Saturday, November 29, 2008

மும்பை 26/11...

அடப்பாவிகளா, தீவிரவாதிகளா
என்ன தான் வேண்டும் உங்களுக்கு?
உங்கள் மரணத்தையே
தாங்க முடியவில்லையே எங்களுக்கு!
கொன்று குவித்து கொன்று மகிழ்வது
நியாமான விளையாட்டென்று
உங்கள் விளையாடும் வயதில்
கற்பித்தவன் - ஏன்
அவன் பிள்ளைகளை அனுப்பவில்லை!

உயிர் தியாகம் செய்து இந்தியாவின்
மானம் காத்த காவலர்களே - இந்த
தீயவர்களை இந்தியாவிற்குள்
அனுமதிக்காமல் இருந்திருந்தால்
உங்கள் இல்லங்களின்று
கண்ணீர் வெள்ளத்தில்
மூழ்காமல் இருந்திருக்குமே!

அரசியல் தலைவர்களே
அறுபது மணிநேரப் போராட்டத்தில்
இந்தியத் தாயின் கண்களில்
வடிந்த இரத்தத்தை
வரும் தேர்தலுக்கு
தயவாக உபயோகிக்க வேண்டாம்
உங்கள் சின்னங்களையே வைத்து
பிழைத்துக் கொள்ளுங்கள்!

Monday, November 24, 2008

கவிதை கேளுங்கள்...! (என்றென்றும் நினைவுகளில்) உலகத் தமிழ் வானொலியில்...

அன்பர்களே எனது "பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று "உலகத் தமிழ் வானொலியில்" ஒலிபரப்பாகிறது.

கேட்டுவிட்டு... நேரமிருப்பின்... முடிந்தால்... அங்கேயே ஒரு சிறு பின்னூட்டம் தாருங்கள்.

அந்தக் கவிதை இங்கேயும் கேட்கலாம்.

Get this widget | Track details | eSnips Social DNAதேவைப் பட்டவர்கள் "இங்கே க்ளிக் செய்து" உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நன்றிகளுடன்...
என்சுரேஷ்

Thursday, November 20, 2008

நீங்கள் பிறந்த கிழமை?

நீங்கள் பிறந்த கிழமை எது? சரி, வெள்ளிக்கிழமை என்று இருப்பின் வெள்ளி,
புதனென்றால் புதன்!

இந்த கிழமைகளில் மூன்று வேளை உணவிற்கு பதில் இரண்டு நேர உணவு
சாப்பிட்டால் போதும் என்று ஒரு தீர்மானம் எடுஙகள்.

சரி... இப்போது உங்களுடைய ஒரே ஒரு வேளை உணவிற்கு என்ன செலவாகும் என்று
கணக்கிடுங்கள்.. உதாரணத்திற்கு ஐம்பது ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது ஒரு வாரத்திற்கு நான்கு ஐமப்து ரூபாய் என்றால் இரணூறு ரூபாய்.
ஒவ்வொருவரும் தங்களுடைய ஒருவேளை உணவிற்கு செல்வு செய்யும் அளவிற்கு இந்த
கணக்கு மாறும்.

இதை பணமாகவோ காசோலையாகவோ நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கிருக்கும் ஓர் அனாதை விடுதிக்கு தொடர்ந்து கொடுத்து வாருங்கள். ஒரு ஏழைக் குழந்தையுடைய விதியை உங்களால் சிறப்பாக மாற்ற முடியும்!

பணம் தான் கொடுத்தோமே, நாம சாப்பிட்டால் என்ன என்று நினைத்து சாப்பிடாதீர்கள்.

சாப்பிடாமல் உறங்கச்செல்லுங்கள். மனிதன் என்றால் அடுத்தவர்களுக்காக
மனம் இறங்குபவன் தானே!

ஆரம்பத்தில் உணவு அறுந்தாமல் உறங்கச் செல்லும்போது ஓர் ஏழைக்குழந்தை உங்கள் நினைவுகளில் வரலாம்.

ஆனால் பிறகு, ஆகா! நம்மால் ஒரு ஏழைக்குழந்தைக்கு நன்மை செய்ய முடிகிறதே
என்ற சந்தோஷம் தொடர்ந்து உங்களுக்கு நிம்மதியான உறக்கத்தையும் மனநிறைவையும் தரும்.

உடல் எடை குறையும். நல்ல உணர்வுகளால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நிச்சயம் மனதில் ஆனந்தம் நிலைக்கும்!
அன்பும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததே இனிமையான வாழ்க்கை.
அதை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.

நல்வாழ்த்துக்கள்
அன்புடன் என் சுரேஷ்

Sunday, October 12, 2008

யாரிவன்...!!!!


பதினொன்றாம் வயதில்
விபத்தொன்றில் கிணற்றில் விழ
கழுத்திற்கு கீழ்
கைகள் இரண்டையும் தவிற
எல்லாவற்றின் செயலகளையும் அந்த
கிணற்றால்
கொள்ளையடிக்கப்பட்டவன்!

உடலின் கசிவுகள்
இவனின் கட்டுக்குள் இல்லை
உடன்பிறந்தோரின் உதவிகள் தொடர்கிறது
வருடங்கள் இருபத்தி ஐந்தினைத் தாண்டி!

கழுத்திற்கு கீழ் உணர்வில்லை -ஆனால்
உடல் முழுக்க மனவலியின் உணர்வுகள்
பழகி விட்டதென்று புன்னகைப்பான்
பார்ப்போறின் கண்களில்
முந்தும் கண்ணீர்மழை!

எத்தனையோ நண்பர்கள்
வந்தார்கள் சென்றார்கள்
புதிய துடப்பத்தின்
ஆரம்ப சுறுசுறுப்பு போலவே!

இருப்பினும்
சில தியாகதீபங்கள்
இவனுக்காய் அழுதுகொண்டுதான்
இருக்கிறது
உருகுவதைத் தவிற
வேறுவழியின்றி!

இவனிடம்
பேச யாருக்கு நேரமுண்டு - என
உணர்ந்த இவனின் தனிமையே
இவனுக்கு நல்ல தோழன்!

இவனும் தனிமையும் சேர்ந்து
புத்தகங்கள் வாசிப்பார்கள்
அழுவார்கள்
பள்ளிநாட்களின் நினைவுகள் தரும்
மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!

சில மாதங்கள் முன்பு
தகப்பனின் மரணம்
ஆலமரம் விழுந்ததால்
கசிந்து உருகுகிறது அதன்
நிழலின் துயரம்!

படுத்த படுக்கையில்
பல்லாண்டுகளாய் தாய்!

திருமணமான ஐந்து சகோதரிகள்
அவர்களின் தியாகமும் அன்பும்
மறக்கமுடியுமோ என்பவன்!

தனிமையின் துணையோடு
இதெல்லாம் நினைத்துக்கொண்டே
நகர்ந்து கொண்டிருக்கிறது
இவனின் கவலைகளின்
இருண்ட மேகமூட்டத்தில்
கரையும் வாழ்க்கை!

கவலை கோபமாக மாறும்
சில நொடிகளில்
தனிமையும் இவனும் சேர்ந்து
பூமிப்பெண்ணை ஒரு சாத்து
சாத்துவார்கள்
பிறகு அழுவார்கள்

இசையில் மேதையிவன் - ஆனால்
இவன் இசையை இசைக்கமட்டும்
மனமில்லா சமுதாயம்!

தசைகள் செயலற்று இசைஞானிக்கு
இசையெதற்கு என்ற
விரக்தியில் இசைந்து
இசையை மறந்துவிட முயற்சிக்கிறான்...
காதலியை மறக்க முயன்று
தவிக்குமோர் காதலனைப் போல!

கண்டதை படித்து
பண்டிதனானானா - அல்லது
பிறப்பாலையே பண்டிதனா
எனும் வினா எழுப்புக்கொண்டிருக்கிறது
இவனின் அறிவாற்றல்!

தந்தை விட்டுச் சென்ற
கொஞ்சம் வயல் நிலத்தில் மிஞ்சும்
வியர்வை
இவன் பசியை கொஞ்சம்
ஆற்றிக்கொண்டிருக்கிறது!

தேவைகள் அநேகம்
ஆனாலதை
கட்டுக்குள் வைக்கும்
அதீத விவேகமது
இவனின் சீடன்!

இந்நிலையிலும் சுயமாக சம்பாதிக்க
துடிக்கும் உள்ளம்!!!

கணினியும்
கணினியில் தமிழின் அழகாம் "அழகியும்"
ஒன்றாய் கலந்திட
இவன் இதயம் முழுக்க இன்று தமிழ்!

இணையம் வழி
சுயதொழில் செய்ய யோசனை!

தெரு அரசியல்வாதி முதல்
ஐநா சபைத் தலைவர் வரை
எல்லோரிடமும் இணையம் வழி
வணக்கம் சொல்ல
காத்திருக்கிறது இவன் துடிப்பு!

தன்னிலையில்
இவ்வுலகில்
எத்தனை பேரென்று ஒருநாள்
அழுது உருகினான்!
அதனால்
அவர்களுக்கென ஓர் இயக்கம் தீட்டும்
எழுச்சியின் சிந்தைனையில் இவனின்று!

தன்னிலை கண்டு
தற்கொலை தவிற்போரின்
எண்ணிக்கை கண்ட மகிழ்ச்சியில்
இந்நிலை தனக்கு தந்த இறைவனுக்கு
நன்றி சொல்லும் ஞானியிவன்!

அன்பர்கள் உதவினால் - அதை
சுயமரியாதை தடுத்தாலும்
தந்நிலை உணர்ந்த ஞானத்தால்
ஒருநாள் திரும்ப கொடுப்போமென்ற
உறுதியில் அதை நன்றியுடன்
அங்கீகரிப்பவன்!

இவன் தானே மனிதன்
இவன் போன்றோரை
உதவினாலே யாரும் புனிதன்!

இவன் பெயர் அந்தோணி
சென்னை ஏழைகளில் மூத்தவன்
உதவ மனமிருந்தால் போதும்
இவன் விலாசம் உங்களை
தேடி வரும்!

புனிதர்களாக வாழ்த்துக்கள் !!

என்று...

கடந்தவருடம்
டிசம்பர் பதினாறன்று என் மனம்
அழுதிட

நல்லோர்கள் பலரால்
இன்று
அடிப்படை தேவைகள்
வேலை, மடிக்கணினி, இயந்திர நாற்காலி
இவைகள் கிடைத்துள்ளன
இந்த நல்லவனுக்கு!

இவ்வருடம்
பத்தாம் மாதம் பத்தாம் நாள்
தனது
பிறந்தநாளை
மகிழ்ந்து கொண்டாடினான்

இன்னமும் தேவைகள் பல இருப்பினும்
போதுமென்ற மனதுடைய இவனுக்கு
உதவாமல் வாழுமோ
உயிருள்ள இதயங்கள்...!

அன்புடன்
என் சுரேஷ்

திரு அந்தோணி முத்துவை அனுக / அறிய:

திரு அந்தோணி முத்து
5/96 சேரன் தெரு
கே.கே நகர், பம்மதுகுளம்
ரெட் ஹில்ஸ்,
சென்னை 600 052
சென்னை, இந்தியா

பேச : 91-44-26323185
: 0-94444-96600

மின்னஞ்சல் முகவரிகள்: anthonymuthu1983@yahoo.com, anthonymuthu1983@gmail.com
வலைதளம்: http://anthony.azhagi.com
வலைப்பூ : http://positiveanthonytamil.blogspot.com, http://mindpower1983.blogspot.com

Tuesday, September 23, 2008

என்ன ஆச்சுப்பா இந்த வடிவேலுக்கு....???


தலைவனின் பெயரில் தொண்டர்கள் செய்யும் அட்டூழியங்கள் பெருகியிருக்கும்
நம் நாட்டில் எதை நம்புவது எதை நம்பாமல் விட்டு விடுவது என்று புரியவில்லை. இருப்பினும் வடிவேலின் வீடு சென்று மர்ம நபர்கள் தாக்குவது போன்ற சம்பவங்கள் நிச்சயமாக கண்டிக்கவேண்டியவை!

நானும் எனது குடும்பத்தாரும் பொதுவாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளைப் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. எல்லோரும் அவரை அடித்து, தாக்கி, அவமானப்படுத்துவதை நகைச்சுவையாகக் காணும் ஒரு ரசிகமனம் எங்களுக்கு இல்லை!

விவேக் மற்றும் ரஜினி அளிக்கும் நகைச்சுவைகளைப் போன்றவைகளை நன்கு ரசிப்போம்.

இப்போது நிஜவாழ்க்கையிலும் வடிவேல் இப்படி அடி வாங்குவதைக் காண்பது கொடுமையாக உள்ளது. ஆனால் இதற்கு போய் அரசியலில் குதிக்க நினைக்கும் வடிவேலின் மனநிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.

கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு முதலமைச்சாரக நேரடியாக செல்ல வேண்டும் என்ற ஆசை சுத்த மடத்தனம் என்றாலும் அதற்கான எந்த உழைப்புமின்றி கனவு காண்பது அதைவிட மடத்தனம்!

அன்புடன்
என் சுரேஷ்

திருமணச்செலவை குறைப்போம் ( 23/09/2008 அன்று தமிழோசை நாளிதழில் வெளிவந்த கட்டுரை)

Monday, September 22, 2008

நூறு வருஷம்...


எனது இல்லத்திலிருந்து இரயில் நிலையம் வரைச் செல்ல எனக்கு தினமும் ஆட்டோ ரிக்ஷா காலையில் தேவைப்படும். என்னுடைய இல்லத்திற்கு அருகில் உள்ள திரு பலராமன் கடந்த ஒன்றறை வருட காலமாக காலை 8.15க்கு வந்து ஒரு மிஸ்ட் கால் செய்வார். ஆனால் சில நாட்களில் அவருக்கு வேறு நீண்ட சவாரி வந்தால் மிஸ்ட் கால் வராது. அன்று நான் பிரதான சாலைக்கு சென்று ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்வது வழக்கம்.

திரு பலராமான் வராததால், நேற்று ஓர் ஆட்டோ ஓட்டுனர் வந்தார், "ஐயா வாங்க" என்று சிரித்தவாறே அழைத்தார். சந்தோஷமான முகம், நெற்றியில் சந்தனம், உழைப்பவனின் கறுப்பு நிறம், நாற்பது வயதைத் தாண்டினதைச் சொல்லும் உருவம், கொண்ட இவர் " ஐயா நீங்க என்ன, போலீஸ் அதிகாரியா" என்றார், "இல்லை" என்றேன். "பிறகு ஏன் இப்படி மௌனமா இருக்கீங்க... சரி... உங்களுக்கு ஒரு கத சொல்லட்டுமா" என்றார்.

பல வருடங்களுக்கு முன் என்னை ஆட்டோவில் பள்ளிக்கு கொண்டுச் சென்ற செல்வன் அங்கிளை நினைவிற்க் கொண்டுவந்தார் இந்த ஆட்டோ ஓட்டுனர் திரு.சிவா!

சரி..கதையைச் சொல்லுங்களேன் என்றேன்!

"ஐயா இறைவன் முதலில் மனுஷன படச்சிட்டு 40 வருடம் சந்தோஷமா இருடான்னாறு, பெறகு நாய், எருமை, அப்புறமா கொக்கைப் படைச்சுட்டு அதுங்களுக்கும் 40 வருஷம் ஆயுளெ கொடுத்தாரு..

ஆனா இந்த நாய், அட நாம எதுக்கு 40 வருடம் வாழனோம், 20 போதும்னு பிராம்மா கிட்டக்கப் போய், சாமி எனக்கு 20 வருடம் போதும்னுச்சி..

சும்மா இருக்குமா எருமையும் கொக்கும்? அதுங்களும் அப்படியே சொல்ல... இந்த மூன்னு பேறுது ஆயுள் இப்போ எவ்வளவு ஆச்சு? ஆஆஆ... சரியா சொன்னீங்கோ...60!

இந்த அறுவது வயச அப்படியே மனுஷனுக்கு கொடுத்தாரு பிரம்மா. சந்தோஷமா மனுஷ அத்த வாங்கினது தப்பாப்போச்சு. ஏன்னு கேக்கரீங்களா?

சார், எனக்கு இப்போ 45 வயாசாச்சு, என்னோட பொண்டாட்டி இன்னா சொன்னாலும் கடந்த அஞ்சு வருசமா, அவங்க கிட்டக்க வல் வல்ன்னு விழுவே...ஏன் அது நாய்குணம்.

ஒழுங்கா 40 வயுசு வாழ்ந்திருந்தேன்னா... 20 வயசுலே புள்ளைய கட்டிக்குடுத்துட்டு நிம்மதியா போயிட்டுருப்பேன்.

சரி.. 60 வயசுக்குமேல வேல செய்ய முடியாது எனக்கு... அப்போ எல்லாம் நம்புள மதிக்கவே மாட்டானுங்க.. அப்போ எருமையப்போல, என்ன தான் மேல மழைப் பேஞ்சாலும் சூடு சொறனையெ இல்லாம இருப்பேன், ஏன்? ஆஆஆ...அது எருமையுட ஆயுளெ நான் எடுத்தேல்லா... அதா...

60 லேர்ந்து 100 வயசு வரைக்கும் கொக்கப் போல சார், பூமியப் பார்த்து எப்பட நம்ம உடல் பூமிக்கு போவும், வானத்தப் பார்த்து எப்படா நம்ம உயிரு வானத்துக்கு போகும்னு பார்ப்பேன்... ம்ம்.. அது கொக்கின் ஆயுள்... இது தான் சார் கத..." என்று சிரித்துக்கொண்டே வண்டியின் பிரேக்கை அடித்தார், இரயில் நிலையம் வந்தது.

அவர் கேட்ட நியாயமான பணம் கொடுத்து இரயில் நிலையத்திற்குள் நடந்து செல்கிறேன், தூரத்தில் ஒரு நாய் சத்தமிட அந்த சத்தம் எனது காதுகளில் வந்து கொண்டிருந்தது. இரயில் வந்ததும் அதிலேறி ஜன்னலோரம் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன், ஓர் எருமை மீது அமர்ந்திருந்த கொக்கொன்று பறந்து சென்று கொண்டிருந்தது!!!

Tuesday, September 2, 2008

கவிதை கேளுங்கள்...!

அன்பர்களே,
World Tamil News வானொலியில் ஒலிபரப்பாகும் என் "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" கவிதையை
இங்கே கேளுங்கள்.


--------------------------------------------------------------------------

Get this widget Track details eSnips Social DNAகவிதையை உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்கவும்

Friday, July 11, 2008

திரு.மைக்கில்ராஜ் அவர்கள்


திரு மைக்கல் ராஜ் 24/10/1943 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராமபுரம் என்ற ஊரில் திருமதி லூர்து அம்மாவிற்கும் திரு சவரி முத்து பிள்ளைக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.

தூத்துக்குடியில் உள்ள தூய சவேரியர் பள்ளியில் பள்ளிப்படிப்பும், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் கல்லூரியில் பி.ஏ (பொருளாதாரம்) பட்டப் படிப்பும் (1963) - முடித்தார்.
1963 முதல் 1966 வரை ஆங்கில ஆசிரியராக, சிவகாசியில் உள்ள ஐய்யநாடார் ஜானகி அம்மாள் காலேஜில் பணிபுரிந்தார்.

1/3/1967 அன்று இவர் எல்.ஐ.ஸி -யில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி, எல்.ஐ.ஸியின் அனைத்து பாடங்களிலும் வெற்றி கண்டு 37 வருடகால சேவை முடித்து அக்டோபர் 2003-ல் "முகவர்களுக்கு பயிற்சியாளார்" என்ற சந்தோஷமான பதவியில் இருக்கும் நேரம், வயது 60 ஐ தாண்டியதை தெரியவில்லை, அலுவலக மடல் தெரிவித்தது, வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவரைப் பற்றின ஒரு ப்ளாஷ் பாக் (கடந்தகால நிகழ்வுகள்) பார்ப்போமா!

இவரோடு பிறந்த ஒரே ஒரு சகோதரன் (அண்ணன்) திரு அமலதாஸ், அவர் 6-ஆவது வயதிலேயே காலமானதும், தனது சிறு பிராயத்திலேயே இவரின் தந்தை குடும்பத்தை விட்டு விட்டுச் சென்றதும் தான் இவருடைய வாழ்க்கை எனும் மொட்டு மலரும் வேளை அதன் மீது இடியாக விழுந்த சம்பவங்கள். ஆனால் இவரின் தாய் இந்த சின்ன பாலன் மீது விழுந்த இடிகளைத் தாங்கி காப்பாற்றினார்கள்.

தந்தையால் கைவிடப்பட்ட இந்த குடும்பம், தூத்துக்குடியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்த தாய்மாமன் வீட்டில் அடைக்கலம் பெற்றது. எட்டு குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மாமன் - மாமி தம்பதியருக்கு உதவி செய்தே இவருடைய அன்புத்தாய் கரைந்ததின் பலனாக திரு மைக்கல்ராஜிற்கு பி.ஏ வரை படிக்க முடிந்தது. கரைந்து கரைந்து முடிவில் இறந்தே போன தாய் பற்றி நினைக்கையில் கண்ணீர் முந்தும் உணர்வோடு திரு மைக்கல் ராஜ் தன்னை படிக்க வைத்த தாய்மாமன் மற்றும் குடும்பத்தாரோடு இருக்கும் நன்றியை என்றுமே மறக்க முடியாது என்கிறார்.

எல்.ஐ.ஸி யில் வேலை கிடைத்து ஏறத்தாழ ஒன்றறை வருடகாலம் முடிந்ததும், பெரியோர்கள் பார்த்து நிச்சயம் செய்த சுமதி என்ற பெயருள்ள ஒருவரை 18/ஜனவரி/1968- ல் திருமணம் செய்தார். இந்த திருமணம் மதுரையில் நடந்தது என்பதில் திரு மைக்கல் ராஜ் அவர்களக்கு அப்படி ஒரு சந்தோஷம். பெஸ்ட் & கிராம்படன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு உதவியாளாராக திருமதி சுமதி மைக்கல்ராஜ் 25 வருடகாலங்கள் வேலை செய்த பின்னர் வேலையிலிருந்து சுய ஓய்வு பெற்றார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள், மகள்- மகன் - மகன்!

மகள், சுகந்தி எல்.ஐ.ஸி-யில் அலுவலக அதிகாரியாகவும் அவரின் கணவர் வங்கியில் அதிகாரியாகவும் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு 1993 -ல் திருமணம் நடந்தேறியது. இந்த தம்பதியருக்கு பெண்-இரட்டைக் குழந்தைகள், நிஷிதா & நிகிதா!!! - இருவரும் UKG யில் படிக்கிறார்கள்

மகன், சுரேஷ், பெல்ஜியத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் (கணினி) துறையில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுதா. இவர்களுக்கு 2002 - இல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், அவன் பெயர் ஸ்டீபன். இந்த பிள்ளை இப்போது LKG வகுப்பில் படித்து வருகிறான்.

அடுத்த மகன் ரஞ்சித், டி.சி.எஸ்-இல் மென்பொருள்(கணினி) துறையில் நல்ல வேலையில் இருக்கிறார். அடிக்கடி அமெரிக்காவிற்கு வேலை விஷயமாக சென்று வரும் இவருக்கு வரும் ஜுலை 2008 -இல் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. ரஞ்சித்திற்கு முறைப்பெண்ணே
( பங்களூரில் உள்ள மாமா மகளை) மனைவியாக வரும் பாக்கியம் கிடைத்துள்ளது!

திரு மைக்கல்ராஜ் அவர்கள், 37 வருட காலம் எல்.ஐ.ஸியில் பணிபுரிந்த பின்னர் இப்போது திரும்பி பார்க்கையில் அநேக அனுபவங்களும் நிகழ்வுகளும் பாடங்களும் நினைவிற்கு வந்தாலும் பன்னிறண்டாயிறத்திற்கு மேல் முகவர்களை பயிற்சி கொடுக்க முடிந்ததும், இரண்டாயிரத்திற்கு மேல் குடும்பங்களுக்கு எல்.ஐ.ஸி வழியாக வீடு கட்ட கடனுதவி செய்ய முடிந்ததும் தான் மறக்கமுடியாத பெருமிதம் என்று சந்தோஷமுடன் சொல்கிறார்.

இன்றும் நன்றியோடு நினைவுகோர்ந்து தன்னை தொலைபேசியிலும் நேரிலும் கண்டு அன்பைத் தெரிவிக்கும் முகவர்களைப் பற்றியும், தன்னோடு பணியாற்றினவர்களைப் பற்றியும், கடனுதவி பெற்றவர்களைப் பற்றியும் சொல்கையில் சந்தோஷத்தால் இவர் முகம் மலர்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறுஸ்து தான், தான் நேசிப்பவர்களில் முதல், அது அன்றும், இன்றும் என்றும் என்று சொன்ன பிறகு.. அடுத்தது தனது மனைவி திருமதி சுமதியை மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். 40 வருடங்கள் கடந்து பயணிக்கும் எங்கள் மணவாழ்க்கை நேற்று துவங்கியது போல் உள்ளது என்று இவர் சொல்ல ஒரு புன்னகையால் அது சரி தான் என்கிறார்கள், திருமதி சுமதி மைக்கல்ராஜ் அவர்களும்.

1/9/1987 - உலகம் இதயநாளாக கொண்டாடும் நாளன்று திரு மைக்கல்ராஜ் அவர்களுக்கு இருதய அறுவைச் சிகிட்சை செய்யப்பட்டது. மருத்துவரின் நிர்பந்தத்திற்கு, வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டேன் என்கிறார்.

பிறகு இரண்டு முறை இதயத்தில் பாதிப்பு (அட்டேக்) வந்த பின்னரும் மருத்தவர்களின் உபதேசப்படி மருந்துகள் எடுத்தாலும், எல்லாவற்றிலும் மூத்த மருத்துவரான கர்த்தராகிய இயேசு கிறுஸ்துவின் கிருபையால் நலமோடு வாழ்ந்து வருகிறேன் என்று சொல்லும் இவருக்கு இறைவனின் கட்டளைபடி வாழ்ந்த அன்னை தெரேசா மீது அப்படி ஒரு மரியாதை.

அன்னை தெரேசாவை நேரடியாக சந்தித்து தனது இதயநோய் பற்றி சொல்லிட, அன்போடு அந்த அன்னை இவர் மார்பில் கனிவான கரங்களால் தொட்டு, கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்ன தருணம் முதல் " அட! அன்னை தெரேசா தொட்ட எனது உடலில் எனக்கு இனி ஒரு நோயும் வராது" என்று சொல்கையில் யாருக்கும் அந்த அன்புத் தாயின் முகம் கண்முன்னே வந்து போகும்!

ஓய்வு பெற்ற நேரத்தை பயன்படுத்தி, 125 க்கும் மேற்பட்ட தம்பதியருக்கு "கௌன்சிலிங்" கொடுத்து அவர்கள் வாழ்க்கையை ஒரு தந்தையின்/தாயின் ஸ்தானத்திலிருந்து இனிப்பாக மாற்றினார். விவாகரத்து வேண்டாம் என்று மனம் மாறி அவர்களெல்லோரும் சந்தோஷமுடன் வாழ்வதில் இவருக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி!. மருத்துவர்களின் உபதேசப்படி இப்போது இந்த கௌன்ஸிலிங் செய்வதை நிறுத்திவிட்டார்.

காலையும் மாலையும் தனது இல்லத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் திருச்சபைக்கு செல்வது, அங்கிருக்கும் சொசைட்டியில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வது, அனாதை மற்றும் முதியோர் இல்லங்கள் சென்று உதவிவருவது, ஏழைப் பிள்ளைகளுக்காக நடத்தும் மாலை டியூஷன் செண்டரில் சென்று உதவி செய்வது, இப்போதும் முகவர்களுக்காக பல இடங்களில் சென்றும் பேசி ஊக்கம் கொடுப்பது, மற்றும், தன்னை அனுகுவோருக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையோடே வாழும் இவர் இளைஞர்களை நோக்கி இப்படி சொல்கிறார்.

"எல்லோருக்கும் தேவையான திறமைகளை கொடுத்து தான் இறைவன் படைக்கிறார். அந்த திறமைகளை எல்லோரும் முடிந்த அளவிற்கு அதிகமாக உபயோகித்து முன்னேறி அடுத்தவர்களுக்கு உதவி வாழும் நல்லதோர் வாழ்க்கை வாழ்தல் இறைவனின் நோக்கம் வெற்றியடையச் செய்யும்!" - என்பதே இவர் எல்லோருக்கும் சொல்லும் பொதுவான ஓர் உபதேசம்!

உடல்நிலையைப் பற்றி மறந்து, புன்னகையும், துடிப்பும், முதிற்சியான பேச்சும் கண்டால் யாருக்கும் இன்னும் ஒரு முறை கூட இவரிடம் பேசத் தோன்றும்! ஒரு முறை கூட காணத் தோன்றும்.

வாழ்க திரு மைக்கல்ராஜ் அவர்கள்

அன்புடன் என் சுரேஷ்

Tuesday, July 8, 2008

வாகீசா...!!!!


(இந்த சமூகம் எனக்கு அளித்த தம்பிகளில் ஒருவன் நேற்று காலை, சாலை விபத்தொன்றில் இறந்து விட்டான். அவன் பெயர் வாகீசன். சென்னையில் வெளியான ஹிந்து பத்திரிகையில் இன்று-(08/07/2008) இந்த விபத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தால் எனது கவலை மேகங்கள் அதன் வார்த்தைகளால் ஒரு சித்திரம் வரைந்து என்னை சமாதானப்படுத்துகிறது இப்படியாக!!! ஆனால் என் கண்ணீர் இன்னமும் ஓயவில்லை...!)

ஈஸ்வரனிடம் சென்ற என் வாகீசா
இனி உன்னை என்று காணும் என் கண்கள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
கொரியர் சேவகனாய்
முதன் முதலாய் உனைக் கண்டேன் நான்!
"அண்ணா" என்றழைத்தாய்
அன்புடன் நீயென்னை
"அண்ணி" என்றழைத்தாய்
என்னுயிர் மனைவியை நீ!

மகிழ்ந்து சென்ற
உனது வாழ்க்கைப் பயணத்தில் - உன்
மனைவியின் மரணம் என்ற
மாபெரும் துயரொன்று உனைத் தாக்க
கலங்கின எல்லோரையும் நீ
சமாதானப்படுத்தினாய்
ஆர்க்கிட் என்ற நிறுவனம்
கண்ணீரைத் துடைத்தது என்றாய்!
மாதா, பிதா குரு தெய்வம் பட்டியலில்
ஆர்கிட்டை சேர்த்திடென்றேன்;
மகிழ்ந்து சிரித்தாய்!

உன் வளர்ச்சியில் நான் மகிழ்ந்தேன்;
உன் வீழ்ச்சியில் நான் உடைந்தேன்
நான் மகிழ நீ சிரித்தாய்;
நான் வீழ நீ சமாதானப்படுத்தினாய்;
ஆனால் இன்று ??

கனவுகள் பல சுமந்தவன் நீ;
மகன் ஒருவனுக்காய் வாழ்ந்தவன் நீ;
ஆனால் இன்று ??

ஆர்க்கிட் சாம்ராஜ்ஜியம்
அதன் முன்வரிசையில்
உனை வைத்து பெருமை கொண்டதே!
ஆனால் இன்று ??

வாழவேண்டியவன் உன்னை
கொன்று விட்டதே விபத்து!
உன் பிரிவில் வாடும்
பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும்
ஆறுதல் சொல்ல
வார்த்தைகளே இல்லையே என் தம்பி!

நெஞ்சு பொறுக்கவில்லை;
இதயத்தின் கண்ணீரின் ஊற்றை
கட்டுப்படுத்த இயலவில்லை - ஆனால்
நீ மட்டும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்!

உன் குழந்தைக்கும் பெற்றோருக்கும்
நல்வாழ்த்து சொல்லிவிட்டு
உன் ஆர்க்கிட் நண்பர்களுக்கு
கடைசி புன்னகையை தந்துவிட்டு
நீ மட்டும் உறங்கிக்கொண்டிருக்கிறாய்!

முப்பத்தி நான்கு வயதில்
இவ்வுறக்கம் தேவை தானா
என்னுயிர் தம்பி?

உந்தன் ஆத்மா
நிச்சயம் சாந்தியடையும்!
இனி சொர்கத்தில் சந்திப்போம்!

உனது இறுதிப்பயணத்திற்கு
எங்கள் மௌனமொழிகளில்
கண்ணீருடன்
வாழ்த்து சொல்கிறோம்..!!!

நீ வாழ்க மனமகிழ்ச்சியுடன்
சொர்கத்திலாவது!!!!

கண்ணீருடன்... உன்...


"சுரேஷ்" அண்ணனும் "விஜி சுரேஷ்" அண்ணியும்

Saturday, June 21, 2008

தொடரும் உறவு

சிறையில்..
தனிமையின்
சிறையோடு அவன்!

கருவறை முதல்
இன்று வரை
இனி
என்று வரை
என்றறியா உறவு
அவனுக்கும் சிறைக்கும்!

"விடுதலை கிடித்து விட்டதா"
என்றது கேள்வி

"ஆம்! இந்த சிறையிலிருந்து இன்று ..."
என்றது பதில்!

கவிதை கேட்கலாம் வாருங்கள்.

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதையை
இங்கே கேளுங்கள்...

Get this widget | Track details | eSnips Social DNA07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து)கவிதையை இங்கே கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


09-06-2008 அன்று ஒலிபரப்பப்பட்ட எனது "கண்ணீர் நொடிகள்" கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA

Saturday, June 14, 2008

என் அண்ணன் திரு சக்தி சக்திதாசன்அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் மலர்ந்த உறவம்மா
கண்ணை இமைபோல் காத்ததம்மா
என் உயிரே எந்தன் அண்ணனம்மா

அடைக்கலம் எங்கே நானலைந்தேன்
இதயத்திலென்னை இணைத்துக்கொண்டான்
கொடுப்பவன் நான் என அறிந்த அண்ணன்
கும்பிட்ட கைகளில் முத்தமிட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த உறவம்மா
கண்ணை இமை போல் காத்ததம்மா
என் உயிரே எந்தன் அண்ணனம்மா

என்னை நினைத்தே நானிருந்தும்
தன்னை மறந்தே எனை நினைப்பான்
என்றும் அவனை மறப்பேனோ
மறப்பின் உயிருடன் இருப்பேனோ
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த உறவம்மா
கண்ணை இமை போல் காத்ததம்மா
என் உயிரே எந்தன் அண்ணனம்மா

என்றென்றும் பாசமுடன்
தம்பி என் சுரேஷ்

Friday, May 30, 2008

பூமாலைகடந்து போனவள்
உனை மறந்து
மகிழ்ச்சி வானத்தில்
பறந்துகொண்டிருக்கிறாள்!

சகபயணி என் தம்பி நீயோ
கவலைக்கடலில்
வானத்தைப் பார்த்தபடி!
இது சரியோ?

ஓடி ஓடிச் சென்றாய் நீ - ஆனால்
உனை விட்டுப் பறந்து சென்றது அந்த இரயில்!
இதனால் வேதனை ஏனோ இன்னும் உன்னில்?

கவலையை விடு!
அடுத்த இரயில்
உனக்காகவே வந்து கொண்டிருக்கிறது!

உனைத் தேடி வரும் இரயிலில் பயணிப்பது
தண்டவாளத்தில் தலைவைப்பதை விட மேல்!

எதையும் எப்போதும் எப்படியும்
சொல்லும் இந்த உலகம்
உன்னை ஒரு நாள் புத்தியுடன் வாழ்த்தும்
கொஞ்சம் பொறு என் கறுப்புத் தங்கமே
விரைவில் நீ ஓர் அழகிய ஆபரணமாகிவிடுவாய்!

உந்தன் கவிதையின் அழகை ரசிப்போர் சிலர் -ஆனால்
உந்தன் கவிதையின் கவலைகளில் கரைபவன் நான்!

நீ எழுதும் கவிதைகள் உனது கவலைகளை
வெளியேற்றுவதாய் சொல்கிறாய்
அது உந்தன் இதயத்திலிருந்து சுரக்கும்
இரத்தத்தால் எழுதப்படுகிறதென்று
ஏனோ அறியாமல்!

உந்தன் கவிதைகளுக்கும் நீ
புத்தாடையும் புத்துணர்வும் கொடு
புதிய மனிதனாய் நீ மீண்டும் இவ்வுலகைப் பார்!

காதலும் இரயிலும் ஒன்றா? - என்போரிடம்
"வாழ்க்கையே ஓர் இரயில் பயணம்" - என்று
புன்னகையோடு சொல்!

சித்தனென்று இவ்வுலகம்
உந்தன் காலில் விழும்
அந்த கூட்டத்தில் அவளும் இருப்பாள்
"மன்னிப்பு" என்ற பேராயுதத்தால்
அவளையும் அன்போடு தண்டித்து விடு!

அமைதி நிச்சயம்
என் தம்பி உனக்கு - அதனால்
மகிழ்ச்சி எனக்கும் நம் இல்லத்தாருக்கும்!

எந்தன் கண்ணீர் மட்டும்
உந்தன் மனக்காயத்திற்கெல்லாம்
மருந்தாக மாறியிருப்பின்
என்றோ தேறியிருப்பாய்
என் அன்புத் தம்பியே நீ!

அன்புடன் ஓர் செய்தி, என் தம்பி!
இதற்குமேலும் நீ மாறவில்லை எனில்
உனை மாற்ற நீ முயற்சிக்கவில்லை எனில்
உனை நினைத்தே உருகி உருகி உறங்குமென்னை
விரைவில் ஒரு பூமாலையோடு நீ சந்திக்ககூடும்!
நான் எங்கிருந்தாலும்
உந்தன் மகிழ்ச்சியை மட்டும்
காணத்துடிக்கும்
பாசமுடன் உன் அண்ணன்
என் சுரேஷ்

Thursday, May 29, 2008

விமர்சனம் - அன்புள்ள அம்மாவிற்கு....!!!!

vishalam raman: wrote:
//அன்பு சுரேஷ் எந்தப் புத்தகத்தைப் பற்றியும் சிறப்பு அம்சங்கள் கூறினால் அது விமர்சனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் ,விமர்சனம் என்றால் என்ன ? நான் அந்தச் சொல்லைக் குறிப்பிட்டது தவறானால் தயவு செய்து
மன்னிக்கவும்
அன்புடன் விசாலம்//


அன்புள்ள அம்மா,

தலையில் ஒரு அடி அடித்து "சொல்லுடா" என்றால் சொல்பவன் என்னிடம் (மன்னிக்கவும் போன்ற) பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்வதை கேட்க எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கு.

விமர்சனம் - என்பதைப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியும். இருந்தாலும் தனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பாடலை தன்னுடைய மகன் எப்படித் தான் புரிந்து வைத்திருக்கிறான் என்ற ஒரு தாயின் உணர்வை உங்களுடைய கேள்வியில் இருப்பதைக் கண்டு அதை மதிக்கிறேன். அதனால் இந்த சின்னப்ப்யலுக்கு தெரிந்தவைகளை எழுதுகிறேன். சிரிப்போடு கேளுங்கள்... :-)
தவறுகளிருப்பின் எனது மண்டையில் கொட்டுங்கள்:-)
அம்மா, விமர்சனம் என்பதைப் பற்றி நான் இப்படித் தான் புரிந்து கொண்டிருக்கிறேன்:
ஒரு சினிமா பார்த்து வந்து ஒருவன் தனது ஒரு வரி கருத்தை சொன்னால் அது ஒரு முழுமையான விமர்சனம் ஆகாது. ஏனென்றால் 18 வயதுள்ள ஒருவன் அதிலிருக்கும் சண்டைக் காட்சியை ரசித்த மயக்கத்தில், படம் "சூப்பர் போங்க" என்பான். இசை மீதிருக்கும் ஆர்வத்தில் ஒருவேளை அதில் நல்ல பாடல்கள் இருந்தால், "அம்மா அது நல்ல படம்" என்று நான் கூறக்குடும். சீரியலில் நடித்து வரும் எனது தம்பியை கேட்டால் அவனுக்கு பிடித்த நடிகரை பாராட்ட அந்த படம் ஆகா ஓகோ என்பான். கவலையில் இருக்கும் ஒருவன் ஒரு படம் பார்த்து அந்த படம் எப்படி இருந்தாலும் அதை "நாசமான பாடம்" எனக் கூற வாய்ப்புண்டு.

எதையும் திட்டுவோம் என்று சபதம் எடுத்து வாழ்பவர்கள், குற்றங்களை மட்டும் தங்கள் பார்வைகளில் பதித்துக் கொள்கிறவர்கள், மற்றும் அறிவாளிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டு உளருகிறவர்கள், குற்றம் கண்டு பிடித்தே புகழ்தேடும் பாவங்கள் மற்றும் ஒரு துறையிலும் தேவையான ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஒன்றும் புரியாததால் சும்மா பாராட்டித்திரிபவர்கள், என்ற கூட்டத்தார் எல்லாம் சொல்லும் கருத்துக்கள் ஒரு விமர்சனமாக முழுமையடைவதில்லை.

விமர்சனத்தைப் பொறுத்த வரையில் இதே நிலை தான் புத்தங்களானாலும் சரி, மற்றும் இயல் இசை நாடகம், அரசியல், விளையாட்டு, சமூகம் என எதுவாக இருந்தாலும் சரி! வெறும் கருத்துக்கள் என்பது வேறு; விமர்சனம் என்பது வேறு. இரண்டிற்கும் அப்படி ஒரு அபார தூரம்!

விமர்சனம் எழுதுபவன் எந்த ஒரு முன் தீர்மானங்களின் கண்ணாடியையும் அணிந்து கொண்டு எழுத ஆரம்பிக்கக் கூடாது.

குறிப்பிட்ட துறையில் சிறந்த அல்லது அடிப்படையானவைகளில் ஓரளவிற்கு முன் அனுபவமும், அலசி ஆறாய்கின்ற அறிவும், தொலைநோக்குப் பார்வையும், சுயசிந்தனையில் சிறப்பும், தன்னுடைய விமர்சனத்தை எப்படியெல்லாம் மற்றவர்கள் விமர்சிப்பார்கள் என்ற யோசனையும், நல்ல ரசிப்புத்தன்மையும், சமூகப்பொறுப்பும் ...என நீண்ட பல தகுதிகள் இருப்பவராக ஒருவர் இருந்தால் தான் அவர் ஒரு நல்ல விமர்சனத்தை படைக்க முடியும். ஆம்! விமர்சனமும் ஒரு படைப்பு தான்! மிகவும் கஷ்டமான ஒரு படைப்பு!

உதாரணத்திற்கு: சலங்கை ஒலி என்ற படத்தில் " பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்" என்ற ஒரு பாடல் வரிக்கு காண்பித்த முக பாவனைகள், நர்த்தனம் இவை இரண்டும் எப்படியெல்லாம் தவறென்று அந்த படத்தில், சிறந்த ஒரு கலை விமர்சகனாக எழுதிக் கிழிப்பதோடு, ஆடியும் காட்டுவார், அதில் ஒரு கலை விமர்சக பத்திரிகை நிருபராக வரும் கமலஹாசன். (அதற்காக எல்லா நல்ல விமர்சகர்களும் அப்படியே செய்ய வேண்டுமென்று சொல்ல வரவில்லை:-) சன் டிவியில் டாப் டென் போன்ற நிகழ்ச்சிகளின் கொடுமையே தாங்க முடியல:-) இதில் அந்த நபர் நடித்து, நாட்டியமாடி, ஜோக்கடித்து நேயர்களை நோயாளிகளாக்கும் கொடுமைகள் வேண்டாம்:-)

அதே கலை விமர்சகர் ( கமலஹாசன்) அந்த நாட்டியம் ஆடியவள் தன்னுடைய பழைய காதலியின் மகள் என்று அறிந்ததும் பாசம் என்ற பாசியில் விழுந்து "விமர்சகர்" என்ற அந்தஸ்தை இழந்து, ஆகா! ஓகோ என்ற அந்த நாட்டியத்தை பாராட்டுவார். இந்த பாரட்டு விமர்சனமாகுமா? இது கருத்து, அதுவும் முட்டாள்த்தனமான கருத்து, பாசத்தின் வெளிப்பாட்டில் மலர்ந்த பொய்!

அம்மா, சங்கீதத்தில் நல்ல ஈடுபாடுள்ள உங்களுக்கு நம்ம சுப்புடு மாமவைப் பற்றி தெரியும். அவருடைய விமர்சங்களின் பலமும் பலவீனமும் பற்றித் தெரியும்.

இங்கே நான், காற்று வெளியினிலே... என்ற புத்தகத்தை ஒரு விமர்சகனாக வாசிக்கவில்லை. என் அன்புடன் அப்பா எழுதின புத்தகத்தில் அவரின் அனுபவங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வாசித்த புத்தகமிது. . இதில் என் மனதில் இவரைப் பற்றின என்க்குத் தெரிந்த பல நல்ல முன் தீர்மானங்களை/புரிதல்களை மனதிற்கொண்டு தான் வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்த மகிழ்ந்ததை பகிர்ந்து கொண்டேன், மகிழ்ந்தேன். என் அன்புள்ள அப்பாவின் நல்ல குணங்களை பின்பற்ற வேண்டுமென்ற தீர்மானங்கள் எடுத்தேன். இப்படியிருக்க அந்த புத்தகங்களின் எழுத்துப்பிழைகள் சிலவற்றைத் தவிற ஒரு தவறும் என் பார்வைக்கு படவில்லை. படவும் படாது:-)

எல்லாவற்றிற்கு மேலாக அவருடைய அறிவிற்கும் அனுபவத்திற்கும் முன் நான் எந்த வகையிலும் அவருடைய புத்தகத்திற்கு கருத்துக்கள் கூட எழுத தகுதியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். அதனால் விமர்சனங்கள் என்று எனது பகிர்வுகளை சொல்வதை நான் தாழ்மையோடு ஏற்கவில்லை, அவ்வளவு தான்.

அம்மா, இதோ எந்தன் தலை, நான் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருப்பின் என்னை நீங்கள் செல்லமாய் கொட்டலாம்.

பாசத்தால் கொட்டலாம் என்றால், இது கருத்து!

இதற்கெல்லாம் கொட்டுவது தவறு. இருப்பினும் அது இருவர்களுடைய மனதிற்கு ஏற்றது போல் என்பது விமர்சனம்!

இது தான் நடந்தது, என்பது பகிர்வு!!!

நன்றி வணக்கம்
பாசமுடன் என் சுரேஷ்

Monday, May 26, 2008

திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எழுதின..காற்று வெளியினிலே...உலகத் தமிழ் மக்கள் எல்லோருக்கும் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்களை நன்றாகவே தெரியும். 1950 ல் சிறுவனாக இலங்கை வானொலியில் கால்ப்பதிவு. 1951 ல் ஆடிசன் இல்லாமலே நாடகத்திற்கு தேர்வு. 1962ல் இந்தியா திரும்பி, அகில இந்திய வானொலியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ச்சி. 1980 முதல் ஒலிபரப்பில் ஒரு புதியமுகம். கிரிக்கெட் நேர்முக வர்ணனை தமிழில். 1986 உலகக் கோப்பையின்போது பி.பி.சியில்,. 1999 உலகக்கோப்பை வர்ணனை லண்டன் 24 மணிநேர ஒலிபரப்பில் ஐ,பி.சி - தமிழில். 1993 ல் இலங்கை அரசு கலாச்சார அமைச்சரவையின் "பதுருல் மில்லத்" பட்டம் - விருது - பொற்கிழி. 1997 அகில இந்திய வானொலியின் சுதந்திர தின பொன்விழாவை ஒட்டி "மிகச்சிறந்த ஒலிபரப்புக் கலைஞன்" என்ற விருது. இலண்டன் ஐ.பி.சியில் வாரந்தோரும் தொடர்ச்சியாக "இந்தியக் கண்ணோட்டம்". இதுபோல லண்டன் தீபம் தொலைக்காட்சியில் "அரங்கம் - அந்தரங்கம்" நிகழ்ச்சி. நாடகம் இலக்கியம் - விளையாட்டு என்று தொடரும் இவரது கலைப்பணிக்கு வயது ஐபத்தி எட்டிற்கும் மேல்!

திரு அப்துள் ஜப்பார் ஐயா அவர்கள் "காற்று வெளியினிலே... என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மித்ரா ஆர்ட்ஸ் என்ற நிறுவனம், இந்த புத்தகத்தை 2003 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டுள்ளது.

அன்புக் கவிஞர் அறிவுமதியும், கலைமாமணி வி.கேடி பாலன் அவர்களும், அன்பு அறிவிப்பாளர் திரு பி.எச். அப்துல் ஹமீத் அவர்களும் இந்த புத்தகத்திற்கு அணிந்துரை, முன்னுரை எல்லாம் கொடுத்து வாசகரை அன்போடு வரவேற்கிறது.

" ஓவ்வொருவரையும் அவரவர் கலைத்துறையில் அவரவருக்கு நேர்ந்த அனுபவங்களை குறிப்பெடுத்து எழுதும்படி கேட்கப் போகிறேன், நாளை ஒரு சமயம் அந்தந்த துறைகளின் வளர்ச்சி - வீழ்ச்சிகளையும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்களிப்புகளையும் மதிப்பீடு செய்ய இது பெரிதும் உதவும், பிஸ்மில்லா நீ முதலில் துவங்கு" என்று முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள், தான் கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி பார்த்துக் கொண்டே எழுத்துக்களால் வரைந்த நல்ல ஓர் ஓவியம் தான் இந்த காற்று வெளியினிலே... என்ற அழகிய புத்தகம்.

அதனால் இந்த புத்தகத்தில் ஒரு சுயசரிதையின் கொடுமையில்லை. திரும்பிப்பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு ஒருவன் கண்ட காணக்கூடாதவைகளின் தேவையற்ற அலங்கரிப்புகளுமில்லை.

மிக மிக மென்மையான கருத்தோட்டம். மிக அழகான தமிழ் - இவைகள் இரண்டும் இந்த அழகிய ஓவியத்திற்கு பேரழகான இரு கண்களாக அமைந்துள்ளது.

" நான் ஒரு நல்ல மகனாக இருந்தேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தேன் ஒரு நல்ல தந்தையாக - கணவனாக இருந்து வருகிறேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் மேல்படிப்புக்கு வசதி இருக்கவில்லை. கலை உலகிலும் கால் ஊன்றி இருக்கிறேன். தொழில் துறையிலும் நின்று பிடித்திருக்கிறேன். எளியவனாகவே இருக்கிறேன். என் உழைப்புக்கும், ஈடுபாடுக்கும் எங்கோ போயிருக்கவேண்டியவன். எனினும் கார்-பங்களா என்றில்லாவிட்டாலும் கடன் இல்லாத வாழ்வு - பசி இல்லாத வாழ்வு என்பது இன்று வரை எனக்கு கை கூடி வந்திருக்கிறது. அரசர்களோடு உலவும் - குலவும் வாய்ப்பிருந்தும் சாமன்யர்களோடு சரிசமமாகப் பழகும் பண்பு இன்றும் அன்றும் எனக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. கேரளத்தில் நாற்பத்தி இரண்டு காலம் நான்கு பெரிய நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும், எந்த ஒரு காரணத்துக்காகவும் தொழிலாளர்கள் போராட்டக் கொடி உயர்த்தாமல் பார்த்துக்கொண்டது என் மனிதாபிமான அணுகுமுறைக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன்."

இந்த ஒரு பகுதி வாசித்தாலே திரு அப்துல் ஜப்பார் ஐயாவைப் பற்றி ஓரளவிற்கு யாருக்கும் யூக்கிக்கக் கூடும்.

இலங்கையில் இவரது சிறுவர் காலம் முதல் இளமைக்காலம் வரை நடந்த நிகழ்வுகளில் முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றி அதிகமாக வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். அன்று முதல் கிடைத்த நண்பர்கள். நாடக அமைப்பு, நாடகத்தின் சில் தொழில்நுட்பங்கள் என பல சம்பவங்களையும் பல கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி நமது மனதில் பதிவு செய்கிறார்.

தன்னுடன் எந்த நிகழ்ச்சிகளானாலும் சரி, பங்கேற்கும் கலைஞர்களில் ஒருவன் எத்தனை சோப்ளாங்கியானாலும் சரியே அவனை தட்டிக் கொடுத்து அரவணைப்பார், ஒரு போதும் இவர் யாரையும் தட்டிக்கழித்து வேதனைப்படுத்துவதில்லை. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகவே இன்றும் கடைபிடித்து வருகிறார் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் என்பதை இந்த புத்தகத்தில் அவர் எடுத்துச் சொன்ன பல நிகழ்ச்சிகளும் சாட்சி சொல்லி மகிழ்கின்றன.

நிறைய நாடகங்களை எழுதி நடித்துள்ளார். இவரது குடும்பத்தார்கள் (மனைவி, மகன், மகள்) எழுதின நாடகங்களிலும் நடித்துள்ளார். நாற்பது வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்த பின்னர் தன்னுடைய பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மீண்டும் ஊடகத்துரையில் தனது சேவைகளை தொடர்ந்து செய்து மகிழ்கிறார்.

இவர் சில சம்பவங்களைப் பற்றி எழுதி, தான் அப்போது கற்றுக்கொண்ட பாடங்களை வாசகரோடு பல இடங்களில் பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக

" இருட்டறையில் அடைக்கப்பட்ட இருவருக்கு வெளி உலகைக் காண ஒரு சிறு துவாரம் மட்டும் இருந்தது. ஒருவன் கீழே தெரியும் சாக்கடையைப் பார்த்து "சீச்சீ இது என்ன உலகம்?" என்றான், மற்றவன் வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து " ஆஹா என்ன அற்புத உலகம்" என்றான் "

பல வசிஷ்ட்டர்களின் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற இவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்த அனுபவங்களை பங்கு வைக்கும் வரிகள் ஒவ்வொன்றிலும் வாசகனை அந்த நிகழ்ச்சிக்கே நேரடியாக கொண்டு செல்லும் வண்ணம் இருக்கும்.

"உதாரணத்துக்கு ஒன்று: பழைய காதலன் அவனுடைய காதலியை சந்திக்கிறான். "நம் காதல் பிரகாசமாக ஒளிவிடும் என்று நினைத்தேன்" என்று சொல்லும்போதே சிகரட் லைட்டரை பற்ற வைப்பார், பிறகு "ஆனால்..." என்று ஒரு பெருமூச்சு விடும்போது அதை அணைக்க வேண்டும்"

என்ன அழகாக இந்த காட்சியை தன்னுடைய வார்த்தைகளால் எழுதி படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்!

தன்னோடு வாழ்ந்த/பணிசெய்த பலரை குறிப்பிட்டு ரசிக்கிறார், கவலைப்படுகிறார், நன்றி தெரிவிக்கிறார்ர். அதில் திரு பிச்சையப்பா என்கிற ஒரு கலைஞனைப் பற்றி சொல்லும்போது " அந்த கலைஞனுக்கு என் உள்ளத்தில் ஏற்பட்ட மதிப்பு அவர் மாண்டு மறைந்து விட்டாலும் என் உள்ளதிலிருந்து என்றும் மாளாது - மாறாது - மறையாது" - என்கிறார்.

தனது காதலைப் பற்றி ஐயா குறிப்பிடுகையில்

"ஒரு நாள் மாலை ஒரு "பெர்த்டே" பார்டிக்கு வருமாறு எனக்கும் எனது நண்பன் மக்கீனுக்கும் சேர்த்துக் கடிதம் வந்தது. இருவரும் சென்றோம் வீட்டில் ஆள் ஆரவமே இல்லை. அந்தப் பெண் குறும்பாகச் சொன்னாள் "பேர்த்டே பார்ட்டி இங்கல்ல, வேறோர் இடத்தில். குடும்பமே போய் இருக்கிறது. நான் மட்டும் தனியே. துணையாக இருக்கத் தான் வரச்சொல்லி எழுதினேன்" என்றபோது இனம் புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். ஆனால் எதையோ புரிந்து கொண்டது போல், " சரி இருவரும் பேசிக்கொண்டிருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது கொஞ்ச நெரத்தில் வந்து விடுகிறேன்" என்று மக்கீன் நைசாக நழுவி விட்டான். ஒரு பெண்ணுடன் - அதிலும் என்னை மிகவும் நேசிக்கும் - நானும் விரும்பும் ஒரு பெண்ணுடன் - என் வாழ்நாளில் முதன் முறையாக யாருமில்லாத தனி வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறேன். இளமைத் துடிப்புடன் வாலிபத்தின் தலைவாயிலில் நிற்பவர்கள் நாங்கள், ஆனால் தவறான ஒரு பார்வையோ பேச்சோ கூட இல்லை.

என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக சொன்னாள். என்னை மணந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்தாள். எனக்கும் அந்த விருப்பம் இல்லாமல் இல்லை. என் நிலமைகளை எடுத்துச் சொன்னேன். என்னைப் போலவே அவருக்கும் பல சகோதரிகள் என்பதை எடுத்துக் காட்டினேன். வெவ்வேறு மதம் - இனம், பொருளாதாரத்திலும் என்னை விட உயர்வானது அவர்களுடைய நிலை அதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றை எடுத்துச் சொன்ன போது அழுத அழுகை என்னை குலுக்கியது. கண்ணீரைத் துடைத்துவிட்டேன் ----கைக்குட்டையால். அப்போது கூட அந்தப் பெண்ணைத் தொடவில்லை என்பதே இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. சப்தமில்லாமல் குமுறிக் குமுறி அழும் அந்தப்ப் பெண் என் தோளில் அப்யம் தெடினாள்... இக்கட்டான நிலை, ஆபத்பாந்தவனாக மக்கீன் வந்து சேர்ந்தான். உள்ளே சென்று அந்தப் பெண் முகம் கழுவி பவுடர் போட்டு சிரித்த முககமாக வெளிவந்தாள்; நாங்கள் விடைபெற்றோம்"

என்று அந்த காட்சி அனைத்தையும் ஐயா நமது கண்முன்னே கொண்டு வர, இந்த மக்கீன் மீது கோபம் கொள்வதா, நன்றி சொல்வதா என்ற குழப்பத்தில் இந்த இடத்தில் வாசகர்கள் குழம்பி விட வாய்ப்புண்டு.

பிறகு அடுத்த பக்கத்தில் இவர் தன்னுடைய காதலைப் பற்றி இப்படி நினைத்துப் பார்க்கிறார்.

" நான் செய்தது சரி தானா? காதலை மதிக்கத் தெரியாமல் போய் விட்டதா? அல்லது ஏற்கத் துணிவில்லாது போய் விட்டதா? அல்லது ஒரு நடுத்தர குடும்பத்தின் பொறுப்புள்ள தலைமகனாக நடந்து கொண்டேனா? இன்று வரை விடை தெரியவில்லை. ஆனால் உள்ளத்தின் அடித்தளத்தில் மாறாத ஓர் ஊமை வேதனை இருந்து கொண்டே இருந்தது. இறைவனின் அருட் கொடைபோல் ஓர் நல்ல துணை வாய்க்கும் வரை - வாய்த்தாள்"

ஈழத்தின் தமிழ் இலக்கிய பிதாமகர் என்று எஸ்.போ அவர்களை போற்றுகிறார்.

"சுயநலத்தை விட சில அடிப்படையான கொள்கைகளை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்கிற உண்மையை எனக்கு உணர்த்திய பெரியவ்ர் திரு கே.எஸ். நடாராஜா" என்று அவரைப் போற்றுகிறார்.

இப்படி பல கதாபாத்திரங்களையும் அவருடை அழகான தமிழில் வர்ணனை செய்து அவர்களை எல்லாம் பாராட்டி மகிழ்கிறார், திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள்.

ஐயாவிடம் எதை யார் சொன்னாலும் அவர் முதலில் சொல்கிற பதில் "லெட் மி திங்க்".

"கலை எமக்களிப்பது ஊதியமல்ல உயிர்" என்ற சொற்றொடரை அவருடைய நாடகக் குழுவிற்கு வழங்கவும் நன்றாக யோசித்திருப்பார் என்றே தோன்றுகிறது.

நீண்ட பட்டியலிட்டு ஐயா இப்படி யோசிக்கிறார்.

"என்னிடம் பிரதிபலன் எதிர்ப்பார்த்தா இதைச் செய்தார்கள்? - இல்லை நிச்சயமாக இல்லை. என் மீது அவர்களுக்குள்ள அன்பின் ஆழத்தின் பிரதிபலிப்பாகவே இதைச் செய்தார்கள். இவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? ஒன்றைச் செய்யலாம், என்னை தகுதி உடையவன் என்றெண்ணி, தங்கள், தங்கள் தனிப்பட்ட திறமைகளை இவர்கள் முன்னிறுத்தி எனக்கு உதவியது போல் நான் பிறருக்கு உதவலாம். திறமைசாலிகளை இனம் கண்டு அவர்களை வளர உதவலாம். அதைச் செய்திருக்கிறேன் - செய்கிறேன் - இன்ஷா அல்லா இனியும் செய்வேன்"

சமுதாயம் சம்பந்தமாக சொல்லும்போது

"லாப நோக்கு" என்பது மனிதனின் அடிப்படை குணம். முற்றும் துறந்த முனவருக்குக் கூட "முக்தி" என்கிற லாபநோக்கு உண்டு. எனவே அதை கிள்ளி எறிய நினைக்கும் எந்த சக்தியும் நிலைக்காது. மேலும் மனிதன் சுதந்திரப் பறவை. அவன் சிறகுகளை சிறிது காலத்துக்குத் தான் ஒடித்துப் போட இயலும். ஒரு நாள் அவன் சீற்றம் கொள்ளும் போது சிறைக்கதவுகள் தூளாகும். காலத்தின் கணக்குகளில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.

உழைப்பவனின் வியர்வை உலரும் முன்பே அவனது கூலியைக் கொடுத்து விடுங்கள்" என்கிற எல்லோருக்கும் ஏற்புடைய இஸ்லாத்தின் கொள்கை மாத்திரமல்ல அதை அமுல் படுத்துவதில் ஆன்மீகம் கலந்த ஜனநாயக முறைகள் மீதுள்ள என் பிடிமானம் மேலும் இறுகியது. வட்டியை ஹராமாகவும் (வெறுக்கத் தக்கது) வியாபாரத்தை ஹலாலாகவும் (விரும்பத் தக்கது) ஆக்கி அதன் மூலம் பொருலீட்டும் முதலாளிகளை சமூகத்தின் தர்மகர்த்தாக்களாக - அறங்காவலர்களாக - நடந்து கொள்ளச் சொல்லும் முறை சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அமுல் நடத்தப்பட்டால் ஏழ்மையே இருக்காது என்பது என் திடமான எண்ணம்

இளைய தலைமுறை என்பது ஒரு மாபெரும் சக்தி, உண்மையில் அது அதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு சிம்ம சொப்பனம். இந்த நிலையில் ஐம்பத்தி எட்டு வருட அனுபவம் என்பது தலையில் சூடப்பட்ட கிரீடமா அல்லது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட கல்லா என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. முன்பை விட இப்போது அதிக உழைப்பு தேவை. உத்வேகம் தேவை. மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் ஆற்றின் ஒழுக்கை அனுசரித்து நீந்தும் வல்லமையும் தேவை. அல்லது காலச்சுழியில் அகப்பட்டு மூச்சுத் திணறி மூழ்கிப்போக நேரிடலாம். ஒரு பெண்ணின் வயது அவள் தோற்றத்தைப் பொறுத்தது. ஒரு ஆணின் வயது அவன் சிந்தனையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்" .

வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்கையில்...." மேடையை அநேகமாக விட்ட மாதிரி தான். ஆனால் வானொலியை விடுவேனோ என்பது சந்தேகமே. அன்றாட வாழ்வின் ஆய்வு - சோர்வு - அலைச்சல் - உழைப்பு - டென்ஷன் இவற்றுக்கு மத்தியில் ஏதோ சில மாத இடைவெளிக்கு பிறகாவது வானொலி நிலையத்தில் சென்று செலவாகும் அந்த ஒரு நாள் எனக்கு புத்துயிரும் புது உணர்வும் நல்குகிறது என்பது தான் காரணம்" என்பதை வாசித்ததும் இவரில் இருக்கும் கலை உணர்வை அறிந்து வாசகர் இவரை போற்றுவார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அச்சாணி, ஆணிவேர், யாராலும் நெருங்க முடியாது என்று கருதப்படும் சூப்பர் மேன் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் திரு அப்துல் ஜப்பார் ஐயாவை, அவரே நேரடியாக வந்து சந்தித்து அன்புடன் கரங்களை பற்றி ஆதரவுடன் தோள்களை பற்றி மலர்ந்த முகத்துடன் " நான் உங்கள் ரசிகன் ஐயா" என்று சொல்லும் அந்த சந்திப்பைப் பற்றி மிக அழகாக ஐயா எழுதியுள்ளார்.

மீண்டு மனம் திறந்து இப்படி எழுதுகிறார்

"வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. எனினும் என்னுள் ஒரு "தேடல்" ஆரம்பமாகி உள்ளது. "நினைவு கூர்தல்" என்கிற இந்தக் கட்டுரைத் தொடர் கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம். கொஞ்சம் மென்மையாகிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது. என் கெட்ட குணங்களில் ஒன்றான முன் கோபத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டேன் என்று கூட சொல்லலாம். எனவே இந்த வயதில் இயல்பாக வரக்கூடிய இரத்த அழுத்தம் கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. "இளமையில் ஒழுக்கம், முதுமையில் ஆரோக்கியம்" என்ற பழஞ்சொல், என் வரை, இது வரை உண்மை ஆகி இருக்கிறது. இன்றும் அதிகாலையில் நான்கைந்து கேம்கள் "ஷட்டில்" ஆடுகிறேன். நடக்கிறேன்"

இந்த புத்தகத்தில் ரசித்தவைகளை எல்லாமே எழுதித் தான் ஆக வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை அப்படியே தட்டச்சிடத் தான் வேண்டும்!

அது தவறு என்பதால், அப்படி செய்யாமல், இதை வாசிப்பவர்களுக்கு இந்த புத்தகத்தின் விற்பனையாளரின் விலாசத்தைத் தருவதே நன்று. விசாரிக்கையில் 2003 இல் வெளியிடப்பட்டதால் 200 புத்தகங்கள் மட்டுமே இருக்கும் என்று இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர் திரு எஸ்போ ஐயா தெரிவித்தார்.

புத்தகம் கிடக்க அனுக வேண்டின விலாசம்:
Mithra Arts and Communication
32/9 Arcot Road, Chennai 24
Telephone: 23723182 / 9444357173
Email: mithra2001in@yahoo.co.in / itheijo@hotmail.com

இந்த புத்தகத்தின் விலை இப்போதும் ருபாய் 60/= மட்டுமே.

"இலங்கை வானொலி ஸ்டைலில் உங்களை மீண்டு சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்புக்குறிய ஏ.எம்.அப்துல் ஜப்பார். அதாவது சாத்தான்குளம் அப்துள் ஜப்பார்" என்றெழுதி இந்த புத்தகத்தை மிக அழகாக அன்புள்ள ஐயா முடித்துள்ளார்.

நன்றி, வணக்கம்
தோழமையுடன் என் சுரேஷ்

Saturday, May 24, 2008

ரோஜாச் செடி


என்னில்
எத்தனை முற்கள் இருந்தாலென்ன?

என்னில்
நீ மலர்ந்ததால்...
மலர்வதால்... மலரப்போவதால்.....

என் பெயர் என்றுமே
ரோஜாச் செடி!

என் சுரேஷ்

இன்று போய் நாளை வாராய்!

அன்று மாலையும் கர்ணன் தானதர்மங்கள் செய்வதற்காக பொருட்கள், பெற்காசுகள், பணம் இவைகள் யாவும் எடுத்துக் கொண்டு அவரது மாளிகையின் வாசலில் அமர்ந்திருந்தார். பலர் வந்தார்கள். அன்போடு எல்லோருக்கும் தானதர்மங்கள் செய்தாயிற்று. மாலை இரவாக மலரும் நேரம், ஓர் ஏழைப் பெரியவர் வந்தார். கர்ணன் அந்தப் பெரியவரிடம் அன்போடு வணக்கம் சொல்லி சுற்றி முற்றிப் பார்த்தார் ஆனனல் ஒன்றும் கொடுக்க இல்லாத நிலை. தான் அமர்ந்திருந்த இருக்கையின் இடது பாகத்தில் இருந்த பெரிய ஒரு அழகான தங்க விளக்கு அவரின் கண்களில் பட்டதும் கர்ணன் தனது இடது கைய்யாலையே அதை எடுத்து, இடது கையாலையே அந்த ஏழைக்கு புன்னகையோடு கொடுத்தார். நன்றி சொல்லிவிட்டு அந்த ஏழை, தங்க விளக்கை சந்தோஷமுடன் எடுத்துச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள்..." ஐயா இடது கையால் தானம் செய்வது சரியா" என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

அதற்கு கர்ணன், " மன்னிக்கவும், இடது கையிலிருந்து வலது கைக்கு அந்த தங்க விளக்கு மாறும் வேளையில் எனது மனம் மாறிவிடுமோ என்ற எண்ணத்தில் தான் இடது கையிலேயே அதை கொடுத்து விட்டேன்" என்றார்.

நல்ல செயல்களை செய்ய நேரம் பார்க்க தேவையில்லை என்பதை பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் செய்ய வேண்டிய நல்ல செயல்களை நாளை பார்க்கலாம் என்று தள்ளிப்போடாமல் அதை உடனடியாக செய்வதே நன்று. உலகத்தின் கடைசி நாள் ஒருவேளை இன்றே இருக்கக்கூடும் என்ற ஒரு மனோபாவத்தில் நல்ல செயல்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்வது நிச்சயமாக வெற்றியான, மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை நமக்கு அன்பளிப்பாய் தரும் என்பது நிச்சயம்.

இப்படி ஒரு பெரியவர் தனது சொற்பொழிவொன்றில் பேசியதை நான் இங்கே பதிவு செய்கிறேன், அவ்வளவு தான்!

அதனால் எப்போது கர்ணன் இதைச் செய்தார், மகாபாரதத்தில்/கம்பராமாயணத்தில் இதில் எந்த பாடலில் வருகிறது என்றெல்லாம் கேட்டு என்னை யாரும் சிநேகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்:-)

என் சுரேஷ்

Wednesday, May 21, 2008

இறை இல்லம்

வெற்றிகளும் தோல்விகளும் சேர்ந்த இந்த வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு முன் வநதுவிடும் சில தோல்விகளின் ரேகைகளைக் கண்டுதுமே மனமுடைந்து போய் சிலர் இப்போதெல்லாம் திடீரென்று ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகிறார்கள்.

அது ஒரு நல்ல தீர்மானம் தான்!

என்ன அது ?

அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லம் (அ/மு இல்லம்) ஒன்றை ஆரம்பிப்பிது என்பதே அது.

இதுபோன்ற நல்ல சில சிந்தனைகள் கவலைகளிலிருந்து வெளிவர ஓரளவிற்கு பலருக்கும் உதவி செய்கிறது என்பது உண்மை தான்!

தூரத்தில் எங்கேயோ ஒரு வெளிச்சம் தெரிய, அந்த நம்பிக்கையால், தற்போதைய இருளான வாழ்க்கையைக் கண்டு பயந்து போகாமல், அந்த தூரத்து வெளிச்சம் நோக்கி, தங்களின் வாழ்க்கையை அழிக்காமல், ஒரு இனிய பயணத்திற்கு இது போன்ற நல்ல சிந்தனைகள் பலருக்கும் வாழவேண்டும் என்ற ஓரு ஆசையின் பாதையை இடத்தான் செய்கிறது.

ஆனால் மு/அ - இல்லங்கள் ஆரம்பிகக்வேண்டும் என்ற எடுத்த தீர்மானங்களை நிறைவேற்ற செல்லும்போது தான் அங்கிருக்கும் பிரச்சனைகள் பலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக முதியோர் இல்லத்தில் எந்நேரமும் நடக்க இருக்கும் அந்த முதியோர்களின் மரணமும் அதனால் அந்த இல்லம் ஆரம்பித்த நல்லவர்கள் சந்திக்ககூடும் பிரச்சனைகளும் கொடுமையானது.

முதியவர் ஒருவர் இறந்து போனதும் அவருடைய சில சொந்த பந்தங்கள் எங்கிருந்தோ திடீரென்று வந்து அதன் நிர்வாகிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தி அந்த (பல) நல்லவர்களுடைய வாழ்க்கையை காலத்திற்கும் நீதிமன்றத்திலேயே அநீதியாக்கப்படுகிறதைப் பற்றி என்னத்த சொல்ல!

குழந்தைகளுக்கு இல்லங்கள் ஆரம்பிக்க அதிக வேலை ஆட்கள் தேவை. அதிகமான பொருளாதாரமும் தேவை. பிள்ளைகள் வளர்ந்ததும் ஆண் பிள்ளைகளுக்கு/பெண் பிள்ளைகளுக்கு என தனித் தனியாக தங்கும் வசதிகள் செய்தாக வேண்டும். அதிகமும் பலர் இதை ஆரம்பத்திலேயே சிந்திக்காமல் செய்லபடத்துவங்கி திடீரென்று ஐயோ இனி என்ன செய்வது என்று மண்டையைப் போட்டுக் குடைவார்கள். பாவம் இவர்கள் மண்டைகள் தான் என்ன செய்ய முடியும்:-)

இப்படியாக மு/அ -இல்லங்கள் ஆரம்பிக்க/ஆரம்பித்தால், தொல்லைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஒரு திட்டத்தின் செலவுகள் பொதுவாக அதைவிட அதிகமாவது இயற்கை. ஆனால் நிர்பந்தமாக உதவ வந்தவர்களில் பலர் வெறும் பத்தே பத்து இந்திய ரூபாய்கள் கொடுத்துவிட்டு பத்தாயிரம் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டுச் செல்ல, இதை ஆரம்பித்தவர்களின் நிலை யாருக்கும் யூகிக்கக் கூடும்.

இதனால் தான் பல மு/அ இல்லங்களும் ஆரம்பித்த சில நாட்களிலேயே மூடப்பட்டு விடுகின்றன!

புண்ணியம் கிடைக்க வேண்டும், சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும், மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சுயநலம் மட்டும் மனதின் முன் வரிசையில் நிற்க, அற்பணிப்பு மனோபாவாம் அதிகமும் இல்லாமல், இது போன்ற நற்பணிகள் செய்ய முன் வருவோருக்கு ஏமாற்றத்தைத் தவிற வேறென்ன கிடைக்கக் கூடும்?

வாழ்க்கையில் இப்போது தோல்வியில் இருப்பவர்கள் அந்த தோல்வியிலிருந்து அடுத்த மாபெரும் வெற்றிக்கு செல்வது எப்படி என்று யோசிக்க வேண்டுமே தவிற அந்த சிந்தனையை ஓர் மு/அ - இல்லம் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஒரு சிமிழுக்குள் மட்டும் அடைப்பது நிச்சயமாக கவலையைத் தவிற வேறென்ன தரக்கூடும்? இருப்பினும், உறுதியாக இருப்பவர்களுக்கு அவர்கள் வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்!

பிள்ளைகள் பிறப்பதற்கு அவர்கள் காரணமா?

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு செலவுகள் செய்வதெல்லாம் அவர்கள் மீது எறிகின்ற எதிர்பார்ப்பின் முதலீடுகள் என்பதால் தான் அதிகமும் இப்போதுள்ள முதியோர்களுக்கு இந்த நிலை என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் தங்களுக்கும் வயதாகும் என்ற உணர்வோ, பெற்றெடுத்த தெய்வங்களை இப்படி அநாதைகளாக விட்டு விடுவது தவறென்ற புரிதலோ இந்த காலத்தில் பலருக்கும் இல்லை என்பது மிக மிக வருத்தமானதோர் உண்மைச் செய்தி.

முதியோர்களை மு-இல்லத்தில் விட்டு வீடு திரும்ப, இதில் பல மருமகன்களுக்கும் மருமகள்களுக்கும் அப்படி ஒரு சந்தோஷம், என்பது தான் வயிற்றெரிச்சலாக உள்ளது! அடப்பாவிகளா, உங்களை இறைவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். திருந்திவிட காலம் இனியும் உண்டு. விரைவில் உங்கள் வீட்டு தெய்வங்கள் இனிமேலும் அநாதைகள் அல்ல என்ற உண்மையை மனதிற்கொள்ளுங்கள் என்ற நமது கருத்தை அந்த அறிவுஜீவிகளிடம் எப்படி சொல்ல முடியும். மனம் ஆதமா எல்லாம் மறுத்துப்போன இதுகளுக்கு காது மட்டும் கேட்குமா என்ன?

மகன்கள்=மகள்கள் இவர்களின் நிலையும் இது தன்!

அநாதை என்றால் நாதியற்றவன் என்று பொருள், இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கையில் எப்படி ஒருவன் அநாதை ஆக முடியும்?
அதனால் அனாதை இல்லங்களுக்கு "இறைவனின் இல்லம்" என்று பெயரிடலாம் என்று தோன்றுகிறது.

லண்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் அரசே அ/மு இல்லங்களை நடத்தி சிறப்பான சேவைகளை செய்து வருகிறது என்று கேள்விப்பட்டேன். இந்தியாவில் இருக்கும் 110 கோடி மக்களுக்கு இந்த திட்டமென்றால் சிதம்பரம்-அங்கிள் (சினாதானா ஐயா) எப்படியெல்லாம் அடுத்த பட்ஜட்டில் குழப்புவார் என்று யோசிக்கக் கூட முடியவில்லை:-).

பிள்ளைகளை நேசித்து வளர்க்கும் பெற்றோர்கள், தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து வைத்து வயதாகும் காலத்தில் எப்படி வாழ்வது என்று திட்டமிட்டால், எதிர்பார்ப்புகள் இல்லாமல் தங்களின் மனநிலையை மாற்றி அமைத்தால், வருங்காலத்தில் முதியோர் இல்லத்து வாசல்களை மிதிக்க வேண்டின கொடுமையை தவிற்கலாம்.

வருமானமே இல்லை, என்ன செய்ய ? - எனும் ஏழை மக்களுக்கு "இந்திய நிஜமாகவே ஒரு நாள் ஒளிரும்" என்ற நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றுவதைத் தவிற இப்போது நானும் நீங்களும் என்ன சொல்ல முடியும்?

வைரங்களை கொட்ட இன்னொரு குப்பைத்தொட்டி ஏன்!

முதியோர்/குழந்தைகள் இல்லங்கள் சமூகத்திற்கு மாபெரும் அசிங்கமே!

இருக்கும் முதியோர் இல்லங்களை ஒழுங்காக நடத்த, எல்லோரும் முன்வந்து உதவுங்கள், வாழ்த்துக்கள். அங்கிருக்கும் தங்களின் தாயையும் தகப்பனையும் வீட்டிற்கு கொண்டுபோய் அன்போடு சில காலம் சேவை செய்யுங்கள். ( கவலைப்படவே வேண்டாம்! அந்த முதியோர்கள் வாழ்ந்த காலங்கள் இனி வாழப்போவதில்லை! ) புதிய முதியோர் இல்லங்கள் வருவதை தடுக்க குடும்ப தெய்வங்களை வீட்டிலேயே வைத்து சேவை செய்யும் நல்ல உள்ளம் எல்லோருக்கும் மலரட்டும் என்று இணயதளம் வழியே நாம் எல்லோரும் பரப்புரை செய்வோம், அதன்படி நாமும் நடந்துகொள்வோம், அதற்காக வாழ்த்துவோம், பிரார்த்தனைகள் செய்வோம்!

சரி... இன்னும் 15-20 வருட காலத்திற்கு பின்னர் நானும் எனது மனைவியும் முதியோர் இல்லத்திற்கு சென்று தான் ஆகவேண்டும்!
ஏனெனில் எங்களுக்கு பிள்ளைகள் இல்லயே!

ததும்பும் தோழமையுடன் என் சுரேஷ்

Tuesday, May 20, 2008

அனு என்ற அவள்

தகப்பனுக்கும் தாய்க்கும் சர்க்கரை வியாதி இருந்தால் பிள்ளைகளுக்கும் அது பாரம்பரிய முறை படி அதிகாரமான சொத்து என்பதால் அதன் உரிமை எனக்கு வந்து விட்டதா என்ற சோதனையை நான்கு ஐந்து வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.

2007 முதல் ஏறத்தாழ மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த செலவை செய்து மகிழ்வதில் என் மருத்துவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்! "டேய் சொன்னதை செய்யுட" என்று சொல்லும் சகோதரியின் பாசம் தரும் எங்கள் குடும்ப மருத்துவரை எதிர்த்து ஒன்றும் பேசவும் முடியாது. புன்னகை மட்டும் தான்!

ஒவ்வொரு முறையும் இரத்தப் பரிசோதனையின் முடிவு, என்னை காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லைக்கு கொண்டு செல்வதே வழக்கம்!

பொதுவாக இரத்தம், பரிசோதனைக்கு கொடுப்பதற்கு முந்தைய நாளின் இரவு-உணவை மாலையிலேயே சாப்பிட வேண்டும். அடுத்த நாள் காலையில் ஒரு காப்பி கூட சாப்பிடாமல் (கொடுமையிது!) பரிசோதனைக்கு செல்ல வேண்டும். இது தான் வழக்கம்.

இந்த வாரம் ஞாயிறு 18ற்கு காலை பரிசோதனைக்கு செல்வதாக எனது தீர்மானம். 17 மதியம் 2 மணியளவிற்கு நன்றாக பசி. அலுவலகத்தில் எல்லா சனிக்கிழமைகளிலும் எங்களுக்கு "Get together" என்ற பெயரில் சத்துணவு தருவது வழக்கம். ஓரளவிற்கு நன்றாகவே அப்போது சாப்பிட்டேன்.

மாலை 3.30 மணிக்கு யூனியன் வங்கியின் ஒரு கூட்டத்தில் என்னை பேச அழைத்தார்கள். கூட்டம் முடிந்ததும் அங்கே "ஹைடீ" என்ற பெயரில் சமூசா போன்ற உணவு வகைகள், குளிர்பானங்கள், மற்றும் டீ காப்பி எல்லாம் வைத்திருந்தார்கள். பசியில்லை ஆனால் சென்னை வெயிலின் தாக்கத்தால் தாகமிருந்தது. குளிர்பானம் "மிராண்டா" ஒன்றை குடிக்க நினைத்து அதனருகே சென்று கொண்டிருக்கிறேன், எனது மனைவி செல்பேசியில்... "என்னங்க நீங்க ஒன்னுமே வெளியே சாப்பிடாதீங்க" என்று ஒரு கட்டளை, உபதேசம் என்ற தலைப்பில்!

என்ன செய்ய, ஒரு கோப்பை தண்ணீர் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து மரிநாவில் அன்புடன் குழுமத்தின் சந்திப்பில் கலந்து கொள்ள ஆராதா என்ற தம்பியின் பாச அழைப்பை மதித்து அங்கு சென்றேன்.

ஆறு-ஏழு பேர் கொண்ட அந்த சகோதர வட்டத்தில் அன்று பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. 5.00 மணிக்கு ஆரம்பித்தது 10.00 மணிக்கு தான் நேரம் தாமதமானதால் முடிந்தது. எல்லோரும் மனம் விட்டு பேசிட சிலர் கவலைகளை கொட்டி விட, சிலர் அதை நகைச்சுவைகளால் கட்டுப்படுத்த, நேரம் போனதே தெரியவில்லை. சந்திப்பின் முடிவில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று ஒவ்வொருவரிடம் கேட்டு, நான் அதை பாடும் கொடுமையை பாவம் அவர்கள் சகித்தார்கள். இருப்பினும் எனக்கு சந்தோஷத்தால் மனம் நிறைந்ததும் பசி பறந்து விட்டது.

சரி, மற்ற எல்லோருக்கும் உணவிற்கு ஏற்பாடு செய்வோமே என்று எண்ணுவதற்குள், எல்லோரும் தங்களின் கடிகாரம் சொன்ன உண்மைச் செய்தியை உணர்ந்திட, வீடு சென்றதும் (காலதாமதம் ஆனதால்!) சந்திக்கக் வேண்டின பிரச்சனைகளை மனதிற்கொண்டு ஓடி விட்டார்கள். நானும்!

அடுத்த நாள் 18 ஆம் தேதி காலை இரத்தப் பரிசோதனை செய்யும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு நான் சென்றேன். கடன் அட்டை வாங்கும் ஒரே வசதியால் அங்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி. பணம் கட்டி விட்டேன். எனை அழைக்கிறார்கள்.

எனை அமரச்சொல்லி இடது கையில் ஒரு ரப்பர் கயிறால் கட்டிவிட்டார்கள். ஓர் இளம்பெண், எனது மகளாக இவள் இருந்திருந்தால் என்று ஆசைப்படும் அளவிற்கு அவளுடைய எளிமையான தோற்றம், மென்மையானப் பேச்சு, ஆங்கிலத்தில் சொல்வார்களே good -attitudes இவை எல்லாம் இருந்தது. பண்பிற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் ஒரு மண்ணில் (தமிழ் நாட்டில்)பிறந்து-வளர்ந்து-வாழ்பவன் எனக்கு அவளின் முகத்தில் ஒரு கவலை நிழலாடிக் கொண்டிருப்பதை மட்டும் உணர முடிந்தது.

"சார் நீங்க எப்ப சாப்பிட்டீங்க..." என்றாள். பாராட்டு கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் நான் சொன்னேன் " நேற்றைக்கு மதியம் 2 மண்க்கு சாப்பிட்டேன். பிறகு இப்ப வரைக்கும் ஒன்னுமே சாப்பிடவில்லை" .

உடனே அவளின் விரல்கள் தொலைபேசியில் நர்த்தனமாடின. " சார் நான் அனு பேசறேன். இங்கே ஒரு பேஷ்யண்டு வந்திருக்காரு. அவரு சாப்பிட்டு 20 மணிநேரமாச்சு.. சர்க்கரை மற்றும் கொழுப்பு இந்த இரண்டையும் டெஸ்ட் பண்ணுங்க பண்ணுங்க என்று என்னிடம் அடம் புடிக்கிறாரு" என்றாள்.

எனக்கு உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "என்னம்மா நான் உண்மை சொன்னது தப்பாப் போச்சு போலிருக்கே" என்றேன்.

அதற்கு அவள், "சார் நாங்க பணத்திற்காக மட்டும் இந்த சேவை செய்யவில்லை. எங்களுக்கென்று சில வழிநடத்தல்கள் எல்லாம் இருக்கு. 12 மணிநேரத்திற்கு மேல் எடுத்தால் ரிசல்ட் சரியா வராது" என்று மென்மையாக சொல்லிக்கொண்டே இருக்கையில் தொலைபேசி மணி அடிக்கிறது.

அனு எடுக்கிறாள். நன்றாக யோசித்த பின்னர் அவளுடைய மூத்த அதிகாரி உத்தரவு இடுகிறார். "அவர்..அந்த பேஷ்யண்டு, 400 ரூபாய் பணம் கட்டி விட்டாரு, அதனால ஒன்னு பண்ணுங்க... 20 மணிநேர fasting ற்கு பிறகு பேஷ்யண்டோட நிர்பந்தப் பிரகாரம் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனை என்ற குறிப்போடு ரசீது போட்டு, அவருடைய சாம்பிள் எடுங்க"

எனது இரத்தம் எடுக்க ஊசியோடு என்னருகே வருகிறாள் அனு. அவள் முகத்தில் பொட்டில்லை. அனு என்ற பெயருடைய அவளின் நெற்றியில் ஏன் பொட்டில்லை என்று யோசித்தேன்!

கால் பார்த்தேன் அதில் மெட்டி இருந்தது. "என்னம்மா, ஏன் நெற்றியில் ஒரு பொட்டு வைக்கக் கூடாதா" என்றேன். அதற்கு "நான் ஒரு கிறிஸ்துவப் பெண். இந்துவாக இருந்து சில காலம் முன் கிறுஸ்துவப் பெண்ணாக மாறினேன்" என்றாள்.

கிறுஸ்துவளாக இருப்பதற்கும் பொட்டு வைக்காமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று திருச்சபை கூட்டங்களிலும் கிறிஸ்துவ அறிவாளிகளின் மத்தியிலும் பலமுறை வாதாடி சில இடங்களில் மட்டும் எனது கருத்திற்கு அங்கீகாரம் கிடைத்த அனுபவத்தால் அட்வைஸ் என்ற பெயரில் எதையும் அவளிடம் சொல்ல நான் விரும்பவில்லை.

"என்னம்மா அப்போ கடவுளை உனக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கே" என்றேன்.

ஊசியைப் பார்த்து பயந்த என்னிடம் "சார் என்ன நீங்க குழந்தையைப் போல பயப்படுறீங்க" என்று சிரித்துக்கொண்டே எனது இரத்தத்தை ஊசியால் இழுத்துக்கொண்டிருக்கிறாள். நான் கண்மூடிக்கொண்டிருக்கிறேன். அப்போது அவள் சொல்கிறாள்.

"எனக்கு இறைவனைப் பிடிக்கும் ஆனால் இறைவன் தான் என்னை சோதிக்கிறார்"

கண் திறந்து பார்த்ததும் அவள் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் மழை!

"சோதனைகளை வெல்ல இறைவன் நமக்கு உதவுவார், சோதனையின் முடிவில் ஒரு வெற்றி தர அவர் காத்திருக்கிறார்" என்றேன். கவலையின் உச்சத்தில் இருப்பவர்க்கு இறைவனின் வசனங்களே ஆறுதல் என்ற புரிதலோடு அவள் தனது கன்னத்தின் கண்ணீரைத் துடைத்தாள்.

"சார் எனக்கு ஒரு குழந்தை ஆன பிறகு என்னை விட்டு அடிக்கடி எனது கணவர் வெளியே செல்கிறேன். பிறகு சில வாரங்கள் கழித்துத் தான் வருகிறார். இந்த கவலையால் நான் ஒரு சைக்கோ ஆனேன். இங்கிருக்கும் மருத்துவர்களின் உதவியால் இப்போது தேறி வருகிறேன். high depression" என்றாள். "குழந்தை பிறந்த பிறகு நான் அழகாக இல்லை; என்னை பிடிக்கவில்லை என்று அவர் சொல்கிறார். இதில் என்ன நியாயம்? எனக்கு அவர் என்றால் உயிர் சார்..." மீண்டும் அழுகிறாள்.

நல்ல வேளை இத்தனையும் ஒரு தனி அறையில் (அடைக்கப்பட்ட ஓரு அறை- ஒரு cabin -இல்) நடக்கிறது. அதனால் அவளுடைய கவலையின் வெளிப்பாட்டை என்னைத் தவிற மற்றவர்கள் யாரும் பார்க்கவில்லை.

கோபம் கவலை அனுதாபம் இவை எல்லாம் ஒன்றுகூடின ஒர் உணர்வில் நானும் மௌனத்தில்.

சில நொடிகள் கழித்து மீண்டும் பேசுகிறாள் அனு. "குழந்தைக்காக நான் வாழ வேண்டும் சார், நான் வாழ்வேன். நான் சம்பாதித்து தான் என் வீட்டு வாடகை மற்றும் எல்லா செலவும் பார்க்கனும்" அதற்கு மேல் என்ன என்னமோ சொல்லத்துடிக்கும் அவள் உணர்ச்சிப்பிழம்பானாள். ஒன்றுமே பேசமுடியாமல் அப்படியே மௌனமாக அழுது கொண்டே இருந்தாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் நான் தவித்தேன். எப்படியோ ஒரு தைரியம் வரவைத்து நான் சொன்னேன். "அம்மா.. உன்னுடைய மகனை எவ்வளவு வேண்டுமென்றாலும் படிக்க வை.. நானும் என் மனைவியும் எங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்கிறோம். வேண்டுமென்றால் நமக்குத் தெரிந்து சில என்.ஜி.ஓ சமுதாய நல வாரியங்கள் மூலமாக உனது கணவரை உன்னோடு சேர்த்து வைக்க முயற்சி செய்கிறோம்" அதற்கு " வேண்டாம் சார், வேண்டாம்.. அப்படி செய்தால் அதற்கும் ஒரு சந்தேகப் பார்வை பார்த்து வேறொரு பிரச்சனையை உருவாக்குவார் என் கணவர்"

என் மகன் ஒரு மருத்துவர் ஆவார் என்று பேசும்போது நீங்கள் சொன்னீர்கள், அந்த நிலைக்கு அவன் படிக்கும் காலத்தில் எனக்கு தேவைப்பட்டால் நான் உங்களிடம் நிச்சயம் உதவி தேடி வருகிறேன். அதற்கு இன்னமும் பல காலங்கள் இருக்கு. நீங்க உடனே போய் ஏதாவது சாப்பிடுங்க, சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் இரத்தம் எடுக்க வேண்டும்" என்றாள்.

நான் உணவருந்தி, இரண்டு மணிநேரம் கழித்து "அன்பென்ற மழையிலே" என்ற எனது கவிதைத்தொகுப்பை ( கர்த்தரின் நேசம் பற்றி எழுதினது) எடுத்து மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்தேன். அதில் "அன்புடன் என் மகளுக்கு" என்று எழுதி கைய்யெழுத்திட்டிருந்தேன். அதை வாசித்து "நன்றி" என்று சொல்லி வாங்கி விட்டு, "உங்களுடைய இரத்தம் எடுக்க இன்னமும் பத்து நிமிடங்கள் உள்ளன நீங்கள் இந்த ஹாலிலேயே உட்காருங்க, நான் பிறகு கூப்பிடறேன்" என்று புத்தகத்தைப் பார்த்துகொண்டே அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து என்னருகே வந்த அனு, "சார்...இருபது பக்கங்கள் கட கட என்று வாசித்தேன். எல்லாமே எனக்காகவே எழுதியது போல் உள்ளது, வாங்க சார், இப்போது சாம்பிள்(இரத்தம்) எடுக்கிறேன்" என்றாள்.

இரண்டாம் முறை அவள் இரத்தம் எடுக்கிறாள். இருவரும் மௌனம். நான் புறப்புடும் நேரம்
"தொடர்ந்து ஜபம் செய், கர்த்தர் கைவிடமாட்டார்" என்ற ஆறுதல் சொல்லி புறப்பட்டேன். அங்கிருந்து நான் காரில் வீடு செல்லவில்லை, என் மீது கார் பயணித்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.

அடுத்த நாள் திங்கட்கிழமை 20 ஆம் தேதி மாலை எனது இரத்தப் பரிசோதனையின் அறிக்கையை அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையிலிருக்கு அறிவிப்பாளர் தந்தார். உடனே திறந்து வாசித்தேன்

எனக்கு சக்கரைவியாதி என்று உறுதி செய்யப்பட்டது!!!

என் சுரேஷ்

Friday, May 16, 2008

கவிதை கேளுங்கள்

அன்பர்களே,

www.worldtamilnews.com - ல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் எனது கவிதையை கேட்க கீழ்காணும் சுட்டியை தட்டவும்.


Poem for download here...

Poem for download here...

http://azhagi.com/all/uk/UK-1.zip


When the poems plays in WinAmp, do right-click on the player window of WinAmp and click on 'View File Info' to see the Title, Album and Comments info (given by my Brother) for this particular mp3.


பாசமுடன் என் சுரேஷ்.

Tuesday, May 13, 2008

பொன்மாலைப் பொழுது.....!


என் இனிய நண்பர்களே,

உணர்வுகளை வெளிப்படுத்த எழுத ஆரம்பிக்கும் காலம், சில நேசர்களுடைய பாராட்டுக்கள் பெற்றதும் மீண்டும் மீண்டும் எழுதத் துடிப்பு. எழுதியவைகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஆகா! இதையெல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்ன, என்ற முயற்சி! முதல் குழந்தையை காணத் துடிக்கும் ஒரு பாசத்தின் பரிதவிப்பு. புத்தகம் வந்ததும் அட! நாமும் ஒரு புத்தகத்திற்கு ஆசிரியர் என்ற பெருமை! இதற்குள் மிக நெருங்கின அறிஞர்கள் சிலர் தங்களின் பார்வைகளில் பட்ட திருத்தங்களை இனிப்பு பூசின நல்மருந்துகளாக்கின அன்பளிப்பு! மூத்தவர்களின் படைப்புகளை பல்வேறு விமர்சனங்கள் கிழி கிழியென்று கிழிக்கும்போது வியப்பு, பயம். இருப்பினும் மீண்டும் எழுத ஓர் உந்துதல், ஆனால் அதன் வேகம் அப்போது குறையும். மருத்துவம் தந்த அறிஞர்கள் தங்களுடைய மனதிற்குள் இதைக் கண்டு பாராட்டுவார்கள். ஆனால் அடுத்த தொகுப்பிற்காக காத்திருப்பார்கள். இப்படியாக சில கவிதைத்தொகுப்புகள் வெளியிட்ட பின்னர் போதுமடா என்றிருக்க, "இன்று" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி என் நண்பரும் சகோதருமான அழகி டாட் காம் நிறுவனர், திரு பா. விஸ்வநாதனிடம் காட்டினேன். அவர் அந்த கவிதையை வாசித்து, ரசித்து, உண்மையான தனது பாராட்டுககளை தெரிவித்தது மட்டுமன்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த கவிதையை அனுப்பி என் நண்பன், திரு என் சுரேஷின் இந்த கவிதையை வாசித்துப் பாருங்கள் என்றார். அந்த கூட்டத்தில் பலர் தமிழ் மொழியை நன்கு கற்றவர்க்ள், அறிஞர் பெருமக்கள். சிலர் பின்னூட்டமிட்டும் மற்றவர்கள் தொலைபேசியில் அழைத்தும் பாராட்டினார்கள். கவிதையை இன்னமும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஒரு நல்ல ரசிகனாக இருந்துபோகிறேன் என்ற எனது நிலைபாடு தவறென்றார்கள் அறிஞர்கள் பலர். பாதைப்போட்டுக்கொண்டே பயனமிடு என்றார்கள் சிலர்.

கவிதைகளை எழுதுவது என்பது எனக்கு முதலிரவின் முதல் இன்பம் போன்றது. ஆனால் கவிதைத்தொகுப்பு புத்தகமாக வெளிவர ஒவ்வொன்றும் தலைப்பிரசவம். அப்படியாக இதோ எனது அடுத்த கவிதைத் தொகுப்பு - " பொன்மாலைப் பொழுது" நேற்று பிறந்துள்ளது. எனது கவிதைகளை மிகவும் ரசித்து வாசிக்கும் சில முதியோர் இல்லத்து தெய்வங்களுக்கும், ஆனாதை விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவச் செல்வங்களுக்கும், எனக்கு ஊக்கம் தந்து தொடர்ந்து எழுத அறிவுரை கூறிவரும் எனது சகோதரர்கள் திரு. ஆல்பர்ட், திரு. சக்தி சக்திதாசன், திரு. பா. விஸ்வநாதன் திரு ஆசிப் மீரான் ஆகியோருக்கும் எனது நன்றிகள் பல! எனது தமிழ் ஆசிரியர் திரு. கே இராஜேந்திரன் ஐயாவிற்கும் வெளியீட்டாளர்களுக்கும் இதை தொகுப்பு செய்து உதவிய தம்பி சுந்தர் அவர்களுக்கும், அச்சகத்தில் எனக்காக வியர்வை சிந்திய என் ஏழையின சகோதர சகோதரிகளுக்கும் நான் நன்றி பாராட்டி மகிழ்கிறேன். பணம் இருக்கும் திமிரில் புத்த்கமா எழுதித் தள்ளுகிறான் இவன் என்று என் வங்கிக் கணக்கு பார்க்காமல் என்னை கோடீஸ்வரனாக்கும் சில அறிவுஜீவிகளுக்கும் நான் நன்றி சொல்கிறேன். என்னைப் பற்றின் சில அறியாமை சிலரிடம் அப்படியே இருந்துபோவதில் சில நன்மைகள் இருக்கத் தானே செய்கிறது! இந்த புத்தகத்தை "எனது எல்லா புத்தகங்களையும் வாசித்து வெற்றியடையச் செய்த வாசகர்களுக்கு" நன்றியோடு சமர்ப்பணம் செய்துள்ளேன். இந்த புத்தகம் திருமகள் நிலையத்தார் வெளியிட்டுள்ளார்கள், இந்த புத்தகம் உலகெங்கும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் ஏறத்தாழ எல்லா கடைகளில் கிடைக்கும்.

தோழமையுடன் என் சுரேஷ்

Monday, April 28, 2008

இதில் உங்கள் கருத்தென்ன????????

தம்பியின் வீடு செல்ல காத்திருக்கும் ஏழை அக்கா!

மகளோடு சேர்ந்து மகனின் இல்லம் செல்ல காத்திருக்கும் வயதான ஏழைத்தாய்!

வருடத்தில் என்றாவது தம்பி வீடு சென்று எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு வீடு திரும்ப ஆசைப்படும் மாமா மற்றும் கல்லூரியில் படிக்கும் இரண்டு மருமகள்கள்.

ஊரிலிருந்து தூரத்து உறவொன்று தம்பியின் வீட்டில் வந்திருக்கிறார்கள்.

இறந்து போன தந்தையின் உருவத்திலும் பாசத்திலும் அமைந்த அந்த பாச உறவை தங்கள் வீட்டில் சில நொடிகள் மட்டுமே பார்த்துப் பேசினது போதாது என்ற ஆசையில் தம்பியின் வீடு சென்று அவர்களையும் பார்த்து வர காத்திருக்கும் இந்த ஐந்து ஏழை மக்களின் நான்கு நாள் ஆசை, அடுத்த நாள் விடியலுக்கு காத்திருக்கும் நேரத்தில்....

தம்பியின் மனைவி, வீட்டிற்கு வந்திருக்கும் சொந்தங்களை காலையிலேயே கோவிலுக்கு அழைத்துச் செல்ல திடீரென்ற அடம் பிடித்தல்!

காலையில் வீடு வர காத்திருக்கும் ஏழைமக்களை மதியம் வந்தால் போதுமென்று சொல்லுங்கள் என்ற கட்டளை!

அந்த ஏழைகளின் வீட்டிற்கு சென்று பலவருடங்களாக அடிக்கடி சென்று உண்டு, தங்கி வந்ததை வசதியோடு தம்பியின் மனைவி மறந்து விட்ட கொடுமை!

உறவுகளுக்கு முன் ஏன் அழுக்கான சண்டைகள் என்ற அறிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வண்ணம் மன்னிப்பதில் சந்தோஷம் கண்டு மனைவியின் ஆசைப்படி வீடு வந்த உறவுகளள மனைவியோடு கோவிலுக்கு அனுப்புகிறான் தம்பி!

உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, தம்பி அந்த ஏழை சொந்தங்களிடம்
"வரவேண்டாம்" என்று சொல்லும் கொடுமையான நிர்பந்தத்தை கண்ணீரின்றி அழுது நிறைவேற்றினாலும், அந்த ஏழைகள் அவர்களுடைய கவலையின் மௌன உச்சத்தை கண்ணீரில் அல்லாமல் எப்படி தீர்த்துக்கொள்ள முடியும்?

இது தானா பக்தி என்று இறைவன் சிரிக்கலாம்!

இதை மாபெரும் முட்டாள்த்தனம் என்று நாத்திக சகோதரர்கள் சொல்லக்கூடும்!

என்ன செய்ய என்ற மனநிலையில் ஊரிலிருந்து வந்த சொந்தங்கள்!

சில கஷ்ட்டங்களை அனுபவத்துத் தான் ஆகவேண்டுமென்று அந்த தம்பி!

நான் சொல்வதும் எனது பக்தியும் தான் சரி என்கிறாள், தம்பியின் மனைவி!

இப்படியுமா ஒருவள் என்று அந்த ஏழைகளின் கண்ணீர்!

இதில் உங்கள் கருத்தென்ன????????

Wednesday, April 16, 2008

மின்னல்கள்

வானம் அழுதுகொண்டிருக்க
ஆறுதல் தரும் மேகக்கரங்களின்
வெள்ளி ரேகைகளைப் பார்த்து
வருங்கால அறுவடைப் பற்றின
ஜோதிடம் பார்க்கிறது
ஈரமான மண்வாசனையின்
உபதேசத்தை எதிர்த்து
ஆங்காங்கே காணும்
ஜோதிட நிலைய
பெயர்ப்பலகைகள்!

மெரிநா

இரண்டு தமிழ் முதலவர்களின்
ஞாபகத் தென்றல்

வருங்காலத்தைப் பற்றின
பதற்றத்தால்
ஓயாத மன அலைகளோடு அலையும்
தனிமனித ஊர்வலங்கள்

காதலர்களின் பொய்கள் பதிந்த
காதுகளோடு
சுண்டல் விற்கும்
ஏழைச் சிறுவர்கள்

கவலைகளறியா குழந்தைகளின்
திக்கு தெரியா ஓட்டம்
புன்னகையுடன்

பொம்மைகள் போல்
தூரத்தில் கப்பல்கள்

காரிலிருந்து அலைகளை ரசித்து
சுண்டல் விற்பவனன
கிண்டல் செய்யும்
ஒரு தாத்தா
அவரைச் சுற்றி
அவரின் பேரப்பிள்ளைகள்

கவலையை மறந்து விடு
கவலை ஒரு மேகத்தின் பயணம்
என்ற
செய்தியைச் சொல்லும்
கலங்கரை விளக்கம்!

சிறைவாசம்

தலைவர்களை
புத்தக
ஆசிரியர்களாக்கிறது

தோழர்களை
நோயாளியாக்கிறது

கோடீஸ்வரனுக்கு
ஓயவுகாலமாகிறது

நிரபராதிக்கு?

இருளும் ஒளியும்

இதற்குமேல்
தோற்க மனமில்லை

இருளை அகற்ற - இனி
முயற்சிக்க மாட்டேன்

வெற்றி பெற
ஒரே ஒரு வழியை
புரிந்து கொண்டேன்

இனி
வெளிச்சத்தை
வரவைத்து
வரவேற்பேன்!

இறுதி விருப்பம்

இறந்துபோன துணைவிக்கு
கடைசியாக முத்தமொன்றை கொடுக்க
கணவனின் இறுதி விருப்பத்தை
மதகுருக்கள் மறுத்திட
மதவெறி மாறி
பாசம் நிறைந்திட
வேண்டுமென்பதே
இறுதிப்பயணத்திலிருக்கும்
அவளின்ஆத்மாவின்
இறுதி விருப்பம்!

கண்ணீர்

உணர்ச்சிப்
பிழம்புகளின் ஊற்று

மனதின்
ரேகைகள்

மௌனத்தின் உச்சம்
பேசும் மொழி

ஆனந்தத்தில்
தித்திக்கும் தேனருவி

கண்களின் குளியல்
கன்னங்களில் மழை

கவலைகளுக்கு
ஆறுதல்

நல்லோர்களை
ஏமாற்ற
சில மனித முதலைகள்
சுரக்கும்
இரசாயனம்!

அந்தியின் சிவப்பு

வெயிலில் உருகின
வானத்தின் கண்கள்
சிவந்து விட்டன

வெளிச்சத்தின் உழைப்பை
இருள் அபகரிக்கும் முன்னமே
எச்சரிப்பு

செல்வச்செழிப்பு இல்லாதோர்
கனவு காண
வானம்
சிறிது நேரம்
அன்பளிப்பாய் தரும்
முகக்கண்ணாடி

சூரியனுக்கு வழியனுப்பி
சந்திரனுக்கு வரவேற்பு

சந்தியா வந்தனத்திற்கும்
ஜபத்திற்கும்
தொழுகைக்கும்
நேரமாகிறதே என
ஞாபகப்படுத்தும்
வானத்தின் மொழி

முரண்பாடுகள்

வறுமை ஒழிப்பு
அதிகாரிக்கு
கொழுப்பு குறைக்க
மாத்திரைகள்
உடனடி தேவை

நாடாளூம் தலைவரை
வீட்டிற்கனுப்ப
அஞ்ஞானிக்கு
திடீர் ஞானம்

வாங்க பழகலாம்
பிடிக்கலன்ன விலகலாம்
என
வசனம் பேசவைத்து
தமிழ்மரபை
சாணி பூசின
திரைப்படத்திற்கு
அமோக வசூல்

முரண்பாடுகள்
முரண்பாடுகளை உருவாக்குகிறது
அவைகளால் அவர்களின்
சுயநலம் மகிழ!

Tuesday, April 8, 2008

உண்மையாகவே இந்தியா ஒளிரும்

மதுவிலக்கு இலாததால் ஏற்படும் பண்பாட்டு சீரழிவு உடல்நலக்கேடு, வறுமை போன்றவற்றைக் கணக்கிட்டால், நமது நாடு முழுவதுமே உடனடி மதுவிலக்கு வந்து விடாதா என்ற ஏக்கம் மாறி, உடனடியாக முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுச்சி அலையாய் வீசும்.

முழு மதுவிலக்கு கொண்டு வருவதில் ஏன் தாமதம்?

கள்ளச்சாராயச் சாவுகளும் மதுக் கடத்தலும் கொடிகட்டிப் பறக்குமோ என்ற சிந்தனையாலா?

மதுவிற்பனையால் இப்போது கிடைத்து வரும் வருமானம் போய் விடுமோ என்ற வினாவினாலா?

வணிகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நமது நாட்டில் வெளிநாட்டோர்கள் பலர் இங்கு வந்து போகும் நிலையில், முழு மதுவிலக்கைக் கொண்டுவந்தால் வணிகம் பாதிக்குமோ என்ற ஐயத்தாலா?

சிக்கலிருக்கும் இடத்தில் தீர்வு இல்லாமல் போகாது!

நமது நாட்டின் காவல் துறையினருக்குக் கள்ளச் சாராயத்தை வேரோடு அழித்துவிட்டு அதை அறவே வளராமல் கண்காணிப்பதற்கான திறமைகளுண்டு. மதுவிற்கு அடிமையானவர்களுக்குச் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் விடுதலை கொடுக்கலாம்

மதுவின் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்தலாம்.

மதுவை விற்று கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்தமுடியும் என்ற நிலை இந்தியாவிற்கு இல்லை.

அன்றும் இன்றும் என்றும் முழு மதுவிலக்கு என்ற கொள்கையைக் கொண்ட சவுதி அரேபிய அரசின் கருத்துக்களை கேட்டு, இந்த நல்ல விலக்கால் வணிகம் பாதிக்காமல் காப்போம். சவுதி அரேபிய நாட்டிடம் கேட்க வேண்டாமென்றால், நமது நாட்டிலேயே உள்ள அறிஞர் பெருமக்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக அமைத்து அவர்களின் பரிந்துரைகளை ஏற்று முழு மதுவிலக்கை வெற்றி பெறச் செய்யலாம்.

மதுவால் போதை வெறி கொண்டிருந்தால், அது மக்களின் அறியாமையை பலமடங்கு பெருக்கி விடும்; சிந்திக்கும் திறன் தொலைந்து விடும்; முழு மதுவிலக்கைக் கொண்டு வரவில்லையென்றால் ஒவ்வொரு நாளும் பல உயிர்களை இழக்க நேரிடும்.

அடுத்த தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் மனதிற்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் ஓர் அரசால் எந்த நாட்டிற்கும் ஆபத்து தான் என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

மக்களுக்கு எதெல்லாம விருப்பமோ அவற்றையெல்லாம் கொடுக்காமல், மக்கள் எதை விரும்ப வேண்டுமோ அவற்றைக் கொடுப்பதே சிறப்பு என்ற கருத்திற்கிணங்க முழு மதுவிலக்கைச் செயல்படுத்த அரசு உடனடியாக ஆய்வு செய்யுமென்று நம்புவோம்

“கள்ளுண்ணாமை” யை வலியுறுத்தும் வள்ளுவரை மக்கள் மறந்து விடலாமா?

மகாத்மா காந்தி எதிர்த்த மதுவை அவரின் படம் போட்டு அச்சடிக்கப்பட்ட பணம் செலுத்தி மது வாங்கும்போது யாருக்கும் மனம் வலிக்கவில்லையா?

மது வேண்டாமென்று உபதேசம் செய்த தந்தை பெரியார், ஐயா காமராஜர், பேரறிஞர் அண்ணாதுரை ஐயா ஆகியோரை மறக்க முடியுமா?

1970க்கு முன்பாகத் தமிழகத்தில் முழு மதுவிலக்கு இருந்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்திலும் மகாத்மா காந்தி பிறந்த குஜராத்திலும் மட்டுமே மதுவிலக்கு அக்காலத்தில் இருந்திருக்கிறது.

மகாத்மா பிறந்த மண்ணில் இன்னமும் மதுவிலக்கு தொடர்கிறது.

“இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்” என்று பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் கூறினார்.

இந்திய மக்கள் எல்லோரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று கூடி, வெற்றி பெரும் வரை போராடும் கொள்கையைக் கடைபிடித்துத் தீவிரமாய் உழைத்தால் உண்மையாகவே இந்தியா ஒளிரும்!

தோழமையுடன்
என் சுரேஷ்

Sunday, April 6, 2008

வாழ்த்துகள்!!!


அன்பு உள்ளங்களே

வணக்கம்!

தமிழ்மணத்தில் நட்சத்திரமாக கடந்த ஒரு வார காலம் என்னை அறிமுகப்படுத்தின தமிழ்மணத்தின் அன்புள்ளம் கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பின்னூட்டங்களிட்டு வாழ்த்தின பதிவர்களின் பாசம் நிறைந்த உள்ளங்களுக்கும் மற்றும் வாசகர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளை மிகவும் சந்தோஷத்தோடு சமர்ப்பிக்கிறேன்!

இந்த வலைப்பூவை கடந்த ஒருவார காலம் பாதுகாத்து உதவின என் அன்புத் தம்பிகள் பா. விஸ்வநாதன் & அந்தோணி மற்றும் என் அன்புத் தோழி திருமதி அருணா அவர்களுக்கும் எனது நன்றிகளை அன்போடு சமர்ப்பிக்கிறேன்!

எனது வாழ்வில் இந்த ஒரு வாரம் மிகவும் மகிழ்ச்சியான காலம்!

வாழ்க்கை என்பது மலரும் நினைவுகளை சேகரிப்பது என்று உணர்ந்திருந்தேன், ஆனால் ஒரே வாரத்தில் ஒரு யுகம் முழுக்க சேமிக்கக் கூடிய மகிழ்ச்சியின் நினைவுகள், இந்த நட்சத்திரப் பதிவு காலத்தில் கிடைத்திட, அதீத சந்தோஷத்தில் நான்!

தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரமாக்கி ஊக்கம் செய்தது, 2005 முதல் நான் எழுதி வந்ததற்கு இறைவன் தந்த அங்கீகாரமாக எனது உள்ளம் மகிழ்கிறது!

தொடர்ந்து எழுத இந்த ஊக்கம் நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்!

வாழ்த்தினவர்களின் அன்பு, என்னை தொலைபேசியிலும் தனிமடலிலும் தொடர்பு கொண்டு பாராட்டினவர்களின் மகிழ்ச்சி, கவிஞர் சக்தி சக்திதாசன் மற்றும் மாமனிதர் திரு வி.கே.டி. பாலன் போன்றோரைப் பற்றி எழுதக் கிடைத்த பாக்கியம், சமுதாயத்தைப் பற்றி இந்த சிறுவன் எனக்கு தோன்றின உண்மைகளைச் சொல்லக் கிடைத்த சுதந்திரம், ஏழை எளிய மக்கள், அனாதை இல்லத்து மழலைச் செல்வங்கள் இவர்களுக்காக எழுத முடிந்ததில் எனக்கு கிடைத்த அகமகிழ்ச்சி, பல புதிய நண்பர்கள் கிடைத்த சந்தோஷம் என எத்தனை உணர்வுகளால் நான் மகிழ்ந்தேன்!

இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகளை சந்தோஷத்துடன் சமர்ப்பிக்கிறேன்!

தமிழ்மணத்தின் சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்!

பதிவர்கள் எல்லோரும் தங்களுடைய எழுத்துக்களால் இந்த சமுதாயத்தை, அன்பும் அமைதியும் நிறைந்த ஒன்றாக மாற்ற என் இனிய வாழ்த்துகள்!

தோழமையுடன்
என் சுரேஷ்

Friday, April 4, 2008

கவிஞர் சக்தி சக்திதாசன்


இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஈழத்தில் பிறந்த இவர் இந்தியாவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டவர். இவர்களின் ஒரே மகன் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல இணைய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் எதிர்கால சந்ததியினரிடம் தமிழார்வத்தை வளர்க்க இணையத்தின் பங்கு மிக முக்கியமாகி வருகிறது என்று கூறும் இவர் தன் கை விரல்களுக்கு வலுவிருக்கும் வரை இணைய தளங்களுக்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பேன் இதுதான் என் லட்சியம் என்கிறார்.

இதுவரை வெளிவந்த இவரது நூல்கள்:
தமிழ்ப்பூங்காவில் வண்ணமலர்கள் ( பல்சுவைத் தொகுப்பு),
உறவெனும் விலங்கு ( சிறுகதைத் தொகுப்பு ),
"தமிழே நதியாய் ! கவிதை வழியாய்!" (கவிதைத் தொகுப்பு )

விரைவில் ... கண்ணதாசன் ஒரு காவியம் ( அச்சிலுள்ளது )

பதிப்பாளர், திரு ரவி தமிழ்வாணன் அவர்கள் இவரைப் பற்றி இப்படி கூறுகிறார்.

"மிதமிஞ்சிய தமிழ்ப்பற்று; அனைவருடனும் அன்போடு பழகும் உயரிய குணம்; அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்லாத பண்பு; தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் உள்ளம்; செல்வப் பின்னணி இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத எளிமை; கணினியில் பேராற்றல்; அன்பான மனைவியுடனும், அருமையான மகன் டாக்டர் கார்த்திக்குடனும் எடுத்துக்காட்டான இனிய இல்லறம்; சொல்லுக்கும் செயலுக்கும் நேரிடியான தொடர்பு இருக்கும்படியான பாசாங்கு இல்லாத நேர்மை; பெரிய நட்பு வட்டம். இந்த அற்புதமான மனிதரைப் பற்றி என்னால் விரிவான கட்டுரையே எழுத முடியும்".

"தமிழே நதியாய்! கவிதை வழியாய்" என்ற, கவிஞர் சக்தி அவரகளின் கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் வளரவில்லை என்ற அறிவு எனக்குத் தந்த இறைவனைப் போற்றுகிறேன்.

அதனால் இந்த கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது நான் ரசித்த சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், நண்பர்களே!

இப்படி ஒரு நல்ல திறமையான கவிஞரை தமிழ்மணம் வழியாக பலருக்கு அறிமுகப்படுத்தும் பாக்கியத்தை எனக்கு கிடைத்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.

இவர் கவிதை எழுத வேண்டுமென்று ஒரு பச்சை நிழலில், சௌகரியமாக எல்லா வசதிக்ளோடும் உட்கார்ந்து கொண்டு இந்த கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒன்று கூட எழுதவில்லை. இயந்திர வாழ்க்கையின் இடையே அவ்வப்போது கிடைக்கின்ற கொஞ்சம் நேரத்தில் தனது மனதிலுள்ள பல்வேறு விஷயங்களைப் பற்றின தனது சிந்தனைகளை பதிவு செய்துள்ளார்.

வாருங்கள், நாம் இந்த கவிதைச் சோலைக்குள் செல்வோம்!

கவிஞர் சக்தி சக்திதாசன் அவரகளின் “தமிழே நதியாய் கவிதை வழியாய்” என்ற இந்த கவிதைத்தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.

என்னிதயத்தின் ஞான குருவாக வீற்றிருந்து
கவிதையெனும் விளக்கை அணையாமல் காத்திருக்கும்
அன்புக் கவியரசர் அமரர் கண்ணதாசன் அவர்களின்
பாதங்களின் இந்நூல் சமர்ப்பணம்..
என்று இவர் கவியரசரின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்துகையில் என் முன்னே கவியரசரின் புன்னகை வந்து போனது!.

திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் இந்த கவிதைத் தொகுப்பிற்கு நல்லதொரு அணிந்துரை வழங்கி வாழ்த்தியுள்ளார்.

அன்பின் திருவருவே! அடைக்கலம் தந்தவனே
அவனியின் அடித்தளமே அண்ணாமலையானே
இன்று நாம் சமர்ப்பிக்கும் கவிதைத் தொகுப்பிது
இதயங்களைச் சென்றடைய இறைவன் நீயருள்வாயே!


என்ற முதல் கவிதையின் வரிகளை வாசிக்க, இறைவனின் அருள் இவருக்கு நிச்சயம் என்று உறுதிபடுத்துகிறது, அழகிய இவரது தமிழ்ச்சொற்கள்!

அடுத்து வரும் கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புதிய கருத்துக்களையும் அழகாக வாசகர்களுக்குத் தருகிறார்.

நட்பு பற்றி சொல்கையில்

எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
எரியும் விளக்கில் எண்ணையாக
மெழுகுதிரியின் மெழுகாக
தன்னை உருக்கி தானே வளர்க்கும்
அன்புப் பூ
அது தானே நட்பு... என்கிறார்.


பாரதியிடம்

பாரதி, "மறக்கவில்லை மூத்த தமிழ் மைந்தனே.. "மறந்தால் தானே நினைப்பதற்கு" என்று சொல்லும் கவிதையின் முடிவில்..

பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழன் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில் ..
என்று பாடி, அஞ்சலி செலுத்துகிறார்.


ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டு
மந்தைக் கூட்டம் மனிதரில் சிலர்
மடைத்தனம் என்றே சிரிப்பர்
மாண்புமிகு வார்த்தைகளின்
மாபெரும் கருத்தறியாதொரு
மந்தை ஆடுகள் தாமிவரென்பேன்

அன்புக்கு வளைந்து கொடு
அருள்மிகு தேவமைந்தன்
ஆற்றிய அறிவுரைகள்
அனைத்தும் எமை உய்விக்கும்
அறிவோம் அவனை! அடைவோம் உயர்வே!

என்று “அன்பின் மறு உருவம் இயேசு நாதரை” போற்றுகிறார்.


தனது எண்ணத் தடாகத்தை இப்படி பார்க்கிறார், கவிஞர்

சிந்தனைப் பூக்களில் சிந்திய தேனதை
சிதறாமல் பருகிய சர்க்கரை வண்டு
நேரான கோடுகள் தானாக வளைந்ததால்
வாழ்க்கைத் தாளிலே வடிந்த ஓவியம்


தனது தந்தையின் எட்டாம் நினைவு நாளன்று


நெஞ்சில் உன் நினைவுகள்
உறவில் உன் உணர்வுகள்
உதிருமோ அவை உலகினில்!

எத்தனை எத்தனை கருத்துகள்
எப்படி எப்படி இயம்பினாய்
அப்போது புரியாத பெருமைகள்
இப்போது நினைத்தால் கனவுகள்!


என எழுதி வாசகர்களின் கண்களோரம் கண்ணீர் வரவைக்கிறார்.

கவிஞரின் மனைவி உறங்குவதைக் கண்டு “ கண்மூடி நீ தூங்க..” என்ற ஒரு கவிதை! அதில் மனைவி மீதுள்ள பாசத்தை, நன்றிகளோடு எப்படி வெளிப்படுத்துகிறார், பாருங்கள்!

வாழ்க்கை பாதையிலே குழிகளைக் கண்டும்
தாண்டுவேன் என
வீம்புடன் பாய்ந்து விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடித்த தாரிகை நீ
இன்று.. உன் நேரம் பெண்ணே
கொஞ்சம் ஓய்வாக கண்ணயர்ந்து கொள்
இதைக் கூடப் புரிந்து கொள்ளாதவன் எபப்டி?
நான்
உன் உயிர்த்தோழனாக, உள்ளக்காவலனாக...


என்றெழுதி அதன் கடைசி பத்தியில்

கண்மூடி நீ தூங்க
கண்ணயரா வேளையில்
கவிதையொன்று நான் புனைந்தேன்
கண்மணியே
கண்ணயர்வாய்..


என்று அந்த கவிதையை அவருடைய ஞான குருவான கவியரசர் கண்ணதாசனின் பாணியில் எழுதியுள்ளார்.

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி இவர் போல் வேறு யார் இவ்வளவு எழுதியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கவிதையில்

நிரந்தரமானவன் அழிவதில்லை
நிச்சயமாய்ச் சொன்னவன் நீ
காலக்கவி நீ எனக் கடிந்துரைத்து சொன்னவன் நீ
வருடங்கள் பறக்கலாம்
மனிதர்கள் இறக்கலாம்
மகாகவிஞன் உனக்கு இறப்பில்லை
.. என்று பாராட்டி மகிழ்கிறார்.

தூங்காத மனதிற்கு கொஞ்சம் நிம்மதி தேவையென்று கவிஞருக்குத் தோன்றினதும்

அறியாத வயதினிலே அரைநிமிட நேரத்திலே
அணைத்துக் கொண்ட தூக்கமே
அந்தஸ்தின் முன்றலில் அவசரமாய் வாழும்போது
அருகினிலே கூட வர ஏன் தானோ
அஞ்சி நீயும் ஓடுகிறாய் ..


என்று தனது தூக்கத்திடம் துக்கத்தோடு இப்படி கேள்வி கேட்கிறார்.

வாழ்வெல்லாம் ஓடிப்பிடித்து
வசதியான வாழ்வென முடித்து
வேடிக்கை தெரியுமோ நண்பரே!
வாடிக்கையான வேதனைதான் மீண்டுமே


என்ற இவரது இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனே இவருடைய கைபிடித்து எழுதியது போல் தோன்றின. வாழ்க்கையின் விலாசத்தை நான்கே வரிகளில் எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த சக்திக் கவிஞன்!

கிடைத்தவை எல்லாம் கேட்டா வந்தவை?
பிரிந்தவை எல்லாம் சொல்லியா சென்றவை?
இருப்பதை இழப்பதும் இழந்ததை பெறுவதும்
இயற்கையின் நியதி
மனமே நீ இன்று அமைதி கொள்வாய்


"மயக்கமா கலக்கமா.." என்ற பாடலும் "பாலும் பழமும் கைகளிலேந்தி..." என்ற பாடலும் சேர்ந்திட அதன் சாற்றைப் பிழிந்தது போல் தோன்றும் அழகிய கவிதை வரிகள்! கவியரசர் கண்ணதாசனின் தாசன் இவர் தானென்று கவிஞர் நிரூபிக்கிறார், தனது ஒவ்வொரு கவிதை வரிகளிலும்!

புதிய வருடம் வந்து கொண்டிருக்கிறது, அதைப் பார்த்து இப்படி பாடுகிறார்

நீயென்ன சொன்ன போதும்
நானென்ன செய்த போதும்
யாரென்ன முயற்சித்தாலும்
உலகம் உருள்வது உருள்வது தான்


நிஜத்திலே விளைந்த பொய்கள் - என்ற தலைப்பில் ஒரு கவிதை, அதில்:

கண்டதும் வதனத்தில் புன்னகை
சென்றதும் வாயாலே நிந்தனை
உள்ளத்திலே ஏனோ இத்தனை
கோலங்கள் இங்கே நர்த்தனம்

கணத்திலே ஓடும் இவ்வாழ்க்கை
கடந்தபின் வௌந்துவது மடமையே
நிஜத்திலே விளைந்த பொய்களை
நிறுத்திடும் தைரியம் உமக்குண்டோ?


என்ற கேள்வியோடு முடிக்கையில், வாசகர்களின் மனதில் ஆயிரம் பாடங்களை பதிவு செய்கிறார், கவிஞர்.

பொங்கல் நாளை கவிஞர் எப்படி வணங்குகிறார் என்று பாருங்கள்!

நாளெல்லாம் ஏரோட்டி
நலிந்து தன் வீட்டில் கண்ணீரூற்றி
நாட்டுக்கே உழைப்பால் சோறூட்டி
நலமில்லா வாழ்க்கையைத் தான் பெற்றிடும்
நல்லவன் உழவுத் தோழனுக்கு
நன்றி சொல்லி இந்நாளில்
நாம் வணங்குவோம்!


தாய் தந்தையரை நினைத்து இப்படி உருகுகிறார்

ஆயிரம் சொல்லவேண்டும்
அவரருமை பேசவேண்டும்
ஆனாலும் இன்றிங்கே
அன்னை தந்தை யாருமில்லை!


தாய் தந்தையரின் பாசம் பற்றி நினைத்தால் யாருக்கும் கண்ணீர் முந்தும் என்றால் கவிஞருக்கு எப்படியிருக்குமென்று இந்த அன்னை தந்தையரைப் பற்றின கவிதையில் காணலாம். அருமை!

கனவுதானா...? என்றொரு கவிதையில்

பசி..
என்றொரு சொல்லை
எங்கோ கேட்டதும்
அகராதியைப் புரட்டும்
அற்புதமான உலகம்


வேண்டுமென்று பாடுகிறார். "இறைவா இந்த கனவு நிஜமாக வேண்டும்" என்று உடனடி பிரார்த்தனை செய்தேன், நண்பர்களே!

இன்றெனக்கு ஓய்வு தேவை என்றொரு கவிதையில் ஒரு நிஜத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.

நிழல்தேடி ஓடுகின்றான்
மரங்களில் இலைகளில்லை
தாகத்தில் தவிக்கின்றான்
கண்களில் கானல் நீர்

வாழ்வெல்லாம் ஓடி விட்டு
வந்ததையெல்லாம் தாங்கி விட்டு
எனக்கின்று ஓய்வு தேவை
எண்ணும் போது அவன்
ஏனோ தூங்குகிறான்
கல்லறையில்.


நான் கல்லறைக்குள் நித்திய உறக்கத்தில் இருக்குமென் அந்த நாள், என் மனதின் கண்களுக்கு முன்னே இதை வாசிக்கும்போதே வந்து சென்றது! ஆக! எப்படி இந்த கவிஞருக்கு இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று வியந்து போகிறேன்!

பாடாத கவிதை என்ற தலைப்பில் மனதைத் தொடும் பல எழுதியுள்ளார், அதில்

வரதட்சனை எனும்
வறுகும் தட்சணையைப் பற்றி
அறியாப்பருவத்தில்
அடுத்தவீட்டுப் பெண்ணுடன்
மணல்வீடு கட்டி விளையாடும்
ஆசைத்தங்கை

மாலையில் அறும் செருப்பை
காலையில் திரும்பவும் தைத்துக்கொண்டு
மீண்டும் தெருவிலே ஓடும்
அப்ப்பாவுக்கு புதுச்செருப்பு
கிடைத்திருக்கும்


என்ற இந்த இரண்டு கவிதைகளும் வேலை தேடி ஓடும் இளைஞனின் மனதில் எழும் எண்ணங்களை உருக்கமாக பதிவு செய்கிறார்.

அப்பாவின் செருப்பைப் பற்றி இவர் எழுதியதை வாசிக்கையில், வறுமை கடந்து வந்தோர் யாவருக்கும், இன்றும் வறுமையில் தவிக்கும் எல்லோருக்கும், அது தரும் மனவலியை சில கண்ணீர்த்துளிகளின் வரவு ஆறுதல் படுத்தலாம்!

பூவினும் மென்மையான இந்த கவிஞரின் அன்பு உள்ளம், பூவிடம் பேசுகையில்

உன்னை என்
உள்ளத்தில் குடி கொண்ட
ஊர்வசிக்கு ஒப்பாக்கினேன்
உண்மை அதுவல்லவே!

அவளை அணைத்த போது
அவள் உன்னைப்போல்
கசங்கவில்லை!
மலர்ந்தாளே!..


என்று சொன்ன பிறகு

அதே பூவிடம் இப்படி கேட்கிறார் கவிஞர்.

ஏந்தானோ!
ஏழையெந்தன் வாழ்க்கையிலே
ஏக்கம் மட்டும்
உண்மையாச்சு?


பூக்களிடம் தனது வியப்பையும் கவ்லைகளையும் கவிஞர் அழகாக பகிர்ந்து கொள்கிறார். "ஏழைக்கு ஏக்கம் மட்டும் மிச்சம்" என்ற நிஜம் எப்படி தவிக்கிறது பாருங்கள்!

ஆண்டவன் அனுப்பிய கரமொன்று
ஆம்
ஏழ்மையிலும் காதல் கண்டு
எழுபிறப்பும் கூடவரும்
சொந்தம் கண்டு
என்னைக் காதலித்துக் கரம் பிடிக்க
கன்னியவள் வந்த பின் தான்
அழுகையின் மடியில்
ஆறுதல் கிடைத்தது...


என்று தனது மனைவியை மீண்டும் பாராட்டுகிறார்.

உணர்ச்சித் துடிப்பில் இப்படிக் கதறுகிறார், கவிஞர்

தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிதுஇதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியொரு பிறப்பு
இறைவா
அவசியந்தானா?


இறைவனிடமே கேள்வி கேட்க இந்த சக்திக் கவிஞருக்கு சக்தி இருக்கிறதே என்று அதிசயத்துப் போனேன்!!!

துனிசியா நாட்டிற்கு சென்ற பதிவின் முடிவில் இப்படி எழுதுகிறார்

இதயமெங்கும் இன்பமாய்
இன்று நான் எடுத்துப்போவது
பாலைவனத்தின்
பசுமையான நினைவுகளே!

நன்றி
ஓ துனிசியா!


வறுமையைப் பார்த்து கலங்கும் கவிஞர்

பெரியதாகியது
நடைபாதையோரங்கள்
அங்கே வாழும் மனிதர்கள்
அதிகமாகியதால்.


என்று கவிதை வடிக்கிறார். அதில் கோபமும் கவலையும்ம் ஒளிந்திருக்கிறது!

"அர்த்தமும் இல்லாமல் ஆசையுமில்லாமல்" என்ற தலைப்பிலெழுதிய ஒரு கவிதையின் முதல் பத்தியின் நான்கே வரிகளில் ஒரு வியப்பைப் படம் பிடித்து தருகிறார்.

ஆலையம் சென்றேன்
அடைத்து விட்டார்
என்னிடம்
கற்பூரமில்லை!


இந்த கவிதை வரிகளை வாசித்ததும், இதை, கவிஞர் அறிவுமதி அவர்களுக்கு அனுப்ப நான் நினைத்தேன். அண்ணன் திரு அறிவுமதி அவர்கள் நல்ல கவிஞர் என்பதை விட மிக நல்ல ரசிகர் என்பதால் எனக்கு அப்படித் தோன்றினது.

விளக்கேற்றும் கைகளைப் பார்த்து மென்மையாக கவிஞர் கேட்கிறார்

வெளிச்சமின்மையால்
முகங்கள் இருண்டனவா? அன்றி
இருண்ட முகங்களினால்
வெளிச்சம் அற்றுப்போயிற்றா?


இந்த நான்கே வரிகளை புரிந்துகொண்டால், நமது இயக்குனர்கள் எத்தனையோ நல்ல திரைப்படங்கள் எடுப்பார்களே என்று சந்தோஷப்பட்டேன்!

இலங்கையைப் பற்றி எழுதும்போதெல்லாம் அவர்களின் கண்ணிர் அளவின்று கொட்டுகிறது...
வெள்ளையர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமானால் போதுமா என்ற கேள்வியை மனதில் வைத்துக் கொண்டு இப்படி எழுதுகிறார் கவிஞர்

என் தாய் மண்ணே
என் நினைவுகள்
சுதந்திரமடைந்து
நான் சுவாசிக்கும் காற்று
சுதந்திரமாகும் போது தான்
உனக்கு உண்மையான
சுதந்திரம் என்பேன்


நியாயமான கோபமும், வீரமும் கவலையும் நிறைந்த அவரின் மனதின் விலாசத்தை இங்கே காணலாம்

பெண்ணைப் பெற்றவர் என்றொரு தனிவர்க்கம்
தமக்கெனப் பணத்தை விளைச்சல் செய்தே
வைத்திருப்பார் என எண்ணும்
முட்டாள் மூளைகளின் பெயர்
மாப்பிள்ளையாம்


இங்கே சமுதாயத்தின் அவல நிலைகளில் முக்கியமான ஒன்றை சாடுகிறார்.

தோழனே தேடல்களை மூடி விடு
உன் இதயத்தை திறந்து வை
இருட்டில் இருந்து கொண்டே
விளக்கை அணைக்காதே
உண்மையை உன்னில் கண்டு கொள்
விடியல் தானாகவே உன்
வானத்தைத் தேடி வரும்


என்ற ஆழமான ஒரு கருத்தைச் சொல்லி இந்த கவிதைத் தொகுப்பு இங்கே நிறைவாகிறது.

56 கவிதைப் பூக்களால் அலங்கரித்த கவிதை மாலையிது என்றும் வாடாது என்பது நிச்சயம்! எனது பார்வையில் பட்ட சில பூக்களின் சில இதழ்களின் மென்மையை மட்டும், தூரத்திலிருந்து கடலைப் பார்த்து வியந்து போன ஒரு சிறுவனைப் போல், இங்கே பணிவோடு பதிவு செய்துள்ளேன், அவ்வளவு தான்!

அன்பர்களே! உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை மணிமேகலை பிரசுரத்தின் வழியோ அல்லது மற்ற தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் மூலமாகவோ வாங்கி வாசிக்க அன்போடு பரிந்துரை செய்கிறேன். மணிமேகலை பிரசுரத்தின் விலாசம்:

மணிமேகலை பிரசுரம்
7 தணிகாச்சலம் சாலை
தியாகராய நகர், சென்னை 17

இந்த அழகிய புத்தகத்தின் விலை வெறும் 50 ரூபாய்! - என்று பார்க்கையில், இவ்வளவு சிந்தனைகளின் விலைமதிப்பு, வெறும் 50 ரூபாய்க்குள் அடங்கி விடுகிறதே என்று தோன்றினாலும் இந்த கவிதைத் தொகுப்பு எல்லோரிடமும் சென்றடைய இதன் குறைந்த விலை உதவட்டுமே என்ற சிந்தனை என்னைத் தேற்றியது.

இந்த திறமையான கவிஞரை வாழ்த்துவோம்!

இவரை பாராட்ட, தொடர்பு கொள்ள: sakthisakthithasan@googlemail.com

இந்த மாபெரும் கவிஞரின் சில புதிய கவிதைகள் மற்றும் படைப்புகளை அவரின் வலைப்பூவில் வாசிக்க: http://www.thamilpoonga.com/

கவிஞர் சக்தி சக்தி தாசன் அவர்களின் கவிதையொன்று அவரின் வலைப்பூவில் நம்மை வரவேற்கிறது.

அந்தக் கவிதை:

ஆதவனாகிய நான் ….

யுகம் யுகமாய் ……
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்

வெளிச்சத்தின் இருட்டில்
வேஷம் போடுமிந்த மானிடர் மந்தை
கண்கேட்டுப் போயினும் ஏனிந்த …..
சூரியநமஸ்காரம் எனக்கு

மேகத்தைக் கலைத்துக் கலைத்து
களைத்துப் போயே, மனிதன் மீது வெறுப்புக் கொண்டே
அந்தியில் நானும் அசந்து போய்
ஆழியில் விழுவேன்……

ஆயினும் ஏனோ
மலர்களின் ஏக்கம், இயற்கையின் வாட்டம்
என்னையும் மாற்றும், உள்ளம் உருகி மீண்டும்
கிழக்கிலிருந்து புதிதாய் முளைப்பேன்….

விழுவதும் எழுவதும் ஆதவன் எனக்கு
வாழ்க்கையின் கணக்கு
இடையினில் நடக்கும் நாடகம் அனைத்தும்
இதயத்தில் பதிக்கும் தடங்கள் வலிக்கும்

இருட்டினைத் துரத்தி உலகிற்கு
வெளிச்சத்தைக் கொடுப்பேன் …..
ஆனால் மனிதன் மட்டும் ….
இதயத்தில் உறைந்த இருளில்
இறுதிவரை அமிழ்ந்தே சாகிறான் …..

கிடைப்பதைச் சுருட்டி வறுமையைப் பெருக்கி
தன்னலச் சேற்றினுள் தானும் புதைந்து
தன்கையைக் கொண்டு தன் கண்ணைக் குத்தி
காட்சி தெரியவில்லையென்று ஏன் தான்
வீண் கோஷமிடுகின்றான்

யுகம் … யுகமாய் …. நானும்
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்
ஓருண்மை உனக்கு எடுத்துச் சொல்வேன்
உலகத்தின் இருப்பை உனதாய் எடுத்து
இயற்கையைக் கற்பழித்து நீ மட்டும் வாழ்ந்தால் ….

அதோ என்மீது காதல் கொண்டு
தன்னைக் குடித்துவிடக் கேட்கும் அந்தப்பனித்துளி …..
அதைக் கொண்டே ………………….
என்னை அணைத்துக் கொள்ளச் சொல்வேன்…

அப்போது ………………………

உலகம் இருண்டு விடும்
உனக்கு விளங்கிவிடும்….. ஆம் மனிதா
இந்த உலகம் உனக்கு மட்டும்
சொந்தமானதல்ல …..
ஆதவனாகிய நானும் எப்போதும்
அழியாமல் இருக்க மாட்டேன்….

ஏனென்றால் ….. நான்
யுகம் யுகமாய் எரிந்து கொண்டே ……………."கவிஞர் சக்தி தாசன் அவர்களின் படைப்புகள் பல தொடர்ந்து தமிழ்மக்களைத் தேடி வெளிவர வேண்டும். இந்த கவிஞர் வாழும் காலத்திலேயே அவர் உன்னதமாய் போற்றப்பட வேண்டும்" என்று இறைவனிடம் அன்போடு பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே, உங்கள் வாழ்த்துகள் இந்த சிறந்த கவிஞரை நிச்சயமாக ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கையில்...

தோழமையுடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments