தகப்பனுக்கும் தாய்க்கும் சர்க்கரை வியாதி இருந்தால் பிள்ளைகளுக்கும் அது பாரம்பரிய முறை படி அதிகாரமான சொத்து என்பதால் அதன் உரிமை எனக்கு வந்து விட்டதா என்ற சோதனையை நான்கு ஐந்து வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.
2007 முதல் ஏறத்தாழ மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த செலவை செய்து மகிழ்வதில் என் மருத்துவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்! "டேய் சொன்னதை செய்யுட" என்று சொல்லும் சகோதரியின் பாசம் தரும் எங்கள் குடும்ப மருத்துவரை எதிர்த்து ஒன்றும் பேசவும் முடியாது. புன்னகை மட்டும் தான்!
ஒவ்வொரு முறையும் இரத்தப் பரிசோதனையின் முடிவு, என்னை காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லைக்கு கொண்டு செல்வதே வழக்கம்!
பொதுவாக இரத்தம், பரிசோதனைக்கு கொடுப்பதற்கு முந்தைய நாளின் இரவு-உணவை மாலையிலேயே சாப்பிட வேண்டும். அடுத்த நாள் காலையில் ஒரு காப்பி கூட சாப்பிடாமல் (கொடுமையிது!) பரிசோதனைக்கு செல்ல வேண்டும். இது தான் வழக்கம்.
இந்த வாரம் ஞாயிறு 18ற்கு காலை பரிசோதனைக்கு செல்வதாக எனது தீர்மானம். 17 மதியம் 2 மணியளவிற்கு நன்றாக பசி. அலுவலகத்தில் எல்லா சனிக்கிழமைகளிலும் எங்களுக்கு "Get together" என்ற பெயரில் சத்துணவு தருவது வழக்கம். ஓரளவிற்கு நன்றாகவே அப்போது சாப்பிட்டேன்.
மாலை 3.30 மணிக்கு யூனியன் வங்கியின் ஒரு கூட்டத்தில் என்னை பேச அழைத்தார்கள். கூட்டம் முடிந்ததும் அங்கே "ஹைடீ" என்ற பெயரில் சமூசா போன்ற உணவு வகைகள், குளிர்பானங்கள், மற்றும் டீ காப்பி எல்லாம் வைத்திருந்தார்கள். பசியில்லை ஆனால் சென்னை வெயிலின் தாக்கத்தால் தாகமிருந்தது. குளிர்பானம் "மிராண்டா" ஒன்றை குடிக்க நினைத்து அதனருகே சென்று கொண்டிருக்கிறேன், எனது மனைவி செல்பேசியில்... "என்னங்க நீங்க ஒன்னுமே வெளியே சாப்பிடாதீங்க" என்று ஒரு கட்டளை, உபதேசம் என்ற தலைப்பில்!
என்ன செய்ய, ஒரு கோப்பை தண்ணீர் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து மரிநாவில் அன்புடன் குழுமத்தின் சந்திப்பில் கலந்து கொள்ள ஆராதா என்ற தம்பியின் பாச அழைப்பை மதித்து அங்கு சென்றேன்.
ஆறு-ஏழு பேர் கொண்ட அந்த சகோதர வட்டத்தில் அன்று பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. 5.00 மணிக்கு ஆரம்பித்தது 10.00 மணிக்கு தான் நேரம் தாமதமானதால் முடிந்தது. எல்லோரும் மனம் விட்டு பேசிட சிலர் கவலைகளை கொட்டி விட, சிலர் அதை நகைச்சுவைகளால் கட்டுப்படுத்த, நேரம் போனதே தெரியவில்லை. சந்திப்பின் முடிவில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று ஒவ்வொருவரிடம் கேட்டு, நான் அதை பாடும் கொடுமையை பாவம் அவர்கள் சகித்தார்கள். இருப்பினும் எனக்கு சந்தோஷத்தால் மனம் நிறைந்ததும் பசி பறந்து விட்டது.
சரி, மற்ற எல்லோருக்கும் உணவிற்கு ஏற்பாடு செய்வோமே என்று எண்ணுவதற்குள், எல்லோரும் தங்களின் கடிகாரம் சொன்ன உண்மைச் செய்தியை உணர்ந்திட, வீடு சென்றதும் (காலதாமதம் ஆனதால்!) சந்திக்கக் வேண்டின பிரச்சனைகளை மனதிற்கொண்டு ஓடி விட்டார்கள். நானும்!
அடுத்த நாள் 18 ஆம் தேதி காலை இரத்தப் பரிசோதனை செய்யும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு நான் சென்றேன். கடன் அட்டை வாங்கும் ஒரே வசதியால் அங்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி. பணம் கட்டி விட்டேன். எனை அழைக்கிறார்கள்.
எனை அமரச்சொல்லி இடது கையில் ஒரு ரப்பர் கயிறால் கட்டிவிட்டார்கள். ஓர் இளம்பெண், எனது மகளாக இவள் இருந்திருந்தால் என்று ஆசைப்படும் அளவிற்கு அவளுடைய எளிமையான தோற்றம், மென்மையானப் பேச்சு, ஆங்கிலத்தில் சொல்வார்களே good -attitudes இவை எல்லாம் இருந்தது. பண்பிற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் ஒரு மண்ணில் (தமிழ் நாட்டில்)பிறந்து-வளர்ந்து-வாழ்பவன் எனக்கு அவளின் முகத்தில் ஒரு கவலை நிழலாடிக் கொண்டிருப்பதை மட்டும் உணர முடிந்தது.
"சார் நீங்க எப்ப சாப்பிட்டீங்க..." என்றாள். பாராட்டு கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் நான் சொன்னேன் " நேற்றைக்கு மதியம் 2 மண்க்கு சாப்பிட்டேன். பிறகு இப்ப வரைக்கும் ஒன்னுமே சாப்பிடவில்லை" .
உடனே அவளின் விரல்கள் தொலைபேசியில் நர்த்தனமாடின. " சார் நான் அனு பேசறேன். இங்கே ஒரு பேஷ்யண்டு வந்திருக்காரு. அவரு சாப்பிட்டு 20 மணிநேரமாச்சு.. சர்க்கரை மற்றும் கொழுப்பு இந்த இரண்டையும் டெஸ்ட் பண்ணுங்க பண்ணுங்க என்று என்னிடம் அடம் புடிக்கிறாரு" என்றாள்.
எனக்கு உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "என்னம்மா நான் உண்மை சொன்னது தப்பாப் போச்சு போலிருக்கே" என்றேன்.
அதற்கு அவள், "சார் நாங்க பணத்திற்காக மட்டும் இந்த சேவை செய்யவில்லை. எங்களுக்கென்று சில வழிநடத்தல்கள் எல்லாம் இருக்கு. 12 மணிநேரத்திற்கு மேல் எடுத்தால் ரிசல்ட் சரியா வராது" என்று மென்மையாக சொல்லிக்கொண்டே இருக்கையில் தொலைபேசி மணி அடிக்கிறது.
அனு எடுக்கிறாள். நன்றாக யோசித்த பின்னர் அவளுடைய மூத்த அதிகாரி உத்தரவு இடுகிறார். "அவர்..அந்த பேஷ்யண்டு, 400 ரூபாய் பணம் கட்டி விட்டாரு, அதனால ஒன்னு பண்ணுங்க... 20 மணிநேர fasting ற்கு பிறகு பேஷ்யண்டோட நிர்பந்தப் பிரகாரம் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனை என்ற குறிப்போடு ரசீது போட்டு, அவருடைய சாம்பிள் எடுங்க"
எனது இரத்தம் எடுக்க ஊசியோடு என்னருகே வருகிறாள் அனு. அவள் முகத்தில் பொட்டில்லை. அனு என்ற பெயருடைய அவளின் நெற்றியில் ஏன் பொட்டில்லை என்று யோசித்தேன்!
கால் பார்த்தேன் அதில் மெட்டி இருந்தது. "என்னம்மா, ஏன் நெற்றியில் ஒரு பொட்டு வைக்கக் கூடாதா" என்றேன். அதற்கு "நான் ஒரு கிறிஸ்துவப் பெண். இந்துவாக இருந்து சில காலம் முன் கிறுஸ்துவப் பெண்ணாக மாறினேன்" என்றாள்.
கிறுஸ்துவளாக இருப்பதற்கும் பொட்டு வைக்காமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று திருச்சபை கூட்டங்களிலும் கிறிஸ்துவ அறிவாளிகளின் மத்தியிலும் பலமுறை வாதாடி சில இடங்களில் மட்டும் எனது கருத்திற்கு அங்கீகாரம் கிடைத்த அனுபவத்தால் அட்வைஸ் என்ற பெயரில் எதையும் அவளிடம் சொல்ல நான் விரும்பவில்லை.
"என்னம்மா அப்போ கடவுளை உனக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கே" என்றேன்.
ஊசியைப் பார்த்து பயந்த என்னிடம் "சார் என்ன நீங்க குழந்தையைப் போல பயப்படுறீங்க" என்று சிரித்துக்கொண்டே எனது இரத்தத்தை ஊசியால் இழுத்துக்கொண்டிருக்கிறாள். நான் கண்மூடிக்கொண்டிருக்கிறேன். அப்போது அவள் சொல்கிறாள்.
"எனக்கு இறைவனைப் பிடிக்கும் ஆனால் இறைவன் தான் என்னை சோதிக்கிறார்"
கண் திறந்து பார்த்ததும் அவள் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் மழை!
"சோதனைகளை வெல்ல இறைவன் நமக்கு உதவுவார், சோதனையின் முடிவில் ஒரு வெற்றி தர அவர் காத்திருக்கிறார்" என்றேன். கவலையின் உச்சத்தில் இருப்பவர்க்கு இறைவனின் வசனங்களே ஆறுதல் என்ற புரிதலோடு அவள் தனது கன்னத்தின் கண்ணீரைத் துடைத்தாள்.
"சார் எனக்கு ஒரு குழந்தை ஆன பிறகு என்னை விட்டு அடிக்கடி எனது கணவர் வெளியே செல்கிறேன். பிறகு சில வாரங்கள் கழித்துத் தான் வருகிறார். இந்த கவலையால் நான் ஒரு சைக்கோ ஆனேன். இங்கிருக்கும் மருத்துவர்களின் உதவியால் இப்போது தேறி வருகிறேன். high depression" என்றாள். "குழந்தை பிறந்த பிறகு நான் அழகாக இல்லை; என்னை பிடிக்கவில்லை என்று அவர் சொல்கிறார். இதில் என்ன நியாயம்? எனக்கு அவர் என்றால் உயிர் சார்..." மீண்டும் அழுகிறாள்.
நல்ல வேளை இத்தனையும் ஒரு தனி அறையில் (அடைக்கப்பட்ட ஓரு அறை- ஒரு cabin -இல்) நடக்கிறது. அதனால் அவளுடைய கவலையின் வெளிப்பாட்டை என்னைத் தவிற மற்றவர்கள் யாரும் பார்க்கவில்லை.
கோபம் கவலை அனுதாபம் இவை எல்லாம் ஒன்றுகூடின ஒர் உணர்வில் நானும் மௌனத்தில்.
சில நொடிகள் கழித்து மீண்டும் பேசுகிறாள் அனு. "குழந்தைக்காக நான் வாழ வேண்டும் சார், நான் வாழ்வேன். நான் சம்பாதித்து தான் என் வீட்டு வாடகை மற்றும் எல்லா செலவும் பார்க்கனும்" அதற்கு மேல் என்ன என்னமோ சொல்லத்துடிக்கும் அவள் உணர்ச்சிப்பிழம்பானாள். ஒன்றுமே பேசமுடியாமல் அப்படியே மௌனமாக அழுது கொண்டே இருந்தாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல் நான் தவித்தேன். எப்படியோ ஒரு தைரியம் வரவைத்து நான் சொன்னேன். "அம்மா.. உன்னுடைய மகனை எவ்வளவு வேண்டுமென்றாலும் படிக்க வை.. நானும் என் மனைவியும் எங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்கிறோம். வேண்டுமென்றால் நமக்குத் தெரிந்து சில என்.ஜி.ஓ சமுதாய நல வாரியங்கள் மூலமாக உனது கணவரை உன்னோடு சேர்த்து வைக்க முயற்சி செய்கிறோம்" அதற்கு " வேண்டாம் சார், வேண்டாம்.. அப்படி செய்தால் அதற்கும் ஒரு சந்தேகப் பார்வை பார்த்து வேறொரு பிரச்சனையை உருவாக்குவார் என் கணவர்"
என் மகன் ஒரு மருத்துவர் ஆவார் என்று பேசும்போது நீங்கள் சொன்னீர்கள், அந்த நிலைக்கு அவன் படிக்கும் காலத்தில் எனக்கு தேவைப்பட்டால் நான் உங்களிடம் நிச்சயம் உதவி தேடி வருகிறேன். அதற்கு இன்னமும் பல காலங்கள் இருக்கு. நீங்க உடனே போய் ஏதாவது சாப்பிடுங்க, சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் இரத்தம் எடுக்க வேண்டும்" என்றாள்.
நான் உணவருந்தி, இரண்டு மணிநேரம் கழித்து "அன்பென்ற மழையிலே" என்ற எனது கவிதைத்தொகுப்பை ( கர்த்தரின் நேசம் பற்றி எழுதினது) எடுத்து மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்தேன். அதில் "அன்புடன் என் மகளுக்கு" என்று எழுதி கைய்யெழுத்திட்டிருந்தேன். அதை வாசித்து "நன்றி" என்று சொல்லி வாங்கி விட்டு, "உங்களுடைய இரத்தம் எடுக்க இன்னமும் பத்து நிமிடங்கள் உள்ளன நீங்கள் இந்த ஹாலிலேயே உட்காருங்க, நான் பிறகு கூப்பிடறேன்" என்று புத்தகத்தைப் பார்த்துகொண்டே அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து என்னருகே வந்த அனு, "சார்...இருபது பக்கங்கள் கட கட என்று வாசித்தேன். எல்லாமே எனக்காகவே எழுதியது போல் உள்ளது, வாங்க சார், இப்போது சாம்பிள்(இரத்தம்) எடுக்கிறேன்" என்றாள்.
இரண்டாம் முறை அவள் இரத்தம் எடுக்கிறாள். இருவரும் மௌனம். நான் புறப்புடும் நேரம்
"தொடர்ந்து ஜபம் செய், கர்த்தர் கைவிடமாட்டார்" என்ற ஆறுதல் சொல்லி புறப்பட்டேன். அங்கிருந்து நான் காரில் வீடு செல்லவில்லை, என் மீது கார் பயணித்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.
அடுத்த நாள் திங்கட்கிழமை 20 ஆம் தேதி மாலை எனது இரத்தப் பரிசோதனையின் அறிக்கையை அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையிலிருக்கு அறிவிப்பாளர் தந்தார். உடனே திறந்து வாசித்தேன்
எனக்கு சக்கரைவியாதி என்று உறுதி செய்யப்பட்டது!!!
என் சுரேஷ்
No comments:
Post a Comment