Wednesday, February 28, 2007

நினைத்து பார்க்கிறேன்


சில வருடம் முன்
ஊர் முழுக்க
மழைவெள்ளத்தால் மூழ்கிய
அந்த மாலை வேளையை!

ஸ்கூட்டரை
அந்த மழைத் தண்ணீரிலிருந்து
மீட்க முயன்று தளர்ந்து போன என்னை
மழையின் தாக்குதலிலிருந்து
காப்பாற்றின அந்த அழகு தேவதையை!

அழகிய வீட்டில் அவள் தனிமையிலா?
என்னை ஏற்கனவே இவள் அறிந்தவளா?
மனிதமிருந்தாலும் இவ்வளவு தைரியமா?
என் மீது இத்தனை கரிசனமா?
நன்றியை எப்படி சொல்வேன்?
இவள் இறைவன் அனுப்பின தேவதையா?
என்று கேட்க நினைத்த
பலநூறு கேள்விகளை!

தலை துவட்ட துண்டு
சூடான தேநீர்
என் மனம் கவர்ந்த புன்னகை
இவைகளை!

அவள் ஊமையென்றறிந்ததும்
கனத்ததுப் போன என் மனதை!

பொறியியல் வல்லுனரவள்
மேற்படிப்பிற்கு
அடுத்த விடியலில் லண்டனுக்கு
செல்லும் செய்தியை
எனக்கு சொன்ன அவளின்
அழகிய எழுத்துக்களை!

மழை நின்றதும்
எனைஅழைத்துச் செல்ல வந்த
என் தந்தையிடம் அவள் வாங்கின
ஆசீர்வாதத்தை!

ஒருவருக்கொருவர்
தொலைபேசி எண்களை
வாங்காத மறதியை!

அன்று முதல் இன்று வரை
என் மனதிலூறும் நன்றி உணர்வுகளை!

என்றாவது அந்த தேவதையை
சந்திப்பேனென்ற நம்பிக்கையை!

நினைத்து பார்க்கிறேன் - நான்
நினைத்து பார்க்கிறேன்!

என்னைப் புரிந்து கொள்


உன்னையே உனக்கு விளங்காத போது
என்னையே நீ விலக்க முயல்வது
முறையோ சொல்!

தீயில் குளித்தவன் என்னை
எரித்து விட முயலாதே!

என்னை மூழ்கடிக்க
கடல்நீரும் போதாதே!

இமயமலையுமெந்தன் உயரம்
வளரத் துடிக்கிறதே!

ஆணவமல்ல
இதெல்லாம் உண்மையே!

காதலே
இன்னுமா புரியவில்லை?

உந்தன் மனதின்
உள்ளுணர்வில்
என்றுமென்றும்
மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்வைக்கும்
வசந்தத் தென்றல்
நான்!

Tuesday, February 20, 2007

காதலியே!

சந்திரதேவதையே!
சிந்திக்க நேரமிருந்தால்-உனை
சந்தித்தும் மகிழ்ந்திருப்பேன்!

எந்தன் இயந்திர வாழ்க்கையின்
இதயத்துடிப்பை உணர்ந்துந்தன்
நினைவுகளின் தென்றலில் தான்!

ஞாபகங்கள் வெட்கப்படுகிறது
என் இதழை ஈரமாக்கின
உன் இதழ்களை நினைத்ததும்!

அழகிய பூங்காவில் நாம் !

எனது விரல்களை வரவேற்ற
மாங்கனிகளுக்கும் மயக்கம்!

முத்தமிடும் அந்த தருணங்களில்
தேனில் ஊறின கனிகளாகினோம்

நம் பாதங்களும்
முத்தமிட்டுக்கொண்டன...

பூங்காவின் சிலைகளெல்லாம்
நமது லீலைகள் கண்டு
வியந்தவைகளோ...!

விடியற்காலை
அன்று
நம்மைக் கண்டதும்
சூரிய உதயம் தாமதமென்றது!

நமது முத்த மழை கண்டு
சித்திரமாத வறுமை வானம்
அன்பளிப்பாய்
பொழிந்தன பூமழை!

நமைத்தவிர யாருமில்லா
உலகமதில் மகிழ்ந்தோம்
ஆனாலின்று
நாமிருவருமில்லா உலகத்தில்
நம்மைத் தேடுகிறது - பாவம்
காதல்!

புரியவில்லை

இதுவரையில் நானுன்னன கண்டதில்லை
என் பார்வை உனைக்காண தேடவில்லை
நம் மனங்கள் இரண்டுமென்றும் பிரிவதில்லை
நம் சந்திப்பின் தேவையென்ன புரியவில்லை !

Sunday, February 18, 2007

விமர்சனம்

எலும்பில்லாத நாக்கெதற்கு
எதை வேண்டுமென்றாலும் பேசவா?

மூவாயிரம் கோடி முதலீடு செய்த
முதலாளியின் தீர்மானங்களை
அறிய முடியா முட்டாள் சொல்கிறான்
முதலாளி முட்டாளென்று! -அந்த
குறை சொல்பவன் யாரென்று கேட்டால்
அதை ஆங்கிலத்தில் சொல்கிறான்
Trainee clerk under probation!!!

வெயிலில் விளையாடும் வீரர்களை
குளு குளு அறையிலிருந்து விமர்சனம் செய்யும்
பூப்பந்தைக் கூட தூக்க முடியா கோழைகள்!

சுதந்திரம், விமர்சனம் செய்ய அதிகாரம்,
ஜனநாயக நாட்டு மன்னர்கள், சுயகருத்துக்கள் என..
இந்த நியாயமான தலைப்புகளின் நிழல்களின் கீழ்
எத்தனை எத்தனை அநியாய விமர்சனங்கள்!!

என் இனிய கவிதைகளே...


விமர்சனம்

என் இனிய கவிதைகளே" என்று தலைப்பை தேடி அலுத்துப் போகாமல் கவிதையையே தலைப்பாக வைத்திருக்கின்றார் கவிஞர் சுரேஷ்.

கவிதைப் புத்தகத்தை சமர்ப்பிக்கின்றோம் என்று பெற்றோர்கள் பெயரையோ அல்லது தமிழ் ஆசிரியர்கள் பெயரையோ அல்லது தனக்கு உதவி செய்தோர்கள் பெயரையோ அல்லது இறைவனின் பெயரையோ குறிப்பிடுவார்கள்.

பாசமுள்ள எனது தாய்மாமன் திரு பாலகிருஷ்ணன் அவர்களே
தாயின் வயிற்றில் நான் ஆறு மாதம்
அப்பொழுது உன் மரணம்

ஆனால் இவரோ சமர்பணத்தில் தான் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே மறைந்து போன தனது மாமா திரு. பாலகிருஷ்ணனை குறிப்பிட்டிருப்பது வித்தியாசமாகவும் இவர் தனது மாமாவின் மீது வைத்த அளவுக்கதிகமான பாசத்தையும் காட்டுகின்றது.

தாயையே மதிக்காத இந்தக் காலத்தில் தாய்மாமாவை மதிக்கின்ற சுரேஷ் எனக்கு வித்தியாசமாய் தோன்றுகின்றார். இவர் தாய்மாமாவின் மீது வைத்த பற்றில் அவர் தாயின் மதிப்பு உயர்ந்தே நிற்கின்றது.

இலக்கண விதிமுறைகள் கடைப்பிடிக்காத தற்போதைய பெருன்பான்மையான கவிஞர்களைப் போலவே தானும் இலக்கணக்கட்டுப்பாடு என்னும் கடிவாளத்தை என்னாலும் பயன்படுத்தமுடியவில்லை எனவும் தமிழ் வாசிக்கத் தெரிந்த எவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக இருக்கும் எனவும் அவரே கூறிவிடுவதால் கவிதைகளில் இலக்கணத்தை ஆராயத் தேவையில்லை. சாதாரண நடையில் யாவரும் வாசிக்கும்படி இருக்கின்றது.

ஆரம்பக்கவிதையே தமிழ்ப்பற்றில்தான் ஆரம்பிக்கின்றது. "அதிசயம் ஆனால் உண்மை" என்ற கவிதையில் ஓர் தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்துப் பார்த்தால்

எல்லாப் போர்களும் நின்றுவிட
ஆயதங்களோ கண்காட்சி மாளிகைகளில்

சிறைச்சாலைகளெல்லாம்
மனநல மருத்துவமனைகளாய் பரிணாமங்கள்

கவிதைக்கு ஓர் பல்கலைக்கழகம்

அட ஒரு தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்தால் கூட உலகச்சமாதானம் கொண்டு வந்துவிடுவானோ? இது அதிகப்படியான சிந்தனையே என்றாலும் இதில் அவருடைய அதீத தமிழ்ப்பற்று தெரிகின்றது.

தனது தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளை வெவ்வேறு கவிதைகளில் விவரிக்கின்றார் "ஏழைச்சிறுமியும் ரோஜாச்செடியும்" என்ற கவிதையில் ரோஜாச்செடி ஒன்றினை வளர்த்து

செடியே
உனது முதல் ரோஜாச்செடி
நம் இருவருக்குமல்ல
பிறகு?
என் தமிழ்தெய்வம்
எனதன்பு
தமிழ் ஆசிரியருக்கு.

அது தருகின்ற முதற்பூவை தமிழ் ஆசிரியருக்குக்தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கின்றார்
குழந்தைக்கு தாய் பாடுகின்ற சாதாரண தாலாட்டுக்களை கண்டிருப்போம். ஆனால்


உந்தன்
தந்தை பாவம் செய்ததாலே
இந்த
எய்ட்ஸ்தாயின் தாலாட்டு

என்று "தாலாட்டு" என்ற கவிதையில் எய்ட்ஸ் தாய் தாலாட்டு பாடுவதாக சோகத்தையும் வித்தியாசமான பார்வையில் சொல்லியிருக்கின்றார்.

"பிரிவின் உணர்ச்சிகள்" என்ற கவிதையில் மனைவியைப் பிரிந்த பிரிவின் உணர்ச்சியை சொல்லி புலம்பி இறுதியில்

உனை நான் கண்டதும்
கேட்பது முத்தமல்ல
உனது
காலில் விழுந்து மன்னிப்பு

என்று மனைவி உயிருடன் இருக்கும்பொழுது அவளை மதிக்கத்தவறிய அல்லது ஏதோ தவறு செய்துவிட்டு அவள் இறந்த பிறகு அவளிடம் மன்னிப்பு கேட்கத் துடிக்கும் ஓர் கணவனின் யதார்த்தம் தெரிகிறது

வாழுகின்ற காலங்களில் பெற்றோரின் நிழலில் அவர்களைச் சார்ந்து இருந்துவிட்டு அவர்களின் வயதான காலங்களில் அவர்களை மதிக்கத் தவறும் இன்றைய சமுகத்திற்காக ஒரு தாயின் பார்வையில் "அம்மா" என்ற கவிதை பெற்றோர்களை நேசிக்கும் மகன்களின் மனதில் ஈரத்தை வரவழைக்கின்றது.

நிழல் கிடைக்க
நான் உன்னை வளர்க்க
நீ எனைத்தள்ளிவைத்து
அழகு காணும்
கொடுமையிது காண
நான் எத்தனை காலம்தான்
வாழ்வேனோ?

என்று மகனால் ஒதுக்கப்பட்ட தாய் கண்கலங்கி கூறி இறுதியாக

தலையணை கீழ் கொஞ்சம்
பணம் வைத்துள்ளேன்
எனது சவப்பெட்டி வாங்க
அது உதவும் கலங்காதே!

ஒரே ஒரு விண்ணப்பம்
எனது பிறந்தநாளைப்போல
என் மரணநாளையும்
தயவாக மறந்து விடு

என்று புலம்புவது வீட்டுத்திண்ணையில் அல்லது முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை ஒதுக்கி வைக்கின்ற மகன்களுக்கெல்லாம் ஒரு சாட்டையடி. தாயைப்பற்றி சமாதானம் என்ற கவிதையிலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தாய் மட்டும்தான் மகன் குற்றம் செய்தாலும் அவனை மன்னிக்கும் குணம் படைத்தவள் என்பதை

உலகில் எல்லாம்
மன்னித்து மறக்கும்
ஒரே ஒரு
மனித நீதிமன்றம்
தாய் மனது என்ற இடத்தில்
மட்டும்தான்
அதில் எத்தனை புனிதம்

தாயின் மறுபெயர் சமாதானம்

என்று குறிப்பிட்டிருக்கின்றார். கவிதைகளின் நீளம் கவிதைத்தன்மையை கொஞ்சம் குறைத்தாலும் கவிதை நயம் இல்லாத யதார்த்தமான வரிகள் அவர் சொல்ல வந்த கருத்துக்கள் அனைவரையும் போய்ச் சேரவேண்டும் என்பதைக் காட்டுகின்றது

அதுபோல தந்தைக்கு எழுதுகின்ற ஒரு கவிதையில் மரணித்திற்கு வருகின்ற
மனிதர்களின் எண்ணிக்கைதான் ஒரு மனிதனின் நடத்தையை தீர்மானிக்கும் என்பதை

வீட்டைப் பூச்சந்தையாக்கி
வீதியெல்லாம்
பூமழை பொழிய உன்
இறுதி பயணத்தின்
அளவில்லாக் கூட்டம் சொன்னது
உந்தன் மனிதநேயம்

என்று சொல்லி தந்தையின் மீது அளவில்லா பாசத்தை தெளிவு படுத்தியிருக்கின்றார்.


மனைவியின் கனவாக வந்த "செய்தி" என்ற கவிதையில்

ஒரே ஒரு விண்ணப்பம்
எனது ஆத்மா
சாந்தி அடைய
தயவாக ஒரு
நல்லவரை மறுமணம் செய்

என்று கணவன் மனைவிக்கு எழுதி வைத்ததாக சொல்லும் அவரது மன ஓட்டத்தில் ஓர் மனிதநேயமுள்ள கணவனாக தெரிகின்றார்

மனைவியின் பிரிவில் கணவனும் கணவனை நினைத்து மனைவியும் என்று சில கவிதைகளில் அவரது எண்ணங்களின் தூய்மை பளிச்சிடுகின்றது

மீன்கள் என்றவுடன் சிலருக்கு எச்சில் ஊறும். இவருக்கோ கற்பனை ஊறியிருக்கின்றது.

சுனாமி உங்களைத்தாக்க அதை
எதிர்த்து கரைக்கு வந்து
தற்கொலை தவறென்று தெரிந்தும்
உங்கள் மீது பாசம் காட்டின
எங்கள் மீது
ஆதங்கமும் இல்லையா?

என்று கேட்டிருப்பது வித்தியாசமான சிந்தனை. இத்தனை கோடி மக்களுக்காக நாங்கள் உணவாக மாறுவதில் பெருமைப்படுகிறோம் என்று மீன்களின் மனிதநேயத்தைக் கூறி

அதோ அங்கே வலையிடும்
சத்தம் கேட்கிறது
முத்தம் தேடி ஓடுகிறேன் - வணக்கம்

கவலை வேண்டாம்
நாளை உங்கள் வீட்டு குழம்பில்
நானும் இருப்பேன்

என்று அழகாய் முடித்திருக்கின்றார் . இப்படிச் சொல்லியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்


நாளை உங்கள் வீட்டு
குழம்பில் கூட
கொதித்துக்கொண்டிருக்கலாம்..


இவருடய கவிதையின் ஒவ்வொரு முடிவுகளும் ரஜினி படத்தின் பஞ்ச் டயலாக் எதிர்பார்க்கும் ரசிகனைப்போல எதிர்பார்க்க வைத்திருக்கின்றார்.

வானத்தோடு பேசுகின்ற கவிஞர் . அதில் கூட

வானமே நீ
கனவு காண்பாயா?
உலக சமாதானம் வரட்டும்
பிறகு
அதாவது நிஜமாகட்டும்

என்று உலக சமாதானத்திற்காக ஆசைப்படுகின்றார்.. வானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் என்ன சம்பந்தம்?. வானத்தின் கீழ் நாம் இருக்கின்றதால் வானத்திடம் முறையிடுகின்றாரோ..? தனது வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்துகின்றார்

இப்பொழுதுள்ள அரசியல் வாழ்க்கையின் கசப்புணர்வில் எல்லாருமே அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியல்வாதிகளின் மீது வெறுப்புணர்வுமே கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர் "அவர்களும் மனிதர்களே" என்ற கவிதையில் அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கின்றார்

பாவம் அரசியல் வாதிகள் என்று அவர்கள் மீது இரக்கப்பட்டு மக்கள் மட்டும் என்ன நியாயமாகவா நடக்கின்றார்கள் என்று ஆதங்கப்பட்டு நம்மை முதலில் திருத்திக் கொள்வோம்.

அதுவரையிலாவது
அரசியல்வாதிகளைத் திட்டாதீர்கள்
அவர்களும் மனிதர்களே

என்று முடித்திருக்கின்றார். எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஒருவேளை இவருக்கு சொந்தக்காரர்கள் எவரேனும் அரசியலில் இருப்பார்களோ என்று..?

சமுதாயத்தில் தான் காணுகின்ற நிகழ்வுகளைக் கண்டு மனம் வருந்துகின்றார். சாலையில் காணுகின்ற ஆட்டோக்காரனை நினைத்துக் கூட மனம் வருந்தி கவிதை ஒன்றை எழுதுகின்றார். தனது "ஆட்டோக்காரன்" என்ற கவிதையில்

ஆறுமணி நேரம்
ஆட்டோ ஓட்டினாலே
நீங்களும் பெண்களின்
பிரசவ வலியை அறிவீர்கள்

என்று ஆட்டோ ஓட்டுதலில் உள்ள சோகங்களையும் ஒரு ஆட்டோக்காரனின் பார்வையில் இலேசான நகைச்சுவைத் தொனியில் சொல்லியிருக்கின்றார்.

நமக்கெல்லாம் சவாரியின் போது மீட்டருக்கு மேல் கேட்கின்ற ஆட்டோக்காரன் இவரின் இதயத்தின் மீது அதிவேகமாய் சவாரி செய்திருக்கின்றான். பாருங்களேன்..இறுதியாய் முடிக்கும்பொழுது

இன்று பிறந்தவன்
என்றும் ஒரு ஆட்டோக்காரன்
ஆக வேண்டாமென்று
இரகசியமாய் பிரார்த்திப்பேன்
இது சத்தியம்
என்று ஒரு ஆட்டோக்காரனாய் நிலைமாறி அவர்களுடைய உச்சக்கட்ட வேதனைகளை வடித்திருக்கின்றார்.


எதற்குத்தான் கவிதை எழுத வேண்டும் என்ற விதிமுறைகளில்லாமல் எல்லாவற்றின் மீதும் தனது பார்வையின் எழுதுகோலை பதித்திருக்கின்றார்

தலைவலி வந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்..? அனாசின் எடுத்துக்கொள்ளுவோம் ஆனால் இவரோ கவிதையை கையில் எடுத்திருக்கின்றார் .

தலைவலி வருகின்ற காரணங்களை பட்டியலிட்டு பிறகு அதனை வராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்

தலைவலி என்றால் என்ன
என்று
வரும் காலம்
கேள்விக் கேட்கப்புரட்சி செய்வோம்

என்று முடித்திருக்கின்றார். தலைவலியை ஒழிப்பதற்கு புரட்சி செய்யும் முதல் கவிஞர் இவர்தான். கொஞ்சம் விட்டால் "தலைவலி ஒழிக! தலைவலி ஒழிக" என்று மக்களை தூண்டி விட்டு போராட வைத்துவிடுவார் போல இருக்கின்றது.

தலைவலி வருவதற்கான காரணங்களை அறிய ஏதேனும் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டிருப்பாரா? இல்லை இவருக்குள்ளேயே ஒரு மருத்துவனும் இருக்கின்றானா? என்று நம்மை சிந்திக்க வைக்கின்றது.


"ஒரு பெண்ணின் கதை" என்ற கவிதையில் கணவனை விபத்தில் இழந்த இளம்பெண் ஒருத்தி தன் கண்களுக்கு முன்னால் குடும்பம் சகிதமாய் செல்லுகின்ற தோழிகள் மற்றும் கணவனோடு கைகோர்த்துக் கொண்டு செல்லுபவர்கள் எல்லாவற்றையும் கண்டு ஏங்கும் உணர்ச்சியினை வடித்திருக்கின்றார். தனது சோகம் என்றுதான் தீருமோ என்பதை

அன்றும் எனது கண்ணீர்
நான் உறங்கியதும் உறங்கியது.
மறுநாள்
நான் விழித்ததும் விழிக்க

என்று முடித்து தனக்கு என்றுமே சோகம்தான் மிச்சம் என்று அப்பெண்ணின் ஏக்கத்தை வடித்திருக்கின்றார்..


கண்களுக்கு கூட மனிதநேயக் கண்கள் கொண்டு கவிதை வடித்திருக்கின்றார்

எங்கள் பக்கத்து வீட்டக்காரர்
திரு. மூக்கின் வீட்டிலிருந்து
உதவியாளர் என்ற பெயரில்
வேலை செய்யும்
திரு. கண்ணாடிக்குக் கொடுக்கும்
மரியாதை கூட
எங்களுக்கு இல்லையா?

என்று கண்ணாடி - மூக்கிற்குக் கூட திரு. சுரேஷ் அவர்கள் திரு போட்டு அழைத்திருப்பது கவிதைக்கு புதியதாய் இருக்கின்றது. கண்களை பாதுகாக்கச் சொல்லிவிட்டு

மனிதா! நீ மரணப்பட்டாலும்
நாங்கள் உடனே இறப்பதில்லை
நாங்கள் இறப்பதற்குள்
உனது மரணத்தை
நாலுபேர் எடுப்பதற்குள்
கண்ணிழந்த ஒருவருக்கு
நாங்கள் வாழ உயில் எழுது

என்று கண் தானம் செய்வதை வலியுறுத்துகின்றார். தான் இறந்த பிறகு கூட தனது கண்கள் இந்த உலகத்தை யார் மூலமாவது பார்த்துக்கொண்டிருக்கட்டும் என்று இரக்கப்படும் கவிஞர் இவர்.

மனைவிக்கு பிறந்த நாளில் விருப்பத்தோடு சேலை வாங்கிக் கொடுத்து அவள் அதனை பிடிக்கவில்லை என்று ஒதுக்கும்பொழுது மனம் வேதனைப்பட்டு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளன் என்று சொல்லி கிண்டலடிக்கப்பட்டதால் கமல் மனம் நொந்து ஒரு சோகப்பாட்டு படிப்பதைப் போல இவரும் நொந்து வானத்தை நோக்கி தனது குறைகளை சொல்லி புலம்புகின்றார்.

அதனைக் கேட்ட வானம் இரவு முழுவதும் மழை பொழிந்ததது தன் சோகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத்தான் என்பதை

தனக்காக இரவு முழுவதும் அழுத
வானமும் பூமியும்
அவனது நல்ல ஸ்நேகிதர்கள்
என்று மனம் குளிர்ந்தான்

என்று சொல்லியிருக்கின்றார். அட இது போன்ற சூழ்நிலைகளை எல்லாம் கவிதைக்கென்று எப்படி தேர்ந்தெடுக்கின்றாரோ தெரியவில்லை. இவருக்குள் சூழ்நிலைகளை தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு கதா ஆசிரியரே ஒளிந்திருக்கின்றார்

பெரிய மனுஷத்தனமாய் பல சிந்திக்க வைக்கும் கேள்விகளை "சிறுவனின் கேள்விகள்" என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். அதில் என்னைக் கவர்ந்தவை

மரணித்தபிறகும்
வாழ்க்கை உண்டு என்ற
நம்பிக்கை பொய் என்றால்
பக்தர்களில் எத்தனைபேர்
அட்டகாசத்திற்கு அடிமையாவார்கள்

பாதிக்கப்பட்டவன் எதிர்த்தால்
அவன் பெயர்
தீவிரவாதியா எப்படி?

என்று நடுநிலைவாதிகளுக்கு எழும்புகின்ற கேள்விகளை கவிதைப்படுத்தியிருக்கின்றார்.

"காலம் நமது தோழன்" என்ற கவிதையில் காலம் நல்ல மருந்து என்பதை வித்தியாசமாய் சொல்லியிருக்கின்றார். "காலப்போக்கில் காயங்கள். மறைந்து விடும் மாயங்கள் "என்று ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலை ஞாபகப்படுத்துகின்றார்.

அவரவர்களுக்கு வருகின்ற மனவலிக்கெல்லாம் காலம்தான் தீர்வு என்பதை

இத்தனை மனவலிகளிலிருந்து
வேண்டுமா விடுதலை?
இந்தக்கவிதையை அடுத்தமாதம்
இதே நாளில் படித்துப் பாருங்கள்

காலம் நல்ல மருந்து

என்று காயங்களுக்கு காலத்தின் ஆறுதலை கவிதையில் தந்திருக்கின்றார். பார்ப்போம் அடுத்த மாதம் இதே கவிதையை இதே சூழ்நிலையினில் படிக்க முடிகின்றதா என்று?

அரசியலால் நாட்டைக் வளர்க்கின்றார்களோ இல்லையோ தனது வீட்டை வளர்க்கின்ற அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சுயநலமின்றி மக்களுக்காய் உழைத்து மறைந்த தனக்குப் பிடித்த தலைவரான காமராசர் பற்றிய கவிதையில் குறிப்பிடுகின்றார்

நீ முதலமைச்சர் ஆனபோது
உனது ஊர் கிராமத்தில்
முதல் ஏழை
உன் ஆத்தாதான்

இந்த கவிதை வரிகளில் நான் உட்கார்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மனதில் ஒரு சோகம் அப்பிக்கொள்ள வைக்கும் வரிகள் இது.

மறைந்த பிறகுதான் கவிஞர்களும் அவர்களது கவிதைகளும் மதிக்கப்படுகின்றன என்பதை "எழுத்துக்கள்" என்ற கவிதையில்

இறுதிப்படுக்கை மூடியதும்
மண்களால் எனக்கு பூ மழை
அன்று முதல்
கவிஞன் எந்தன் எழுத்துக்கள்
கண்டிப்பாய் பிரபலமாகும்

என்று கூறி கவிதையை முடிக்கின்றார். அவருடைய எழுத்துக்கள் அவர் மண்களால் மூடப்படுவதற்கு முன்பே அவரை மாலைகளால் மூடட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

சமாதானம் - தாய்பாசம் - உலக அமைதி - பிறருக்காய் இரங்கும் மனம்- தொழிலாளிகளின் வேதனை - மனைவியின் மீது பிரியம் - ஆறுதல் - அறிவுரை என்று எல்லாவற்றைப் பற்றியும் அலசுகின்றார்

கவிதைகளின் நீளமும் சொல்ல வந்த கருத்துக்கள் அதிகமான வார்த்தைத் திணிப்புகளாக இருப்பது போல தோன்றுவதால் படிக்கும்பொழுது அலுப்பு வருகிறது என்றாலும் தன் உணர்வுகளை வார்த்தைகளில் முற்றிலுமாய் தெரிவித்து விடவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியிருக்கின்றார்.

பெருன்பான்மையான கவிதைகள் உரைநடை வடிவில் வந்து கவிதைகளாக உருமாறுகின்றது. ஆகவே இதுபோன்ற குறைகளை நண்பர் சுரேஷ் அவர்கள் தவிர்த்தால் கருத்துக்கள் சிதைபடாமல் நீளத்தை குறைத்திருந்தால் அவரது சிந்தனைகளில் தோன்றிய உணர்ச்சிகள் மக்களை இன்னமும் எளிதாய் சென்றடையும் .

சமூகத்தை தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் பாதிப்புகள் கண்டு ஒவ்வொரு மனிதநேயமுள்ள மனிதனும் உணர்ச்சிவசப்படுகின்றான். அந்த மனிதனின் உணர்ச்சிகள் ஒவ்வொரு விதங்களில் வெளிப்படுகின்றது.

பாடல்கள் மூலமாக - நடனங்கள் மூலமாக - ஓவியம் மூலமாக - எழுத்துக்கள் மூலமாக இப்படி வெவ்வேறு பரிணாமங்களில மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். அதுபோல் நண்பர் சுரேஷ் கவிதைகள் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.

நிறைய எழுத வேண்டும் என்றும் காணுகின்ற எல்லா நிகழ்வுகளையும் கவிதையாக்கவேண்டும் - தனது சோகங்களையும் - மகிழ்ச்சிகளையும் கவிதைகள் மூலமாகவே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக நண்பர் சுரேஷ்க்கு இருக்கின்றது. அவரது ஆர்வத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.


கவிதைப்புத்தகத்தை மூடிய பிறகும் ஆட்டோக்காரன் - மனைவியின் பிரிவு - தாயின் தனிமை - தந்தையின் மரணம் -போன்ற சோகங்களை தடவுகின்ற சில கவிதைகள் இதயத்தைச் சுற்றி பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றன. என் கவிதைகளே என்று தலைப்பு வைத்திருந்தாலும் படித்தபிறகு அவைகள் நம் கவிதைகளாகி விடுகின்றன.


கவிதைப்புத்தகம் கிடைக்குமிடம்


திருமகள் நிலையம்
55 - ( புதிய எண் 16) வெங்கட் நாராயணா சாலை
தி.நகர் - சென்னை - 600 017

தொலைபேசி : 91 - 44 - 24342899 24327696
தொலைநகல் : 91 - 44 - 24341559



கவிஞரின் முகவரி :

என். சுரேஷ்
9840344175
nsureshchennai@gmail.com

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

உன்னையே தேடும் கவிதைகள்...



அணிந்துரை
==========

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... என்றார், பாரதியின் பாசறையில் பயின்ற பாவேந்தர்! அந்த தமிழ், இன்பத்தமிழ், நம் தமிழாக வாய்த்தது நாமனைவரும் பெற்ற பேறு! ஒரு காலத்தில் ஒரு சிறுநிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மொழி, இன்று உலகளாவிய மொழியாக மலர்ந்துள்ளதை
நாம் கணும்போது, நமது உள்ளம் பூத்துபோகிறது!

கவிஞன் என்பவன் தான் வாழும் சமுதாயத்தின் தாக்கம் உள்ளவன். வேதனையின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் எழுச்சி, தோல்வியின் பொசுங்கலில் உயிர்த்தெழும் பறவையைப்போல, சேரிகளில் மணக்கும் சந்தனத்தையும்,உப்பரிகையில் எடுக்கும் முடைநாற்றங்க்களையும், மதம், பணம் கடந்து வாழும் காதலையும், மனிதநேயம் வெளிப்பட வேண்டியநேரத்தில் மௌனமாயிருப்போரையும், சமூக அக்கரையோடு ஆர்ப்பரித்து உரத்து உலகிற்குச்சொல்லி சிந்தனை விதையை எவன் விதைக்கிறானோ, அவனே கவிஞனாக முகம்காட்ட முடியும்.

அந்த வகையில் சகோதரர் கவிஞர் சுரேஷ் உணர்ச்சிகயை உயிராகக் கொண்ட கவிஞராக வலம் வருகிறார்.

வெளிநாடுவாழ் தமிழர்கள், தாயகத்தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று அன்பு எச்சரிக்கை விடுகிறார் கவிஞர். தமிழின்பால் ஈர்க்கப்பட்டு தமிழில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுகின்ற இவர் படைப்புகள் தலைப்பில் உண்மை பேசும் போது இவர் கவிதா ஆர்வாலர்கள் மனதில் குன்றென உயர்கிறார்!

தாய்மை, தோழமை, கூடா நட்பு, வேண்டுகோள், பெரிய பெரிய ஆசை என்று ஏராளமாய் பிறருக்காய், உணர்வாய்ச்சுரந்த இவரின் கவிதைகளை கவிதை தாகமுள்ளோர் பருகி ஆனந்திக்கலாம்!

கவிதை என்றாலே கற்பனை என்ற எண்ணம் கவிழ்ந்து உண்மையை நிமிர வைத்திருப்பதை உணரலாம். சமூகத்தின் அவலங்களுக்கு செவி சாய்ந்து காகிதத்தில் வடித்தெடுக்கும் புதுமைச்சிற்பி என்றால் அது மிகையில்லை!

பிச்சைக்காரியைக் கூட சகோதரியாக ஏற்றுக்கொள்கின்ற மனம் எல்லோருக்கும் வாய்த்து விடாது; கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது; எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னேறிய நாடுகளில் சிலவற்றைப் பட்டியலிட்டு, இப்படி ஒரு கலவையாக இந்தியா புதுவார்ப்பாய் மாறவேண்டும் என்று புதியவை தேடுதல் கவிதையில் அதிபர் அப்துல்கலாம் கனவை கவிதையாய் வடித்துள்ளார்.

இலட்சாதிபதிகள் கோடீசுவரர்களாகவும், கோடீசுவரர்கள் மேன்மேலும் கோடிகளைக் குவிப்பதும் சினிமாவும் அரசியலும் ஏழைகளை மூலதனமாய் வைத்து தங்கள் வெற்றிப் படிகளைக் கட்டுவது ஒருபுறமும் ஏழைகள் நிலையில் எந்த மாற்றமுமில்லாமல் ஏழைமக்கள் பட்டினியால் மரித்துக்கொண்டிருப்பது ஒருபுறாமிருந்தாலும் இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வதை கேட்டு நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் முகத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!

பிறந்த வீட்டை மறந்து புகுந்தவீட்டை பிறந்த வீடாகக்கருதி தன்னை, அன்னையாக, மனைவியாக அக்காள், தங்க்கை, அண்ணி, சித்தி, பெரியம்மா என்று பல்வேறு முகங்காட்டி, தன்னை இணைத்துக்கொண்ட குடும்பத்திற்காய் சேவகியாய் வலம் வரும் அண்ணி!


இந்த மூன்றெழுத்தில் குடுமபமே உயிரின் உயிராய் உறைந்து கிடப்பதையும் ஒருநாள் அந்த அன்பு ஜீவன் கொடிய நோயின் தாக்குதலில் மருத்துவமனையில் அடைக்கலமாகி விட்டதை நெஞ்சுருகச் சொல்லும்போது... அடடே... பாசத்தின் நேசங்களில் கசியும் இரத்தக்கண்ணீரில் வாசிக்கும் எல்லோரையும் கரைய வைக்கிறார் கவிஞர் சுரேஷ்!

கரடுமுரடான நிலத்தைக்கூட தன் உழைப்பால் சீர்திருத்தி நந்தவனமாக்கும் அதிசயமும், வறட்சியால் நில உதடு வெடித்து தாகத்துக்கு ஏங்கும் கிணற்றை ஆழப்படுத்தியோ, புதிய கிணறு ஒன்றையோ தோண்டிச்சுரந்த நீர்பாய்ச்சி நில மகளைக்குளிர்வித்து அவள் பூக்கும் புன்னகை என்ற கம்பீர விளைச்சல் கூட விவசாயியின் வியர்வைக்கண்ணீர்த் துளியால் என்பதை கவிஞர் சுரேஷ் ஆச்சரியித்து அதிசயக்கிறார்.

என்னதான் அதிசயம் கண்டாலும், காடுவெள்ஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் இன்னொரு முகத்தையே அதிசயம் கவிதையில் பார்க்கிறேன்.

சில கவிதைகளை இதுவெல்லாம் கவிதையா? என்று சிலர் முகஞ்சுளிக்கலாம்; ஆனாலும் அக்கவிதியின் ஆதாரசுருதியிலே அகந்தோய்ந்து அவரின் எண்ண அதிர்வுகள் எழுச்சியோடு சிறகு விரித்ததாகத் தான் நான் கருதுகிறேன்.

தமிழின்பால் கொண்ட காதலால் தமிழுக்காக தமிழருக்காய் தமிழுணர்வோடு எழுதுகிற
சகோத்ரர் கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு தமிழர்களான நாம் ஊக்கமும் உற்சாகமும் அளிக்காவிட்டால் பின் யார்?

இந்தச்சமுதாய அமைப்பை தலைகீழாக மாற்றி அமைக்க முயலும் இவரின் உள்ளுணர்வுகளின் வழியிலே... இது இவரது இரண்டாவது புத்த்கமாகும்!


காலமறிந்து கூவும் சேவல்! காலம் உருவாக்கிய கவிஞர் இவர், ஆனாலும் காலத்தின் பிடர்பிடித்து உந்திப் பெரும் புரட்சி செய்யவிருக்கின்ற கவிஞர் என்பதால் படித்து இன்புறுங்க்கள்!


சி.எஸ். ஆல்பர்ட் பெர்னாண்டோ
அமெரிக்கா
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலைதி நகர்,
சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559

எண்ணங்களின் ஊர்வலம்

வாழ்த்துரை
=========

எண்ணங்கள் சில போதில் புயலாய், பூவாய், புனலாய், புதிராக வடிவெடுக்கக் கூடும் என்பதற்கு இந்நூல் சாட்சி. இந்நூலாசிரியர் திரு என் சுரேஷ் தன் எண்ணங்களை ஐம்பது பிம்பங்களாக வடித்துக்கிறார். பெயர் சூட்டப் படாத எண்ணக் குழுந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பு எனக்கு இவர் தன் எண்ணங்களை ஆழ்ந்து நோக்கிய போது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டு மனத்தில் தோன்றிய எண்ணங்கள் ஊர்வலம் செல்கின்றன. எனவே,

"எண்ணங்களின் ஊர்வலம்" என்பதையே இந்நூலுக்கு பெயராகச் சூட்டியிருக்கிறேன்.

இந்நூலுள், மனிதநேயம் காட்சியளிக்கிறது. இயல்பாகவே இளகிய மனங்கொண்ட திரு என். சுரேஷ், தாம் செல்லுமிடங்களில்லாம் தம் மனதை பாதித்த காட்சிகளை தமது எண்ணங்களில் பதிய வைக்கிறார். பல இடங்களில் இவருக்கு ஏற்படும். வருத்தம் நம்மை நெகிழ வைக்கிறது.

நாகரீகத்தால் மேன்மையுற்ற பலர் முதியோர் இல்லங்க்களில், தங்க்களுக்கு வேண்டிய கல்வி, செல்வம், பிள்ளை, உற்றார், உறவினர் ஆகிய எல்லாம் இருந்தும் அனாதைகள்

எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் !
எங்களை மறக்காமல்
எப்போழுதாவது
எங்களை பார்க்க வா!

என்று, முதியோர் இல்லத்தில் அன்பிற்காக ஏங்கிடும் அனாதைகள்.

இயந்திரங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயந்திரமாகவே மாறிவிட்ட மனித வாழ்க்கைக்குத் தேவை அன்பு. அந்த அன்பு இல்லாமல் மானுடம் செத்து விட்டதே!

மானுடத்தின் கைகளில் விலங்க்கு !
விடுதலை சொல்ல வந்த
மானுடம் சிலுவையில்!

என்று, எண்ணங்களால் சிலிர்த்தெடுக்கிறார்.

மனித குணம் சில வேளைகளில் மிருகத்தனம் கொள்வதைக் காண்கிறோம். அவ்வாறாகும் மிருக மனதை கொல்ல வேண்டும்! அதற்கு ஒரே மருந்து அன்பு ! தீர்ப்பும் எழுதுகிறார்.

பட்டினி கிடந்தவன் உணவுண்டதும்
காத்திருக்கும்
அவனது
பத்து நாள் தூக்கம்

என்று, வறுமையைப் படம் பிடித்த ஆசிரியர்,

பட்டினியின் உச்சத்திலும்
தொட்டிலிட
கட்டிலில் ஆட்டம் போடும்
முட்டாள் காமத்தின் அசிங்கம்

என்று, பட்டினிச் சமூகத்தை சாடுகிறார். பசியால் தூங்குகிறது குழந்தை; பசியால் துள்ளுகிறது காமம், என்னும் கேள்விக் கணை இவரின் சாடல்.

விருந்தினர் சென்றதும்
கணவனுக்கும் மனைவிக்கும்
நடக்கும் இரகசியச்சண்டை

என்று, போலியான மனிதர்களை காட்சியாக்குகிறார்.

நன்றியில்லாப் பிள்ளைகளிடம்
பிச்சையெடுத்து உயிர் வாழும்
முதியோர்களின்
கண்ணீர்த் துளிகள்

என்று, பிள்ளைகளால் புறந்தள்ளப்பட்ட பெற்றோர்களின் அவல நிலையைக் கண்டு அழவைக்கின்றார்.

'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் சொல்எனுஞ் சொல்'

என்னும் குறல் கூறும் மகன்களைக் காண விரும்புவது தெரிகிறது.

சில வேளைகளில் சிலரின் கருத்துக்கள் சமூகத்துக்கு தேவைப்படும் மருந்தாக இருக்கு. ஆனால்
மருந்து தருகின்றவனையே நோயுற்ற சமூகம் அழிக்க நினைப்பதுண்டு. அத்தகைய செயலையும்
இந்நூலாசிரியர் விட்டுவைக்கவில்லை.

எழுத்தாளனை
மொத்தமாக எரித்த பிறகும்
அணைக்க முடியா
அவனின்
நெருப்பு எழுத்துகள்

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? என்னும் நெருப்பு வரிகளையும் காண முடிகிறது.
'யான் குற்றமுடையோனாயின் தீச்செவா என்னைச் சுடுதி' என்று, தீக்குள் பாய்ந்த சீதையைக் கூறும்கம்பன், "தீய்ந்தது அவ்எரி, அவள் கற்பின் தீயினால்" கற்புத் தீயினால், அக்கினி வெந்து தீய்ந்தது! என்பதைநினைவுபடுத்துவதாக அமைகிறது.

நல்ல கருத்துக்கள் என்றும் நிலத்திருக்கும். அதற்கு அழிவில்லை என்பதாக இவரின்
எண்ணங்களின் ஊர்வலம் புறப்படக் காண்கிறேன்

இவர் தம் எண்ணங்க்கள் எல்லோர் மனத்தையும் சென்றடைய வேண்டுமென்று விரும்புகிறேன். மேன்மேலும்அரிய எண்ணங்களைப் பதிவு செய்து பல புதிய நூல்களைப் படைத்திட வாழ்த்துகிறேன்

அன்புடன்
முனைவர் இர. வாசுதேவன்
=========================================================
(இந்த புத்தகத்தின் விற்பனையாளர்கள்)
திருமகள் நிலையம்
55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலை
தி நகர்,சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments


Anonymous commented:
very nice sir, I like this story

பூங்குழலி commented:
கண் கலங்குது ணா

ராமலக்ஷ்மி commented:
சிறப்பான அணிந்துரை. பகிர்வுக்கு நன்றி.நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

cheena (சீனா) commented:
This comment has been hidden from the blog.

அன்புடன் அருணா commented:
பூங்கொத்தும் வாழ்த்துக்களும்!!!

அறநெறி முனைவர் க. பழனிச்சாமி commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
vaalthukalhttp://www.kovaikkavi.woedpress.com

N Suresh commented:
மிக்க நன்றி அம்மா!பேரன்புடன் என் சுரேஷ்

vetha (kovaikkavi) commented:
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் டென்மார்க்கிலிருந்து.வேதா. இலங்காதிலகம்.http://www,kovaikkavi.wordpress.com

N Suresh commented:
மிக்க நன்றி திருமதி ரமலக்ஷ்மி அவர்களே!

N Suresh commented:
This comment has been hidden from the blog.

Anonymous commented:
This comment has been hidden from the blog.

Dhavappudhalvan commented:
This comment has been hidden from the blog.

Rathnavel Natarajan commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.

vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.

vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh

Anonymous commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.....

ராமலக்ஷ்மி commented:
தற்சமயம் நலம் என்பதறிந்து ஆறுதல். கடவுளுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி commented:
மிக நன்று. நல்வாழ்த்துக்கள்!

Shakthiprabha (Prabha Sridhar) commented:
அருமை. வாழ்த்துக்கள். புத்தாண்டுக்கு புதுப் பொலிவுடன் துவக்கம்.

சமுத்ரா commented:
வாழ்த்துக்கள்

Anonymous commented:
GOD created every man as a gift to another man and the only thing we have to share with each other is LOVE.Thats what Lord extracted in TEN COMMANDMENTS.

Shakthiprabha (Prabha Sridhar) commented:
வாழ்த்துக்கள் :)