இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஈழத்தில் பிறந்த இவர் இந்தியாவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டவர். இவர்களின் ஒரே மகன் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல இணைய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் எதிர்கால சந்ததியினரிடம் தமிழார்வத்தை வளர்க்க இணையத்தின் பங்கு மிக முக்கியமாகி வருகிறது என்று கூறும் இவர் தன் கை விரல்களுக்கு வலுவிருக்கும் வரை இணைய தளங்களுக்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பேன் இதுதான் என் லட்சியம் என்கிறார்.
இதுவரை வெளிவந்த இவரது நூல்கள்:
தமிழ்ப்பூங்காவில் வண்ணமலர்கள் ( பல்சுவைத் தொகுப்பு),
உறவெனும் விலங்கு ( சிறுகதைத் தொகுப்பு ),
"தமிழே நதியாய் ! கவிதை வழியாய்!" (கவிதைத் தொகுப்பு )
விரைவில் ... கண்ணதாசன் ஒரு காவியம் ( அச்சிலுள்ளது )
பதிப்பாளர், திரு ரவி தமிழ்வாணன் அவர்கள் இவரைப் பற்றி இப்படி கூறுகிறார்.
"மிதமிஞ்சிய தமிழ்ப்பற்று; அனைவருடனும் அன்போடு பழகும் உயரிய குணம்; அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்லாத பண்பு; தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் உள்ளம்; செல்வப் பின்னணி இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத எளிமை; கணினியில் பேராற்றல்; அன்பான மனைவியுடனும், அருமையான மகன் டாக்டர் கார்த்திக்குடனும் எடுத்துக்காட்டான இனிய இல்லறம்; சொல்லுக்கும் செயலுக்கும் நேரிடியான தொடர்பு இருக்கும்படியான பாசாங்கு இல்லாத நேர்மை; பெரிய நட்பு வட்டம். இந்த அற்புதமான மனிதரைப் பற்றி என்னால் விரிவான கட்டுரையே எழுத முடியும்".
"தமிழே நதியாய்! கவிதை வழியாய்" என்ற, கவிஞர் சக்தி அவரகளின் கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் வளரவில்லை என்ற அறிவு எனக்குத் தந்த இறைவனைப் போற்றுகிறேன்.
அதனால் இந்த கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது நான் ரசித்த சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், நண்பர்களே!
இப்படி ஒரு நல்ல திறமையான கவிஞரை தமிழ்மணம் வழியாக பலருக்கு அறிமுகப்படுத்தும் பாக்கியத்தை எனக்கு கிடைத்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.
இவர் கவிதை எழுத வேண்டுமென்று ஒரு பச்சை நிழலில், சௌகரியமாக எல்லா வசதிக்ளோடும் உட்கார்ந்து கொண்டு இந்த கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒன்று கூட எழுதவில்லை. இயந்திர வாழ்க்கையின் இடையே அவ்வப்போது கிடைக்கின்ற கொஞ்சம் நேரத்தில் தனது மனதிலுள்ள பல்வேறு விஷயங்களைப் பற்றின தனது சிந்தனைகளை பதிவு செய்துள்ளார்.
வாருங்கள், நாம் இந்த கவிதைச் சோலைக்குள் செல்வோம்!
கவிஞர் சக்தி சக்திதாசன் அவரகளின் “தமிழே நதியாய் கவிதை வழியாய்” என்ற இந்த கவிதைத்தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.
என்னிதயத்தின் ஞான குருவாக வீற்றிருந்து
கவிதையெனும் விளக்கை அணையாமல் காத்திருக்கும்
அன்புக் கவியரசர் அமரர் கண்ணதாசன் அவர்களின்
பாதங்களின் இந்நூல் சமர்ப்பணம்.. என்று இவர் கவியரசரின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்துகையில் என் முன்னே கவியரசரின் புன்னகை வந்து போனது!.
திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் இந்த கவிதைத் தொகுப்பிற்கு நல்லதொரு அணிந்துரை வழங்கி வாழ்த்தியுள்ளார்.
அன்பின் திருவருவே! அடைக்கலம் தந்தவனே
அவனியின் அடித்தளமே அண்ணாமலையானே
இன்று நாம் சமர்ப்பிக்கும் கவிதைத் தொகுப்பிது
இதயங்களைச் சென்றடைய இறைவன் நீயருள்வாயே!
என்ற முதல் கவிதையின் வரிகளை வாசிக்க, இறைவனின் அருள் இவருக்கு நிச்சயம் என்று உறுதிபடுத்துகிறது, அழகிய இவரது தமிழ்ச்சொற்கள்!
அடுத்து வரும் கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புதிய கருத்துக்களையும் அழகாக வாசகர்களுக்குத் தருகிறார்.
நட்பு பற்றி சொல்கையில்
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
எரியும் விளக்கில் எண்ணையாக
மெழுகுதிரியின் மெழுகாக
தன்னை உருக்கி தானே வளர்க்கும்
அன்புப் பூ
அது தானே நட்பு... என்கிறார்.
பாரதியிடம்
பாரதி, "மறக்கவில்லை மூத்த தமிழ் மைந்தனே.. "மறந்தால் தானே நினைப்பதற்கு" என்று சொல்லும் கவிதையின் முடிவில்..
பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழன் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில் .. என்று பாடி, அஞ்சலி செலுத்துகிறார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டு
மந்தைக் கூட்டம் மனிதரில் சிலர்
மடைத்தனம் என்றே சிரிப்பர்
மாண்புமிகு வார்த்தைகளின்
மாபெரும் கருத்தறியாதொரு
மந்தை ஆடுகள் தாமிவரென்பேன்
அன்புக்கு வளைந்து கொடு
அருள்மிகு தேவமைந்தன்
ஆற்றிய அறிவுரைகள்
அனைத்தும் எமை உய்விக்கும்
அறிவோம் அவனை! அடைவோம் உயர்வே!
என்று “அன்பின் மறு உருவம் இயேசு நாதரை” போற்றுகிறார்.
தனது எண்ணத் தடாகத்தை இப்படி பார்க்கிறார், கவிஞர்
சிந்தனைப் பூக்களில் சிந்திய தேனதை
சிதறாமல் பருகிய சர்க்கரை வண்டு
நேரான கோடுகள் தானாக வளைந்ததால்
வாழ்க்கைத் தாளிலே வடிந்த ஓவியம்
தனது தந்தையின் எட்டாம் நினைவு நாளன்று
நெஞ்சில் உன் நினைவுகள்
உறவில் உன் உணர்வுகள்
உதிருமோ அவை உலகினில்!
எத்தனை எத்தனை கருத்துகள்
எப்படி எப்படி இயம்பினாய்
அப்போது புரியாத பெருமைகள்
இப்போது நினைத்தால் கனவுகள்!
என எழுதி வாசகர்களின் கண்களோரம் கண்ணீர் வரவைக்கிறார்.
கவிஞரின் மனைவி உறங்குவதைக் கண்டு “ கண்மூடி நீ தூங்க..” என்ற ஒரு கவிதை! அதில் மனைவி மீதுள்ள பாசத்தை, நன்றிகளோடு எப்படி வெளிப்படுத்துகிறார், பாருங்கள்!
வாழ்க்கை பாதையிலே குழிகளைக் கண்டும்
தாண்டுவேன் என
வீம்புடன் பாய்ந்து விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடித்த தாரிகை நீ
இன்று.. உன் நேரம் பெண்ணே
கொஞ்சம் ஓய்வாக கண்ணயர்ந்து கொள்
இதைக் கூடப் புரிந்து கொள்ளாதவன் எபப்டி?
நான்
உன் உயிர்த்தோழனாக, உள்ளக்காவலனாக...
என்றெழுதி அதன் கடைசி பத்தியில்
கண்மூடி நீ தூங்க
கண்ணயரா வேளையில்
கவிதையொன்று நான் புனைந்தேன்
கண்மணியே
கண்ணயர்வாய்..
என்று அந்த கவிதையை அவருடைய ஞான குருவான கவியரசர் கண்ணதாசனின் பாணியில் எழுதியுள்ளார்.
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி இவர் போல் வேறு யார் இவ்வளவு எழுதியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு கவிதையில்
நிரந்தரமானவன் அழிவதில்லை
நிச்சயமாய்ச் சொன்னவன் நீ
காலக்கவி நீ எனக் கடிந்துரைத்து சொன்னவன் நீ
வருடங்கள் பறக்கலாம்
மனிதர்கள் இறக்கலாம்
மகாகவிஞன் உனக்கு இறப்பில்லை .. என்று பாராட்டி மகிழ்கிறார்.
தூங்காத மனதிற்கு கொஞ்சம் நிம்மதி தேவையென்று கவிஞருக்குத் தோன்றினதும்
அறியாத வயதினிலே அரைநிமிட நேரத்திலே
அணைத்துக் கொண்ட தூக்கமே
அந்தஸ்தின் முன்றலில் அவசரமாய் வாழும்போது
அருகினிலே கூட வர ஏன் தானோ
அஞ்சி நீயும் ஓடுகிறாய் ..
என்று தனது தூக்கத்திடம் துக்கத்தோடு இப்படி கேள்வி கேட்கிறார்.
வாழ்வெல்லாம் ஓடிப்பிடித்து
வசதியான வாழ்வென முடித்து
வேடிக்கை தெரியுமோ நண்பரே!
வாடிக்கையான வேதனைதான் மீண்டுமே
என்ற இவரது இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனே இவருடைய கைபிடித்து எழுதியது போல் தோன்றின. வாழ்க்கையின் விலாசத்தை நான்கே வரிகளில் எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த சக்திக் கவிஞன்!
கிடைத்தவை எல்லாம் கேட்டா வந்தவை?
பிரிந்தவை எல்லாம் சொல்லியா சென்றவை?
இருப்பதை இழப்பதும் இழந்ததை பெறுவதும்
இயற்கையின் நியதி
மனமே நீ இன்று அமைதி கொள்வாய்
"மயக்கமா கலக்கமா.." என்ற பாடலும் "பாலும் பழமும் கைகளிலேந்தி..." என்ற பாடலும் சேர்ந்திட அதன் சாற்றைப் பிழிந்தது போல் தோன்றும் அழகிய கவிதை வரிகள்! கவியரசர் கண்ணதாசனின் தாசன் இவர் தானென்று கவிஞர் நிரூபிக்கிறார், தனது ஒவ்வொரு கவிதை வரிகளிலும்!
புதிய வருடம் வந்து கொண்டிருக்கிறது, அதைப் பார்த்து இப்படி பாடுகிறார்
நீயென்ன சொன்ன போதும்
நானென்ன செய்த போதும்
யாரென்ன முயற்சித்தாலும்
உலகம் உருள்வது உருள்வது தான்
நிஜத்திலே விளைந்த பொய்கள் - என்ற தலைப்பில் ஒரு கவிதை, அதில்:
கண்டதும் வதனத்தில் புன்னகை
சென்றதும் வாயாலே நிந்தனை
உள்ளத்திலே ஏனோ இத்தனை
கோலங்கள் இங்கே நர்த்தனம்
கணத்திலே ஓடும் இவ்வாழ்க்கை
கடந்தபின் வௌந்துவது மடமையே
நிஜத்திலே விளைந்த பொய்களை
நிறுத்திடும் தைரியம் உமக்குண்டோ?
என்ற கேள்வியோடு முடிக்கையில், வாசகர்களின் மனதில் ஆயிரம் பாடங்களை பதிவு செய்கிறார், கவிஞர்.
பொங்கல் நாளை கவிஞர் எப்படி வணங்குகிறார் என்று பாருங்கள்!
நாளெல்லாம் ஏரோட்டி
நலிந்து தன் வீட்டில் கண்ணீரூற்றி
நாட்டுக்கே உழைப்பால் சோறூட்டி
நலமில்லா வாழ்க்கையைத் தான் பெற்றிடும்
நல்லவன் உழவுத் தோழனுக்கு
நன்றி சொல்லி இந்நாளில்
நாம் வணங்குவோம்!
தாய் தந்தையரை நினைத்து இப்படி உருகுகிறார்
ஆயிரம் சொல்லவேண்டும்
அவரருமை பேசவேண்டும்
ஆனாலும் இன்றிங்கே
அன்னை தந்தை யாருமில்லை!
தாய் தந்தையரின் பாசம் பற்றி நினைத்தால் யாருக்கும் கண்ணீர் முந்தும் என்றால் கவிஞருக்கு எப்படியிருக்குமென்று இந்த அன்னை தந்தையரைப் பற்றின கவிதையில் காணலாம். அருமை!
கனவுதானா...? என்றொரு கவிதையில்
பசி..
என்றொரு சொல்லை
எங்கோ கேட்டதும்
அகராதியைப் புரட்டும்
அற்புதமான உலகம்
வேண்டுமென்று பாடுகிறார். "இறைவா இந்த கனவு நிஜமாக வேண்டும்" என்று உடனடி பிரார்த்தனை செய்தேன், நண்பர்களே!
இன்றெனக்கு ஓய்வு தேவை என்றொரு கவிதையில் ஒரு நிஜத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.
நிழல்தேடி ஓடுகின்றான்
மரங்களில் இலைகளில்லை
தாகத்தில் தவிக்கின்றான்
கண்களில் கானல் நீர்
வாழ்வெல்லாம் ஓடி விட்டு
வந்ததையெல்லாம் தாங்கி விட்டு
எனக்கின்று ஓய்வு தேவை
எண்ணும் போது அவன்
ஏனோ தூங்குகிறான்
கல்லறையில்.
நான் கல்லறைக்குள் நித்திய உறக்கத்தில் இருக்குமென் அந்த நாள், என் மனதின் கண்களுக்கு முன்னே இதை வாசிக்கும்போதே வந்து சென்றது! ஆக! எப்படி இந்த கவிஞருக்கு இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று வியந்து போகிறேன்!
பாடாத கவிதை என்ற தலைப்பில் மனதைத் தொடும் பல எழுதியுள்ளார், அதில்
வரதட்சனை எனும்
வறுகும் தட்சணையைப் பற்றி
அறியாப்பருவத்தில்
அடுத்தவீட்டுப் பெண்ணுடன்
மணல்வீடு கட்டி விளையாடும்
ஆசைத்தங்கை
மாலையில் அறும் செருப்பை
காலையில் திரும்பவும் தைத்துக்கொண்டு
மீண்டும் தெருவிலே ஓடும்
அப்ப்பாவுக்கு புதுச்செருப்பு
கிடைத்திருக்கும்
என்ற இந்த இரண்டு கவிதைகளும் வேலை தேடி ஓடும் இளைஞனின் மனதில் எழும் எண்ணங்களை உருக்கமாக பதிவு செய்கிறார்.
அப்பாவின் செருப்பைப் பற்றி இவர் எழுதியதை வாசிக்கையில், வறுமை கடந்து வந்தோர் யாவருக்கும், இன்றும் வறுமையில் தவிக்கும் எல்லோருக்கும், அது தரும் மனவலியை சில கண்ணீர்த்துளிகளின் வரவு ஆறுதல் படுத்தலாம்!
பூவினும் மென்மையான இந்த கவிஞரின் அன்பு உள்ளம், பூவிடம் பேசுகையில்
உன்னை என்
உள்ளத்தில் குடி கொண்ட
ஊர்வசிக்கு ஒப்பாக்கினேன்
உண்மை அதுவல்லவே!
அவளை அணைத்த போது
அவள் உன்னைப்போல்
கசங்கவில்லை!
மலர்ந்தாளே!..
என்று சொன்ன பிறகு
அதே பூவிடம் இப்படி கேட்கிறார் கவிஞர்.
ஏந்தானோ!
ஏழையெந்தன் வாழ்க்கையிலே
ஏக்கம் மட்டும்
உண்மையாச்சு?
பூக்களிடம் தனது வியப்பையும் கவ்லைகளையும் கவிஞர் அழகாக பகிர்ந்து கொள்கிறார். "ஏழைக்கு ஏக்கம் மட்டும் மிச்சம்" என்ற நிஜம் எப்படி தவிக்கிறது பாருங்கள்!
ஆண்டவன் அனுப்பிய கரமொன்று
ஆம்
ஏழ்மையிலும் காதல் கண்டு
எழுபிறப்பும் கூடவரும்
சொந்தம் கண்டு
என்னைக் காதலித்துக் கரம் பிடிக்க
கன்னியவள் வந்த பின் தான்
அழுகையின் மடியில்
ஆறுதல் கிடைத்தது...
என்று தனது மனைவியை மீண்டும் பாராட்டுகிறார்.
உணர்ச்சித் துடிப்பில் இப்படிக் கதறுகிறார், கவிஞர்
தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிது
இதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியொரு பிறப்பு
இறைவா
அவசியந்தானா?
இறைவனிடமே கேள்வி கேட்க இந்த சக்திக் கவிஞருக்கு சக்தி இருக்கிறதே என்று அதிசயத்துப் போனேன்!!!
துனிசியா நாட்டிற்கு சென்ற பதிவின் முடிவில் இப்படி எழுதுகிறார்
இதயமெங்கும் இன்பமாய்
இன்று நான் எடுத்துப்போவது
பாலைவனத்தின்
பசுமையான நினைவுகளே!
நன்றி
ஓ துனிசியா!
வறுமையைப் பார்த்து கலங்கும் கவிஞர்
பெரியதாகியது
நடைபாதையோரங்கள்
அங்கே வாழும் மனிதர்கள்
அதிகமாகியதால்.
என்று கவிதை வடிக்கிறார். அதில் கோபமும் கவலையும்ம் ஒளிந்திருக்கிறது!
"அர்த்தமும் இல்லாமல் ஆசையுமில்லாமல்" என்ற தலைப்பிலெழுதிய ஒரு கவிதையின் முதல் பத்தியின் நான்கே வரிகளில் ஒரு வியப்பைப் படம் பிடித்து தருகிறார்.
ஆலையம் சென்றேன்
அடைத்து விட்டார்
என்னிடம்
கற்பூரமில்லை!
இந்த கவிதை வரிகளை வாசித்ததும், இதை, கவிஞர் அறிவுமதி அவர்களுக்கு அனுப்ப நான் நினைத்தேன். அண்ணன் திரு அறிவுமதி அவர்கள் நல்ல கவிஞர் என்பதை விட மிக நல்ல ரசிகர் என்பதால் எனக்கு அப்படித் தோன்றினது.
விளக்கேற்றும் கைகளைப் பார்த்து மென்மையாக கவிஞர் கேட்கிறார்
வெளிச்சமின்மையால்
முகங்கள் இருண்டனவா? அன்றி
இருண்ட முகங்களினால்
வெளிச்சம் அற்றுப்போயிற்றா?
இந்த நான்கே வரிகளை புரிந்துகொண்டால், நமது இயக்குனர்கள் எத்தனையோ நல்ல திரைப்படங்கள் எடுப்பார்களே என்று சந்தோஷப்பட்டேன்!
இலங்கையைப் பற்றி எழுதும்போதெல்லாம் அவர்களின் கண்ணிர் அளவின்று கொட்டுகிறது...
வெள்ளையர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமானால் போதுமா என்ற கேள்வியை மனதில் வைத்துக் கொண்டு இப்படி எழுதுகிறார் கவிஞர்
என் தாய் மண்ணே
என் நினைவுகள்
சுதந்திரமடைந்து
நான் சுவாசிக்கும் காற்று
சுதந்திரமாகும் போது தான்
உனக்கு உண்மையான
சுதந்திரம் என்பேன்
நியாயமான கோபமும், வீரமும் கவலையும் நிறைந்த அவரின் மனதின் விலாசத்தை இங்கே காணலாம்
பெண்ணைப் பெற்றவர் என்றொரு தனிவர்க்கம்
தமக்கெனப் பணத்தை விளைச்சல் செய்தே
வைத்திருப்பார் என எண்ணும்
முட்டாள் மூளைகளின் பெயர்
மாப்பிள்ளையாம்
இங்கே சமுதாயத்தின் அவல நிலைகளில் முக்கியமான ஒன்றை சாடுகிறார்.
தோழனே தேடல்களை மூடி விடு
உன் இதயத்தை திறந்து வை
இருட்டில் இருந்து கொண்டே
விளக்கை அணைக்காதே
உண்மையை உன்னில் கண்டு கொள்
விடியல் தானாகவே உன்
வானத்தைத் தேடி வரும்
என்ற ஆழமான ஒரு கருத்தைச் சொல்லி இந்த கவிதைத் தொகுப்பு இங்கே நிறைவாகிறது.
56 கவிதைப் பூக்களால் அலங்கரித்த கவிதை மாலையிது என்றும் வாடாது என்பது நிச்சயம்! எனது பார்வையில் பட்ட சில பூக்களின் சில இதழ்களின் மென்மையை மட்டும், தூரத்திலிருந்து கடலைப் பார்த்து வியந்து போன ஒரு சிறுவனைப் போல், இங்கே பணிவோடு பதிவு செய்துள்ளேன், அவ்வளவு தான்!
அன்பர்களே! உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை மணிமேகலை பிரசுரத்தின் வழியோ அல்லது மற்ற தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் மூலமாகவோ வாங்கி வாசிக்க அன்போடு பரிந்துரை செய்கிறேன். மணிமேகலை பிரசுரத்தின் விலாசம்:
மணிமேகலை பிரசுரம்
7 தணிகாச்சலம் சாலை
தியாகராய நகர், சென்னை 17
இந்த அழகிய புத்தகத்தின் விலை வெறும் 50 ரூபாய்! - என்று பார்க்கையில், இவ்வளவு சிந்தனைகளின் விலைமதிப்பு, வெறும் 50 ரூபாய்க்குள் அடங்கி விடுகிறதே என்று தோன்றினாலும் இந்த கவிதைத் தொகுப்பு எல்லோரிடமும் சென்றடைய இதன் குறைந்த விலை உதவட்டுமே என்ற சிந்தனை என்னைத் தேற்றியது.
இந்த திறமையான கவிஞரை வாழ்த்துவோம்!
இவரை பாராட்ட, தொடர்பு கொள்ள: sakthisakthithasan@googlemail.com
இந்த மாபெரும் கவிஞரின் சில புதிய கவிதைகள் மற்றும் படைப்புகளை அவரின் வலைப்பூவில் வாசிக்க: http://www.thamilpoonga.com/
கவிஞர் சக்தி சக்தி தாசன் அவர்களின் கவிதையொன்று அவரின் வலைப்பூவில் நம்மை வரவேற்கிறது.
அந்தக் கவிதை:
ஆதவனாகிய நான் ….
யுகம் யுகமாய் ……
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்
வெளிச்சத்தின் இருட்டில்
வேஷம் போடுமிந்த மானிடர் மந்தை
கண்கேட்டுப் போயினும் ஏனிந்த …..
சூரியநமஸ்காரம் எனக்கு
மேகத்தைக் கலைத்துக் கலைத்து
களைத்துப் போயே, மனிதன் மீது வெறுப்புக் கொண்டே
அந்தியில் நானும் அசந்து போய்
ஆழியில் விழுவேன்……
ஆயினும் ஏனோ
மலர்களின் ஏக்கம், இயற்கையின் வாட்டம்
என்னையும் மாற்றும், உள்ளம் உருகி மீண்டும்
கிழக்கிலிருந்து புதிதாய் முளைப்பேன்….
விழுவதும் எழுவதும் ஆதவன் எனக்கு
வாழ்க்கையின் கணக்கு
இடையினில் நடக்கும் நாடகம் அனைத்தும்
இதயத்தில் பதிக்கும் தடங்கள் வலிக்கும்
இருட்டினைத் துரத்தி உலகிற்கு
வெளிச்சத்தைக் கொடுப்பேன் …..
ஆனால் மனிதன் மட்டும் ….
இதயத்தில் உறைந்த இருளில்
இறுதிவரை அமிழ்ந்தே சாகிறான் …..
கிடைப்பதைச் சுருட்டி வறுமையைப் பெருக்கி
தன்னலச் சேற்றினுள் தானும் புதைந்து
தன்கையைக் கொண்டு தன் கண்ணைக் குத்தி
காட்சி தெரியவில்லையென்று ஏன் தான்
வீண் கோஷமிடுகின்றான்
யுகம் … யுகமாய் …. நானும்
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்
ஓருண்மை உனக்கு எடுத்துச் சொல்வேன்
உலகத்தின் இருப்பை உனதாய் எடுத்து
இயற்கையைக் கற்பழித்து நீ மட்டும் வாழ்ந்தால் ….
அதோ என்மீது காதல் கொண்டு
தன்னைக் குடித்துவிடக் கேட்கும் அந்தப்பனித்துளி …..
அதைக் கொண்டே ………………….
என்னை அணைத்துக் கொள்ளச் சொல்வேன்…
அப்போது ………………………
உலகம் இருண்டு விடும்
உனக்கு விளங்கிவிடும்….. ஆம் மனிதா
இந்த உலகம் உனக்கு மட்டும்
சொந்தமானதல்ல …..
ஆதவனாகிய நானும் எப்போதும்
அழியாமல் இருக்க மாட்டேன்….
ஏனென்றால் ….. நான்
யுகம் யுகமாய் எரிந்து கொண்டே …………….
"கவிஞர் சக்தி தாசன் அவர்களின் படைப்புகள் பல தொடர்ந்து தமிழ்மக்களைத் தேடி வெளிவர வேண்டும். இந்த கவிஞர் வாழும் காலத்திலேயே அவர் உன்னதமாய் போற்றப்பட வேண்டும்" என்று இறைவனிடம் அன்போடு பிரார்த்திக்கிறேன்.
நண்பர்களே, உங்கள் வாழ்த்துகள் இந்த சிறந்த கவிஞரை நிச்சயமாக ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கையில்...
தோழமையுடன்
என் சுரேஷ்
Friday, April 4, 2008
கவிஞர் சக்தி சக்திதாசன்
Labels:
படைப்பாளியும் புத்தகமும்
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
Recent Comments
Anonymous commented:
very nice sir, I like this story
பூங்குழலி commented:
கண் கலங்குது ணா
ராமலக்ஷ்மி commented:
சிறப்பான அணிந்துரை. பகிர்வுக்கு நன்றி.நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
cheena (சீனா) commented:
This comment has been hidden from the blog.
அன்புடன் அருணா commented:
பூங்கொத்தும் வாழ்த்துக்களும்!!!
அறநெறி முனைவர் க. பழனிச்சாமி commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
vaalthukalhttp://www.kovaikkavi.woedpress.com
N Suresh commented:
மிக்க நன்றி அம்மா!பேரன்புடன் என் சுரேஷ்
vetha (kovaikkavi) commented:
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் டென்மார்க்கிலிருந்து.வேதா. இலங்காதிலகம்.http://www,kovaikkavi.wordpress.com
N Suresh commented:
மிக்க நன்றி திருமதி ரமலக்ஷ்மி அவர்களே!
N Suresh commented:
This comment has been hidden from the blog.
Anonymous commented:
This comment has been hidden from the blog.
Dhavappudhalvan commented:
This comment has been hidden from the blog.
Rathnavel Natarajan commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.
vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.
vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh
Anonymous commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.....
ராமலக்ஷ்மி commented:
தற்சமயம் நலம் என்பதறிந்து ஆறுதல். கடவுளுக்கு நன்றி.
ராமலக்ஷ்மி commented:
மிக நன்று. நல்வாழ்த்துக்கள்!
Shakthiprabha (Prabha Sridhar) commented:
அருமை. வாழ்த்துக்கள். புத்தாண்டுக்கு புதுப் பொலிவுடன் துவக்கம்.
சமுத்ரா commented:
வாழ்த்துக்கள்
Anonymous commented:
GOD created every man as a gift to another man and the only thing we have to share with each other is LOVE.Thats what Lord extracted in TEN COMMANDMENTS.
Shakthiprabha (Prabha Sridhar) commented:
வாழ்த்துக்கள் :)
5 comments:
கவிஞர் சக்திதாசன் அவர்களின் கவிதைகள் என் நெஞ்சில் ஆழமாக தொடுகின்றன அத்துடன் பலாச்சுளையில் தேனும் கலந்தது போல் அன்பு சுரேஷன் உணர்வுகளுடன் விமர்சனமும் அருமையாக இருக்கிறது என் நல்லாசிகள் அன்புடன் விசாலம்
//எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
எரியும் விளக்கில் எண்ணையாக
மெழுகுதிரியின் மெழுகாக
தன்னை உருக்கி தானே வளர்க்கும்
அன்புப் பூ
அது தானே நட்பு..//
நல்ல அறிமுகம்...எனக்குப் பிடித்த வரிகள் இவைதான்...
அன்புடன் அருணா
அன்புள்ள அருணா,
நட்பு பற்றின கவிதை வரிகளை நீங்கள் ரசித்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இனிய பின்னூட்டத்திற்கு நன்றி பல.
தோழமையுடன் என் சுரேஷ்
அன்புள்ள அம்மா,
கவிஞர் சக்தி சக்திதாசன் அவர்களின் கவிதைகளை பாராட்டி, என்னகும் ஊக்கம் தரும் உங்கள் அன்பு உள்ளத்தை வணங்குகிறேன்.
பாசமுடன் என் சுரேஷ்
அன்பின் சுரேஷ்,
அருமையான புத்தக் விமர்சனம் - நல்ல தொரு அறிமுகம் - எளிமையான நெஞ்சம் நெகிழ்விக்கும் சொற்கள். சக்தி பற்றிய ஒரு அருமைப் பதிவு
நல் வாழ்த்துகள்
Post a Comment