//நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம் //
காதலை சங்கீதமென்றும் அவளின் வாய்மொழி தெய்வீகமென்றும் என்ன அழகான வர்ணனை!
//வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்//
இந்த வரிகளை வாசிக்கையில் அது மும்பையில் பறக்கும் ஜோடிப்புறாக்களை நமது கண்முன்னே கொண்டு வருகிறது ஆனால் இதை எழுதின வாலி அவர்கள் அதை ஊர்வலம் போவதாக எவ்வளவு அழகாக ரசிக்கிறார் பாருங்கள்!
இதயத்தில் காதல் உணர உணர அதன் கீதம் கேட்க, ஜீவன் நனைகிறதாம் ! அதை இரவும் பகலும் ரசித்திருக்க ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதை என்ன அழகாக பாடல் வரிகளில் சித்திரம் தீட்டியிருக்கிறார் பாருங்கள் இனிய கவிஞர்!
//பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?//
நாயகன் நாயகியின் கூந்தலில் முத்தமிடும் காட்சியை ஒரு கவிஞனின் பார்வையில் எப்படி மிளிர்கிறது பாருங்கள்.
உந்தன் கூந்தலில் நான் முத்தமிட அப்போது வெளிவரும் எந்தன் காதல் மூச்சே உனக்கு பூவாக ஏன் சூட்டுகிறாய் என்ற அருமையான ஒரு உணர்ச்சிக் கேள்வி இதை ரசிக்க முடிந்தவன் காதலில் ஞானி!
//தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?//
தேன் தரும் அதிசய நிலவு நான் அவ்வளவு தான், தற்போது என்னை விட்டு விடு என்று சொன்ன பின்னர் , " எந்தன் தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்" - என்ற பயம் கலந்த ஓர் சுகமான உளவியல் கேள்வியை நாயகியின் நிலை அறிந்து கேட்கிறார், கவிஞர்!
//கடற்கரைக் காற்றே...கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணலலை யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே //
இனிய தென்றலே! நீ எந்தன் காதலி வருவதற்காக வழியை மட்டும் தந்தால் போதாது; நாங்கள் இருவரும் நடந்து வந்த பாதச்சுவடுகளை தயவாக நீ மறைக்காதே, ஏனெனில் அதில் எங்கள் காதல் பயணம் மீண்டும் தொடரட்டுமே என்று கவிஞர் தென்றலிடம் கெஞ்சிச் சொல்கையில் தென்றல் நம்மோடு வாழுகின்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றே தோன்றுகிறது!
இதுபோல் இனிய பயணங்கள் எல்லோருக்கும் தொடரட்டுமே....!
அன்பு நன்றி வணக்கம்
என் சுரேஷ்
No comments:
Post a Comment