நேற்று முதல் இந்த நொடி வரை எனக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் அனுப்பினோருக்கு மட்டும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அறிவித்து வருகிறேன்.
64 வருடங்களுக்கு முன் கிடைத்த சுதந்திரம் வைத்து இன்னமும் நாம் இந்தியர்கள் ஏன் முன்னேறவில்லை!
ஒரு கூட்டம் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்ற சிந்தனை ஒவ்வொரு வருடமும் என் நெஞ்சில் வில்லெனப் பாயும்; அது இன்றும்!
குட்டி நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டிருந்த போது வணிகம் வழி வந்து ஒவ்வொரு நாடாக ஆட்சி பிடித்து பிறகு எல்லா நாடுகளையும் சேர்த்து இந்தியா என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர் என்று சரித்திரம் சொல்கிறது.
அவன் கொள்ளை அடிக்க, அடிமைப் படுத்த, ஆட்சி செய்ய சௌகரியம் கருதி செய்திருப்பினும், அந்த செயலால் தானே இன்று இந்தியா என்றொரு நாடு என்று ஒரு சிந்தனையும் மலர்கிறது.
அவன் அவனுடைய வசதிக்காக கட்டி அமைத்த கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இவைகளுக்கு அதிகமாக 64 வருடங்களில் இந்நாடு சாதித்துள்ளதா?
வெறுத்துப் போகும் நொடிகளில் வெள்ளையர்களே இந்த நாட்டை ஆண்டிருக்கலாம் என்று சொன்னோர்களிடம் நான் அன்றெல்லாம் ஏன் சண்டையிட்டேன் என்றும் என் மனசாட்சி என்னிடம் கேட்கிறது! இந்தியனே இந்தியாவை ஆளட்டும் என்று சமாதானமும் செய்கிறது என் மனம்!
இதற்கு நியாயம் காட்டியும் முரணான கருத்தோடும் உதவி செய்ய வருகிறது Hong Kong நாட்டின் சரித்திரம். வெள்ளையர்கள் அந்நாட்டை சீனத்திடம் கொடுத்து புறப்படுகையில் ஏன் கவலையுடன் ஆழ்ந்தனர் அந்நாட்டு மக்கள்?
தமிழ்நாட்டில் வாழும் சிலர் இன்னமும் தங்களின் குழந்தைகள் பாணிடிச்சேரியில் பிறந்திருக்கும் சான்றிதழ் கிடைக்க ஏன் ஆசைப்படுகின்றனர். பிரஞ்சு நாடு மீது பாணிடிச்சேரி மக்களுக்கு இன்னமும் ஏன் அப்படி ஒரு பற்று?
எரிந்த விறகுகளைப் பற்றி கவலைப்படாமல் ருசியான உணவு அருந்துவது போலத்தான் நாம் மகாத்மா காந்தித் தலமையிலான சுதந்திரம் வாங்கித் தந்தோரை மறந்து சுதந்திரம் அனுபவிக்கிறோமா?
இன்று மட்டும் தான் தேசீயத்தலைவர்களின் சிலைகள் குளிக்க வேண்டுமா?
இன்று மட்டும் தான் தேசீயக் கொடிகள் விற்கப்பட வேண்டுமா?
நாளை காலையில் ஒரு மாணவன் தேசியக்கொடியை தன் சட்டைப்பைய்யில் ஏந்தி சென்றால் அவனை கிண்டல் செய்யும் சகமாணவர்கள் மீதா குற்றம் ? அல்லது இப்படி குழப்பின கல்வித்திட்டம் மற்றும் சமூகம் செய்வதா குற்றம்!
தேசத்தில் எங்கும் பசி, பட்டினி, பஞ்சம் இவைகள்இன்னமும் இருப்பதை தெரிவிக்காத ஊடகங்களுக்கு மட்டும் வளர்ந்த இந்தியாவின் எத்தனையோ அழகான புகைப்படங்கள்!
இனத்தை காப்பவர் என்று நம்பினோர்கள், அதை உறுதி மொழியாக சொன்னவர்கள் எல்லோரும் திசை மாறிச் சென்று சுயநலக் கரையில் கட்டிடங்களாகினரே!
1947 இல் சுதந்திர தின விழாவில் மகாத்மா காந்தி ஏன் பங்குகொள்ளவில்லை!
பெரியார் ஐயா ஏன் சுதந்திர தினத்தை எதிர்த்தார். வெள்ளையர்களிடமிருந்து தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் உயர்ந்த ஜாதிகளின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லையே என்ற அவரின் கேள்வி, இன்னமும் ஜாதி மதங்களை முன் நிறுத்துவோருக்கும் ஏழைகளை அடிமைகளாக்கி தொழிலாளி என்ற போர்வையில் அழைப்பவனுக்குமாக பதிலின்றி நிற்கிறதே!
சுதந்திர தினம் என்றால் இனொரு நாள்; இந்த வருடத்தில் கிடைத்த இன்னொரு விடுமுறை நாள் என்று தானே ஒரு சாதாரணனின் மகிழ்ச்சி!
வருடத்தின் ஒரு நாள் கொண்டாட்டமா இது?
கோழைகளின் மனைவிகள் குங்குமத்துடன் இருக்க வீரர்களின் மனைவிகள் இன்னமும் விதவையாகி வரும் கொடுமை இன்னமும் தொடர்கிறதே!
அறப்போர் செய்யக்கூட உரிமை மறுக்கப்படுகிறதே!
இயக்கங்களின்றி இந்த நாடு கட்சிகளால் நிரம்பியுள்ளதே!
இந்தியாவிற்கு வெளியுள்ளோரின் இந்திய நாடு மீதுள்ள பற்று கண்டு வியக்கிறேன். ஆனால் அதில் பலரிடமிருந்தும் " இந்த ஏழை நாடு முன்னேற என்ன உதவி செய்தீர்கள்?| என்ற கேள்விக்கு பதில் ஒன்றும் பெரிதாக கிடைகக்வில்லை, அவர்களின் கோப உணர்ச்சிகள் தவிற!
இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இயக்குனர் அந்த படங்களின் கடைசியில் வைத்துள்ள வசனங்கள் எவ்வளவு சிறப்பானவை ! இதில் தவறுகுகள் இருப்பின் அதை அகற்றி அதில் இருக்கும் சிறப்புகளை அறிந்து அதை இந்த நாட்டு மாணவர்களுக்கு அரசோ தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ பரப்புரை செய்யலாமே!
அந்நியன் மற்றும் இந்தியன் தாத்தா செய்தது போல யாரும் யாரையும் கொலைகள் செய்யவே வேண்டாம். ஆனால் அறப்போராட்டத்தால் சுதந்திர தினம் பெற்றும் அதைக் கொண்டாடும் 64 ஆவது வருடம் விஜய் தொலைக் காட்சியில் இன்று " யுத்தம் செய்" என்ற படம் ஏன் என்று யோசிக்கலாம். யுத்தம் செய் என்ற படம் நான் பார்க்கவில்லை. அதன கதையும் எனக்குத் தெரியாது. ஆனால் அதன் சில காட்சிகள் விளம்பரமிட்டு காண்பிக்கையில் அதில் உண்மையாகவே கொலைவெறி உள்ளதாக உணர்ந்தேன்.
இந்தியாவில் நேர்மையாக சம்பாதிப்பவனுக்கு 11 மாதம் மட்டுமே சம்பளம். 12 ஆவது மாத சம்பளம் வருமான வரியாக எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் எத்தனை கோடி மக்கள் உண்மையாக வருமான வரி கெட்டுகிறார்கள்? அப்படி உண்மையாக கொடுத்த பணத்தை கொள்ளை அடித்து சிறைவாசம் அனுபவிப்போர் ஆயிரத்தில் ஒன்றோ இரண்டோ? வெளிச்சத்திற்கு வராமால் போன ஊழல்கள் இந்த 64 வருடங்களில் எத்தனை என்று யாருக்குத் தெரியும்?
குறிப்பிட்ட ஒரு கல்லூரி என்னை இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அங்கு செல்ல மறுத்தேன். கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல நண்பர் கேட்டார். " படித்ததை என்றும் மறக்காமல் இருங்கள்! நல்ல நிர்வாகத்தில் வேலைக்கு செல்லுங்கள். தனிமனிதனுக்கு உரிமையான எந்த நிறுவனத்திலும் வேலைக்கு செல்லாதீர்கள். சுய தொழில் செய்ய முயற்சி செய்யுங்கள், நல் வாழ்த்துக்கள்" என்று சொல் நணபா என்றேன்.
64 வருடங்களில் அரசு நேரடியாகவே பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருந்தால் இன்னமும் அவர்கள் பிறபடுத்தவர்களாக தொடர மாட்டார்கள் என்று சொன்னால் அதை மறுக்க யாரால் இயலும்!
ஏழ்மை இல்லாத இந்தியாவை கனவு காண்போம் நானும் இதை வாசிக்கும் நீங்களும்!
நல்ல கனவுகள் நம்மை தூங்க விடாமல் இருக்கட்டும்!
இவ்வளவு சொன்ன பிறகு என் தாய்த் திருநாடு இந்தியாவை வணங்கி உங்களிடம் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறேன்...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...!!!
பேரன்புடன்
என் சுரேஷ்
2 comments:
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் டென்மார்க்கிலிருந்து.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com
மிக்க நன்றி அம்மா!
பேரன்புடன் என் சுரேஷ்
Post a Comment