Friday, February 13, 2009

காலணிகளோடு பேசும் இதயம்...


இந்த தொழிலில் தனது ஈடுபாடு
இருதய அறுவைச் சிகிட்சை செய்யும்
மருத்துவரை விட மேலானதென்று
காலணிகளை தைத்துக் கொண்டிருந்தார்
கோபி அண்ணன்

அவர் கை தனது கைமேல்
பட்டுவிடக்கூடாதென்ற
ஜாக்கிரதையில்
ஐந்து ருபாய் நாணயத்தை
கோபி அண்ணனின் கைகளில்
எறிந்து விட்டு
காலணிகளை
கொண்டு செல்கிறான் ஒருவன்

ஐந்து லட்சம் ரூபாய்க்கான
காசோலைகளுடன்
அனுதினமும்
மருத்துவரின் கால்களில்
விழுந்து வணங்குகின்றனர்
அநேக இருதயநோயாளிகள் - பாவம்!

வனமும் மனமும்...



வனத்திற்குள் சுற்றி வந்தேன்
மிருகங்களும் பறவைகளும்
என்னிடம் நிறைய பேசின- ஆனால்
பசியின் பரிதவிப்பு மட்டும்
அவர்களிடம் இல்லை!

அந்த வனத்திலிருந்து
வெளிவந்ததும்
ஏழைச் சிறுவனொருவன் பசியோடு
தவிப்பதைக் கண்டேன்
அவன் பெயர் "சேரி நாய்"

போட்டியொன்றில் ஜயித்து
கோடீஸ்வரனாகும் - அவனின்
கற்பனை கதாபாத்திரத்தின் பெயர்
"சேரி நாய் கோடீஸ்வரன்"

வார்த்தைகள்...


செல்கிறார் கிராமம் ஒன்றிற்கு
இறையன்பை அறிவிக்க
சீடர்களோடு ஒரு குரு

கிராமம் முழுவதும் சுற்றி வந்தபின்னர்
"வாருங்கள் புறப்படலாம்' - என்றார்
ஒன்றுமே பேசவில்லையே குரு
என்ற கேள்விகள்
சீடர்களின் பார்வைகளில்

மென்மையாக
பதில் சொன்னார் குரு

நாமிந்த கிராமத்தை சுற்றிவர
நம்மையும்
நமது
அன்பு மொழிகளையும்
கண்டறிந்தனர் மக்கள்!
இறையன்பை அறிவிக்க
தேவைப்பட்டால் மட்டுமே போதும்
வார்த்தைகள்!

Wednesday, February 11, 2009



இளமையில் வறுமை
பசிக்கு உணவு பாதி!

ஓரளவு படிக்க ஆசை
நிறைவேறவே வழியின்றி
அதில் பாதி!

அடிப்படை
குடும்பத்தேவைகள்
நிறைவேற்ற வழியின்றி
கவலைக்குள் அதில் பாதி!

உறக்கம் வாழ்க்கை சிரிப்பு என
ஆயிரமாயிரம் பாதிகள்...!

இந்த லட்சணத்தில்
முதலாளியின் திடீர் அறிவிப்பு
"எல்லோருக்கும்
இந்த மாதத்திலிருந்து
சம்பளம் பாதி
!"

Friday, February 6, 2009

மாபெரும் தவறுகளில் ஒன்று...


நகைகள் தன்னை அணிந்த
மகிழ்ச்சியில் - அவள்
கண்ணிமைகளை மூடாமல்...

தன்னைவிட தனது நகைகளை
அதீதமாய் நேசிக்கும் ஒருவளோடு
வாழ்வதெப்படி என்ற பயத்தில் - அவன்
கண்ணிமைகளைத் திறக்காமல்...

இருவருக்குள்ளும்
மௌனம் அரங்கேற..

இதெல்லாம் நமக்கென்று - என்ற
ஆதங்கத்தில் அநேக பார்வைகள்
கனவுகளுக்குள் செல்ல -அந்த
கனவுகளில் சில கவலைகளுக்குள்ளும்
சில மகிழ்ச்சிகளுக்குள்ளும் கரைந்தன!

அன்றாட வாழ்வில்
எல்லோரும் செய்து வரும்
மாபெரும் தவறுகளில் ஒன்று
வியப்பதும் வியக்க வைப்பதும்!

Wednesday, February 4, 2009

முதல் இரவு...

நிச்சயம் முடிந்த இரவு முதல்
காத்திருந்த
பொன்னிரவு முதலிரவு

பல்லாயிரம்முறை மனதிற்குள்
பாடிக்கொண்டிருந்தது ஒரு பாடல்...
"ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலிரவு"

இன்று திருமணநாள்...
காலை முதல் மாலை வரை
ஒருவருக்கொருவர் பேச முடியாமல்
சுற்றும் சொந்த பந்தங்கள்
நண்பர்களின் கிண்டல் -முதலிரவு

முஹூர்த்தம் வரவேற்பு அது இது
அந்த முறை இந்த முறையென
காலை முதல் மாலைவரை நகர்ந்திட
இருவரும் பேசிக்கொள்ள
காத்திருந்தது முதலிரவு

பகல் சென்று மாலை வந்திட
வந்தது இரவு வெகு தாமதமாக..
உடலும் மனமும் களைத்துப்போக
படுக்கையைக்
கண்டதும் உறங்கிவிட்டது
அவர்களுடைய முதலிரவும்!

நாளை விடுமுறை...

நாளை ஒருநாள்
எனக்கு விடுமுறை

இயந்திரவாழ்க்கைக்கு
ஒரு நாள் சுகாமான ஓய்வு

சுகமாக நானுறங்கி விழிக்க
நாளை காலை
கடிகாரத்திற்கும் விடுமுறை

என் அன்பு மனைவியோடு
காலையில் ஆலயதரிசனம்
இறைவனுக்கு என்னிதயம்
நன்றிமலர்களை சமர்ப்பிக்க

தாய்க்கும் பெரியோர்கள்
எல்லோருக்கும் எந்தன்
சிறப்பு வணக்கங்கள்

தள்ளாடும்
எனது தாய் சமைத்த
மதிய உணவு
குடும்பத்தாருடன்

அனாதை/முதியோர் இல்ல
தெய்வங்களோடு
என் மாலைப்பொழுது

தங்களின் நேரத்தை என்னிடம்
முன் குறித்தோருடன்
இரவு-உணவு;
அன்பின் பகிர்தல்!

3/2 அன்றைய
எனது பிறந்தநாள்
மகிழ்ந்து கொண்டிருக்க...

அடடே
விடுமுறை நாள் முடிந்ததே என
வியந்து போவதற்குள் - என்
கண்களை உறக்கம் மூடும்
அடுத்த நாள் காலை
கடிகாரசத்தத்தின் தொந்தரவு கேட்டவுடன்
மீண்டுமெந்தன் கண்கள் மலருமென்ற
நம்பிக்கையுடன்.