Monday, September 22, 2008

நூறு வருஷம்...


எனது இல்லத்திலிருந்து இரயில் நிலையம் வரைச் செல்ல எனக்கு தினமும் ஆட்டோ ரிக்ஷா காலையில் தேவைப்படும். என்னுடைய இல்லத்திற்கு அருகில் உள்ள திரு பலராமன் கடந்த ஒன்றறை வருட காலமாக காலை 8.15க்கு வந்து ஒரு மிஸ்ட் கால் செய்வார். ஆனால் சில நாட்களில் அவருக்கு வேறு நீண்ட சவாரி வந்தால் மிஸ்ட் கால் வராது. அன்று நான் பிரதான சாலைக்கு சென்று ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்வது வழக்கம்.

திரு பலராமான் வராததால், நேற்று ஓர் ஆட்டோ ஓட்டுனர் வந்தார், "ஐயா வாங்க" என்று சிரித்தவாறே அழைத்தார். சந்தோஷமான முகம், நெற்றியில் சந்தனம், உழைப்பவனின் கறுப்பு நிறம், நாற்பது வயதைத் தாண்டினதைச் சொல்லும் உருவம், கொண்ட இவர் " ஐயா நீங்க என்ன, போலீஸ் அதிகாரியா" என்றார், "இல்லை" என்றேன். "பிறகு ஏன் இப்படி மௌனமா இருக்கீங்க... சரி... உங்களுக்கு ஒரு கத சொல்லட்டுமா" என்றார்.

பல வருடங்களுக்கு முன் என்னை ஆட்டோவில் பள்ளிக்கு கொண்டுச் சென்ற செல்வன் அங்கிளை நினைவிற்க் கொண்டுவந்தார் இந்த ஆட்டோ ஓட்டுனர் திரு.சிவா!

சரி..கதையைச் சொல்லுங்களேன் என்றேன்!

"ஐயா இறைவன் முதலில் மனுஷன படச்சிட்டு 40 வருடம் சந்தோஷமா இருடான்னாறு, பெறகு நாய், எருமை, அப்புறமா கொக்கைப் படைச்சுட்டு அதுங்களுக்கும் 40 வருஷம் ஆயுளெ கொடுத்தாரு..

ஆனா இந்த நாய், அட நாம எதுக்கு 40 வருடம் வாழனோம், 20 போதும்னு பிராம்மா கிட்டக்கப் போய், சாமி எனக்கு 20 வருடம் போதும்னுச்சி..

சும்மா இருக்குமா எருமையும் கொக்கும்? அதுங்களும் அப்படியே சொல்ல... இந்த மூன்னு பேறுது ஆயுள் இப்போ எவ்வளவு ஆச்சு? ஆஆஆ... சரியா சொன்னீங்கோ...60!

இந்த அறுவது வயச அப்படியே மனுஷனுக்கு கொடுத்தாரு பிரம்மா. சந்தோஷமா மனுஷ அத்த வாங்கினது தப்பாப்போச்சு. ஏன்னு கேக்கரீங்களா?

சார், எனக்கு இப்போ 45 வயாசாச்சு, என்னோட பொண்டாட்டி இன்னா சொன்னாலும் கடந்த அஞ்சு வருசமா, அவங்க கிட்டக்க வல் வல்ன்னு விழுவே...ஏன் அது நாய்குணம்.

ஒழுங்கா 40 வயுசு வாழ்ந்திருந்தேன்னா... 20 வயசுலே புள்ளைய கட்டிக்குடுத்துட்டு நிம்மதியா போயிட்டுருப்பேன்.

சரி.. 60 வயசுக்குமேல வேல செய்ய முடியாது எனக்கு... அப்போ எல்லாம் நம்புள மதிக்கவே மாட்டானுங்க.. அப்போ எருமையப்போல, என்ன தான் மேல மழைப் பேஞ்சாலும் சூடு சொறனையெ இல்லாம இருப்பேன், ஏன்? ஆஆஆ...அது எருமையுட ஆயுளெ நான் எடுத்தேல்லா... அதா...

60 லேர்ந்து 100 வயசு வரைக்கும் கொக்கப் போல சார், பூமியப் பார்த்து எப்பட நம்ம உடல் பூமிக்கு போவும், வானத்தப் பார்த்து எப்படா நம்ம உயிரு வானத்துக்கு போகும்னு பார்ப்பேன்... ம்ம்.. அது கொக்கின் ஆயுள்... இது தான் சார் கத..." என்று சிரித்துக்கொண்டே வண்டியின் பிரேக்கை அடித்தார், இரயில் நிலையம் வந்தது.

அவர் கேட்ட நியாயமான பணம் கொடுத்து இரயில் நிலையத்திற்குள் நடந்து செல்கிறேன், தூரத்தில் ஒரு நாய் சத்தமிட அந்த சத்தம் எனது காதுகளில் வந்து கொண்டிருந்தது. இரயில் வந்ததும் அதிலேறி ஜன்னலோரம் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன், ஓர் எருமை மீது அமர்ந்திருந்த கொக்கொன்று பறந்து சென்று கொண்டிருந்தது!!!

15 comments:

ஷைலஜா said...

வாழ்க்கைப்பாடம் கற்க பள்ளிக்குப்போகவேண்டியதில்லை என்பதை நடைமுறைவாழ்வில் நாம் சந்திக்கும் சாதாரணமனிதர்கள் சொல்கிறார்கள்...போதிமரங்கள் இப்படித்தானே மனிதவாழ்வில் நம் வழியில் வந்துநிற்கின்றன சுரேஷ்? நல்லபதிவு.

Natchathraa said...

உண்மைதான் சுரேஷ்...அருமையான பதிவு...நல்ல கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி... :-)

Anonymous said...

Vanakkam

போதிமரங்கள் இப்படித்தானே மனிதவாழ்வில் நம் வழியில் வந்துநிற்கின்றன

aaka enna azhagana vaakiyam

Auto driverin vilakkam...good...nantaga irunthathu

N Suresh said...

அன்பினிய ஷைலஜா,

போதிமரம் என்று அழகாக சொன்னீர்கள்.

பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி

N Suresh said...

மிக்க நன்றி நட்சத்திரா!

ராமலக்ஷ்மி said...

ஷைலஜா கூறியிருப்பதை அப்படியே வழிமொழிகிறேன்.

யதார்த்த வாழ்வை ரொம்ப யதார்த்தமாக சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள் எல்லாம் புரிந்த சாதாரண மனிதர்கள். அதில் புதைந்திருக்கும் தந்துவங்கள் அப்போதுதான் பிடிபட புரிந்து நாம் வியக்கிறோம்.

கடைசிப் பத்தியை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதின் அடையாளமாகவே முடித்திருப்பது தனிச் சிறப்பு.

Dr.Srishiv said...

அருமையான பதிவு அண்ணா, எதார்த்தமாக இருக்கின்றது, மிக்க நன்றி, இன்னும் பதியுங்கள்
சிவா @ ஸ்ரீஷிவ்...பெங்களூரில் இருந்து

சக்தி சக்திதாசன் said...

அன்புத் தம்பி சுரேஷ்,

வாழ்க்கையின் தத்துவங்களை ஒரு சாதாரண மனிதரிடமிருந்து அறியும் போது அந்த இன்பமே அலாதியானது. அந்த ஆட்டோ சாரதி கதை சொன்னது பெரிய விடயம் தான், ஆனால் அந்தக் கதையைச் சொன்னதும் எத்தனையோ பேர், நல்லா இருக்கு என்னு மட்டும் சொல்லிட்டு அந்த ஆட்டோவை விட்டு இறங்கும் போது அதை அங்கேயே விட்டுப் போகும் அவசர சமுதாயத்தில், அவரைப் படம் பிடித்து, அவர் சொன்ன கதையில் இருந்த உண்மையை உணர்ந்து அதைப்பதிவாய் ஆக்கியிருக்கும் என் தம்பியின் உன்னத உள்ளத்துக்குத் தலை வணங்குகிறேன்.

அன்புடன்
சக்தி

N Suresh said...

மிக்க நன்றி தம்பி சிவா

N Suresh said...

மிக்க நன்றி அண்ணா...

இந்த ஓட்டுனர் நபர் பாவம்!

இடுப்பு வலியையும் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுகிறார்.

வறுமை கொடுமை தான்!

ஆர்கோணத்திலிருந்து சென்னை வந்து ஒரு வார காலம் வண்டியோட்டி வாரமொருமுறை வீடு செல்கிறார். குளியல் எல்லாம் கட்டணம் கட்டித் தான். உறக்கம் ஆட்டோவில் தான். ஏன் சென்னை வருகிறார் என்றால், ஆர்க்கோணத்தில் ஆட்டோ வாடகைக்கு கிடைப்பது குறைவு, கிடைத்தாலும் அந்த வருமானம் வைத்து வாழ்வதும் கடினம் என்பதால் தானாம்!

இருப்பினும் சிரித்த முகத்துடன் வாழ்ந்து மற்றவர்களை மகிழ்வைக்கிறாரே!
இவர் நிச்சயம் ஓர் ஆசிரியரே!

வணங்குகிறேன், அந்த சகோதரனை!

ஒரு நகைச்சுவையாகத் தான் இந்த பதிவை இட்டேன்...ஆனால்............!!!!!!!

என் செய்வது
உண்மை அழகானது!

அன்புடன்
என் சுரேஷ்

N Suresh said...

//கடைசிப் பத்தியை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதின் அடையாளமாகவே முடித்திருப்பது தனிச் சிறப்பு//

அன்புள்ள திருமதி ராமலக்ஷ்மி,

உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நான் எழுதின பிறகு வாசித்துப் பார்த்தபோது நானும் அதன் கடைசி பத்தியைத்தான் மிகவும் ரசித்தேன்.


பாசமுடன்
என் சுரேஷ்

Sudha K Raj said...

vaazhkai payanathil ovuru nigalvum oru paadam enbathai padampidithu kaatiyuliir.

மதுமிதா said...

நல்லதொரு சம்பாஷணை
நல்ல பாடம்
நல்ல அனுபவம்

வாழ்க்கையின் உண்மை தரிசனங்களை போகிற போக்கில் சொல்லிட்டு போறவங்க இவங்க.

மனித உருவில் தெய்வம்:-)))))

கீதா சாம்பசிவம் said...

அன்றாட வாழ்வின் யதார்த்தம், அது புரிந்த மனிதர், உண்மையில் அவர் ஒரு யோகி என்றே தோன்றுகிறது. எதுவும் ஒட்டாத தன்மை!! இந்தத் தன்மை அனைவருக்கும் வாய்க்கவேண்டும்!

N Suresh said...

அன்புள்ள கவிஞர் மதுமிதா, சுதா ராஜ், அம்மா கீதா சாம்பசிவம்,

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments