Thursday, August 19, 2010

வழக்கறிஞர் தீபிகாவிற்கு திறந்த ஒரு மடல்...

அன்பினிய என் தங்கை திருமதி தீபிகா அவர்களுக்கு,

இன்று உங்கள் பிறந்த நாள் என்று என்றோ அறிந்து வைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம் இன்று!

மீண்டும் உங்களுக்கான எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இந்த மடல் வழியாக தெரிவித்து மகிழ்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்த சமாதானமும் தரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

2010 -ல் இறைவன் எனக்கு அளித்த பல முக்கிய பரிசுகளில் தங்கை தீபிகா, நீங்கள் முக்கியமான ஒன்று!

துடிப்பும் தெளிவும் நிறைந்த அறிவாற்றல் நிறைந்த பேச்சு, கடின உழைப்பு, கடந்து வந்த பாதைகளை மறவாமால் அடுத்தவர்களுக்கு உதவும் அன்புள்ளம், நகைச்சுவை உணர்வு, தைரியம் என நீண்டதொரு சிறப்பு பட்டியலுக்கு சொந்தக்காரி நீங்கள் என்றும் இந்த பூமிக்கு ஒரு முக்கிய சொத்து என்றால் அது மிகையாகாது!

இப்படித் தான் வழக்கறிஞர்கள் என்ற சாதாரண மனிதனின் புரிதல்களுக்கு வியப்பளிக்கிறது உங்களுடைய சேவைகள்.

ஏழ்மை தந்த பசி அறிந்த ஒருவருக்கே இன்னொருவரின் பசி கண்டு உதவ முன் வர முடியும்.
அந்த வகையில் நீங்கள் பலருக்கு செய்து வரும் உதவிகளைக் கண்டு பாராட்டாமல் இருக்க முடியுமா?

மாநாகராட்சி பள்ளிகளில் படிக்கும் எங்கள் சமுதாயத்தின் (ஏழை எளிய) பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கும் முதல் வழக்கறிஞரை நான் உங்களில் தான் வியப்போடு பார்க்கிறேன், பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன், ஆகையால் பாராட்டுகிறேன்!

பணம் பணம் பணம் என்ற ஒற்றை விஷத்திற்கு மட்டுமே பின்னர்/ முன்னர் போகும் இந்த சமுதாயத்தில், உணவில் உப்பைப் போன்று மட்டுமே பணம் போதும்; உப்பே உணவாக்கும் கொடுமை நமக்கெதற்கு என்ற கருத்தை நடைமுறை படுத்தும் உங்கள் வாழ்க்கை முறையும் சிறப்பானதே!

திரு பார்வேந்தன் அவர்களை நான் சந்திக்க நீங்கள் எடுத்த முயற்சி, அதில் எனது சந்தோஷம் கண்டு உங்களின் மகிழ்ச்சி - இதை எந்நாளும் நான் நன்றியோடு நினைத்துப்பார்ப்பேன்!

நாம் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேச இந்த காலம் நமக்கு துணைவருவதில்லை என்பது கசப்பான ஓர் உண்மை தான்!
இருப்பினும் முயற்சி செய்வோம்.

இதுவரை நீங்கள் சந்தித்த வழக்குகளில் மறக்க முடியாதவைகள் யாது என்றெல்லாம் உங்களிடமிருந்தும் கேட்டறிந்து இன்னமும் கொஞ்சம் ஆழமான எனது சமுதாய தரிசனங்களுக்கு உங்கள் கருத்துக்கள் எனக்கு உதவிட காலம் கனியட்டும்!

என் தம்பிகள் சுரேஷ், முத்து, மற்றும் தங்கை மேகலா போன்றோர்களுக்கு வேலைகள் கொடுத்து, அவர்களில் நீங்கள் காட்டும் அன்பும் நலனும் கண்டிப்பும் கண்டு சந்தோஷப்படுகிறேன்.

உங்களினிய குடும்பத்தார் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்!

உங்களுக்கு நிச்சயம் நல்ல ஒரு எதிர்காலம் இறைவன் அளிப்பார் என்ற நம்பிக்கையில் மீண்டும் வாழ்த்துகிறேன் தங்கையே! நீங்கள் நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்

என்றென்றும் பேரன்புடன்
உங்கள் அன்பு அண்ணன்
என் சுரேஷ்

No comments:

Post a Comment

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...