Saturday, November 29, 2008

மும்பை 26/11...

அடப்பாவிகளா, தீவிரவாதிகளா
என்ன தான் வேண்டும் உங்களுக்கு?
உங்கள் மரணத்தையே
தாங்க முடியவில்லையே எங்களுக்கு!
கொன்று குவித்து கொன்று மகிழ்வது
நியாமான விளையாட்டென்று
உங்கள் விளையாடும் வயதில்
கற்பித்தவன் - ஏன்
அவன் பிள்ளைகளை அனுப்பவில்லை!

உயிர் தியாகம் செய்து இந்தியாவின்
மானம் காத்த காவலர்களே - இந்த
தீயவர்களை இந்தியாவிற்குள்
அனுமதிக்காமல் இருந்திருந்தால்
உங்கள் இல்லங்களின்று
கண்ணீர் வெள்ளத்தில்
மூழ்காமல் இருந்திருக்குமே!

அரசியல் தலைவர்களே
அறுபது மணிநேரப் போராட்டத்தில்
இந்தியத் தாயின் கண்களில்
வடிந்த இரத்தத்தை
வரும் தேர்தலுக்கு
தயவாக உபயோகிக்க வேண்டாம்
உங்கள் சின்னங்களையே வைத்து
பிழைத்துக் கொள்ளுங்கள்!

Monday, November 24, 2008

கவிதை கேளுங்கள்...! (என்றென்றும் நினைவுகளில்) உலகத் தமிழ் வானொலியில்...

அன்பர்களே எனது "பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று "உலகத் தமிழ் வானொலியில்" ஒலிபரப்பாகிறது.

கேட்டுவிட்டு... நேரமிருப்பின்... முடிந்தால்... அங்கேயே ஒரு சிறு பின்னூட்டம் தாருங்கள்.

அந்தக் கவிதை இங்கேயும் கேட்கலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA



தேவைப் பட்டவர்கள் "இங்கே க்ளிக் செய்து" உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நன்றிகளுடன்...
என்சுரேஷ்

Thursday, November 20, 2008

நீங்கள் பிறந்த கிழமை?

நீங்கள் பிறந்த கிழமை எது? சரி, வெள்ளிக்கிழமை என்று இருப்பின் வெள்ளி,
புதனென்றால் புதன்!

இந்த கிழமைகளில் மூன்று வேளை உணவிற்கு பதில் இரண்டு நேர உணவு
சாப்பிட்டால் போதும் என்று ஒரு தீர்மானம் எடுஙகள்.

சரி... இப்போது உங்களுடைய ஒரே ஒரு வேளை உணவிற்கு என்ன செலவாகும் என்று
கணக்கிடுங்கள்.. உதாரணத்திற்கு ஐம்பது ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது ஒரு வாரத்திற்கு நான்கு ஐமப்து ரூபாய் என்றால் இரணூறு ரூபாய்.
ஒவ்வொருவரும் தங்களுடைய ஒருவேளை உணவிற்கு செல்வு செய்யும் அளவிற்கு இந்த
கணக்கு மாறும்.

இதை பணமாகவோ காசோலையாகவோ நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கிருக்கும் ஓர் அனாதை விடுதிக்கு தொடர்ந்து கொடுத்து வாருங்கள். ஒரு ஏழைக் குழந்தையுடைய விதியை உங்களால் சிறப்பாக மாற்ற முடியும்!

பணம் தான் கொடுத்தோமே, நாம சாப்பிட்டால் என்ன என்று நினைத்து சாப்பிடாதீர்கள்.

சாப்பிடாமல் உறங்கச்செல்லுங்கள். மனிதன் என்றால் அடுத்தவர்களுக்காக
மனம் இறங்குபவன் தானே!

ஆரம்பத்தில் உணவு அறுந்தாமல் உறங்கச் செல்லும்போது ஓர் ஏழைக்குழந்தை உங்கள் நினைவுகளில் வரலாம்.

ஆனால் பிறகு, ஆகா! நம்மால் ஒரு ஏழைக்குழந்தைக்கு நன்மை செய்ய முடிகிறதே
என்ற சந்தோஷம் தொடர்ந்து உங்களுக்கு நிம்மதியான உறக்கத்தையும் மனநிறைவையும் தரும்.

உடல் எடை குறையும். நல்ல உணர்வுகளால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நிச்சயம் மனதில் ஆனந்தம் நிலைக்கும்!
அன்பும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததே இனிமையான வாழ்க்கை.
அதை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.

நல்வாழ்த்துக்கள்
அன்புடன் என் சுரேஷ்

Sunday, October 12, 2008

யாரிவன்...!!!!


பதினொன்றாம் வயதில்
விபத்தொன்றில் கிணற்றில் விழ
கழுத்திற்கு கீழ்
கைகள் இரண்டையும் தவிற
எல்லாவற்றின் செயலகளையும் அந்த
கிணற்றால்
கொள்ளையடிக்கப்பட்டவன்!

உடலின் கசிவுகள்
இவனின் கட்டுக்குள் இல்லை
உடன்பிறந்தோரின் உதவிகள் தொடர்கிறது
வருடங்கள் இருபத்தி ஐந்தினைத் தாண்டி!

கழுத்திற்கு கீழ் உணர்வில்லை -ஆனால்
உடல் முழுக்க மனவலியின் உணர்வுகள்
பழகி விட்டதென்று புன்னகைப்பான்
பார்ப்போறின் கண்களில்
முந்தும் கண்ணீர்மழை!

எத்தனையோ நண்பர்கள்
வந்தார்கள் சென்றார்கள்
புதிய துடப்பத்தின்
ஆரம்ப சுறுசுறுப்பு போலவே!

இருப்பினும்
சில தியாகதீபங்கள்
இவனுக்காய் அழுதுகொண்டுதான்
இருக்கிறது
உருகுவதைத் தவிற
வேறுவழியின்றி!

இவனிடம்
பேச யாருக்கு நேரமுண்டு - என
உணர்ந்த இவனின் தனிமையே
இவனுக்கு நல்ல தோழன்!

இவனும் தனிமையும் சேர்ந்து
புத்தகங்கள் வாசிப்பார்கள்
அழுவார்கள்
பள்ளிநாட்களின் நினைவுகள் தரும்
மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!

சில மாதங்கள் முன்பு
தகப்பனின் மரணம்
ஆலமரம் விழுந்ததால்
கசிந்து உருகுகிறது அதன்
நிழலின் துயரம்!

படுத்த படுக்கையில்
பல்லாண்டுகளாய் தாய்!

திருமணமான ஐந்து சகோதரிகள்
அவர்களின் தியாகமும் அன்பும்
மறக்கமுடியுமோ என்பவன்!

தனிமையின் துணையோடு
இதெல்லாம் நினைத்துக்கொண்டே
நகர்ந்து கொண்டிருக்கிறது
இவனின் கவலைகளின்
இருண்ட மேகமூட்டத்தில்
கரையும் வாழ்க்கை!

கவலை கோபமாக மாறும்
சில நொடிகளில்
தனிமையும் இவனும் சேர்ந்து
பூமிப்பெண்ணை ஒரு சாத்து
சாத்துவார்கள்
பிறகு அழுவார்கள்

இசையில் மேதையிவன் - ஆனால்
இவன் இசையை இசைக்கமட்டும்
மனமில்லா சமுதாயம்!

தசைகள் செயலற்று இசைஞானிக்கு
இசையெதற்கு என்ற
விரக்தியில் இசைந்து
இசையை மறந்துவிட முயற்சிக்கிறான்...
காதலியை மறக்க முயன்று
தவிக்குமோர் காதலனைப் போல!

கண்டதை படித்து
பண்டிதனானானா - அல்லது
பிறப்பாலையே பண்டிதனா
எனும் வினா எழுப்புக்கொண்டிருக்கிறது
இவனின் அறிவாற்றல்!

தந்தை விட்டுச் சென்ற
கொஞ்சம் வயல் நிலத்தில் மிஞ்சும்
வியர்வை
இவன் பசியை கொஞ்சம்
ஆற்றிக்கொண்டிருக்கிறது!

தேவைகள் அநேகம்
ஆனாலதை
கட்டுக்குள் வைக்கும்
அதீத விவேகமது
இவனின் சீடன்!

இந்நிலையிலும் சுயமாக சம்பாதிக்க
துடிக்கும் உள்ளம்!!!

கணினியும்
கணினியில் தமிழின் அழகாம் "அழகியும்"
ஒன்றாய் கலந்திட
இவன் இதயம் முழுக்க இன்று தமிழ்!

இணையம் வழி
சுயதொழில் செய்ய யோசனை!

தெரு அரசியல்வாதி முதல்
ஐநா சபைத் தலைவர் வரை
எல்லோரிடமும் இணையம் வழி
வணக்கம் சொல்ல
காத்திருக்கிறது இவன் துடிப்பு!

தன்னிலையில்
இவ்வுலகில்
எத்தனை பேரென்று ஒருநாள்
அழுது உருகினான்!
அதனால்
அவர்களுக்கென ஓர் இயக்கம் தீட்டும்
எழுச்சியின் சிந்தைனையில் இவனின்று!

தன்னிலை கண்டு
தற்கொலை தவிற்போரின்
எண்ணிக்கை கண்ட மகிழ்ச்சியில்
இந்நிலை தனக்கு தந்த இறைவனுக்கு
நன்றி சொல்லும் ஞானியிவன்!

அன்பர்கள் உதவினால் - அதை
சுயமரியாதை தடுத்தாலும்
தந்நிலை உணர்ந்த ஞானத்தால்
ஒருநாள் திரும்ப கொடுப்போமென்ற
உறுதியில் அதை நன்றியுடன்
அங்கீகரிப்பவன்!

இவன் தானே மனிதன்
இவன் போன்றோரை
உதவினாலே யாரும் புனிதன்!

இவன் பெயர் அந்தோணி
சென்னை ஏழைகளில் மூத்தவன்
உதவ மனமிருந்தால் போதும்
இவன் விலாசம் உங்களை
தேடி வரும்!

புனிதர்களாக வாழ்த்துக்கள் !!

என்று...

கடந்தவருடம்
டிசம்பர் பதினாறன்று என் மனம்
அழுதிட

நல்லோர்கள் பலரால்
இன்று
அடிப்படை தேவைகள்
வேலை, மடிக்கணினி, இயந்திர நாற்காலி
இவைகள் கிடைத்துள்ளன
இந்த நல்லவனுக்கு!

இவ்வருடம்
பத்தாம் மாதம் பத்தாம் நாள்
தனது
பிறந்தநாளை
மகிழ்ந்து கொண்டாடினான்

இன்னமும் தேவைகள் பல இருப்பினும்
போதுமென்ற மனதுடைய இவனுக்கு
உதவாமல் வாழுமோ
உயிருள்ள இதயங்கள்...!

அன்புடன்
என் சுரேஷ்

திரு அந்தோணி முத்துவை அனுக / அறிய:

திரு அந்தோணி முத்து
5/96 சேரன் தெரு
கே.கே நகர், பம்மதுகுளம்
ரெட் ஹில்ஸ்,
சென்னை 600 052
சென்னை, இந்தியா

பேச : 91-44-26323185
: 0-94444-96600

மின்னஞ்சல் முகவரிகள்: anthonymuthu1983@yahoo.com, anthonymuthu1983@gmail.com
வலைதளம்: http://anthony.azhagi.com
வலைப்பூ : http://positiveanthonytamil.blogspot.com, http://mindpower1983.blogspot.com

Tuesday, September 23, 2008

என்ன ஆச்சுப்பா இந்த வடிவேலுக்கு....???


தலைவனின் பெயரில் தொண்டர்கள் செய்யும் அட்டூழியங்கள் பெருகியிருக்கும்
நம் நாட்டில் எதை நம்புவது எதை நம்பாமல் விட்டு விடுவது என்று புரியவில்லை. இருப்பினும் வடிவேலின் வீடு சென்று மர்ம நபர்கள் தாக்குவது போன்ற சம்பவங்கள் நிச்சயமாக கண்டிக்கவேண்டியவை!

நானும் எனது குடும்பத்தாரும் பொதுவாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளைப் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. எல்லோரும் அவரை அடித்து, தாக்கி, அவமானப்படுத்துவதை நகைச்சுவையாகக் காணும் ஒரு ரசிகமனம் எங்களுக்கு இல்லை!

விவேக் மற்றும் ரஜினி அளிக்கும் நகைச்சுவைகளைப் போன்றவைகளை நன்கு ரசிப்போம்.

இப்போது நிஜவாழ்க்கையிலும் வடிவேல் இப்படி அடி வாங்குவதைக் காண்பது கொடுமையாக உள்ளது. ஆனால் இதற்கு போய் அரசியலில் குதிக்க நினைக்கும் வடிவேலின் மனநிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.

கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு முதலமைச்சாரக நேரடியாக செல்ல வேண்டும் என்ற ஆசை சுத்த மடத்தனம் என்றாலும் அதற்கான எந்த உழைப்புமின்றி கனவு காண்பது அதைவிட மடத்தனம்!

அன்புடன்
என் சுரேஷ்

திருமணச்செலவை குறைப்போம் ( 23/09/2008 அன்று தமிழோசை நாளிதழில் வெளிவந்த கட்டுரை)

Monday, September 22, 2008

நூறு வருஷம்...


எனது இல்லத்திலிருந்து இரயில் நிலையம் வரைச் செல்ல எனக்கு தினமும் ஆட்டோ ரிக்ஷா காலையில் தேவைப்படும். என்னுடைய இல்லத்திற்கு அருகில் உள்ள திரு பலராமன் கடந்த ஒன்றறை வருட காலமாக காலை 8.15க்கு வந்து ஒரு மிஸ்ட் கால் செய்வார். ஆனால் சில நாட்களில் அவருக்கு வேறு நீண்ட சவாரி வந்தால் மிஸ்ட் கால் வராது. அன்று நான் பிரதான சாலைக்கு சென்று ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்வது வழக்கம்.

திரு பலராமான் வராததால், நேற்று ஓர் ஆட்டோ ஓட்டுனர் வந்தார், "ஐயா வாங்க" என்று சிரித்தவாறே அழைத்தார். சந்தோஷமான முகம், நெற்றியில் சந்தனம், உழைப்பவனின் கறுப்பு நிறம், நாற்பது வயதைத் தாண்டினதைச் சொல்லும் உருவம், கொண்ட இவர் " ஐயா நீங்க என்ன, போலீஸ் அதிகாரியா" என்றார், "இல்லை" என்றேன். "பிறகு ஏன் இப்படி மௌனமா இருக்கீங்க... சரி... உங்களுக்கு ஒரு கத சொல்லட்டுமா" என்றார்.

பல வருடங்களுக்கு முன் என்னை ஆட்டோவில் பள்ளிக்கு கொண்டுச் சென்ற செல்வன் அங்கிளை நினைவிற்க் கொண்டுவந்தார் இந்த ஆட்டோ ஓட்டுனர் திரு.சிவா!

சரி..கதையைச் சொல்லுங்களேன் என்றேன்!

"ஐயா இறைவன் முதலில் மனுஷன படச்சிட்டு 40 வருடம் சந்தோஷமா இருடான்னாறு, பெறகு நாய், எருமை, அப்புறமா கொக்கைப் படைச்சுட்டு அதுங்களுக்கும் 40 வருஷம் ஆயுளெ கொடுத்தாரு..

ஆனா இந்த நாய், அட நாம எதுக்கு 40 வருடம் வாழனோம், 20 போதும்னு பிராம்மா கிட்டக்கப் போய், சாமி எனக்கு 20 வருடம் போதும்னுச்சி..

சும்மா இருக்குமா எருமையும் கொக்கும்? அதுங்களும் அப்படியே சொல்ல... இந்த மூன்னு பேறுது ஆயுள் இப்போ எவ்வளவு ஆச்சு? ஆஆஆ... சரியா சொன்னீங்கோ...60!

இந்த அறுவது வயச அப்படியே மனுஷனுக்கு கொடுத்தாரு பிரம்மா. சந்தோஷமா மனுஷ அத்த வாங்கினது தப்பாப்போச்சு. ஏன்னு கேக்கரீங்களா?

சார், எனக்கு இப்போ 45 வயாசாச்சு, என்னோட பொண்டாட்டி இன்னா சொன்னாலும் கடந்த அஞ்சு வருசமா, அவங்க கிட்டக்க வல் வல்ன்னு விழுவே...ஏன் அது நாய்குணம்.

ஒழுங்கா 40 வயுசு வாழ்ந்திருந்தேன்னா... 20 வயசுலே புள்ளைய கட்டிக்குடுத்துட்டு நிம்மதியா போயிட்டுருப்பேன்.

சரி.. 60 வயசுக்குமேல வேல செய்ய முடியாது எனக்கு... அப்போ எல்லாம் நம்புள மதிக்கவே மாட்டானுங்க.. அப்போ எருமையப்போல, என்ன தான் மேல மழைப் பேஞ்சாலும் சூடு சொறனையெ இல்லாம இருப்பேன், ஏன்? ஆஆஆ...அது எருமையுட ஆயுளெ நான் எடுத்தேல்லா... அதா...

60 லேர்ந்து 100 வயசு வரைக்கும் கொக்கப் போல சார், பூமியப் பார்த்து எப்பட நம்ம உடல் பூமிக்கு போவும், வானத்தப் பார்த்து எப்படா நம்ம உயிரு வானத்துக்கு போகும்னு பார்ப்பேன்... ம்ம்.. அது கொக்கின் ஆயுள்... இது தான் சார் கத..." என்று சிரித்துக்கொண்டே வண்டியின் பிரேக்கை அடித்தார், இரயில் நிலையம் வந்தது.

அவர் கேட்ட நியாயமான பணம் கொடுத்து இரயில் நிலையத்திற்குள் நடந்து செல்கிறேன், தூரத்தில் ஒரு நாய் சத்தமிட அந்த சத்தம் எனது காதுகளில் வந்து கொண்டிருந்தது. இரயில் வந்ததும் அதிலேறி ஜன்னலோரம் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன், ஓர் எருமை மீது அமர்ந்திருந்த கொக்கொன்று பறந்து சென்று கொண்டிருந்தது!!!

Tuesday, September 2, 2008

கவிதை கேளுங்கள்...!

அன்பர்களே,
World Tamil News வானொலியில் ஒலிபரப்பாகும் என் "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" கவிதையை
இங்கே கேளுங்கள்.


--------------------------------------------------------------------------

Get this widget Track details eSnips Social DNA



கவிதையை உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்கவும்

Friday, July 11, 2008

திரு.மைக்கில்ராஜ் அவர்கள்


திரு மைக்கல் ராஜ் 24/10/1943 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராமபுரம் என்ற ஊரில் திருமதி லூர்து அம்மாவிற்கும் திரு சவரி முத்து பிள்ளைக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.

தூத்துக்குடியில் உள்ள தூய சவேரியர் பள்ளியில் பள்ளிப்படிப்பும், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் கல்லூரியில் பி.ஏ (பொருளாதாரம்) பட்டப் படிப்பும் (1963) - முடித்தார்.
1963 முதல் 1966 வரை ஆங்கில ஆசிரியராக, சிவகாசியில் உள்ள ஐய்யநாடார் ஜானகி அம்மாள் காலேஜில் பணிபுரிந்தார்.

1/3/1967 அன்று இவர் எல்.ஐ.ஸி -யில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி, எல்.ஐ.ஸியின் அனைத்து பாடங்களிலும் வெற்றி கண்டு 37 வருடகால சேவை முடித்து அக்டோபர் 2003-ல் "முகவர்களுக்கு பயிற்சியாளார்" என்ற சந்தோஷமான பதவியில் இருக்கும் நேரம், வயது 60 ஐ தாண்டியதை தெரியவில்லை, அலுவலக மடல் தெரிவித்தது, வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவரைப் பற்றின ஒரு ப்ளாஷ் பாக் (கடந்தகால நிகழ்வுகள்) பார்ப்போமா!

இவரோடு பிறந்த ஒரே ஒரு சகோதரன் (அண்ணன்) திரு அமலதாஸ், அவர் 6-ஆவது வயதிலேயே காலமானதும், தனது சிறு பிராயத்திலேயே இவரின் தந்தை குடும்பத்தை விட்டு விட்டுச் சென்றதும் தான் இவருடைய வாழ்க்கை எனும் மொட்டு மலரும் வேளை அதன் மீது இடியாக விழுந்த சம்பவங்கள். ஆனால் இவரின் தாய் இந்த சின்ன பாலன் மீது விழுந்த இடிகளைத் தாங்கி காப்பாற்றினார்கள்.

தந்தையால் கைவிடப்பட்ட இந்த குடும்பம், தூத்துக்குடியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்த தாய்மாமன் வீட்டில் அடைக்கலம் பெற்றது. எட்டு குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மாமன் - மாமி தம்பதியருக்கு உதவி செய்தே இவருடைய அன்புத்தாய் கரைந்ததின் பலனாக திரு மைக்கல்ராஜிற்கு பி.ஏ வரை படிக்க முடிந்தது. கரைந்து கரைந்து முடிவில் இறந்தே போன தாய் பற்றி நினைக்கையில் கண்ணீர் முந்தும் உணர்வோடு திரு மைக்கல் ராஜ் தன்னை படிக்க வைத்த தாய்மாமன் மற்றும் குடும்பத்தாரோடு இருக்கும் நன்றியை என்றுமே மறக்க முடியாது என்கிறார்.

எல்.ஐ.ஸி யில் வேலை கிடைத்து ஏறத்தாழ ஒன்றறை வருடகாலம் முடிந்ததும், பெரியோர்கள் பார்த்து நிச்சயம் செய்த சுமதி என்ற பெயருள்ள ஒருவரை 18/ஜனவரி/1968- ல் திருமணம் செய்தார். இந்த திருமணம் மதுரையில் நடந்தது என்பதில் திரு மைக்கல் ராஜ் அவர்களக்கு அப்படி ஒரு சந்தோஷம். பெஸ்ட் & கிராம்படன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு உதவியாளாராக திருமதி சுமதி மைக்கல்ராஜ் 25 வருடகாலங்கள் வேலை செய்த பின்னர் வேலையிலிருந்து சுய ஓய்வு பெற்றார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள், மகள்- மகன் - மகன்!

மகள், சுகந்தி எல்.ஐ.ஸி-யில் அலுவலக அதிகாரியாகவும் அவரின் கணவர் வங்கியில் அதிகாரியாகவும் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு 1993 -ல் திருமணம் நடந்தேறியது. இந்த தம்பதியருக்கு பெண்-இரட்டைக் குழந்தைகள், நிஷிதா & நிகிதா!!! - இருவரும் UKG யில் படிக்கிறார்கள்

மகன், சுரேஷ், பெல்ஜியத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் (கணினி) துறையில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுதா. இவர்களுக்கு 2002 - இல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், அவன் பெயர் ஸ்டீபன். இந்த பிள்ளை இப்போது LKG வகுப்பில் படித்து வருகிறான்.

அடுத்த மகன் ரஞ்சித், டி.சி.எஸ்-இல் மென்பொருள்(கணினி) துறையில் நல்ல வேலையில் இருக்கிறார். அடிக்கடி அமெரிக்காவிற்கு வேலை விஷயமாக சென்று வரும் இவருக்கு வரும் ஜுலை 2008 -இல் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. ரஞ்சித்திற்கு முறைப்பெண்ணே
( பங்களூரில் உள்ள மாமா மகளை) மனைவியாக வரும் பாக்கியம் கிடைத்துள்ளது!

திரு மைக்கல்ராஜ் அவர்கள், 37 வருட காலம் எல்.ஐ.ஸியில் பணிபுரிந்த பின்னர் இப்போது திரும்பி பார்க்கையில் அநேக அனுபவங்களும் நிகழ்வுகளும் பாடங்களும் நினைவிற்கு வந்தாலும் பன்னிறண்டாயிறத்திற்கு மேல் முகவர்களை பயிற்சி கொடுக்க முடிந்ததும், இரண்டாயிரத்திற்கு மேல் குடும்பங்களுக்கு எல்.ஐ.ஸி வழியாக வீடு கட்ட கடனுதவி செய்ய முடிந்ததும் தான் மறக்கமுடியாத பெருமிதம் என்று சந்தோஷமுடன் சொல்கிறார்.

இன்றும் நன்றியோடு நினைவுகோர்ந்து தன்னை தொலைபேசியிலும் நேரிலும் கண்டு அன்பைத் தெரிவிக்கும் முகவர்களைப் பற்றியும், தன்னோடு பணியாற்றினவர்களைப் பற்றியும், கடனுதவி பெற்றவர்களைப் பற்றியும் சொல்கையில் சந்தோஷத்தால் இவர் முகம் மலர்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறுஸ்து தான், தான் நேசிப்பவர்களில் முதல், அது அன்றும், இன்றும் என்றும் என்று சொன்ன பிறகு.. அடுத்தது தனது மனைவி திருமதி சுமதியை மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். 40 வருடங்கள் கடந்து பயணிக்கும் எங்கள் மணவாழ்க்கை நேற்று துவங்கியது போல் உள்ளது என்று இவர் சொல்ல ஒரு புன்னகையால் அது சரி தான் என்கிறார்கள், திருமதி சுமதி மைக்கல்ராஜ் அவர்களும்.

1/9/1987 - உலகம் இதயநாளாக கொண்டாடும் நாளன்று திரு மைக்கல்ராஜ் அவர்களுக்கு இருதய அறுவைச் சிகிட்சை செய்யப்பட்டது. மருத்துவரின் நிர்பந்தத்திற்கு, வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டேன் என்கிறார்.

பிறகு இரண்டு முறை இதயத்தில் பாதிப்பு (அட்டேக்) வந்த பின்னரும் மருத்தவர்களின் உபதேசப்படி மருந்துகள் எடுத்தாலும், எல்லாவற்றிலும் மூத்த மருத்துவரான கர்த்தராகிய இயேசு கிறுஸ்துவின் கிருபையால் நலமோடு வாழ்ந்து வருகிறேன் என்று சொல்லும் இவருக்கு இறைவனின் கட்டளைபடி வாழ்ந்த அன்னை தெரேசா மீது அப்படி ஒரு மரியாதை.

அன்னை தெரேசாவை நேரடியாக சந்தித்து தனது இதயநோய் பற்றி சொல்லிட, அன்போடு அந்த அன்னை இவர் மார்பில் கனிவான கரங்களால் தொட்டு, கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்ன தருணம் முதல் " அட! அன்னை தெரேசா தொட்ட எனது உடலில் எனக்கு இனி ஒரு நோயும் வராது" என்று சொல்கையில் யாருக்கும் அந்த அன்புத் தாயின் முகம் கண்முன்னே வந்து போகும்!

ஓய்வு பெற்ற நேரத்தை பயன்படுத்தி, 125 க்கும் மேற்பட்ட தம்பதியருக்கு "கௌன்சிலிங்" கொடுத்து அவர்கள் வாழ்க்கையை ஒரு தந்தையின்/தாயின் ஸ்தானத்திலிருந்து இனிப்பாக மாற்றினார். விவாகரத்து வேண்டாம் என்று மனம் மாறி அவர்களெல்லோரும் சந்தோஷமுடன் வாழ்வதில் இவருக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி!. மருத்துவர்களின் உபதேசப்படி இப்போது இந்த கௌன்ஸிலிங் செய்வதை நிறுத்திவிட்டார்.

காலையும் மாலையும் தனது இல்லத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் திருச்சபைக்கு செல்வது, அங்கிருக்கும் சொசைட்டியில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வது, அனாதை மற்றும் முதியோர் இல்லங்கள் சென்று உதவிவருவது, ஏழைப் பிள்ளைகளுக்காக நடத்தும் மாலை டியூஷன் செண்டரில் சென்று உதவி செய்வது, இப்போதும் முகவர்களுக்காக பல இடங்களில் சென்றும் பேசி ஊக்கம் கொடுப்பது, மற்றும், தன்னை அனுகுவோருக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையோடே வாழும் இவர் இளைஞர்களை நோக்கி இப்படி சொல்கிறார்.

"எல்லோருக்கும் தேவையான திறமைகளை கொடுத்து தான் இறைவன் படைக்கிறார். அந்த திறமைகளை எல்லோரும் முடிந்த அளவிற்கு அதிகமாக உபயோகித்து முன்னேறி அடுத்தவர்களுக்கு உதவி வாழும் நல்லதோர் வாழ்க்கை வாழ்தல் இறைவனின் நோக்கம் வெற்றியடையச் செய்யும்!" - என்பதே இவர் எல்லோருக்கும் சொல்லும் பொதுவான ஓர் உபதேசம்!

உடல்நிலையைப் பற்றி மறந்து, புன்னகையும், துடிப்பும், முதிற்சியான பேச்சும் கண்டால் யாருக்கும் இன்னும் ஒரு முறை கூட இவரிடம் பேசத் தோன்றும்! ஒரு முறை கூட காணத் தோன்றும்.

வாழ்க திரு மைக்கல்ராஜ் அவர்கள்

அன்புடன் என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments