1989-90-இல் தமிழ்நாடு சட்டப்பேரவை, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்றி வெற்றி கண்டது.
சொத்தில் சம உரிமையான ஐம்பது விழுக்காடு, சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் என்று வரும்போது ஏன் முப்பத்தி மூன்று விழுக்காடாகக் குறைந்து போகிறது? முப்பத்து மூன்றிர்கே வழியில்லை; இனியெங்கே ஐம்பதைக் கேட்க - என்பதா பொறுப்பில் உள்ளோர்களின் விடை?
சொத்தில் சம உரிமைச் சட்டம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைத் தந்துள்ளது. ஆனால்
சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றதிலும் இந்த இட ஒதுக்கீடு பெண்களில் பலரை வெறும் பொம்மைகளாக்கி அவர்களின் கணவர்களோ, சகோதரர்களோ அதிகாரத்தைத் தவறாகச் செய்து விடுவார்களோ என்று சாதாரண மக்கள் குழப்பமடைவது மட்டுமின்றிப் பயப்படவும் செய்கிறார்கள்.
பெண் உறுப்பினர்கள் சிலரின் கணவர்கள் மற்றும் சகோதரர்கள் அந்த பதவியின் அதிகாரத்தை அனுபவித்து வெறும் பொம்மைகளாகப் பெண் உறுப்பினர்களை உபயோகப்படுத்துகின்ற நிலை அறவேயில்லை என்றோ இனி வரவே வராது என்றோ சொல்ல முடியுமா?
வங்கியொன்றில் கணவரும், மனைவியும் சேர்ந்து தொடங்கும் சேமிப்புக் கணக்கில் காசோலை புத்தகம் கிடைத்ததும், அதன் நிறைவு செய்யாத எல்லா பக்கத்திலும் மனைவியிடம் கையெழுத்தை முன்னதாகவே வாங்கி வைத்துவிடும் கணவர்கள் பலர் இருக்கும் நம் நாட்டில், பெண்களை அரசியலில் வெறும் பொம்மை வேடமிடவிட்டு, அதிகாரத்தைத் தவறாக, அவர்களின் கணவர்களோ அல்லது சகோதரர்களோ செய்து விடுவார்களோ என்ற பயம் பொதுவாக வாக்காளர்களில் பலரிடமும் உள்ளது.
ஆக இந்தச் சிக்கல் ஒரு கட்சியின் தனிப்பட்ட சிக்கலல்ல; சமூகத்தின் பொதுச் சிக்கல்!
சரி, இந்தச் சிக்கல் சரி செய்ய வழியென்ன? ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் இந்த ஆட்சி, கண்டிப்பாகப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வாங்கித் தரும் என்பதில் பெரிய அளவிற்கு ஐயமில்லை என்று தான் தெரிகிறது.
ஆனால் இந்த வெற்றி கிடைத்ததும் பெண்களுக்காக வெளியிடும் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் தீர்க்கமான ஆய்வுகள் நடத்திய பின்னரே வெளியிட வேண்டும். பல ஆண்டுகளாகக் கட்சியில் தொண்டாற்றியவரின் மனைவி அல்லது மகள் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதாது. தேவைக்கேற்ப படிப்பு, கட்சியில் ஈடுபாடு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை, நாட்டுப்பற்று, நாட்டின் நலன் கருதி தானாகத் தீர்மானம் எடுக்கும் அறிவாற்றல் போன்ற எல்லாத் தகுதிகளையும் கொண்ட பெண்களையே ஒவ்வொரு கட்சியும் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் சாதி, மதம், இவை மறந்து தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் சமமாகப் பாவித்துச் செயல்படத் தொடங்கினால் நல்ல கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு இருக்கும் சாதிக் கட்சியென்ற அவதூறு கண்டிப்பாக மறைந்து போகும்.
பெண்களுக்கான முப்பத்து மூன்று அல்லது ஐம்பது விழுக்காடு என்ற கணக்கை நிரப்பி விட்டால் போதுமென்ற எண்ணமில்லாமல் - கட்சிக்காக, நாட்டிற்காக, நல்ல கொள்கைகளுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய முன்வரும் பெண்களைத் தேர்வு செய்தால் பெண்கள் இட-ஒதுக்கீடு கோரிப் போராடிக் கிடைத்த வெற்றி, உண்மை வெற்றியாக மலர்ந்து மகிழும்.
தோழமையுடன்
என் சுரேஷ்
Friday, April 4, 2008
பெண்களே!
Thursday, April 3, 2008
உணர்வுகள் தொடரும்...
ஓவ்வொரு நாளும் எத்தனையோ உறவுகள் ஒரு கடைசி கையெழுத்திட்டதும் முடிவிற்கு வந்து விடுகிறது. இதில் முக்கியமானதொன்று மணமுறிவு (விவாகரத்து).
தங்களின் அப்பாவும் அம்மாவும் இனி மேலும் கணவன் - மனைவி அல்ல என்று அறிந்ததும் வியந்துபோய் நிற்கும் குழந்தைகளின் கண்களை கூர்ந்து கவனித்தால் அவை பல உண்மைகளை நமக்குச் சொல்லும். யார் மனமும் உருகும்!
நமது சட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மணமுறிவு கொடுப்பதில்லை. கடைசிவரை மனுதாரர்களை சேர்த்து வைக்கத்தான் நீதியரசர்கள் முயல்கிறார்கள். ஆனால் மணமுறிவு கோரும் கணவன் - மனைவி இருவரின் மனங்களும் மன்னிக்கும் நற்குணத்தை முழுவதுமாய் மறந்து, பகையில் நிலைத்து, பிரிந்தாக வேண்டுமென்ற பிடிவாதத்தில் வேரூன்றி நிற்கும்போது தான் வேறெந்த வழியுமின்றி மணமுறிவை நமது நீதியரசர்கள் கவலையோடு வழங்குகிறார்கள்.
கார்டியன் & வார்டு சட்டம் 1890இன் படி சில கலந்தாய்வுகள் செய்த பின்னர்க் குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பதென்றும், தாயோ, தந்தையோ எப்போதெல்லாம் குழந்தைகளைச் சந்தித்து கொள்ளலாமென்றும், வாழ்நாள் (ஜீவனாம்சத்) தொகை எவ்வளவு கொடுக்க வேண்டுமென்றெல்லாம் நீதியரசர்கள் உபதேசிக்க அதன்படி நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் கண்டு வேதனைப்பட்டுக் குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குள்ளாகிறது.
சாவதை விட வாழ்வதே மேல்! புழுங்கிக் கசங்கி வாழ முடியாமல் ஒவ்வொரு நொடியும் கொடுமையில் வாழ்வதை விட மனைவியோ, கணவனோ மணமுறிவுகோரி விண்ணப்பிப்பதில் தவறேயில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்னமே ஒருவருக்கொருவர் தங்களின் பொய் முகத்திரையைக் கிழித்து இது தான் நானென்ற உண்மையைச் சொல்லியும், இது தான் நீயென்ற புரிதலோடும் திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினால் மணமுறிவை ஓரளவிற்குத் தவிற்க்க முடியும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக பொய்யான குற்றச்சாற்றுகளைக் கோர்த்து
மணமுறிவை கோரி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.
சில காலங்களுக்கு முன் மணமுறிவு வழக்குகள் நமது நாட்டில் மிகக் குறைவாக இருந்தன. ஆனால் இன்று மணமுறிவு வழக்குகள் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவில் கணவன், மனைவி சண்டைகள் அதிகரித்தது என்று ஒருபோதும் அர்த்தமாகாது. கல்வி அறிவால் தங்களின் உரிமைகளை மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இது ஒரு நல்ல விஷயமென்றாலும் மணமுறிவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குள்ளாகிறது.
மணமுறிவினாலும், தற்கொலைகளாலும் தாய் - தந்தையரைப் பிரிந்து வாழும் பிள்ளைகளின் நிலை மிகவும் கடினம். கல்விக்கூடங்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களில், இந்தக் குழந்தைகளிடம் அவர்களின் தாயைப் பற்றியோ, தந்தையைப் பற்றியோ யாராவது கேட்க, தங்களின் பாதிப்பை வெளியே சொல்ல முடியாமலும் மனதில் எழும் கவலைத் தீயின் வேதனையைத் தாங்க முடியாமலும் திடீரென்று அழத்தொடங்கும் இந்தப் பிஞ்சு மனங்களை யார் தேற்ற முடியும்!
இதுபோன்ற பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகளுக்குப் புதிய மாற்றங்களைப் பற்றின ஒரு பயம் வந்துவிடுகிறது. தாங்கள் கைவிடப் பட்டோமே என்ற கவலை மனதிலெங்கும் நிறைகிறது. எதிலும் ஒரு ஈடுபாடின்றித் தவிக்கத் தொடங்குகிறார்கள். அப்பாவை இழந்தவர்கள் அம்மாவின் கோபத்தையும், மற்றவர்கள் அப்பாவின் கோபத்தையும் தொடக்க காலங்களில் சகிக்க முடியாமல் கதறுகிறார்கள்.
இந்த நிலையிலிருக்கும் குழந்தைகளுக்குத் தேர்ச்சி பெற்ற மனநல மருத்துவர்களின் உபதேசங்களும், வழிநடத்துதலும் கண்டிப்பாக தேவை.
கணவனும் மனைவியும் மணமுறிவால் பிரிந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் நாகரீகம் வழக்கத்தில் இருந்தால் தான், இந்த பிள்ளைகளின் மனதில் எந்த விதமான பகையோ, வெறுப்புணர்ச்சியோ இல்லாமல் வளர்ந்து முன்னேறுவார்கள்.
இதுபோல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெரிய அளவிற்குப் பாசம் காட்ட இந்தச் சமூகம் முன்வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இவர்களின் மனதைக் காயப்படுத்தும் விதமான வினாக்களை மட்டும் கேட்காமலிருந்தாலே போதுமானது.
இன்று, புகழ்பெற்றவர்களின் பிள்ளைகள் மட்டுமின்றி சாதாரணமானவர்களின் பிள்ளைகளும் இதுபோன்ற பிரிவின் கொடுமையால் வாடுகிறார்கள். என்றாவது தங்களின் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இவர்களின் பிரார்த்தனைகள் தொடர்கிறது. மணமுறிவு வாங்கின பலர், சில காலங்களுக்குப் பிறகு தங்களின் தவறான தீர்மானங்களை நினைத்து குற்ற உணர்ச்சிகளால் இரகசியமாய் தங்களுக்குள்ளேயே குமுறுகிறார்கள் என்பது யாரிடமும் சொல்ல முடியாத ஓர் உண்மை!
தோழமையுடன்
என் சுரேஷ்
Wednesday, April 2, 2008
அன்பென்ற மழையிலே...

அன்பென்ற மழையிலே...
புத்தகத் தலைப்பே இதமாய் வருடிகிறது. வறண்டு போன நிலத்திலிருந்து புறப்படும் வெள்ளி நீரூற்றுபோல் வருகிறது கவிதை. கற்பனை, மொழிபலம் ஆகிய தளங்களில் நின்று கவிதைக் கோபுரம் கட்ட எத்தனிக்காமல் தன் ஆழமான ஆத்ம தரிசனங்களையும் அத்தரிசனங்களின் விகசிப்புகளையும் கவிதையாக்கியுள்ளார் என்பதே என்.சுரேஷ் அவர்களது இப்படைப்பின் தனிச்சிறப்பாகக் காண்கிறேன்.
காதலும் வாழ்வின் ஏமாற்றங்களுமே கவிதையின் ஒட்டுமொத்த பாடுபொருட்களாய் நிற்கும் இக்காலத்தில், காலத்தை வென்ற இறைமகன் இயேசுவை கவிதையின் தலைவனாக்கியுள்ளார் என். சுரேஷ்.
மீட்பின் கவிதையாய் மனுவுருவெடுத்த அவரை தன் ஆத்ம வீணையால் மீட்டியுள்ளார். அந்த மீட்டல்களில் தன்னுள் சுருங்கிப் போகும் ஆன்மீகம் இல்லாமல் தன்னைச் சுற்றின சமூகம் - மக்கள்
மீதான அக்கறையும் அன்பும் வெளிப்படுகின்றதென்பது சிறப்பு.
"நான் இந்த பூமியில் வாழும் காலம்
உப்பாகவும்
வெளிச்சமாகவும் இருக்க
உமது கிருபை தாரும்"
என்ற வேண்டுதலில் அந்த அக்கரையின் நேர்மை தெரிகிறது.
இறைநம்பிக்கையாளர் எதிர்கொள்ளும் இயல்பான முரண்பாடுகளையும் அக உளைச்சலால் தரும் கேள்விகளையும் தத்துவத் தெறிப்போடும் நெகிழ்வோடும் கையாளுகிறார் சுரேஷ்.
சூரிய வெளிச்சமும்
நிலாக்குளிரும்
எல்லோருக்கும் இருக்கையில்
உமது அன்பு மட்டும்
ஒரு கூட்டத்தினருக்கே
ஒருபோதும்
ஒதுக்கப்படுவதில்லையே"
என்பதில் கேள்வியை விட ஆழமான ஒரு பதிலையே பார்க்கிறேன்.
இறைவன் தன்னை நேசிப்பதை நெஞ்சார உணர்ந்த நாளை, தன் வாழ்வின் அழகிய நாளாய் அறிவிக்கிறார் கவிஞர். பழைய ஏற்பாட்டு சங்கீதக்காரனின் உணர்வு நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிற சுரேஷ் இன்னும் நிறைய எழுதவேண்டும் - இறை அன்பை இன்தமிழில்
பலருக்கும் அறிவிக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்
Rev.Fr.ஜெகத் கஸ்பர் ராஜ்
காதலாகவே காதல்!
நம் கவிஞர் என் சுரேஷ் அவர்கள் அவரது புகழுக்கு அணிசேர்க்கும் வகையில் பல நூல்களுக்கு தாயானவர். அவரது முந்தைய நூல்களிலெல்லாம் தனிமனித பார்வையில் அன்பு, பாசம், கருணை, பரிவு, இறக்கம் போன்ற குணங்களைப் பற்றியும், சமூக பார்வையில் நியாயம், தர்மம், வறுமை, அமைதி, மானுடம், அகிம்சை, வன்செயல் போன்றவைகள் பற்றியே அதிகமாக எழுதியிருந்தாலும், தற்போது புதுமுயற்சியாக காதலைப் பற்றியும் எழுதியுள்ளார்.
காதலைப் பாடாத கவிஞனே இல்லை. காதலில்லாத உலகுமில்லை; உயிருமில்லை. காதல் வேண்டாத பொருளென்பதுமில்லை. நாமும் பாடிப்பார்த்து விடுவோமென்று துணிந்து விட்ட கவிஞர் என். சுரேஷ், காதலுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், சிற்றின்ப இச்சை கலவாமல் கொச்சையாகவே காதல் என்பதை திருத்தி " காதலாகவே காதல்..." எனும் இந்நூலை வடித்துள்ளார்.
ஓர் ஆண்மகனுக்கு காதல் எவ்வாறு ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தி, உறுதுணையாக இருக்கிறதென்பதையும், பிறருக்காய் தம்மை அற்பணித்துக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் பரிபூரண காதலால் ஏற்படும் மன அமைதியையும் - அதன் இனிமையையும் தானே உணர்ந்தவாறு எழுதியுள்ளார் கவிஞர் என்.சுரேஷ்.
வாலிபர்களும், வாலிபத்தைத் தாண்டி குதித்தவர்களும் மட்டுமே படிக்க வேண்டிய நூல் என்று இல்லாமல், அன்பின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கண்ணுற வேண்டிய நூல் இது.
கவிஞர் என்.சுரேஷ் தனது முயற்சியில் சிறப்படையவும் அவரது பேனாநுனி சுடர் விடவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
கே. இராஜேந்திரன்
சென்னை
ஓவியம் வரைந்த கவிதைகள்!

என் சுரேஷ்
இனியவர்
இதயம் முழுவதும்
அறமே நிறைந்தவர்
ஈரத்தாலயே உருவான இதயம்
அதில் சொட்டுவதெல்லாம்
மனிதம் வாழ வாழ்த்தும் துளிகள்
சொல்லழகு இரண்டாம் பட்சம்
கருத்தழகே கவிதையென்று
கவிதை உணர்வுகளை
கதையாய் சொல்லிப் போகும்
எளிய நடையை
எளிதாய் பெற்றவர்
இதயம் முழுவதும் கவிதையா
கவிதை முழுவதும் இதயமா
என்று இவரின் அறிமுகத்தில்
ஐயம் வரும்
உணர்வுகளின் கம்பத்தில்
எப்போதும் இவர் உயிர்
துடித்துப் பறந்துகொண்டே இருப்பதைக்
காணும் கண்களுக்குள்
நெகிழ்ச்சி நிகழ்வது நிச்சயம்
அன்புடன்
கவிஞர் புகாரி
கனடா
என் இனிய கவிதைகளே...

விமர்சனம்
என் இனிய கவிதைகளே" என்று தலைப்பை தேடி அலுத்துப் போகாமல் கவிதையையே தலைப்பாக வைத்திருக்கின்றார் கவிஞர் சுரேஷ்.
கவிதைப் புத்தகத்தை சமர்ப்பிக்கின்றோம் என்று பெற்றோர்கள் பெயரையோ அல்லது தமிழ் ஆசிரியர்கள் பெயரையோ அல்லது தனக்கு உதவி செய்தோர்கள் பெயரையோ அல்லது இறைவனின் பெயரையோ குறிப்பிடுவார்கள்.
பாசமுள்ள எனது தாய்மாமன் திரு பாலகிருஷ்ணன் அவர்களே
தாயின் வயிற்றில் நான் ஆறு மாதம்
அப்பொழுது உன் மரணம்
ஆனால் இவரோ சமர்பணத்தில் தான் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே மறைந்து போன தனது மாமா திரு. பாலகிருஷ்ணனை குறிப்பிட்டிருப்பது வித்தியாசமாகவும் இவர் தனது மாமாவின் மீது வைத்த அளவுக்கதிகமான பாசத்தையும் காட்டுகின்றது.
தாயையே மதிக்காத இந்தக் காலத்தில் தாய்மாமாவை மதிக்கின்ற சுரேஷ் எனக்கு வித்தியாசமாய் தோன்றுகின்றார். இவர் தாய்மாமாவின் மீது வைத்த பற்றில் அவர் தாயின் மதிப்பு உயர்ந்தே நிற்கின்றது.
இலக்கண விதிமுறைகள் கடைப்பிடிக்காத தற்போதைய பெருன்பான்மையான கவிஞர்களைப் போலவே தானும் இலக்கணக்கட்டுப்பாடு என்னும் கடிவாளத்தை என்னாலும் பயன்படுத்தமுடியவில்லை எனவும் தமிழ் வாசிக்கத் தெரிந்த எவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக இருக்கும் எனவும் அவரே கூறிவிடுவதால் கவிதைகளில் இலக்கணத்தை ஆராயத் தேவையில்லை. சாதாரண நடையில் யாவரும் வாசிக்கும்படி இருக்கின்றது.
ஆரம்பக்கவிதையே தமிழ்ப்பற்றில்தான் ஆரம்பிக்கின்றது. "அதிசயம் ஆனால் உண்மை" என்ற கவிதையில் ஓர் தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்துப் பார்த்தால்
எல்லாப் போர்களும் நின்றுவிட
ஆயதங்களோ கண்காட்சி மாளிகைகளில்
சிறைச்சாலைகளெல்லாம்
மனநல மருத்துவமனைகளாய் பரிணாமங்கள்
கவிதைக்கு ஓர் பல்கலைக்கழகம்
அட ஒரு தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்தால் கூட உலகச்சமாதானம் கொண்டு வந்துவிடுவானோ? இது அதிகப்படியான சிந்தனையே என்றாலும் இதில் அவருடைய அதீத தமிழ்ப்பற்று தெரிகின்றது.
தனது தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளை வெவ்வேறு கவிதைகளில் விவரிக்கின்றார் "ஏழைச்சிறுமியும் ரோஜாச்செடியும்" என்ற கவிதையில் ரோஜாச்செடி ஒன்றினை வளர்த்து
செடியே
உனது முதல் ரோஜாச்செடி
நம் இருவருக்குமல்ல
பிறகு?
என் தமிழ்தெய்வம்
எனதன்பு
தமிழ் ஆசிரியருக்கு.
அது தருகின்ற முதற்பூவை தமிழ் ஆசிரியருக்குக்தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கின்றார்
குழந்தைக்கு தாய் பாடுகின்ற சாதாரண தாலாட்டுக்களை கண்டிருப்போம். ஆனால்
உந்தன்
தந்தை பாவம் செய்ததாலே
இந்த
எய்ட்ஸ்தாயின் தாலாட்டு
என்று "தாலாட்டு" என்ற கவிதையில் எய்ட்ஸ் தாய் தாலாட்டு பாடுவதாக சோகத்தையும் வித்தியாசமான பார்வையில் சொல்லியிருக்கின்றார்.
"பிரிவின் உணர்ச்சிகள்" என்ற கவிதையில் மனைவியைப் பிரிந்த பிரிவின் உணர்ச்சியை சொல்லி புலம்பி இறுதியில்
உனை நான் கண்டதும்
கேட்பது முத்தமல்ல
உனது
காலில் விழுந்து மன்னிப்பு
என்று முடித்திருக்கிறார்.
வாழுகின்ற காலங்களில் பெற்றோரின் நிழலில் அவர்களைச் சார்ந்து இருந்துவிட்டு அவர்களின் வயதான காலங்களில் அவர்களை மதிக்கத் தவறும் இன்றைய சமுகத்திற்காக ஒரு தாயின் பார்வையில் "அம்மா" என்ற கவிதை பெற்றோர்களை நேசிக்கும் மகன்களின் மனதில் ஈரத்தை வரவழைக்கின்றது.
நிழல் கிடைக்க
நான் உன்னை வளர்க்க
நீ எனைத்தள்ளிவைத்து
அழகு காணும்
கொடுமையிது காண
நான் எத்தனை காலம்தான்
வாழ்வேனோ?
என்று மகனால் ஒதுக்கப்பட்ட தாய் கண்கலங்கி கூறி இறுதியாக
தலையணை கீழ் கொஞ்சம்
பணம் வைத்துள்ளேன்
எனது சவப்பெட்டி வாங்க
அது உதவும் கலங்காதே!
ஒரே ஒரு விண்ணப்பம்
எனது பிறந்தநாளைப்போல
என் மரணநாளையும்
தயவாக மறந்து விடு
என்று புலம்புவது வீட்டுத்திண்ணையில் அல்லது முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை ஒதுக்கி வைக்கின்ற மகன்களுக்கெல்லாம் ஒரு சாட்டையடி. தாயைப்பற்றி சமாதானம் என்ற கவிதையிலும் குறிப்பிட்டிருக்கின்றார்.
தாய் மட்டும்தான் மகன் குற்றம் செய்தாலும் அவனை மன்னிக்கும் குணம் படைத்தவள் என்பதை
உலகில் எல்லாம்
மன்னித்து மறக்கும்
ஒரே ஒரு
மனித நீதிமன்றம்
தாய் மனது என்ற இடத்தில்
மட்டும்தான்
அதில் எத்தனை புனிதம்
தாயின் மறுபெயர் சமாதானம்
என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அதுபோல தந்தைக்கு எழுதுகின்ற ஒரு கவிதையில் மரணித்திற்கு வருகின்ற
மனிதர்களின் எண்ணிக்கைதான் ஒரு மனிதனின் நடத்தையை தீர்மானிக்கும் என்பதை
வீட்டைப் பூச்சந்தையாக்கி
வீதியெல்லாம்
பூமழை பொழிய உன்
இறுதி பயணத்தின்
அளவில்லாக் கூட்டம் சொன்னது
உந்தன் மனிதநேயம்
என்று சொல்லி தந்தையின் மீது அளவில்லா பாசத்தை தெளிவு படுத்தியிருக்கின்றார்.
மனைவியின் கனவாக வந்த "செய்தி" என்ற கவிதையில்
ஒரே ஒரு விண்ணப்பம்
எனது ஆத்மா
சாந்தி அடைய
தயவாக ஒரு
நல்லவரை மறுமணம் செய்
என்று கணவன் மனைவிக்கு எழுதி வைத்ததாக சொல்லும் அவரது மன ஓட்டத்தில் ஓர் மனிதநேயமுள்ள கணவனாக தெரிகின்றார்
மனைவியின் பிரிவில் கணவனும் கணவனை நினைத்து மனைவியும் என்று சில கவிதைகளில் அவரது எண்ணங்களின் தூய்மை பளிச்சிடுகின்றது
மீன்கள் என்றவுடன் சிலருக்கு எச்சில் ஊறும். இவருக்கோ கற்பனை ஊறியிருக்கின்றது.
சுனாமி உங்களைத்தாக்க அதை
எதிர்த்து கரைக்கு வந்து
தற்கொலை தவறென்று தெரிந்தும்
உங்கள் மீது பாசம் காட்டின
எங்கள் மீது
ஆதங்கமும் இல்லையா?
என்று கேட்டிருப்பது வித்தியாசமான சிந்தனை. இத்தனை கோடி மக்களுக்காக நாங்கள் உணவாக மாறுவதில் பெருமைப்படுகிறோம் என்று மீன்களின் மனிதநேயத்தைக் கூறி
அதோ அங்கே வலையிடும்
சத்தம் கேட்கிறது
முத்தம் தேடி ஓடுகிறேன் - வணக்கம்
கவலை வேண்டாம்
நாளை உங்கள் வீட்டு குழம்பில்
நானும் இருப்பேன்
என்று அழகாய் முடித்திருக்கின்றார் .
இவருடய கவிதையின் ஒவ்வொரு முடிவுகளும் ரஜினி படத்தின் பஞ்ச் டயலாக் எதிர்பார்க்கும் ரசிகனைப்போல எதிர்பார்க்க வைத்திருக்கின்றார்.
வானத்தோடு பேசுகின்ற கவிஞர் . அதில் கூட
வானமே நீ
கனவு காண்பாயா?
உலக சமாதானம் வரட்டும்
பிறகு
அதாவது நிஜமாகட்டும்
என்று உலக சமாதானத்திற்காக ஆசைப்படுகின்றார்.. வானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் என்ன சம்பந்தம்?. வானத்தின் கீழ் நாம் இருக்கின்றதால் வானத்திடம் முறையிடுகின்றாரோ..? தனது வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்துகின்றார்
இப்பொழுதுள்ள அரசியல் வாழ்க்கையின் கசப்புணர்வில் எல்லாருமே அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியல்வாதிகளின் மீது வெறுப்புணர்வுமே கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர் "அவர்களும் மனிதர்களே" என்ற கவிதையில் அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கின்றார்
பாவம் அரசியல் வாதிகள் என்று அவர்கள் மீது இரக்கப்பட்டு மக்கள் மட்டும் என்ன நியாயமாகவா நடக்கின்றார்கள் என்று ஆதங்கப்பட்டு நம்மை முதலில் திருத்திக் கொள்வோம்.
அதுவரையிலாவது
அரசியல்வாதிகளைத் திட்டாதீர்கள்
அவர்களும் மனிதர்களே
என்று முடித்திருக்கின்றார்.
சமுதாயத்தில் தான் காணுகின்ற நிகழ்வுகளைக் கண்டு மனம் வருந்துகின்றார். சாலையில் காணுகின்ற ஆட்டோக்காரனை நினைத்துக் கூட மனம் வருந்தி கவிதை ஒன்றை எழுதுகின்றார். தனது "ஆட்டோக்காரன்" என்ற கவிதையில்
ஆறுமணி நேரம்
ஆட்டோ ஓட்டினாலே
நீங்களும் பெண்களின்
பிரசவ வலியை அறிவீர்கள்
என்று ஆட்டோ ஓட்டுதலில் உள்ள சோகங்களையும் ஒரு ஆட்டோக்காரனின் பார்வையில் இலேசான நகைச்சுவைத் தொனியில் சொல்லியிருக்கின்றார்.
நமக்கெல்லாம் சவாரியின் போது மீட்டருக்கு மேல் கேட்கின்ற ஆட்டோக்காரன் இவரின் இதயத்தின் மீது அதிவேகமாய் சவாரி செய்திருக்கின்றான். பாருங்களேன்..இறுதியாய் முடிக்கும்பொழுது
இன்று பிறந்தவன்
என்றும் ஒரு ஆட்டோக்காரன்
ஆக வேண்டாமென்று
இரகசியமாய் பிரார்த்திப்பேன்
இது சத்தியம்
என்று ஓர் ஆட்டோக்காரனாய் நிலைமாறி அவர்களுடைய உச்சக்கட்ட வேதனைகளை வடித்திருக்கின்றார்.
தலைவலி வந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்..? அனாசின் எடுத்துக்கொள்ளுவோம் ஆனால் இவரோ கவிதையை கையில் எடுத்திருக்கின்றார் .
தலைவலி வருகின்ற காரணங்களை பட்டியலிட்டு பிறகு அதனை வராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்
தலைவலி என்றால் என்ன
என்று
வரும் காலம்
கேள்விக் கேட்கப்புரட்சி செய்வோம்
என்று முடித்திருக்கின்றார். தலைவலியை ஒழிப்பதற்கு புரட்சி செய்யும் முதல் கவிஞர் இவர்தான். கொஞ்சம் விட்டால் "தலைவலி ஒழிக! தலைவலி ஒழிக" என்று மக்களை தூண்டி விட்டு போராட வைத்துவிடுவார் போல இருக்கின்றது.
"ஒரு பெண்ணின் கதை" என்ற கவிதையில் கணவனை விபத்தில் இழந்த இளம்பெண் ஒருத்தி தன் கண்களுக்கு முன்னால் குடும்பம் சகிதமாய் செல்லுகின்ற தோழிகள் மற்றும் கணவனோடு கைகோர்த்துக் கொண்டு செல்லுபவர்கள் எல்லாவற்றையும் கண்டு ஏங்கும் உணர்ச்சியினை வடித்திருக்கின்றார். தனது சோகம் என்றுதான் தீருமோ என்பதை
அன்றும் எனது கண்ணீர்
நான் உறங்கியதும் உறங்கியது.
மறுநாள்
நான் விழித்ததும் விழிக்க
என்று முடித்து தனக்கு என்றுமே சோகம்தான் மிச்சம் என்று அப்பெண்ணின் ஏக்கத்தை வடித்திருக்கின்றார்..
கண்களுக்கு கூட மனிதநேயக் கண்கள் கொண்டு கவிதை வடித்திருக்கின்றார்
எங்கள் பக்கத்து வீட்டக்காரர்
திரு. மூக்கின் வீட்டிலிருந்து
உதவியாளர் என்ற பெயரில்
வேலை செய்யும்
திரு. கண்ணாடிக்குக் கொடுக்கும்
மரியாதை கூட
எங்களுக்கு இல்லையா?
என்று கண்ணாடி - மூக்கிற்குக் கூட திரு. சுரேஷ் அவர்கள் திரு போட்டு அழைத்திருப்பது கவிதைக்கு புதியதாய் இருக்கின்றது. கண்களை பாதுகாக்கச் சொல்லிவிட்டு
மனிதா! நீ மரணப்பட்டாலும்
நாங்கள் உடனே இறப்பதில்லை
நாங்கள் இறப்பதற்குள்
உனது மரணத்தை
நாலுபேர் எடுப்பதற்குள்
கண்ணிழந்த ஒருவருக்கு
நாங்கள் வாழ உயில் எழுது
என்று கண் தானம் செய்வதை வலியுறுத்துகின்றார். தான் இறந்த பிறகு கூட தனது கண்கள் இந்த உலகத்தை யார் மூலமாவது பார்த்துக்கொண்டிருக்கட்டும் என்று இரக்கப்படும் கவிஞர் இவர்.
மனைவிக்கு பிறந்த நாளில் விருப்பத்தோடு சேலை வாங்கிக் கொடுத்து அவள் அதனை பிடிக்கவில்லை என்று ஒதுக்கும்பொழுது மனம் வேதனைப்பட்டு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளன் என்று சொல்லி கிண்டலடிக்கப்பட்டதால் கமல் மனம் நொந்து ஒரு சோகப்பாட்டு படிப்பதைப் போல இவரும் நொந்து வானத்தை நோக்கி தனது குறைகளை சொல்லி புலம்புகின்றார்.
அதனைக் கேட்ட வானம் இரவு முழுவதும் மழை பொழிந்ததது தன் சோகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத்தான் என்பதை
தனக்காக இரவு முழுவதும் அழுத
வானமும் பூமியும்
அவனது நல்ல ஸ்நேகிதர்கள்
என்று மனம் குளிர்ந்தான்
என்று சொல்லியிருக்கின்றார். அட இது போன்ற சூழ்நிலைகளை எல்லாம் கவிதைக்கென்று எப்படி தேர்ந்தெடுக்கின்றாரோ தெரியவில்லை. இவருக்குள் சூழ்நிலைகளை தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு கதா ஆசிரியரே ஒளிந்திருக்கின்றார்
பெரிய மனுஷத்தனமாய் பல சிந்திக்க வைக்கும் கேள்விகளை "சிறுவனின் கேள்விகள்" என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். அதில் என்னைக் கவர்ந்தவை
மரணித்தபிறகும்
வாழ்க்கை உண்டு என்ற
நம்பிக்கை பொய் என்றால்
பக்தர்களில் எத்தனைபேர்
அட்டகாசத்திற்கு அடிமையாவார்கள்
பாதிக்கப்பட்டவன் எதிர்த்தால்
அவன் பெயர்
தீவிரவாதியா எப்படி?
என்று நடுநிலைவாதிகளுக்கு எழும்புகின்ற கேள்விகளை கவிதைப்படுத்தியிருக்கின்றார்.
"காலம் நமது தோழன்" என்ற கவிதையில் காலம் நல்ல மருந்து என்பதை வித்தியாசமாய் சொல்லியிருக்கின்றார். "காலப்போக்கில் காயங்கள். மறைந்து விடும் மாயங்கள் "என்று ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலை ஞாபகப்படுத்துகின்றார்.
அவரவர்களுக்கு வருகின்ற மனவலிக்கெல்லாம் காலம்தான் தீர்வு என்பதை
இத்தனை மனவலிகளிலிருந்து
வேண்டுமா விடுதலை?
இந்தக்கவிதையை அடுத்தமாதம்
இதே நாளில் படித்துப் பாருங்கள்
காலம் நல்ல மருந்து
என்று காயங்களுக்கு காலத்தின் ஆறுதலை கவிதையில் தந்திருக்கின்றார். பார்ப்போம் அடுத்த மாதம் இதே கவிதையை இதே சூழ்நிலையினில் படிக்க முடிகின்றதா என்று?
அரசியலால் நாட்டைக் வளர்க்கின்றார்களோ இல்லையோ தனது வீட்டை வளர்க்கின்ற அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சுயநலமின்றி மக்களுக்காய் உழைத்து மறைந்த தனக்குப் பிடித்த தலைவரான காமராசர் பற்றிய கவிதையில் குறிப்பிடுகின்றார்
நீ முதலமைச்சர் ஆனபோது
உனது ஊர் கிராமத்தில்
முதல் ஏழை
உன் ஆத்தாதான்
இந்த கவிதை வரிகளில் நான் உட்கார்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மனதில் ஒரு சோகம் அப்பிக்கொள்ள வைக்கும் வரிகள் இது.
மறைந்த பிறகுதான் கவிஞர்களும் அவர்களது கவிதைகளும் மதிக்கப்படுகின்றன என்பதை "எழுத்துக்கள்" என்ற கவிதையில்
இறுதிப்படுக்கை மூடியதும்
மண்களால் எனக்கு பூ மழை
அன்று முதல்
கவிஞன் எந்தன் எழுத்துக்கள்
கண்டிப்பாய் பிரபலமாகும்
என்று கூறி கவிதையை முடிக்கின்றார். அவருடைய எழுத்துக்கள் அவர் மண்களால் மூடப்படுவதற்கு முன்பே அவரை மாலைகளால் மூடட்டும் என்று வாழ்த்துகின்றேன்.
சமாதானம் - தாய்பாசம் - உலக அமைதி - பிறருக்காய் இரங்கும் மனம்- தொழிலாளிகளின் வேதனை - மனைவியின் மீது பிரியம் - ஆறுதல் - அறிவுரை என்று எல்லாவற்றைப் பற்றியும் அலசுகின்றார்
கவிதைகளின் வார்த்தைகளில் முற்றிலுமாய் தனது கருத்துக்களை தெரிவித்து விடவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியிருக்கின்றார்.
சமூகத்தை தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் பாதிப்புகள் கண்டு ஒவ்வொரு மனிதநேயமுள்ள மனிதனும் உணர்ச்சிவசப்படுகின்றான். அந்த மனிதனின் உணர்ச்சிகள் ஒவ்வொரு விதங்களில் வெளிப்படுகின்றது.
பாடல்கள் மூலமாக - நடனங்கள் மூலமாக - ஓவியம் மூலமாக - எழுத்துக்கள் மூலமாக இப்படி வெவ்வேறு பரிணாமங்களில மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். அதுபோல் நண்பர் சுரேஷ் கவிதைகள் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.
நிறைய எழுத வேண்டும் என்றும் காணுகின்ற எல்லா நிகழ்வுகளையும் கவிதையாக்கவேண்டும் - தனது சோகங்களையும் - மகிழ்ச்சிகளையும் கவிதைகள் மூலமாகவே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக நண்பர் சுரேஷ்க்கு இருக்கின்றது. அவரது ஆர்வத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
கவிதைப்புத்தகத்தை மூடிய பிறகும் ஆட்டோக்காரன் - மனைவியின் பிரிவு - தாயின் தனிமை - தந்தையின் மரணம் -போன்ற சோகங்களை தடவுகின்ற சில கவிதைகள் இதயத்தைச் சுற்றி பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றன. என் கவிதைகளே என்று தலைப்பு வைத்திருந்தாலும் படித்தபிறகு அவைகள் நம் கவிதைகளாகி விடுகின்றன.
கவிதைப்புத்தகம் கிடைக்குமிடம்
திருமகள் நிலையம்
55 - ( புதிய எண் 16) வெங்கட் நாராயணா சாலை
தி.நகர் - சென்னை - 600 017
தொலைபேசி : 91 - 44 - 24342899 24327696
தொலைநகல் : 91 - 44 - 24341559
கவிஞரின் முகவரி :
என். சுரேஷ்
nsureshchennai@gmail.com
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
எண்ணங்களின் ஊர்வலம்...

எண்ணங்கள் சில போதில் புயலாய், பூவாய், புனலாய், புதிராக வடிவெடுக்கக் கூடும் என்பதற்கு இந்நூல் சாட்சி. இந்நூலாசிரியர் திரு என் சுரேஷ் தன் எண்ணங்களை ஐம்பது பிம்பங்களாக வடித்துக்கிறார். பெயர் சூட்டப் படாத எண்ணக் குழுந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பு எனக்கு இவர் தன் எண்ணங்களை ஆழ்ந்து நோக்கிய போது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டு மனத்தில் தோன்றிய எண்ணங்கள் ஊர்வலம் செல்கின்றன. எனவே,
"எண்ணங்களின் ஊர்வலம்" என்பதையே இந்நூலுக்கு பெயராகச் சூட்டியிருக்கிறேன்.
இந்நூலுள், மனிதநேயம் காட்சியளிக்கிறது. இயல்பாகவே இளகிய மனங்கொண்ட திரு என். சுரேஷ், தாம் செல்லுமிடங்களில்லாம் தம் மனதை பாதித்த காட்சிகளை தமது எண்ணங்களில் பதிய வைக்கிறார். பல இடங்களில் இவருக்கு ஏற்படும். வருத்தம் நம்மை நெகிழ வைக்கிறது.
நாகரீகத்தால் மேன்மையுற்ற பலர் முதியோர் இல்லங்க்களில், தங்க்களுக்கு வேண்டிய கல்வி, செல்வம், பிள்ளை, உற்றார், உறவினர் ஆகிய எல்லாம் இருந்தும் அனாதைகள்
எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் !
எங்களை மறக்காமல்
எப்போழுதாவது
எங்களை பார்க்க வா!
என்று, முதியோர் இல்லத்தில் அன்பிற்காக ஏங்கிடும் அனாதைகள்.
இயந்திரங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயந்திரமாகவே மாறிவிட்ட மனித வாழ்க்கைக்குத் தேவை அன்பு. அந்த அன்பு இல்லாமல் மானுடம் செத்து விட்டதே!
மானுடத்தின் கைகளில் விலங்க்கு !
விடுதலை சொல்ல வந்த
மானுடம் சிலுவையில்!
என்று, எண்ணங்களால் சிலிர்த்தெடுக்கிறார்.
மனித குணம் சில வேளைகளில் மிருகத்தனம் கொள்வதைக் காண்கிறோம். அவ்வாறாகும் மிருக மனதை கொல்ல வேண்டும்! அதற்கு ஒரே மருந்து அன்பு ! தீர்ப்பும் எழுதுகிறார்.
பட்டினி கிடந்தவன் உணவுண்டதும்
காத்திருக்கும்
அவனது
பத்து நாள் தூக்கம்
என்று, வறுமையைப் படம் பிடித்த ஆசிரியர்,
பட்டினியின் உச்சத்திலும்
தொட்டிலிட
கட்டிலில் ஆட்டம் போடும்
முட்டாள் காமத்தின் அசிங்கம்
என்று, பட்டினிச் சமூகத்தை சாடுகிறார். பசியால் தூங்குகிறது குழந்தை; பசியால் துள்ளுகிறது காமம், என்னும் கேள்விக் கணை இவரின் சாடல்.
விருந்தினர் சென்றதும்
கணவனுக்கும் மனைவிக்கும்
நடக்கும் இரகசியச்சண்டை
என்று, போலியான மனிதர்களை காட்சியாக்குகிறார்.
நன்றியில்லாப் பிள்ளைகளிடம்
பிச்சையெடுத்து உயிர் வாழும்
முதியோர்களின்
கண்ணீர்த் துளிகள்
என்று, பிள்ளைகளால் புறந்தள்ளப்பட்ட பெற்றோர்களின் அவல நிலையைக் கண்டு அழவைக்கின்றார்.
'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் சொல்எனுஞ் சொல்'
என்னும் குறல் கூறும் மகன்களைக் காண விரும்புவது தெரிகிறது.
சில வேளைகளில் சிலரின் கருத்துக்கள் சமூகத்துக்கு தேவைப்படும் மருந்தாக இருக்கு. ஆனால்
மருந்து தருகின்றவனையே நோயுற்ற சமூகம் அழிக்க நினைப்பதுண்டு. அத்தகைய செயலையும்
இந்நூலாசிரியர் விட்டுவைக்கவில்லை.
எழுத்தாளனை
மொத்தமாக எரித்த பிறகும்
அணைக்க முடியா
அவனின்
நெருப்பு எழுத்துகள்
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? என்னும் நெருப்பு வரிகளையும் காண முடிகிறது.
'யான் குற்றமுடையோனாயின் தீச்செவா என்னைச் சுடுதி' என்று, தீக்குள் பாய்ந்த சீதையைக் கூறும்கம்பன், "தீய்ந்தது அவ்எரி, அவள் கற்பின் தீயினால்" கற்புத் தீயினால், அக்கினி வெந்து தீய்ந்தது! என்பதைநினைவுபடுத்துவதாக அமைகிறது.
நல்ல கருத்துக்கள் என்றும் நிலத்திருக்கும். அதற்கு அழிவில்லை என்பதாக இவரின்
எண்ணங்களின் ஊர்வலம் புறப்படக் காண்கிறேன்
இவர் தம் எண்ணங்க்கள் எல்லோர் மனத்தையும் சென்றடைய வேண்டுமென்று விரும்புகிறேன். மேன்மேலும்அரிய எண்ணங்களைப் பதிவு செய்து பல புதிய நூல்களைப் படைத்திட வாழ்த்துகிறேன்
அன்புடன்
முனைவர் இர. வாசுதேவன்
=========================================================
(இந்த புத்தகத்தின் விற்பனையாளர்கள்)
திருமகள் நிலையம்
55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலை
தி நகர்,சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559
உன்னையே தேடும் கவிதைகள்...

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... என்றார், பாரதியின் பாசறையில் பயின்ற பாவேந்தர்! அந்த தமிழ், இன்பத்தமிழ், நம் தமிழாக வாய்த்தது நாமனைவரும் பெற்ற பேறு! ஒரு காலத்தில் ஒரு சிறுநிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மொழி, இன்று உலகளாவிய மொழியாக மலர்ந்துள்ளதை
நாம் கணும்போது, நமது உள்ளம் பூத்துபோகிறது!
கவிஞன் என்பவன் தான் வாழும் சமுதாயத்தின் தாக்கம் உள்ளவன். வேதனையின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் எழுச்சி, தோல்வியின் பொசுங்கலில் உயிர்த்தெழும் பறவையைப்போல, சேரிகளில் மணக்கும் சந்தனத்தையும்,உப்பரிகையில் எடுக்கும் முடைநாற்றங்க்களையும், மதம், பணம் கடந்து வாழும் காதலையும், மனிதநேயம் வெளிப்பட வேண்டியநேரத்தில் மௌனமாயிருப்போரையும், சமூக அக்கரையோடு ஆர்ப்பரித்து உரத்து உலகிற்குச்சொல்லி சிந்தனை விதையை எவன் விதைக்கிறானோ, அவனே கவிஞனாக முகம்காட்ட முடியும்.
அந்த வகையில் சகோதரர் கவிஞர் சுரேஷ் உணர்ச்சிகயை உயிராகக் கொண்ட கவிஞராக வலம் வருகிறார்.
வெளிநாடுவாழ் தமிழர்கள், தாயகத்தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று அன்பு எச்சரிக்கை விடுகிறார் கவிஞர். தமிழின்பால் ஈர்க்கப்பட்டு தமிழில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுகின்ற இவர் படைப்புகள் தலைப்பில் உண்மை பேசும் போது இவர் கவிதா ஆர்வாலர்கள் மனதில் குன்றென உயர்கிறார்!
தாய்மை, தோழமை, கூடா நட்பு, வேண்டுகோள், பெரிய பெரிய ஆசை என்று ஏராளமாய் பிறருக்காய், உணர்வாய்ச்சுரந்த இவரின் கவிதைகளை கவிதை தாகமுள்ளோர் பருகி ஆனந்திக்கலாம்!
கவிதை என்றாலே கற்பனை என்ற எண்ணம் கவிழ்ந்து உண்மையை நிமிர வைத்திருப்பதை உணரலாம். சமூகத்தின் அவலங்களுக்கு செவி சாய்ந்து காகிதத்தில் வடித்தெடுக்கும் புதுமைச்சிற்பி என்றால் அது மிகையில்லை!
பிச்சைக்காரியைக் கூட சகோதரியாக ஏற்றுக்கொள்கின்ற மனம் எல்லோருக்கும் வாய்த்து விடாது; கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது; எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னேறிய நாடுகளில் சிலவற்றைப் பட்டியலிட்டு, இப்படி ஒரு கலவையாக இந்தியா புதுவார்ப்பாய் மாறவேண்டும் என்று புதியவை தேடுதல் கவிதையில் அதிபர் அப்துல்கலாம் கனவை கவிதையாய் வடித்துள்ளார்.
இலட்சாதிபதிகள் கோடீசுவரர்களாகவும், கோடீசுவரர்கள் மேன்மேலும் கோடிகளைக் குவிப்பதும் சினிமாவும் அரசியலும் ஏழைகளை மூலதனமாய் வைத்து தங்கள் வெற்றிப் படிகளைக் கட்டுவது ஒருபுறமும் ஏழைகள் நிலையில் எந்த மாற்றமுமில்லாமல் ஏழைமக்கள் பட்டினியால் மரித்துக்கொண்டிருப்பது ஒருபுறாமிருந்தாலும் இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வதை கேட்டு நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் முகத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!
பிறந்த வீட்டை மறந்து புகுந்தவீட்டை பிறந்த வீடாகக்கருதி தன்னை, அன்னையாக, மனைவியாக அக்காள், தங்க்கை, அண்ணி, சித்தி, பெரியம்மா என்று பல்வேறு முகங்காட்டி, தன்னை இணைத்துக்கொண்ட குடும்பத்திற்காய் சேவகியாய் வலம் வரும் அண்ணி!
இந்த மூன்றெழுத்தில் குடுமபமே உயிரின் உயிராய் உறைந்து கிடப்பதையும் ஒருநாள் அந்த அன்பு ஜீவன் கொடிய நோயின் தாக்குதலில் மருத்துவமனையில் அடைக்கலமாகி விட்டதை நெஞ்சுருகச் சொல்லும்போது... அடடே... பாசத்தின் நேசங்களில் கசியும் இரத்தக்கண்ணீரில் வாசிக்கும் எல்லோரையும் கரைய வைக்கிறார் கவிஞர் சுரேஷ்!
கரடுமுரடான நிலத்தைக்கூட தன் உழைப்பால் சீர்திருத்தி நந்தவனமாக்கும் அதிசயமும், வறட்சியால் நில உதடு வெடித்து தாகத்துக்கு ஏங்கும் கிணற்றை ஆழப்படுத்தியோ, புதிய கிணறு ஒன்றையோ தோண்டிச்சுரந்த நீர்பாய்ச்சி நில மகளைக்குளிர்வித்து அவள் பூக்கும் புன்னகை என்ற கம்பீர விளைச்சல் கூட விவசாயியின் வியர்வைக்கண்ணீர்த் துளியால் என்பதை கவிஞர் சுரேஷ் ஆச்சரியித்து அதிசயக்கிறார்.
என்னதான் அதிசயம் கண்டாலும், காடுவெள்ஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் இன்னொரு முகத்தையே அதிசயம் கவிதையில் பார்க்கிறேன்.
சில கவிதைகளை இதுவெல்லாம் கவிதையா? என்று சிலர் முகஞ்சுளிக்கலாம்; ஆனாலும் அக்கவிதியின் ஆதாரசுருதியிலே அகந்தோய்ந்து அவரின் எண்ண அதிர்வுகள் எழுச்சியோடு சிறகு விரித்ததாகத் தான் நான் கருதுகிறேன்.
தமிழின்பால் கொண்ட காதலால் தமிழுக்காக தமிழருக்காய் தமிழுணர்வோடு எழுதுகிற
சகோத்ரர் கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு தமிழர்களான நாம் ஊக்கமும் உற்சாகமும் அளிக்காவிட்டால் பின் யார்?
இந்தச்சமுதாய அமைப்பை தலைகீழாக மாற்றி அமைக்க முயலும் இவரின் உள்ளுணர்வுகளின் வழியிலே... இது இவரது இரண்டாவது புத்த்கமாகும்!
காலமறிந்து கூவும் சேவல்! காலம் உருவாக்கிய கவிஞர் இவர், ஆனாலும் காலத்தின் பிடர்பிடித்து உந்திப் பெரும் புரட்சி செய்யவிருக்கின்ற கவிஞர் என்பதால் படித்து இன்புறுங்க்கள்!
சி.எஸ். ஆல்பர்ட் பெர்னாண்டோ
அமெரிக்கா
--------------------------------------------------------------------------
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலைதி நகர்,
சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559
இளங்காற்று வீசுதே...

"வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் அன்று!
வாடிய உள்ளங்களைக் கண்டு வாடும் வள்ளலார் இன்று!!
இளங்காற்று வீசுதே...
என்ற என்.சுரேஷின் படைப்புகளில் இருக்கும் உணர்வுகள்....
உணர்வா? உணவா?
ஆம்...செவிக்குணவு....!
உறவா? பிரிவா? இன்பமா? துன்பமா? இயற்கையா? செயற்கையா?ஊடலா? கூடலா?இரவா? பகலா?பிறப்பா? இறப்பா? அடுக்கடுக்காய் அலையலையாய் எதிர்நீச்சல் போடும் வினாக்களே!
விடை பகருகிறதில் சொப்பன உண்மையுண்டு!!
விதை முளைவிடும்போதே விருட்சமாகும் வீரியத்தோடுதான் பூமியைத் துளைத்து வெளிக்கிளம்புகிறது!
முளைவிட்டு கிளைவிட்டு செடியாகி மரமாகி கனி தருவதற்குள் அது எத்தனை இடர்பாடுகளைச் சந்திக்க நேர்கிறது?
தாகத்தோடு வாடி வதங்கிய நாட்கள் எத்தனை? விளையாட்டாக, விறகாக அதன் கிளை விரல்கள் ஒடிக்கப்பட்டபோது அது வடித்த கண்ணீர் யாரறிவார்?
அதன் தோல்பட்டைகள் துகிலுரியப்பட்டபோது வடிந்தது கோந்து என்பார்! பிசின் என்பார்!ஆனால், அது வடித்த இரத்தக் கண்ணீர் என்பதை யாரறிவார்?
சுரேஷ் போன்ற உணர்ச்சிக் கவிஞர்களால் மட்டுமே உணரமுடிந்த உண்மை அது!
பத்துமாதம் பதற்றமாய்ச் சுமந்து, பெத்து, வளர்த்து கண்ணின் கருமணியாய்க் காத்த தாயுள்ளத்தின் தவிப்பை நேற்றுப் பிறந்த உறவுக்காய் ஒதுக்கிவிட்டு ஓடும் பிள்ளை அறிந்தும் அறியாத பொழுதாய் நகர்கிற நத்தையாய் உணர்வுகளை உதறுகிறார், உறவா பிரிவா? - வில் உணர்ச்சிக் கவிஞர்!
காதலா? பாசமா?
வென்றது மூடநம்பிக்கை மூர்க்கமாக முடமானது காதல்! என்பதை "பொன் முகம்" தனில் பொய்யுரைக்காமல் மெய்யுரைக்கிறார் நம் உணர்ச்சிக் கவிஞர்!
மனைவியா? தாயா? பாசமா? பகையா? நீளும் இந்தப் பட்டியலில் நாளும் வளரும் பாழும் விடயங்களை சொல்லமுடியாமல் இவர்,சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் உணர்ச்சிக் கவிஞர் உள்ளம் குமுறுகிறார்,"என்ன சொல்ல?" என்று!
பெண்ணுக்குத்தான் எத்தனை கதாபாத்திரங்கள்? என்று ஏக்கமாய் "மனைவி"யில் உணர்ச்சிக் கவிஞர் அடுக்குகிறார்.
ஆணுக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் இருக்கிறது தாய்மைப்பேறு தவிர என்பதை "மெய்மறந்து" வாழ்த்திப் போற்றிப் பாடியதோடு எங்கள் சமுதாயத்தில் வாழ்ந்து எங்களை வாழவையுங்கள்; எங்களை அனாதையாக்காதீர்கள்...உங்கள் பாதங்களில் வீழ்ந்து கதறி விண்ணப்பிக்கிறேன் எனும்போது வேண்டாம் தம்பதியருக்குள்கருத்து வேறுபாடு! சண்டை வேண்டாம்! தற்கொலை வேண்டாம்!விவாகரத்து வேண்டாம் என்று உரத்துச் சொல்லாமலே உணர்ச்சிகளூடாய் உணர்த்தி நம்மை உறையவைக்கிறார்!
தமிழகத்தில் தவழ்ந்தால், தமிழ்ப்பெண்ணை மணந்தால் பிறவிப்பயனை அடைவாய் என்று தன் உள் மன ஓசையை ஓராயிரம் காரணங்களோடு ஒப்பிட்டு தமிழகத்தை தலைநிமிரவைத்த மகனே......உனக்குதமிழகமே............. தலைதாழ்த்தி வணக்கம் சொல்லும்!
சுனாமிக்கே மன்னிப்பு வழங்கி, திருந்திவிடு என்று தீர்ப்பும் சொல்லி மன்னிப்பது மனிதநேயம் என்று தனித்துவத்தை - தம் தனித்துவத்தை தரணிக்குணர்த்துகிறார் நம் உணர்ச்சிக்கவிஞர்!
உந்தன் நூறு குறைகளை மறைவில் உறங்கவைத்துவிட்டு ஒருவரின் ஒருதவறை நீயேன் பேசுகிறாய்? என்பதில் எவ்வளவு பொருள்பொதிந்து கிடக்கிறது? "உன் முதுகைக் காணையலாதவன், அடுத்தவனின் முன்புறத்தை குறைகூறிப்பேசத் தகுதியில்லாதவன்" என்று போதித்த இறைமகன் இயேசுவின் இறை வசனத்தின் மறுபிறப்பை "ஊர் பேச்சில்" உள்ளம் திறக்கிறார் இவர்!
ஊனம் ஒரு குறையல்ல என்று இரு கைவிரல் இல்லாரைச் சுட்டி அவர்தம் சாதனையைச் சொல்லி ஒரு நிறையாளராய் உலகிற்கு உணர்த்தி, ஊனமுற்றோருக்கு "விரல்களில்" உற்சாகமூட்டி நம்பிக்கை விதை தூவும் இந்த நல்மனதாளர், ஊனம் உடம்பில் தான், உள்ளத்தில் அல்ல என்பதை எவ்வளவு பக்குவமாய் போதித்திருக்கிறார்; இனியொரு இனிய உலகம் காண இவர்களுக்கு இனியவர் கவிதை வெளிச்சப்பூக்களை "விரல்களில்" உயர்த்திக் காட்டியுள்ளார்!
பாசத்தின் உண்மையை முதியோர் இல்லத்தில் முகிழ்ப்பதைப் பார்க்கலாம்!
நடைபாதை நாயகியாய் முகம் காட்டும் முத்தம்மா! நீயே கோபுர முத்....தம்மா! முகவரி இல்லையென்றாலும் அகவரி அகலமாய் முத்தம்மாவுக்கு! மாடிவீடுகளுக்கு இல்லா மனவிலாசம் மொத்தமாய் நடைபாதைகளுக்கு நகர்ந்துவிட்டதை கருப்புமுத்து நம் இதயச் சுரங்கத்துக்குள் இதமாய் அமர்ந்து கொண்டு எழ மறுக்கிறது!!
அரசே பத்து விழுக்காடு ஊதியத்தை பிள்ளைகளிடமிருந்து பெற்று பெற்றோருக்களிக்க யுத்தமொன்று முதியோருக்காய் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்!
பிச்சை எடுப்பவர்களைக்கூட சகோதரனாக, சகோதரியாகஏற்றுக் கொள்கிற பக்குவம் இவருக்கு வாய்த்திருப்பதை ஏழைகளின் ஏழைகளில் வெள்ளைக்காரர்களிடம் வெள்ளையப்பனைக் கொடுத்து ஏழைகள் வெள்ளையரிலும் இருக்கிறார்கள் என்று ஏகாந்தமாய்ச் சொல்லும் மிடுக்கு இருக்கிறதே அதுதான் கவிஞனின் கர்வம்! அந்தக் கர்வம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய கர்வம்! அந்தக் கர்வம் காட்டி தமிழர் மானம் காக்கிறார், கவிஞர்!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்று போதித்தார் அன்று!
இன்றோகவிஞர் ஆடை கிழித்தவனுக்கு ஆடை கொடு! நன்றி மறந்தாலும் உதவுங்கள்! உங்கள் சோற்றில் மண்போட்டாலும் அவனுக்குச் சோறிடுங்கள் என்று இதயசுத்தியோடு மன்னியுங்கள் என்று இறைத் தத்துவம் உதிர்க்கிறார் "நேசம்" கவிதையில்....!
மரியாதையாக பூங்காற்று பாடலைச் சொல்லி ஆறாயிரம் குளிர் நிலவுகள் வந்து அந்தரங்கங்களில் சிலிர்க்க வெயில் அதனின் உடைமாற்றியது என்ற சூழலை இயக்குனர் பாரதிராஜாவாக மாறி கவிஞர் கம்பீரம் காட்டுகிறார். ஒருவனொக்கொருத்தி என்ற இந்திய சம்பிரதாயமுறை மரணப்படாமலிருக்க மனைவியரே நீங்கள் கணவரை நேசிப்பதை வெளிப்படுத்தத் தவறாதீர் என்று சொல்லும்போது ஒரு முதிர்ச்சி பெற்ற கவிஞனாக நம்மை மகுடம்சூட்ட வைக்கிறார்.
நண்பனும் சினேகிதியும் உரைநடையை உள்ளம்கிள்ள, எண்ணம் இனிக்க, எண்ணியதை திண்ணமாய் "மனைவியிடம், உண்மை சொல்லுகிறேன் என்று தங்கள் முன்னால் காதலை சொல்ல வேண்டாம்; நிஜங்கள், நிஜங்களாக ஏற்கப்படாதவரை, என்கிறார்.
சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லத்தான்துடிக்கிறேன்; ஆனால் தொண்டைவரை வந்தாலும் அதற்கு மேல் சொல்ல ஆனந்தன் மனைவி போல் மனைவியர்களும் ஜெயஸ்ரீ போன்ற சினேகிதிகளும்.
சிறைச்சாலை எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு இவரது கற்பனைக் கடிதம்....இது ஆட்சியாளர்களுக்கான சிந்தனைத்தூவல்கள்! இவரின் எண்ணக் குவியல்கள்! நாளையச் சட்டமாகவேண்டும்! ஏழைக்குழந்தைகளுக்கான பள்ளிகளாகவும் முதியோர் இல்லங்களாகவும் பேருக்கு ஒரு சிறைச்சாலை; அதுவும் சிறையாக இல்லாமல் மனநிலை திருத்தகம் என்ற பெயரில் அமையட்டும் என்று புரட்சிச் சிந்தனைகளோடு தன் மனச்சிறையை திறந்துகாட்டும் இவர் இந்திய உள்துறை அமைச்சராகட்டும் என்று இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பூக்களை வாரி இறையுங்கள் என்று என் உள்மனம் கோரிக்கையொன்றையும் உரத்து வைக்கத் தோன்றுகிறது!
கவிப்பேரரசு ஆகவேண்டும், இப்போதைய தாயும் மனைவியும்,கூடவே செல்லமகளாக மட்டும் "தங்கமணி" அக்காவே எனக்குப் பிறக்க வேண்டும் என்ற இவரது மூன்று ஆசைகள்! அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இது நிறைவேறவேண்டும் என்பது இவரது தாளாத ஆசை! எனக்கு ஒரு வரம் கொடுக்கும் வல்லமை இருந்தால் இந்தாபிடி என்று கொடுத்துவிடுவேன்! வரம் கொடுக்கும் வல்லமை இல்லை;சாபம் கொடுக்கிறேன்.....இதோ இந்தப் பிறவியில் நீயொரு கவிப்பேரரசு..மக்கள் மனம் கமழும் கவிப்பேரரசுவாக திகழக்கடவாய்!
பெரும்பாலானவர்களுக்கு அசாதாரணமாய் நடந்துவிடும் குற்றவுணர்வில் "டிரைவர் தம்பி"யில் கவிஞரும் சிக்கிக்கொள்கிறார்! அதற்காக அவருக்கு அவரே தண்டனை கொடுத்து, அது முடியும் முன்பே ஓட்டுனர் அங்கு தோன்றி பாவமன்னிப்பு வழங்குவது உண்மை அன்புக்கு பழச்சாறு கொடுத்து ஆசீர்வதித்த காட்சி அனுபவப் பட்டவர்களுக்குத்தான் இது தெரியும்!
கதைகளே பாடமாக இருப்பதைக் கவனமாய்ச் சொல்லும் இவரது கருத்துக்கள் வாழ்க்கைக் கதைக்கு ஒவ்வொருவரும் கவனமாய்க் கொள்ளவேண்டியது என்பதில் எள்முனையளவு கூட அய்யமில்லை!
தாமதங்கள் கூட சில நேரங்களில் நன்மைக்கே என்பதைச் சிறு சம்பவத்தால் சிலாகித்துச் சொல்லி தாமதங்களுக்காக வருந்தவேண்டாம் என்கிற இவரது சித்தாந்தம் அனேகர் வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகளாக நிழலாடும் நிசங்கள்தானே!
விருந்து கொடுத்துச் சரிந்தோர் இல்லை என்று விருந்து கொடுக்க வேகப்படுத்துகிறார்; யாருக்கு? எப்போது? எங்கு என்பதை அவருக்கே உரிய வள்ளல் உள்ளத்தோடு பட்டியலிடும் பாங்கைப்பார்க்கும் போது "பசியாறிட" வாங்க என்று முகமறியாதாரைக்கூட முகமலர்ச்சியோடு உபசரிக்கும் கிராம உபசரிப்புகளில் மூழ்கி எழவைத்தாலும், இவரோ வரவழைத்து விருந்து படைக்கும் வழக்கம்மாற்றி தேடிப்போய் விருந்து படையுங்கள் என்று "அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஏழைப்பள்ளிகள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் மஞ்சள் கயிறுகூட வாங்க வசதி இல்லாத மானமுள்ள சகோதரிகள்..."என்று பட்டியலிடும் வித்தியாச பட்டியலில் வெளிச்சமிடுகிறார்!
அடிக்கிற வெய்யிலில், கொஞ்சம் நிம்மதியா கண்ணயர முடியுதா? அதை விக்கிறேன், இதை விக்கிறேன் என்று தூக்கிகிட்டு வந்துடுறாங்க என்று நம்மில் பலர் வேகாத வெயிலையும் பொருட்படுத்தாமல்தலை, கை, தோள் சுமையாய் சுமந்து வருவோரை நொடியில் விமரிசித்துவிடுவோம். ஆனால் சுமை சுமந்து வருபவர்களின் வெளிச்சுமை தெரிந்த நமக்கு அவர்களின் உள்(ளச்)சுமை தெரியாது. இந்தக் சமுதாயத்தில் பலதரப்பட்ட வாழ்க்கை வாழ்வோரின் சூழல் நாம் அறிவதில்லை; அப்படி அறியும்போது அவர்களின் சோகங்கள், ஏக்கங்கள் தீர நம்மால் முடிந்த சிறு உதவையையாவது செய்யவேண்டும் என்று எண்ணுவோம்; அதைத்தான் கவிஞர் நோபல் பரிசில் தமக்கே உரிய நடையில் இதயம் பிழியச் சொல்லியிருக்கிறார்!
அன்ன விசாரம் அதுவேவிசாரம்! அதுவொழிந்தால் சொன்ன விசாரம் ! தொலையாவிசாரம் நற்றோகையரைப் பன்ன விசாரம் பலகால்விசாரம்! இப்பாவி நெஞ்சுக்கு என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சியே கம்பனே என்று பட்டினத்தார் பாடியுள்ளார்.
துன்பமே எனக்கு இல்லை. நான் எவ்விதக் கவலையும் இன்றி மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்று யாராலும் கூறமுடியுமா? உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் துன்பம்; ஏதாவது ஒருவகையில் எல்லோருக்கும் வருகிறது; அவற்றை வென்று வாழ்வதுதானே வாழ்க்கை! வாழ்க்கையில் வாடி வதங்கி நிற்போருக்கு நம் உணர்ச்சிக்கவிஞர் உயிர் தருகிறார், தம் கவிதைகள்மூலம்!
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன- கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்சாந்துணையும் சஞ்சலமே தான்-உண்பது நாழி- சாப்பிடுவது ஒரு பிடி சோறு, உடுப்பது நான்கு முழ ஆடை. ஆனால் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் இருக்கின்றனவே அவை கோடி. அத்தனை கோடி எண்ணங்களுடன் வாழும் மனிதனின் வாழ்க்கை துன்பமானதே என்கிறார் ஒளவைப்பிராட்டி!
இப்படி துன்பம் மிகுந்த வாழ்க்கையில் துன்பப்பட்டு நிற்போருக்கு துயரப்பட்டு நிற்போருக்கு தம் கவிதைகளால் மட்டுமல்லதாமே அவர்கள் வாழ்வில் பங்கெடுத்து ஆற்றுப்படுத்த முயல்கிறார்.
மலரினும் மெல்லிய உள்ளம் வாய்க்கப்பெற்றவர் இவர்! இவர் கவிதைகளை வாசிப்போர் அன்பிலார் எனினும் அன்பு கொள்வார்; அடுத்தவர் மீது இரக்கம் கொள்வார்;
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் அன்று!- இன்றுவாடிய உள்ளங்களைக் கண்டபோதெல்லாம் வாடிப்போகும் வள்ளலாராய் இன்று...! இவரும் வாடிக் கவிதை வடிக்கும் இவர் நம்மோடு வாழும் வள்ளலார்!
இவர் மக்கள் மனங்கவரும் கவிப்பேரரசாக வலம்வரும் நாள் வெகுதூரமில்லை! எல்லோரும் இவர் கவிதையில் மூழ்கி யான் பெற்ற இன்பத்தை நுகர அழைக்கின்றேன்.
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,அமெரிக்கா
----------------------------------------------------
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலை தி நகர்,
சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|