக்கு உரிமையான எந்த நிறுவனத்திலும் வேலைக்கு செல்லாதீர்கள். சுய தொழில் செய்ய முயற்சி செய்யுங்கள், நல் வாழ்த்துக்கள்" என்று சொல் நணபா என்றேன்.
64 வருடங்களில் அரசு நேரடியாகவே பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருந்தால் இன்னமும் அவர்கள் பிறபடுத்தவர்களாக தொடர மாட்டார்கள் என்று சொன்னால் அதை மறுக்க யாரால் இயலும்!
ஏழ்மை இல்லாத இந்தியாவை கனவு காண்போம் நானும் இதை வாசிக்கும் நீங்களும்!
நல்ல கனவுகள் நம்மை தூங்க விடாமல் இருக்கட்டும்!
இவ்வளவு சொன்ன பிறகு என் தாய்த் திருநாடு இந்தியாவை வணங்கி உங்களிடம் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறேன்...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...!!!
பேரன்புடன்
என் சுரேஷ்
Saturday, April 16, 2011
அழைப்பு மணியோசை...
சுய நினைவின்றி எனது அக்கா மருத்துவமனையில்!
என்னை அமைதியில் அடிமைப்படுத்த நான் முயலும் நொடிகளில் .. "வெளியே போ" என்றொரு சத்தம்.
அது எனக்குள் இருந்த கவலையை கோபமாக்கினது!
யாரது இப்படி அநாகரீகமாக கர்ஜிப்பது.. என்று திரும்பிப் பார்த்தேன்.
விளங்க இயலாத ஓர் உணர்வை முகத்தில் ஏந்தின இளமையான ஒரு செக்யூரிட்டி!
"நான் யாரென்று தெரியுமா... இந்த மருத்துவமனையின் டிரஸ்டிகள் எல்லாம் எனக்குத் தெரிந்தவர்கள் என்று ஆரம்பித்து அவனை திட்ட ஆரம்பித்த்தேன்...
அப்போது அவனது மொபைலில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அவன் வைத்திருந்து அழைப்பு மணியோசையை அந்த மொபைலில் பாடினது " சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"...
உடனே அவன் மருத்துவமனைக்கு வெளியே சென்று, பேசி முடித்து வந்தான்.
கனிவோடு அவனிடம் சென்று, அக்காவின் உடல்நிலை சரியில்லையே என்ற கவலையால் தான் கோபப்பட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் என்றேன்.
அது பரவாயில்லை சார் என்றான்.
சரி தம்பி.... எத்தனையோ ரிங் டோண்களை நானும் கேட்டுள்ளேன், ஆனால் சோதனை மேல் சோதனை ... எனற பாடலை மொபைலின் அழைப்பு மணியோசையாக ஏன் நீங்கள் மட்டும் வைத்துள்ளீர்கள்? நேரடியாக கேட்கிறேன், என்ன? காதல் தோல்வியா?
அவனின் கண்ணீர் ஆமாம் என்றது! சில நிமிடங்கள் அவனுக்கு ஆறுதல் கூறினேன். முடிவில்... ஒரு முறை கூட உங்க்கள் காதலியின் வீட்டாரிடம் பேசி முயற்சி செய்யலாமே தம்பி - என்று சொல்லிப புறப்பட்டேன்.
இரண்டு நாள் கழித்து, உடல்நலம் தேறின எனது அக்காவை அழைத்து நான் மருத்துவமனையிலிருந்து புறப்படுகையில் மகிழ்ச்சியோடு என்னெதிரே வந்தான் அந்த இளைஞன்!
சார், என் காதலியின் குடும்பத்தாரோடு என் வீட்டார் நேற்று பேசி இப்போது எல்லோரும் எங்கள் திருமணத்திற்கு சம்மதித்தனர் என்றான் பெருமகிழ்ச்சியுடன்!.
எனது அக்காவிற்கு, அவர்களின் உடல்நிலை சரியானதை விட, தனது மகனின் வயதுள்ள அந்த இளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியானதே அதீத சந்தோஷம் தந்தது என்றிட என் மனதிலும் அப்ப்டி ஒரு சந்தோஷம் என்றேன்!
காதலர்களை பிரிக்காத சமூகம் உருவாக மௌனமாக பிரார்த்தனை செய்தது என் மனமும்!
Thursday, March 17, 2011
திரு மைக்கல்ராஜ் அவர்கள் இறைவனின் ராஜ்ஜியத்திற்கு...
எனது ஆசிரியர் திரு மைக்கல் ராஜ் அவர்களைப் பற்றி எனது வலைதளத்தில் 11/6/2008 - ல் பதிவு செய்திருந்தேன். இதை தயவாக வாசிக்கவும்.
http://nsureshchennai.blogspot.com/2008/07/blog-post_11.html
அன்புடன் குழுமத்தின் ஒரு சந்திப்பில் தலமை விருந்தினராக வந்து எல்லோரையும் வாழ்த்தினார்.
நேற்று (16-03-2011) இரவு 7.00 மணி அளவில் மாரடைப்பால் இவர் இறைவனடி சேர்ந்தார்.
நாளை சென்னையில் உள்ள சின்னமலையில் இவருக்கு இறுதி மரியாதை செய்ய உள்ளது.
அவரின் அன்பைப் பெற்ற என்னையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகத்தில் தவிக்கிறோம்.
இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஆழ்ந்த துயரத்துடன்
என் சுரேஷ்
Saturday, March 12, 2011
இனிய மனிதர் தம்பி காதர் பாஷா அவர்களை வாழ்த்துங்கள்!!!
காதர் பாஷா
பாஷா - என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் மாணிக்கம் என்ற கதாபாத்திரம் இவரைக் கண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டதோ?
அலுவலகரீதியாக இவரோடு ஓராண்டு தொலைபேசியில் பேசிய பிறகு ஒரு நாள் நான் நேரடியாக இவரைக் காணச் சென்று அவசரமாக நான் கொடுத்த வேலையை முடிக்க என் கருத்துக்களை சொல்லி வந்து விட்டேன்.
ஓராண்டு தொலைபேசி நட்பில், சார்... என்று அழைக்க ஆரம்பித்து பிறகு என்னை அண்ணா என்றழைக்க இவருமெந்தன் அன்புத் தம்பி ஆனார்!
என்னை விட வயதில் பெரியவர்கள் அண்ணா என்றழைக்கையில் தான் கொஞ்சம் சங்கடம். அனால் இவர் முதிர்ச்சியில் மட்டுமே என்னை விட மூத்தவர்.
அன்று மாலை, எனக்கு தம்பி காதரிடம் பேச வேண்டுமென்று மனதில் பட்டது.
கொஞ்சம் நேரம் அன்றும் அதற்கு பிறகும் பேசியதில் என் மனதில் பதிவானவைகள்:
வெற்றிபெற்ற எல்லோருக்கும் கடினமான பாதைகள் உண்டு; பலர் அதை மறந்து விடுவார்கள் ஆனால் காதர் அதை ஒவ்வொரு நொடியும் நினைவு கோருகிறார்.
"தாய் என்ற பாசத்தின் அதிசயத்தை மக்கா அனுப்ப தூய்மையான உழைப்பும் சேமிப்பும் செய்து வருகிறேன்" என்றார். நான் உதவி செய்ய முன் வந்தேன், அன்போடு மறுத்தார்.
சொந்தமான நிலத்தில் மிகச்சி சிறியதாக ஒரு வீடு கட்டித் தான் வாழ்கிறார். "ஏன்" என்று கேட்டேன், " "எங்கள் சொந்த பந்தத்தில் எத்தனையோ பேர் வறுமையால் போராடுகிறார்கள் தெரியுமா அண்ணா! அவர்களுக்கு உதவ என் வியர்வைத்துளிகள் மண்ணில் விழட்டும்; எனக்கு இநத வீடே போதும்" என்றார்.
கல்லூரியில் சேர்ந்து படிக்க பொருளாதாரத்தால் தடைபட்ட ஒரு மாணவன் ( இந்து மதத்தை சார்ந்தவன்) இவரிடம் வேலை கேட்டு வந்திட, காதர் அவனுக்கு வேலை கொடுத்து உதவினாலும், அந்த மாணவனை ஓர் எஞ்சினியரிங்க் கல்லூரியில் எப்படியாவது சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படார். ஒரு வருடகாலத்தில் அவனின் சம்பளத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்து அதில் தனது சொந்த பணத்தையும் போட்டு காத்திருந்ததை அவர், "அண்ணா இந்த மாணவனை ஓர் எஞ்சினியராக பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார். என்னால் முடிந்த மிகச்சிறிய உதவி செய்தேன். தற்போது நல்லதொரு எஞ்சினியரிங்க் கல்லூரியில் அந்த மாணவன் படிக்கிறான்! - இதனால் இவருக்கு என் மீது அதீத பாசம்! என்ன தான் வேலையில் பிசியாக இருந்தாலும் எப்போதாவது நான் தொலைபெசியில் அழைத்தால் உடனே சந்தோஷமுடன் என்னோடு பேசுவார்.
மனைவியை கிண்டல் செய்தும் அடுத்தவர்களிடம் நகைச்சுவைகளை பேசியும் சிரிக்கும் வாலிபர்கள் அதிகம் இருக்கும் இந்த சமுதாயத்தில் இவர் வித்தியாசமானவர். "அண்ணா எனக்கு இறைவன் மிகவும் சிறப்பான பரிசுகளை தந்துள்ளார். அந்த சிறப்புப் பரிசள் தான் எனது பாசமான மனைவியும் இரண்டு குழந்தைச் செல்வங்களும்" என்று சொல்லி மகிழ்ந்தார்.
இன்று இவர் டிஜிட்டல் பான்னர் துரையில் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான ஒரு கலைஞனாக வளர்ந்திட இவருடைய உழைப்பு தான் என்ற எனது புரிதலை இவர் சம்மதிக்காமல் சொல்கிறார், " அண்ணா இதற்கு காரணம் எனது தாயின் கடினமான உழைப்பால், அவர்கள் என்னை எங்கள் குடும்பத்தின் வறுமையும் பாராமல், படிக்க வைத்தது தான் " என்று.
குறிப்பிட ஒரு நபருக்கு ஓர் உதவி செய்ய இவரால் இயலவில்லை. ஆனால் வெற்றிக்கு வழியிட்டு கொடுத்தார். அந்த உதவி பெற்றவர் என்னுடைய நண்பர்களில் அதிக காலம் எனது நட்போடு இருக்கும் ஏழை நண்பன், கே.ஜான்.
கணினியில் இவர் அளவுக்கு திறமை கொண்ட ஒருவரை இதுவரையில் நான் பார்த்ததில்லை.
இவர் முகநூலிலும் இருக்கிறார்.
இவருடைய அலுவலகஇணையதளம் www.marcads.com
உண்மை -உழைப்பு -எந்நேரமும் இறை உணர்ந்து வாழ்ந்தல் -அடுத்தவனுக்கு ஜாதி மத வித்தியாசமின்றி உதவ காத்திருக்கும் இதயம் கொண்டு வாழ்க்கையை மகிழ்தல் - நல்ல மகன்- நல்ல கணவர்- நல்ல தந்தை- எல்லோருக்கும் அன்பின் சொந்தம் ----- என இவரைப் பற்றி உண்மையான தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
" எல்லா புகழும் இறைவனுக்கே " - என்பார் தம்பி காதர் இதை வாசித்தால்!
நாளை 13 ஆம் தேதி இந்த நல்ல மனிதருக்கு பிறந்த நாள்.
என்/நம் இனிய இந்த முகநூல்/வலைதள - நட்பின் சகோதரனுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த சமாதானமும், நோயற்ற வாழ்வும், குறையற்ற செல்வமும், அன்பின் குடும்பமும் தொடர்ந்து அமைய அவருடைய பிறந்த நாளன்று, ஆதாவது 13/3 - நாளை நாம் வாழ்த்துவோம்! கவிதையாலும் வாழ்த்துவோம். தமிழன்னையும் மகிழட்டும்!
இது போன்ற நற்பணி செய்ய முன் வரும் நண்பர்களுக்கு முன்னதாகவே எனது நன்றிகள் பல!
இவருக்காக ஒரு நொடி கண்களை மூடி பிரார்த்தனை செய்வோம்!
நல்லவன் வாழ்வான்!
காதர் வாழ்வான் - இதற்கு
கிருபை தந்து கனியட்டும் இறைவன்!
அன்புடன் காதரின் அண்ணன்
என் சுரேஷ்
Monday, February 28, 2011
கடந்த - அந்த 18 நாட்கள்
இம்மாதம் 3-ஆம் தேதி எனது பிறந்தநாளை இனிதாக கொண்டாடினோம். வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பிறந்த நாள்ன்று அண்ணனோடு கோவில்களுக்கு சென்று மதிய உணவு தாமதமாகவே எடுத்தோம்.
அடுத்த நாள் 4 ஆம் தேதி மாலை அண்ணனோடு ஒரு துணிக்கடைக்கு சென்றோம். துணி வாங்க அல்ல: அதன் உரிமையாளர்கள் இருவரை அண்ணன் சந்திக்க வேண்டும் என்பதற்காக. அந்த உரிமையாளர்களின் மூத்தவருக்கு வயது 85 இளையவருக்கு 76. இருவரும் பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடும் இந்நாளிலும் ஒரே குடும்பத்தில் இருவரின் குடும்பத்தார் யாவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். அண்ணன் மீது தம்பிக்கு உயர்ந்த மரியாதையும், தம்பி மீது அண்ணனுக்கு அளவு கடந்த பாசமும்!
இந்த சந்திப்பில் அந்த இரு பெரியவர்களும் என் அண்ணனும் பேசிக்கொண்டிருக்க நான் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்தேன். திடீரென்று எனக்கு கொஞ்சம் வியர்வை வருவது போலும் மயக்கம் வருவது போலும் அதீத ஒற்றைத் தலைவலியாகவும் இருந்தது. சந்திப்பு முடியும் வரை எப்படியோ சமாளித்து காத்திருந்தேன், பிறகு அண்ணனின் உதவியோடு வீடு வந்து சேர்ந்தேன்.
ஒன்றுமிருக்காது என்ற நம்பிக்கையில் அடுத்த நாள் 5 ஆம் தேதி இரவு ஏற்கனவே முன்பதிவு செய்தது படி பேருந்தில் ஊருக்கு புறப்பட்டு சென்றேன். 9 ஆம் தேதி அண்ணனின் மகளுக்கு திருமணம். சென்னை திரும்பி வரவும் கூட விமானம், இரயில் என ஒன்றும் இல்லாமல் 13 ஆம் தேதி இரவில் பேருந்தில் புறப்பட்டு 14 ஆம் தேதி காலை சென்னை வந்து சேர்ந்தேன்.
வழக்கமாக ஊருக்கு சென்றதும் நான் எப்போதும் செல்லும் ஒரு கான்வெண்டு (ஏழைகளை நேசித்து உணவளிக்கும் கன்னியஸ்த்ரீகள்(தாய் தெய்வங்களின்) அமைப்பு, புத்தகக்கடைகள், பிரபல எழுத்தாளர்கள், சில அரசியல் பிரமுகங்கள் (நல்லவர்கள்-ஏழைகள்) – என இருக்கும் பட்டியல்களில் எங்கும் எனக்கு செல்ல இயலவில்லை.
9 ஆம் தேதி அண்ணன் மகளின் திருமணத்திற்கு சென்று வந்தேன்.
11 ஆம் தேதி 80 வயதான ஒரு பெரியவரை அவரின் வீடு சென்று கண்டு வந்தேன். சம்பாதித்து பிள்ளைகளை வளர்த்தி பெரிய மனிதர்களாக்கி தற்போது ஓய்வூதியத்தால் தன்மானமாகவும் ஆனால் கவலையை மறைக்கத் தெரியாமலும் கலங்கி வாழும் ஒரு வாழ்க்கை-பல்கலைக்கழகம் அவர்.
பிறகு இரண்டு நண்பர்களை சந்திக்க வெளியே சென்றேன், அவ்வளவு தான்!
மற்றபடி எப்போதும் வீட்டில் தான் இருந்தேன். கல்யாண வீட்டிற்கு வந்த எல்லோருடனும் அன்போடு பேசினேன். தொடர்ந்து எனக்கு அசௌகரியம் இருந்ததால் அவ்வப்போது என் அறையிலேயே ஓய்வெடுத்து வந்தேன்.
4 ஆம் தேதி தாக்கின ஒற்றைத் தலைவலி என்னில் ஏற்பெடுத்தின பயத்தில் என்னுள் தான் எத்தனை கேள்விகள்??? நானே எனக்கு தைரியம் தர எத்தனை பதில்கள்!!!
ஐயோ எனது இடது பக்கம் அப்படியே செயலிழந்து போய்விடுமோ? கொஞ்சம் நடந்தாலே தலை சுற்றுகிறதே? இது அந்த நோயோ இந்த நோயோ? சர்க்கரையின் அளவு அதிகமாக குறைந்ததோ? ஏறினதோ? என் இதயம் இன்றே நின்று போய்விடுமோ? இனி நான் கணினி உபயோகிக்க இயலுமோ? இடது பக்கம் இப்படி ஏன் மறுத்துப்போகிறது? இடது கண்ணும் வலிக்கிறதே!!!!
பயமே நோய்.. ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிடும் என்று சொல்லி என்னை தேற்றி வந்தேன்.
அங்குள்ளோரிடம் எனது உடல்நிலை பற்றி சொன்னால் என்னை உடனே ஒரு மருத்துவமனையில் சேர்த்து லட்சங்கள் செலவு செய்வார்கள். கல்யாண வீட்டின் சந்தோஷங்கள் என்னால் ஏன் பாதிப்பிற்குள்ளாக வேண்டும் என்று நான் எனது அசௌகரியங்களை எனக்குள்ளேயே வைத்திருந்து எனது பிறந்த ஊர் சென்னைக்கு வந்து விட காத்திருந்தேன்.
12 ஆம் தேதி எனது அண்ணி (என் தாயை விட அதிகமாக பாசம் தரும் அதிசயம்)… "தம்பி… நாளைக்கு நீங்க ஊருக்கு போகவேண்டும். இன்றைக்கு நீங்க இங்கே ஒரு மருத்துவரை தயவாக பாருங்கள், எப்போதும் சந்தோஷமாக இருந்து, எங்களை சிரிக்கவைத்து வயிற்றுவலி தரும் உங்களை இப்போது இப்படி பார்க்க முடியவில்லை" என்று அழுது சொன்னதும்… சரி அண்ணி!!! மருத்துவரிடம் செல்கிறேன் என்றேன். அண்ணன் மகனோடு அந்த மருத்துவரைக் கண்டேன். தீவிர சோதனை! "ஒன்றும் பயப்படாதீர்கள். நீங்கள் தாராளமாக சென்னைக்கு பயணம் செய்யலாம்" என்று தைரியம் தந்தார்கள், அந்த மருத்துவர்.
அப்படி 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நகர்ந்தது.
14 ஆம் தேதி சென்னை வந்ததிலிர்ருந்து 22 ஆம் தேதி வரை… ஒன்பது நாட்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம், இஸிஜி, இ இ ஜி, என எல்லா சோதனைகளும் செய்து… முடிவில் வெர்டிகோ காரணம் தான் இந்த அசௌகரியம் என்று கண்டறிந்து அதற்கு ஒரு மாதத்திற்கு மருந்து தந்து மருத்துவர்கள் என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க சொன்னார்கள்… நேற்று 23 முதல் மீண்டும் பழைய என் சுரேஷாக இதோ முகநூலில் நான்!!!
இந்த அனுபவத்தை நான் ஏன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்?
எனக்குத் தெரிந்தவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களோடு பேசுகையில் எப்படியாவது எனது பேச்சில் அவர்களை சிரிக்க வைப்பது எனது வழக்கம். (நன்றி – பைபிள்)
பலர் என்னை பிறகு அழைத்து, “நீங்க வந்தாலே நம்ம உடம்பு சரியாகிடும்” என்பார்கள். அதை ஏதோ ஒரு அன்பின் வெளிப்படுத்தல் என்றே எண்ணி வந்தேன்.
ஆனால் நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒவ்வொரு முறையும் என்னை நேரடியாக சந்தித்து எனக்கு ஆறுதல் கூறிச் சென்ற இறைவனின் செல்வங்களின் முகங்கள் எனது கண்முன்னே வந்தன…. அவர்கள் மட்டும் எனை சந்திக்க வரவில்லை என்றால் நான் மீண்டும் எழும்ப ஒரு சக்தி ( காஸ்மிக் எனர்ஜி) எனக்கு வந்திருக்காது என்று மிக உறுதியாக உண்ர்கிறேன்.
கடந்த ஞாயிறு 20 ஆம் தேதி மதியம் என்னை சந்தித்து எனக்கு ஆறுதல் தந்து பிரார்த்தனை செய்து சென்ற சகோதரர் திரு இமேனுவேல் என்பவர் வந்த பிறகே நான் மீண்டும் நானானேன்! சகோதரர் திரு இமேனுவேல் அவர்களை ஆறுதல் தர எனக்களித்த இறைவனுக்கு நன்றி.
எனது அண்ணன்- சக்தி அவர்கள், அண்ணி, மற்றும் ஊரிலுள்ள சொந்தங்க்கள் இங்குள்ள சொந்தங்கள், பலமுறை தொலைபேசியில் பேசின/ குறுஞ்செய்தி அனுப்பின என்னுயிர் தோழர்கள், தோழிகள்… இவர்களை எல்லோரையும் நன்றியோடு நான் நினைவுகொருகிறேன்.
உங்களை எல்லோரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
ஆக! உங்கள் சொந்த பந்தங்களுக்கோ நண்பர்களுக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களை உடனே சந்தியுங்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்.
சென்னையில் உள்ளவர்களுக்கு சொந்தங்களோ நண்பர்களோ இல்லை எனில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்!
இன்னொரு மனிதன் உயிரோடு இருக்க யாரும் அனாதை அல்ல!
எல்லோருக்கும் தந்தை இறைவன்! இறைவன்! இறைவன்!
அன்பு நன்றி வணக்கம்
என் சுரேஷ்
Wednesday, January 5, 2011
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|