இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியை நினைவுபடுத்தும் ஆகஸ்ட் பதினைந்திற்கு ஒவ்வவொரு வருடமும் எத்தனை எதிர்பார்ப்புகள்! ஆனால் ரோஜாத்தோட்டம் வாங்கி மகிழ ஆசைப்பட்ட ஒருவருக்கு ஒரே ஒரு ரோஜா மட்டும் வாங்க அனுமதி கிடைத்தது போல், மனநிறைவின்றி கவலையாய் அடுத்த வருடத்தை நோக்கி ஒவ்வொரு வருடமும் தனது பயணத்தை தொடர்கிறது, பாவம் ஆகஸ்ட பதினைந்து!
அவ்வப்போது ஆங்காங்கே எடுக்கப்படுகின்ற புள்ளி விவரங்களில் அதிகமும் ஏதோ குறிப்பிட்ட சிலரை மட்டும் சில கேள்விகள் கேட்டு அதை மிகவும் சரியென்று வாதம் செய்கின்றவைகளாக இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. உதாரணமாக, சென்னை போன்ற ஒரு நகரத்தை ஒரு தனியார் புள்ளிவிவர நிறுவனம் எடுத்துக்கொண்டு சிலரிடம் சில கேள்விகள் மட்டும் கேட்ட்விட்டு, “இன்று பெண்களில் அதிகம் பேர் வேலைக்கு செல்கிறார்கள். கடந்த வருடத்தை விட இந்த வருடம் பெண்களின் முன்னேற்றம் மிக அதிகமாக உள்ளது” என்றெல்லாம் சொன்னதும் பொதுவாக எல்லோருக்கும் இந்தியா முழுக்க மாபெரும் வளர்ச்சி அடைந்து விட்டது போல் ஒரு எண்ணம் தவறாக வந்து விடுகிறது. இதைக்கண்டு கோபப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமமும், கிராம மக்களும், விவசாயமும் சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்களாகியும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தானுள்ளது. அவ்வப்போது மேலே வருவது போல் தோன்றினாலும் வறுமைக் கோட்டை இது வரை முழுமையாகத் தாண்டவேயில்லையே! கிராமத்துப் பெண்களில் இந்த அறுபது வருட சுதந்திர வருடங்களில் மருத்துவர்களாக அல்லது பொறியாளர்களாக அல்லது மற்ற உயர் பதவிகளைப் பெற்றோர்களாக எத்தனைபேர்கள் முன்னேறியிருக்கிறார்கள், என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்குமென்பதில் சந்தேகமே இல்லை. அது சரி தான் என்கிறது ஆகஸ்ட பதினைந்து!
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால் உயர்கல்வி இந்தியத் திருநாட்டில் ஏழைகளுக்கு, அதிலும் முக்கியமாக கிராமத்து ஏழை மக்களுக்கு எட்டாத ஒரு கனியாகவே இன்றும் இருப்பதால், அதிகமும் குலத்தொழில் செய்தே ஒவ்வொரு தலைமுறையினரும் வாழ வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது. ஏழையின் மகன் பரம ஏழையாகவும், லட்சாதிபதியின் மகன் கோடீஸ்வரனாகவும் பரிணாமம் அடைகின்ற ஒரு பத்தை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. இதை கவலையோடு பார்க்கிறது, ஆகஸ்ட் பதினைந்து!
கிராமத்து மக்கள் கல்விபெற படும் பெரும்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதிலும் முக்கியமாக மாணவிகள் மிக மிக சிரமப்பட்டு வறுமையின் கொடுமையிலும் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நகரத்தில் வாழ்வோருக்கு இணையாக நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பின்றியும், கோடீஸ்வரர்களுக்கு இணையாக பணம் கொடுத்து கல்வி கற்க வசதியின்றியும் கவலைக் கடலிற்குள் புதைந்து போகிறாகள். ஏழை கிராமத்து மாணவிக்கு பொறியியலும் மருத்துவமும் கரைந்து போன கனவாகியதும், படித்த படிப்பையெல்லாம் நினைத்து அழுது அழுது, வேறு வழியின்றி வீட்டு வேலைக்காரியாக, சித்தாளாக, விவசாயம் அல்லது வேறு தொழிற்சாலைகளில் கூலி வேலைக்காரியாக தனது இளமையின் ஆரோக்கியத்தை கரைத்து கிடைக்கும் கொஞ்சம் கூலியை நோக்கி தனது வாழ்க்கை பயணத்தைத் துவங்குகிறாள். ஒரு தாலி வாங்கும் அளவிற்கு சேமிப்பு சேர்ந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் சமுதாயம், ஒரே வருடத்தில் குழந்தை மட்டும் அவளுக்கு பிறக்கவில்லையென்றால் மலடி என்ற பட்டம் கொடுக்கிறதே இது நியாயமா என்று கேட்கிறது ஆகஸ்ட் பதினைந்து!
கீழ்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதே, அவங்க அந்த பதவியில் வந்தார்களே, இவங்களுக்கெல்லாம் வேலை கிடைத்ததே என்றெல்லாம் சொல்லி உண்மையை மறைக்க யாராலும் முடியாது. அறுபது வருடங்களில் பிற்படுத்தப்பட்டோரில் எத்தனை குடும்பங்கள் இந்தியாவில் முன்னேறியுள்ளது அதில் பெண்களின் முன்னேற்றம் என்ன என்று பார்த்தால் அது வியப்பைத் தவிற வேறென்ன தரமுடியும். சில பெண்கள் விமானம் ஓட்டினாலோ, சில பெண்கள் இராணுவத்தில் சேர்ந்தாலோ இந்தியா ஒலிர்கறது என்று சொல்ல முடியுமா. சில அதிசயங்களைக் கண்டு எல்லாமே மாறிவிட்டது என்று சொலவது மிகவும் தவறு. இங்கே ஒரு பெண் குடியரசுத் தலைவராய் வர எத்தனை போராட்டங்கள்! இதிலிருந்தே யாருக்கும் இன்றைய இந்திய ஏழைப்பெண்களின் நிலையை புரிந்து கொள்ளலாம்! மற்ற நாடுகளை வைத்துப் பார்த்தால், அறுபது வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சி திருப்தி தராத ஒரு கசப்பு தான் என்பது நிதர்சனமான உண்மை. சரி.. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி என்ன செய்ய என்ற கேள்வியை தனது பார்வையில் வெளிப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!
இந்தியா வளர்ந்து வெற்றிபெற வேண்டுமென்றால் இந்தியாவில் இந்தியப்பெண்கள் முதலில் முன்னேற வேண்டும். அதற்கு எல்லோருக்கும் கல்வி என்ற திட்டம் நூறு விழுக்காடு வெற்றி பெற வேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் கொடூரத்தை உடனடி அழித்து, தாய் மொழியிலேயே எல்லா உயர் படிப்புகளும் படிக்க தேவையான வசதிகளை அரசே பொறுப்பெடுத்து உடனே செய்து வெற்றி பெற வேண்டும் இதை மட்டும் செய்தால் போதும், கண்டிப்பாக இந்தியா உலகத்திலேயே உயர்ந்த வல்லரசாக ஒளிரும் என்றதும் உண்மையுணர்ந்து சந்தோஷமாய் சிரித்து மகிழ்கிறது ஆகஸ்ட் பதினைந்து!
3 comments:
நல்ல கட்டுரை; மிக நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்...
திரு ஜான் பெனடிக்ட் அவர்களே,
உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
அன்புடன்
என் சுரேஷ்
My Dear Annan,
you had reflected, every Indians moral feelings about August 15'th.
Felt that I had read the Anadha vikatan's Thalayangam.
Thodarattum ungal payannam. Vaazhthukkal.
Thambi Anthony Muthu.
Post a Comment