Thursday, November 1, 2012
Monday, July 9, 2012
அன்றொரு நாள் காலை...
Thursday, May 17, 2012
அந்தப் பெண் காவலர்...
Wednesday, May 2, 2012
ஜெயந்தி என்ற அவள்...
Thursday, January 19, 2012
மழைச்சாரல்... ( என் சுரேஷின் சிறுகதைகள்)
அணிந்துரை
தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் இலக்கியம் பல கிளைகளைக் கொண்டது. இலக்கியம், செய்யுள் வடிவத்திலும் உரைநடை வடிவாகவும் படைக்கப்படுகின்றன. இவை கலை வடிவம் கொண்டவை.
இலக்கியம், காலத்தை வென்று வாழக்கூடியது. உலக வரலாற்றையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது.
இலக்கியம் படைப்பாசிரயரோடு தொடர்புடையது. படைப்பாளர் அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்வுகள், கிடைக்கும் அனுபவங்கள், உணர்ச்சிமிக்க கலை வடிவங்களாக வடிக்கப்பெற்று, அவை கவிதையாக, புதினமாக, நாடகமாக, சிறுகதையாக அமைகின்றன.
இக்கால இலக்கியங்களில் புதினமும் சிறுகதையும் சிறந்து விளங்குகின்றன.
புதினம் நெடுங்கதை அல்லது பெருங்கதை என்றும், சிறுகதை சிறியகதை என்றும் பொருள்படும்.
புதினத்தை விட சிறுகதையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சுவையான ஒரு நிகழ்ச்சி, கவர்ச்சியான ஒரு காட்சி, ஒருவரின் தனிப்பண்பு, ஒரு சிறு அனுபவம், வாழ்க்கையில் பெறுகின்ற வெற்றி, அறவுணர்வு ஆகிய இவற்றை உணர்த்தும் கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும்.
“மழைச்சாரல்…” என்ற இத்தொகுப்பு பதினெட்டு சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவமாக அமைந்துள்ளன. படைப்பாளருக்கு கிடைக்கின்ற சூழல் அனுபவத்தின் பயனைப் படிப்பவ்ர்களும் பெறக்கூடும்.
இத்தொகுப்பிலுள்ள கதைகளில் கதாசிரியரே பாத்திரமாகிவிடுகிறார். படைப்பாளரே கதைமாந்தர்களில் ஒருவராகி கதை கூறும் முறை, கதை கூறும் உத்திகளில் ஒன்றாகும். இம்முறையினை அறிஞர் மு.வ. அவர்களின் புதினங்களில் காணலாம்.
திரு என் சுரேஷ் அவர்களின் சிறுகதை முதல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் அணிவகுப்பில் இவர் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!
இச்சிறுகதைகளில் குறிப்பிடக்கூடிய பகுதிகள் பல இருப்பினும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
“ சென்னை கிராமம் இன்னமும் மிச்சம் இருப்பது இங்கிருக்கும் ஓலை வீடுகளில் தான்” என்று சிங்காரச் சென்னையை ஆய்வு செய்கிறார்.
“அரசே மது விற்கிறது” என்று ஒரு கேள்வியும், “ கள்ளச் சாராயம் ஏழைகளின் உயிரை அழித்தால் பரவாயில்லையா?” என்றொரு எதிர் கேள்வியையே பதிலாகவும் தருகிறார், “மழைச்சாரல்” எனும் கதையில்.
“விமான நிலையத்தில்” எனும் தலைப்பில், கோட்டை கட்டி ஆண்ட சரித்திரம் கம்பி வலைக்குள்ளும், அகதிகளாகவும் வாழும் நிலையைச் சுருக்கியுரைத்து சுருக்கென்று சுடுகிறது.
“ஓர் அலைபேசி அழைப்பில்”, “நீங்கள், அலைபேசி வழியாக, ‘ அம்மா சாப்பிட்டீர்களா?’ என்று ஒற்றைக் கேள்வியைத் தூக்கி வீசுகிறது. நெஞ்சம் பற்றி எரிகிறது. நாம் ஒரு பொழுதுகூட இவ்வாறு எண்ணிப் பார்க்கவில்லையே என்று நெஞ்சம் பதைக்க வைக்கிறது. தாய்ப்பாசத்தை நாம் மிகவும் சாதாரணமாகக் கருதிக் கொண்டிருக்கின்றோம்! என்று நமது குறையைத் திருத்துகிறது. இதனை படைப்பாளரின் வெற்றியாகக் கருதலாம்.
“பூங்காவில் ரிஸ்வானா” எனும் கதையில்,
‘பூங்காவில் ஆங்காங்கே பச்சை நிழல்’
‘அவள் கண்ணின் அழகே அவள் இளமையானவள், அழகி, இனிமையானவள் என்னும் செய்தி’
‘மாற்றங்களை நான் ஆசைப்பட்டால் அது முதலில் என்னிடமிருந்தல்லவா ஆரம்பிக்க வேண்டும்?” என்னும் இடங்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.
‘ உயர்ந்த சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் அரசின் நலத்திட்டங்களில் பல உயர்சாதி ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை’ எனும் சமூகச்சிந்தனை கருத்துக்கள் நெஞ்சைத் தொடுகின்றன.
பலவிடங்களில் ஆசிரியரின் மனக்குமுறலைக் காணமுடிகிறது. அத்தகைய குமுறலே அவரின் படைப்புகளுக்கு மூலமாக இருக்கக் காண்கிறேன்.
திரு. என் சுரேஷ் அவர்களின் படைப்புக்கு வாசகர்கள் அவரை ஆதரித்து மேலும் மேலும் எழுதத்தூண்ட வேண்டும்.
வாழ்த்துக்களுடன்,
முனைவர் இர. வாசுதேவன் MA., Mphil., Ph.d.
Wednesday, September 7, 2011
Monday, August 15, 2011
ஏன் இப்படி நானும் என் வாழ்த்துக்களும்...
நேற்று முதல் இந்த நொடி வரை எனக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் அனுப்பினோருக்கு மட்டும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அறிவித்து வருகிறேன்.
64 வருடங்களுக்கு முன் கிடைத்த சுதந்திரம் வைத்து இன்னமும் நாம் இந்தியர்கள் ஏன் முன்னேறவில்லை!
ஒரு கூட்டம் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்ற சிந்தனை ஒவ்வொரு வருடமும் என் நெஞ்சில் வில்லெனப் பாயும்; அது இன்றும்!
குட்டி நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டிருந்த போது வணிகம் வழி வந்து ஒவ்வொரு நாடாக ஆட்சி பிடித்து பிறகு எல்லா நாடுகளையும் சேர்த்து இந்தியா என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர் என்று சரித்திரம் சொல்கிறது.
அவன் கொள்ளை அடிக்க, அடிமைப் படுத்த, ஆட்சி செய்ய சௌகரியம் கருதி செய்திருப்பினும், அந்த செயலால் தானே இன்று இந்தியா என்றொரு நாடு என்று ஒரு சிந்தனையும் மலர்கிறது.
அவன் அவனுடைய வசதிக்காக கட்டி அமைத்த கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இவைகளுக்கு அதிகமாக 64 வருடங்களில் இந்நாடு சாதித்துள்ளதா?
வெறுத்துப் போகும் நொடிகளில் வெள்ளையர்களே இந்த நாட்டை ஆண்டிருக்கலாம் என்று சொன்னோர்களிடம் நான் அன்றெல்லாம் ஏன் சண்டையிட்டேன் என்றும் என் மனசாட்சி என்னிடம் கேட்கிறது! இந்தியனே இந்தியாவை ஆளட்டும் என்று சமாதானமும் செய்கிறது என் மனம்!
இதற்கு நியாயம் காட்டியும் முரணான கருத்தோடும் உதவி செய்ய வருகிறது Hong Kong நாட்டின் சரித்திரம். வெள்ளையர்கள் அந்நாட்டை சீனத்திடம் கொடுத்து புறப்படுகையில் ஏன் கவலையுடன் ஆழ்ந்தனர் அந்நாட்டு மக்கள்?
தமிழ்நாட்டில் வாழும் சிலர் இன்னமும் தங்களின் குழந்தைகள் பாணிடிச்சேரியில் பிறந்திருக்கும் சான்றிதழ் கிடைக்க ஏன் ஆசைப்படுகின்றனர். பிரஞ்சு நாடு மீது பாணிடிச்சேரி மக்களுக்கு இன்னமும் ஏன் அப்படி ஒரு பற்று?
எரிந்த விறகுகளைப் பற்றி கவலைப்படாமல் ருசியான உணவு அருந்துவது போலத்தான் நாம் மகாத்மா காந்தித் தலமையிலான சுதந்திரம் வாங்கித் தந்தோரை மறந்து சுதந்திரம் அனுபவிக்கிறோமா?
இன்று மட்டும் தான் தேசீயத்தலைவர்களின் சிலைகள் குளிக்க வேண்டுமா?
இன்று மட்டும் தான் தேசீயக் கொடிகள் விற்கப்பட வேண்டுமா?
நாளை காலையில் ஒரு மாணவன் தேசியக்கொடியை தன் சட்டைப்பைய்யில் ஏந்தி சென்றால் அவனை கிண்டல் செய்யும் சகமாணவர்கள் மீதா குற்றம் ? அல்லது இப்படி குழப்பின கல்வித்திட்டம் மற்றும் சமூகம் செய்வதா குற்றம்!
தேசத்தில் எங்கும் பசி, பட்டினி, பஞ்சம் இவைகள்இன்னமும் இருப்பதை தெரிவிக்காத ஊடகங்களுக்கு மட்டும் வளர்ந்த இந்தியாவின் எத்தனையோ அழகான புகைப்படங்கள்!
இனத்தை காப்பவர் என்று நம்பினோர்கள், அதை உறுதி மொழியாக சொன்னவர்கள் எல்லோரும் திசை மாறிச் சென்று சுயநலக் கரையில் கட்டிடங்களாகினரே!
1947 இல் சுதந்திர தின விழாவில் மகாத்மா காந்தி ஏன் பங்குகொள்ளவில்லை!
பெரியார் ஐயா ஏன் சுதந்திர தினத்தை எதிர்த்தார். வெள்ளையர்களிடமிருந்து தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் உயர்ந்த ஜாதிகளின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லையே என்ற அவரின் கேள்வி, இன்னமும் ஜாதி மதங்களை முன் நிறுத்துவோருக்கும் ஏழைகளை அடிமைகளாக்கி தொழிலாளி என்ற போர்வையில் அழைப்பவனுக்குமாக பதிலின்றி நிற்கிறதே!
சுதந்திர தினம் என்றால் இனொரு நாள்; இந்த வருடத்தில் கிடைத்த இன்னொரு விடுமுறை நாள் என்று தானே ஒரு சாதாரணனின் மகிழ்ச்சி!
வருடத்தின் ஒரு நாள் கொண்டாட்டமா இது?
கோழைகளின் மனைவிகள் குங்குமத்துடன் இருக்க வீரர்களின் மனைவிகள் இன்னமும் விதவையாகி வரும் கொடுமை இன்னமும் தொடர்கிறதே!
அறப்போர் செய்யக்கூட உரிமை மறுக்கப்படுகிறதே!
இயக்கங்களின்றி இந்த நாடு கட்சிகளால் நிரம்பியுள்ளதே!
இந்தியாவிற்கு வெளியுள்ளோரின் இந்திய நாடு மீதுள்ள பற்று கண்டு வியக்கிறேன். ஆனால் அதில் பலரிடமிருந்தும் " இந்த ஏழை நாடு முன்னேற என்ன உதவி செய்தீர்கள்?| என்ற கேள்விக்கு பதில் ஒன்றும் பெரிதாக கிடைகக்வில்லை, அவர்களின் கோப உணர்ச்சிகள் தவிற!
இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இயக்குனர் அந்த படங்களின் கடைசியில் வைத்துள்ள வசனங்கள் எவ்வளவு சிறப்பானவை ! இதில் தவறுகுகள் இருப்பின் அதை அகற்றி அதில் இருக்கும் சிறப்புகளை அறிந்து அதை இந்த நாட்டு மாணவர்களுக்கு அரசோ தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ பரப்புரை செய்யலாமே!
அந்நியன் மற்றும் இந்தியன் தாத்தா செய்தது போல யாரும் யாரையும் கொலைகள் செய்யவே வேண்டாம். ஆனால் அறப்போராட்டத்தால் சுதந்திர தினம் பெற்றும் அதைக் கொண்டாடும் 64 ஆவது வருடம் விஜய் தொலைக் காட்சியில் இன்று " யுத்தம் செய்" என்ற படம் ஏன் என்று யோசிக்கலாம். யுத்தம் செய் என்ற படம் நான் பார்க்கவில்லை. அதன கதையும் எனக்குத் தெரியாது. ஆனால் அதன் சில காட்சிகள் விளம்பரமிட்டு காண்பிக்கையில் அதில் உண்மையாகவே கொலைவெறி உள்ளதாக உணர்ந்தேன்.
இந்தியாவில் நேர்மையாக சம்பாதிப்பவனுக்கு 11 மாதம் மட்டுமே சம்பளம். 12 ஆவது மாத சம்பளம் வருமான வரியாக எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் எத்தனை கோடி மக்கள் உண்மையாக வருமான வரி கெட்டுகிறார்கள்? அப்படி உண்மையாக கொடுத்த பணத்தை கொள்ளை அடித்து சிறைவாசம் அனுபவிப்போர் ஆயிரத்தில் ஒன்றோ இரண்டோ? வெளிச்சத்திற்கு வராமால் போன ஊழல்கள் இந்த 64 வருடங்களில் எத்தனை என்று யாருக்குத் தெரியும்?
குறிப்பிட்ட ஒரு கல்லூரி என்னை இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அங்கு செல்ல மறுத்தேன். கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல நண்பர் கேட்டார். " படித்ததை என்றும் மறக்காமல் இருங்கள்! நல்ல நிர்வாகத்தில் வேலைக்கு செல்லுங்கள். தனிமனிதனுக்கு உரிமையான எந்த நிறுவனத்திலும் வேலைக்கு செல்லாதீர்கள். சுய தொழில் செய்ய முயற்சி செய்யுங்கள், நல் வாழ்த்துக்கள்" என்று சொல் நணபா என்றேன்.
64 வருடங்களில் அரசு நேரடியாகவே பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருந்தால் இன்னமும் அவர்கள் பிறபடுத்தவர்களாக தொடர மாட்டார்கள் என்று சொன்னால் அதை மறுக்க யாரால் இயலும்!
ஏழ்மை இல்லாத இந்தியாவை கனவு காண்போம் நானும் இதை வாசிக்கும் நீங்களும்!
நல்ல கனவுகள் நம்மை தூங்க விடாமல் இருக்கட்டும்!
இவ்வளவு சொன்ன பிறகு என் தாய்த் திருநாடு இந்தியாவை வணங்கி உங்களிடம் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறேன்...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...!!!
பேரன்புடன்
என் சுரேஷ்
Saturday, April 16, 2011
அழைப்பு மணியோசை...
சுய நினைவின்றி எனது அக்கா மருத்துவமனையில்!
என்னை அமைதியில் அடிமைப்படுத்த நான் முயலும் நொடிகளில் .. "வெளியே போ" என்றொரு சத்தம்.
அது எனக்குள் இருந்த கவலையை கோபமாக்கினது!
யாரது இப்படி அநாகரீகமாக கர்ஜிப்பது.. என்று திரும்பிப் பார்த்தேன்.
விளங்க இயலாத ஓர் உணர்வை முகத்தில் ஏந்தின இளமையான ஒரு செக்யூரிட்டி!
"நான் யாரென்று தெரியுமா... இந்த மருத்துவமனையின் டிரஸ்டிகள் எல்லாம் எனக்குத் தெரிந்தவர்கள் என்று ஆரம்பித்து அவனை திட்ட ஆரம்பித்த்தேன்...
அப்போது அவனது மொபைலில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அவன் வைத்திருந்து அழைப்பு மணியோசையை அந்த மொபைலில் பாடினது " சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"...
உடனே அவன் மருத்துவமனைக்கு வெளியே சென்று, பேசி முடித்து வந்தான்.
கனிவோடு அவனிடம் சென்று, அக்காவின் உடல்நிலை சரியில்லையே என்ற கவலையால் தான் கோபப்பட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் என்றேன்.
அது பரவாயில்லை சார் என்றான்.
சரி தம்பி.... எத்தனையோ ரிங் டோண்களை நானும் கேட்டுள்ளேன், ஆனால் சோதனை மேல் சோதனை ... எனற பாடலை மொபைலின் அழைப்பு மணியோசையாக ஏன் நீங்கள் மட்டும் வைத்துள்ளீர்கள்? நேரடியாக கேட்கிறேன், என்ன? காதல் தோல்வியா?
அவனின் கண்ணீர் ஆமாம் என்றது! சில நிமிடங்கள் அவனுக்கு ஆறுதல் கூறினேன். முடிவில்... ஒரு முறை கூட உங்க்கள் காதலியின் வீட்டாரிடம் பேசி முயற்சி செய்யலாமே தம்பி - என்று சொல்லிப புறப்பட்டேன்.
இரண்டு நாள் கழித்து, உடல்நலம் தேறின எனது அக்காவை அழைத்து நான் மருத்துவமனையிலிருந்து புறப்படுகையில் மகிழ்ச்சியோடு என்னெதிரே வந்தான் அந்த இளைஞன்!
சார், என் காதலியின் குடும்பத்தாரோடு என் வீட்டார் நேற்று பேசி இப்போது எல்லோரும் எங்கள் திருமணத்திற்கு சம்மதித்தனர் என்றான் பெருமகிழ்ச்சியுடன்!.
எனது அக்காவிற்கு, அவர்களின் உடல்நிலை சரியானதை விட, தனது மகனின் வயதுள்ள அந்த இளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியானதே அதீத சந்தோஷம் தந்தது என்றிட என் மனதிலும் அப்ப்டி ஒரு சந்தோஷம் என்றேன்!
காதலர்களை பிரிக்காத சமூகம் உருவாக மௌனமாக பிரார்த்தனை செய்தது என் மனமும்!
Thursday, March 17, 2011
திரு மைக்கல்ராஜ் அவர்கள் இறைவனின் ராஜ்ஜியத்திற்கு...
எனது ஆசிரியர் திரு மைக்கல் ராஜ் அவர்களைப் பற்றி எனது வலைதளத்தில் 11/6/2008 - ல் பதிவு செய்திருந்தேன். இதை தயவாக வாசிக்கவும்.
http://nsureshchennai.blogspot.com/2008/07/blog-post_11.html
அன்புடன் குழுமத்தின் ஒரு சந்திப்பில் தலமை விருந்தினராக வந்து எல்லோரையும் வாழ்த்தினார்.
நேற்று (16-03-2011) இரவு 7.00 மணி அளவில் மாரடைப்பால் இவர் இறைவனடி சேர்ந்தார்.
நாளை சென்னையில் உள்ள சின்னமலையில் இவருக்கு இறுதி மரியாதை செய்ய உள்ளது.
அவரின் அன்பைப் பெற்ற என்னையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகத்தில் தவிக்கிறோம்.
இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஆழ்ந்த துயரத்துடன்
என் சுரேஷ்
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|