அன்பிற்கினிய யாஸ்மின்
விண்ண்கத்திலிருக்கும் உனக்கு இன்று தான் ஒரு கடிதமெழுத எனக்கு கொஞ்சம் மனபலம் வந்துள்ளது. அதனால் தான் தாமதம், மன்னிக்கவும்..
உனக்கு யாஸ்மினென்று பெயர் வைத்த திரு அப்துள் ஜப்பார் ஐயா அவர்கள் தான் எனக்கும்
"மகன்" என்று பெயர் சூட்டினார்.
ஷார்ஜாவிலிருக்கும் உனதில்லத்திற்கு வந்தயென் சில சகோதரர்கள், தாய்வீடு சென்று தங்கைபாசமும், தங்கையின் ருசியான உணவும் சாப்பிட்டு வந்தோமென்று சொன்ன போதெல்லாம் அந்த பாசதேவதை, அவள், எனை அதீதமாய் நேசிக்கும் ஆசிப் அண்ண்னின் மனைவி நீ தானென்று நானறியேன்.
அப்பா என்னை "மகன்" என்று பெயரிட்டு அழைத்தபோதும் ஆசிப் அண்ணனின் தந்தை தான்
திரு அப்துல் ஜபார் ஐயா என்பதும் ஆரம்பத்தில் எனக்கு தெரிந்ததாக நினைவில்லை.
இன்று நினைத்து பார்த்தால், நமக்குள் தான் எத்தனை உறவுகள், யாஸ்மின்!
நண்பனின் மனைவி,
அண்ணி,
எனைவிட வயதில் சின்னவள் நீயென்பதால் தங்கை,
எனது சகோதரர்களுக்கு பாசமும் அன்னமுமிட்டதால், தாய்!
இத்தனை உறவுகள் நம்மில் மலர்ந்தும் ஒருநாளும் நாம் தொலைபேசியில் கூட பேசியதில்லையே!
இதை சரி செய்ய இந்த வருட உங்களின் சென்னையில் செலவிடப்படும் விடுமுறை நாட்களொன்றில்
எனது இல்லத்திற்கு உங்களின் மொத்த குடும்பத்தாரையும் விருந்திற்கு அழைக்க இருந்தேன், யாஸ்மின்!.
கடந்த மாதம் 11 ஆம் தேதி, ஒரு திருமணத்தில் ஆசிப் அண்ணனும் நானும் சந்தித்தோம்.
இரண்டு மணிநேரம் பல விஷயங்கள் பேசினோம். கண்டவர் வியந்தனர்.
அன்று பேசியதில் முக்கியமானதொன்று, கவலை மறைத்து ஆசிப் அண்ணன் சொன்ன
உனது முதுகு வலியைப் பற்றினது தான்.
அவர் சொன்னார், " யாஸ்மினோட இடுப்புலெ ஒரு பெல்ட் கட்டியிருக்காங்க.. பாவம் அவளுக்கு ரொம்ப வலிக்குது... சுரேஷ், நீங்க சொல்றது போலத்தான் நானும் சொல்றேன், ஆனா, பிஸியோத்தெரப்பிஸ்ட் சொன்ன பயிற்சிகளை என்ன தான் சொன்னாலும் சரியா செய்ய மாட்டேங்குறாங்க" -
"இல்லை இல்லை அண்ணா, கண்டிப்பாக மருத்துவர் சொன்ன பயிற்சிகள் செய்து தான் ஆக வேண்டும். நானும் கூட எனது முதுகு வலியை அந்த பயிற்சிகளால் தான் சரி செய்து வருகிறேன். கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள் " என்றேன்.
யாஸ்மின்! கோபத்தாலும் கவலையாலும் இன்று கதறுகிறேன், மன்னிக்கவும்.. அந்த பயிற்சி ஏன் நீ தொடர்ந்து ஆரம்பம் முதல் செய்யவில்லை? அதன் விளைவைக் கண்டாயா? எத்தனை கண்ணீர்க் கடல்கள் உனது நினைவுகளைச் சுற்றி!
ஒரு நொடி எனக்கு உனது மருத்துவ அறுவைச் சிகிட்சைப் பற்றி சொல்லியிருந்தால் நான் உடனடி அதை தடுத்திருந்திருப்பேனே!. இது உண்மை, யாஸ்மின்.
தீடீரென்று அந்த கவலைக்காலைப் பொழுதில் உனது மரணத்தைப் பற்றின செய்தி என் காதில் இடிபோல் வெடித்தது. மனம் உடைந்து போனது.
காலையிலேயே விரைந்து வந்தேன், கண்ணீரூடன் ஆசிப் அண்ணன் எனை அழைத்துச் சென்று... இதோ பாருங்கள் என்று உனைக் காட்டினார்.
முதன்முதலாய் நானுன்னைப் பார்த்தேன், ஆனால் நீ மட்டும் என்னை பார்க்காமல் கண்மூடி
நித்திய உறக்கத்திலிருந்தாய்.
ஓர் அழகிய ரோஜாப்பூ உன் மீது, வெள்ளைத்துணியொன்றை போத்திவிட்டதிலும்
நீ மிக அழகாக இருந்தாய்! அழுதேன் அழுதேன் ஆசிப் அண்ணனையும் அப்பாவையும் கட்டியணைத்து குழந்தைபோல் அழுதேன். என் சத்தம் கேட்டு " அண்ணா" என்றழைத்து நீ வரமாட்டாயா என்று முட்டாள் போல் ஏங்கி அழுதேன்.
அழாத உன் பிள்ளைகளின் பக்குவம் எனது பக்குவத்தை உடைத்தெறிந்தது.
உனக்கு இறுதிமரியாதை செலுத்த உன்னோடு எத்தனை நூறு அன்பு நெஞ்சங்கள், யாஸ்மின்.
நீ மட்டும் உயிரோடிருந்திருந்தால், முதன்முதலாய் எனைக் கண்ட மகிழ்ச்சியில் எப்படியெல்லாம் பாசமுடன் என்னிடம் பேசியிருப்பாய் என்று இன்றும் நினைக்கிறேன்.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் திறமைவாய்ந்தவன் என்ற ஆணவக்காரன் நான் உனைக்கண்டு கதறிப்போனேனே!
நகைச்சுவைக்கே இலக்கணமான என் ஆசிப் அண்ணனுக்கு இந்நிலையா? எல்லோரையும் நேசிக்கும் ஜப்பார் ஐயாவின் இந்த அன்பு குடும்பத்தில் இவ்வளவு பெரிய சோகமா என பல்லாயிரம் கேள்விகள் ஒன்று கூடி என்னை என்னன்னவோ செய்தது, யாஸ்மின். அதை சொல்ல இயலவில்லை.
பல இழப்புகளை சந்தித்தவன் நான். அதிகமாய் அழுதவன் நான். இருப்பினும் உன் மரணத்தன்று எனது மனக்குமறல்கலை எனக்கு சொல்ல இயலவில்லை. ஆனால் அதை நீ அறிந்திருப்பாய்!
"இறைவனுக்கு நிகராக சொன்னால் பாவமில்லையென்றால் நான் இவளை கடவுள் என்று சொல்வேன்" என்று உன் மீது நன்றியும் பாசமும் நிறைந்த நல்லதோர் மனிதன் சொன்னதை நீ அன்று கேட்டாயா யாஸ்மின்?
ஆசிப் அண்ணனின் மகிழ்ச்சிக்கும் அவரின் வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒரு இயக்குனராக உனது இறுதி மூச்சுவரை நீ இருந்திருப்பதை அறிந்து வியந்து போனேன்.
விண்ணகத்திலிருக்கும் ஒரு தேவதையை சிலகாலம் இந்த பாசக்குடும்பத்திற்கு அனுப்பின இறைவன் குறித்த வேளையில், தேவதையே நீ சென்றுவிட்டாய், அது உண்மை தான். இருப்பினும் உன்னிரு பிள்ளைகளுக்காக கொஞ்சகாலம் கூட இந்த பூமியில் வாழ கால அவகாசம் கேட்டிருந்திருக்கலாமே யாஸ்மின்.
இந்த சுரேஷ் அண்ணனுக்கு பிள்ளைகளில்லை என்பதால் அதைச் செய்யவில்லையோ..
துபாய்க்கும் ஷார்ஜாவிற்கும் வர இருந்த எனது ஆசையை பல மாதங்களுக்கு இல்லையென்று அங்கிருக்கும் எனது சொந்தபந்தங்களுக்கு சொல்லிவிட்டேன்.
நீ நித்திய உறக்கத்திலிருக்கும் போதும் அப்பா அவர்கள், திருமறை குறான் படித்து பிரார்த்தனைகளை தொடர்ந்து செய்வது கண்டு வியந்து போனேன். அந்நேரமும் அவரின் பிரார்த்தனையில் அதிகமாய் உனக்காகத் தான் அவர் பிரார்த்தனை செய்திருப்பார்.
"அதிகமாக கனவு கண்டவள் அவள்" என்று அப்பா அழுது சொன்னார், எங்களின் கவலையை நீ ஒரு போதும் கனவு கண்டிருக்க மாட்டாயே, பிறகு ஏன் இப்படி நடந்தது யாஸ்மின்?
திறளாக உனது சகோதரர்கள் நாங்களும், உன் சொந்தபந்தங்களும் பள்ளிவாசல் வந்து தொழுகை முடிந்து உன்னை கண்ணீரோடு விதைத்தோம். அந்த நேரத்தின் ஒவ்வொரு நொடிகளும் நான் ஆசிப் அண்ணனையே பார்த்து அப்படியே கண்ணீரின்றி அழுது கரைந்து போனேன். முதிற்சி அடைந்தவர்கள் போல் அங்குள்ளோர் எல்லோரும் நன்றாகவே தங்களை கட்டுப்படுத்தினார்கள்.
இனியுனை என்று காண்போம், என்று உன்னோடு பேசுவோம், நீ தரும் தேநீர்
குடிக்கும் வாய்ப்பெங்கே என்ற பல லட்சம் கேள்விகள் எங்களை மௌனிகளாக்கியது..
எல்லோர் மனதிலும் கண்ணீர்மழை பொழிந்து கொண்டிருந்ததால், வானம் மாலையிலேயே இருண்ட முகில்களை காட்டி தனது கவலையை தெரிவித்து விட்டு சூரியனை மறுபிரதேசத்திற்கு செல்லச் சொல்லி நிலாவை அழைத்தது. அன்றிரவு நிலாவும் அதன் நிலாச்சாரலால் அழுதிருக்கும் யாஸ்மின்!
உன்மீது மல்லிகை பூக்களைத் தான் தூவ வேண்டுமென்று யாரோ சொன்னார்கள். யாஸ்மின் என்றால் மல்லிகை தானே? உனக்கு பிடித்த மல்லிகை பூக்களையும் சேர்த்தல்லவா நீ விதைக்கப்பட்டாய்!
எல்லாம் நடந்தேறி விட்ட பிறகும் நான் மீண்டும் நீ இல்லத்தில் படுத்திருந்த அதே இடத்தில் ஆசிப் அண்ணனோடும் மகளோடும் சேர்ந்தமர்ந்து பேசியிருந்தேன். அப்பொழுதும் எங்களால் அழாமல் இருக்க முடியவில்லையே.
நமக்குள் பலவருடம் பழக்கமில்லை; நாம் சந்தித்ததில்லை; தொலைபேசியில் கூட பேசியதேயில்லை; இருப்பினும் என் மனதில், உனது மரணம் எப்படி ஒரு பேரதிர்வை தந்திருக்குமென்று என்னால் யூகிக்க முடியவில்லை.
உண்மைதான் நீ ஒரு பாசதேவதையே தான்.
ஆனால், முடிவில் மட்டும் எங்களை அழவைத்த தேவதை நீ..
தேவதையே...
இறைவனிடம் ஆசிப் அண்ணனுக்கும் குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் உனது பிரிவின் கவலையைத் தாங்க சக்தி தர மன்றாடு.
அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளதே அதை ஓர் அதிசயக்குறியாக மாற்ற இறைவனிடம் பரிந்துரை செய். இதை நீ செய்து தான் ஆகவேண்டும் யாஸ்மின்.
உன்னுடனான பல ஞாபகங்களில் எல்லோரும்! ஆனால் உனது நித்திய உறக்கத்தின் நாளன்று உனை ஒரு நொடி பார்த்த ஒரு சகோதரனின் வேதனையின் நான்!
உன் மரணம் என்னை உருக்கியது யாஸ்மின்! மருத்துவரிடம் எனைக்கொண்டு காட்டும் நிலை எட்டும் வரை. எனது மனைவியும் சில கவிஞர்களும், ஆசிப் அண்ணனும் மற்றும் அன்புடன் அன்பு தம்பிகளும் என்னை தேற்றி ( பாசமுடன் திட்டி) இப்போது உன் அண்ணன் நான் நலமே!
இந்த கடிதம் எழுதும்போது மட்டும்.. கொஞ்சம் அழுதுவிட்டேன். உனை நினைப்போர் யாருக்கும் இனி நீ தரப்போகும் பரிசும் அது தானே, யாஸ்மின்!
ம்ம்... யாஸ்மின் ஒரு நற்செய்தி எனது தம்பி, ரசிகவ் ஞானியாரின் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.10-ஆம் தேதி தான் மருத்துவர்கள் முதலில் சொன்னார்கள். ஒரு நாள் தள்ளி நேற்று 11/ஆகஸ்ட்/2007 அந்த குழந்தை பிறந்தது. (சுகப்பிரசவம்! - இறைவனுக்கு நன்றி)
உடனே என் தம்பி ரசிகவை அழைத்து நான் பேசினேன், " ரசிகவ், நீ அப்பா ஆனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! என்னை பெரியப்பா என்றழைக்கும் இன்னுமொரு குழந்தை... சரி... எனக்கு உன்னிடமொரு விண்ணப்பமுண்டு" என்றேன். "சொல்லுங்கள் அண்ணா, உங்களுக்கு எதையும் செய்ய சித்தமாக உள்ளேன்" என்றான் என் அன்புத் தம்பி.
"தம்பி, மகளுக்கு " யாஸ்மின் " என்ற பெயர் வைக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்" என்றேன்.
சில நொடிகள் மௌனம்...
பிறகு சொன்னான், "அண்ணா எனக்கும் அந்த பெயர் தான் வைக்க வேண்டுமென்று ஆசை!, கண்டிப்பாக அந்த பெயரை வைப்போம்" என்றான்
யாஸ்மின் நீ எங்கும் செல்லவில்லை எங்கள் வீட்டில் மீண்டும் வந்திருக்கிறாய், பல நூறு வருடங்கள் வாழ.
சந்தோஷம் தாங்க முடியாமல், உடனே ஆசிப் அண்ணனை அழைத்து, "அண்ணா நம்ம யாஸ்மின் எங்கும்போகவில்லை ரசிகவ் வீட்டில் பிறந்திருக்கிறாள், நீங்கள் அந்த குழந்தையை சந்தித்து பிரார்த்த்னை செய்து ஆசீரவதிக்க வேண்டுமென்றேன்" கண்டிப்பாக செய்கிறேன் சுரேஷ் என்றார் ஆசிப் அண்ணன்.
விண்ணகத்திலிருக்கும் நீ நாங்கள் செய்வதையெல்லாம் கண்டு சிரிக்கிறாயோ பாராட்டுகிறாயோ,
ஆனாலின்று இறைவனோடு இருக்கும் நீ உண்மையை உணரமுடிபவள்!
சில அன்புச் சகோதரர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையில்லை என்று திருமறை சொல்கிறது என்றார்கள், அதை இப்போது நானும் நம்புகிறேன். ஏதோ எனது மன உணர்வுகளையெல்லாம் அப்படியே கொட்டித் தீர்த்து விட்டேன். தவறுகள் இருந்தால் இந்த அண்ணனை மன்னிக்கவும்.
இறைவனின் முழு கிருபையிலின்று இருக்கும் நீ இந்த அண்ணனின் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.
இன்றிரவின் உறக்கத்தில் எனக்கு நீ தரப்போகும் பதில்-மடலை எதிர்பார்த்து!
பாசமுடன்
உன்
என் சுரேஷ் அண்ணன்
10 comments:
கண்ணில் நீர் வராமல் இருக்கவில்லை, உங்கள் பாச கடிதம் கண்டு சுரேஷ் அண்ணா, உலகில் முதல் முறை நானும் கலங்கியது இந்த துயர் செய்தி கண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இப்பொழுது இறைவனின் பயம் என்னிடம் சற்று அதிகரித்திருக்கிறது. உலகில் வேறு யாருக்கும் இப்படி ஒரு நிலை வராமல், காப்பாயாக இறைவா!
எதையுமே நமக்கென்று சிந்தித்தால்
மனிதனின் மனிதம் புரியும். இந்த உலகமும் திருந்த முடியும்.
அன்புடன்
மீரான்
உருக்கமான கடிதம் அண்ணா. ரசிகவ் தயங்காமல் மகளுக்கு யாஸ்மின் என்று பெயர் வைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது நான் உங்களுக்கு திருப்பி சொல்கிறேன் - யாஸ்மினுக்காக பிராத்தனை செய்வதை தவிர வேறு எதுவுமே செய்ய முடியாமல் இருக்கிறோம். பொறுத்துக் கொள்ளுங்கள். கண்ணீர் எதற்கும் தீர்வன்று, காலம் தான் அதற்கு அருமருந்து.
அண்ணா.. கடிதம் கண்டு கலங்கிவிட்டேன்.
முன்பின் பார்க்காத பொழுதும் மனம் இத்தனை வருந்துமா என்று நினைக்கையில் ஆச்சரியம் தான். அன்பிற்கு தான் எத்தனை ஆச்சரியங்கள்.
மனமார பிரார்த்திக்கிறேன் அண்ணா.!!
அன்புடன்,
நா.ஆனந்த குமார்
Really wonderful tribute to yasmin. Top of all giving the new born child the name of "Yasmin". Yopu are great.
Yours
lovingly
Gopi
அன்புத்தம்பி சுரேஷ்,
ஒருதாயின் வயிற்றில் நாம்
ஒன்றாகப் பிறக்கவில்லை
ஒன்றாகப் பிறக்கவில்லை என்று
என் விதியை நோகும் வேளையிது
மனிதர்களுள் மாணிக்கம் என் தம்பி
மண்மீது உதித்த வெண்ணிலா
மனம் முழுவதும் அன்பு கொண்டு
மாந்தருள் மாணிக்கமாய் வாழ்பவன்
கருணையே வடிவாய் அன்பின் கருவறையாய்
கர்த்தரின் வழிநின்று என் தம்பி சுரேஷ்
கடமைகள் ஆயிரம் களைப்பின்றி ஆற்றிடும்
கண்கொள்ளாக்காட்சி கண்டு அண்ணனிவன்
கண்களிலோ கண்ணீர் ஆறாக ஓடிடும்
துயர் கண்ட போது சுரேஷ்
துடைத்தெடுக்க ஓடிடுவன்
நல்லதொரு நிகழ்வென்றாலும்
நகைச்சுவையாய்ப் பகிர்ந்திடுவான்
மாநிலத்தீர் காணிர் இவன் என் தம்பி என
மார்தட்டி இவ்வண்ணன் மகிழ்ந்திடும் வேளை
இன்னும் பல நல்சேவைகளை இவன் புரிய
இறைவனவன் அருள் வேண்டி
இங்கேயிந்த அண்ணணும், அண்ணியும்
மனமுருகி பிரார்த்திக்கின்றோம்
அன்புடன்
அண்ணன்
சக்தி
உங்களது எழுத்துப் பாணி கல்நெஞ்சையும் கரையவைக்கும். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே...
உங்களின் பின்னூட்டங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கும் இவ்வேளையில் என் தங்கை யாஸ்மினின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று பாசமுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாசமுடன்
என் சுரேஷ்
பல மரணங்கள் மாளாத் துன்பம் தருவது இயல்பே!! நாம் ஈழத்தவர் இதில் இன்று வெக்குவாகப் பழக்கப்பட்டவர்கல் ;ஆனாலும் காலம் தான் கவலையைக் கரைக்கும் மருந்து.
தங்கள் குடும்பத்துக் குழந்தைக்கு அதே பெயரை இட்டது; மிகப் பெரிய உள்ளம் உங்களுக்கு..
மறுபிறப்பு உண்டு.ஆனால் மனிதராகவே பிறப்பது அபூர்வம்...சகோதரி யஸ்மின் பிறந்து விட்டார்.
அனைவர் அமைதிக்கும் பிராத்திப்போம்.
என்னவென்று சொல்ல முடியாத துயரம் தொண்டையை அடைக்கிறது
அருணா
அன்பின் சுரேஷ்..
இந்த கடிதத்தை எனக்கு இன்று அனுப்பி என் சோகத்தை விட பெரிய சோகம் உலகில் உண்டுன்னு உணர வச்சுருக்கீங்க..ஒவ்வொரு எழுத்தும் மனதை பாரமாக்கிக்கொண்டே போகிறது...என்னால் கதறி அழாமல் இருக்க முடியவில்லை...எத்தனை அன்பு,பாசம்...வேறென்ன சொல்ல எனக்கு தெரியல...உங்கள் அன்பு பல பேருக்கு தேவை சுரேஷ்...உங்களின் மன நிம்மதிக்காகவும், யாஸ்மினின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...
அன்புடன்
நட்சத்திரா..
Post a Comment