Thursday, January 31, 2008

மழைத்துளி


மழைத்துளியொன்று
எனனக்காண வருவதாய்
தென்றல் சொல்லிட
காத்திருக்கிறேன்
என்னை நனைக்காமலும்
அதை என்னில் கரையாமலும்
பாதுகாத்து
பேசிக்கொண்டிருக்க!

அறியாமையால் அன்று
குட்டை நீர்த்துளி நான்
தீர்த்தமாகத் துடித்து
மழைத்துளியோடு கரைய நினைக்க
அது
மழைத்துளியின் அகத்தை
வேதனைப்படுத்தியதாய் அறிந்து
இன்றும்
வேதனையில் என்னகம்!

மன்னித்தாலும் மறந்தாலும்
பரிகசித்துக் கொண்டிருக்கிறது
அதன் வடுக்களின்றும் -ஆனால்
நாளாக நாளாக அவை
மறைந்து கொண்டுவருவதால்
மனதிலொரு சமாதானம்!

பரிசுத்த மழைத்துளி ஒரு
சிப்பிக்குள் வாழ்வுபெற்று
முத்தாய் மலர்ந்திட
காத்திருக்கிறது
அந்த தூரத்து தோணியில்
என் இதயத்தின் நினைவுகள்

காதல்


அவளையே
நினைத்து உருகுகையில்
அவளே வந்தாள் - ஆகா
இனியேது கவலையென்றது
அவனின் உள்ளம் பாவம்!

அவளின் ஆணவப் பார்வையோ
கோடீஸ்வரனின் துணையிருக்க
தனக்கேது கவலையென்றது!

காதல் என்ற உண்மையை உணராதவள்
தாலி என்ற புதிய தங்கத்துண்டிற்காவது
மரியாதை செலுத்தட்டுமே என
வாழ்த்தினது அவனின் அன்புள்ளம்!

காமத்தால் கொச்சைப்படுத்தியும்
பொருளாதார எடைமேடையால்
தரம் பார்த்தும்
தன்னை அசிங்கப்படுத்தி மகிழும்
காதலை அறியா பல காதலர்களின்
இன்றைய விளையாட்டால்
கவலையில் வாடுகிறதே காதல்!

வானத்துக் குழுமம்


வானத்துக் குழுமத்தின் மௌனம்
சில கிளிகளின் பாடல்களால்
சமாதானப்படுகிறது!

வானத்தை நேசிப்பவர்களால்
வானத்தை அடைக்கத் தடை
பலன்பெற்று சேவைசெய்தலை
சௌகரியமாய் மறந்தபின்னும்!

சுயமோகத்திற்குள் புதைந்து
விலாசமில்லா மோகத்தால்
தன்னை வாசிக்க வரும்
நட்சத்திரங்களின் எழுத்தைக்காண
வானத்தின் ஏக்கமேனோ
மௌனத்தில் கரைகிறது!

இதுவும் கடந்து போகட்டும்
முன்கண்ட வெற்றி
மீண்டும் தொடர்வது நிச்சயமென்ற
மனநிலையில் வானத்தின் பார்வை!

அதோ அங்கே மேகமூட்டத்தை
கவலையின் தென்றலொன்று முத்தமிட்டு
ரகசியமாய
அழுது கொண்டிருக்கிறதே!

வானமென்றும் வானம் தான்
புகைப்படங்களைக் கண்டு
சிரித்துக்கொண்டிருக்கும்
நிஜமான வானம்!

Monday, January 7, 2008

மகிழ்கிறது


உனக்கு காதல் கடிதமெழுதும்
ஒவ்வொரு பொழுதும்
என்னில் புத்துயிர்பெற்று
மகிழும் நம் காதல்
உனைக்கண்டதும்
மௌனத்தில் மகிழ்கிறது

பூக்கள்


முதன்முதலாய் நாம்
இந்த பூக்கள் யாருடையதென்ற
கேள்வியோடு சந்திக்க
எனதில்லை என்றேன் நான்
உனதில்லை என்றாய் நீ
உங்கள் இருவருக்கும்
பொதுவானதே நானென்ற
பூக்களின் பார்வைக்கு
பதில்சொல்ல வெட்கப்பட்டு
மௌனத்தில் மகிழ்ந்திருந்தது
நமது மனக்கண்கள்

Saturday, January 5, 2008

சந்தோஷம்


கண்களை
கண்கள் பார்த்து
மகிழ்ந்திட
புன்னகைத்த நம் சந்தோஷத்தை
இன்னமும்
மறக்கமுடியவில்லை!

Friday, January 4, 2008

குளிர்பானம்


விளையாடி மகிழ்ந்த
அந்த கிராமத்தை
பிரிந்து பறக்கும்
நமது உடலில்
மனதை சமாதானம் செய்து
உயிர் கொடுத்துக்கொண்டிருந்தது
ஒரே கோப்பையில்
நாம் குடித்துக்கொண்டிருந்த
அந்த குளிர்பானம்!

ஓவியம் நீ


எங்க தாத்தா
ஓவியரா இருந்தது
தப்பாப்போச்சு!
எவ்வளவு நேரமா
இப்படியே உன் அழகை
படமாக்குவாறோன்னு
நான் புலம்புவதை
அறிந்த
நீ
இடையிடையே
என்னைப் பார்த்து
சிரித்தே சமாதானம்
செய்துகொண்டிருந்தாய்!

இரண்டு மெழுகுவத்திகள்


ஒன்று எனக்காகவும்
இன்னொன்று உனக்காகவும்
பிரார்த்தனை செய்துகொண்டிருந்த
மெழுகுவத்திகளுக்கு
மட்டுமே தெரியும்
நம் இருவரின் பெற்றோர்களும்
சமாதானமாகிவிட வேண்டின
அவசியத்தை!

பூக்கள் இரண்டு


உனக்காகவே மலர்ந்த பூக்களில்
எனக்காக இரண்டை நீயெடுத்தாய்
அதிலொன்றை
உனக்கு
பரிசளிக்க சொன்னாய்!

மனதும்


நீ அழுதுகொண்டே
இருந்தாய்!
காணாமல் போன
பூனைக்குட்டியை
நானெங்கெல்லாம்
தேடினேன்!
குதிரைவண்டியில்
உன்னோடு பயணம் செய்ய
காத்துக்கொண்டிருந்தது
அந்த பூனைக்குட்டியின் மனதும்!

இரண்டு நாள் மழை


விடாத மழை
உனக்கு இரண்டு
நாள் காய்ச்சல்!
உன் பெயரை
மழைத்தண்ணீரில் எழுதினால் - உன்
காய்ச்சல் போகுமென்று
எனக்கு தோன்றியது
நல்லதாப்போச்சு!

காதல் போல்


விளையாட நான் கொண்டு வரும்
ஒவ்வொன்றையும் பத்திரப்படுத்தி வைத்தாய்!
என் மீது உனக்கு எவ்வளவு நேசம்
அவைகளை
இன்னமும் தொலைக்காமல் வைத்திருக்கிறாய்
என் மீதுள்ள காதல்போல்!

மகிழ்கறது பூங்காவும்


அறியாமை
பேரின்பம் தான்!

காதலென்றால் என்னவென்று
ஒன்றுமே அறியாத காலத்தில்
ஒருவருக்கொருவர் நாம்
காதலிக்கிறோமென்று
எழுதி மகிழ்ந்ததை
இன்றுமந்த பூங்கா
நினைத்து நினைத்து
சிரித்துக் கொண்டிருக்கிறது!

இன்றும்


தேடியலைந்து நான்
உனக்கென கொண்டுவந்த - அந்த
முயல் குட்டியை கண்டதும்
எனை உடனடியாக
சில நொடிகள் மறந்து
அந்த முயல் குட்டிக்கு நீ
முத்தம் கொடுத்தது
தவறு தானென்று
எத்தனை முறை சொல்லியும்
என் மனதிற்கு
அந்த கவலையிலிருந்து
வெளியேற முடியவில்லை
இன்றும்!

நீ தேடுவது


உந்தன் பாதம் பட்டதும்
இலைகளும்
பூக்களானது!

உனது கரத்திலிருக்குமந்த
பூவில்
நீ தேடுவதும்
என்னையே!