Tuesday, August 24, 2010

அந்தோணி முத்துவை சொர்கத்தில் சந்திப்போம்...



அந்தோணி முத்து!

25 வருடங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக அந்தோணி என்ற ஒருவர் இருப்பதாக (அழகி தமிழ் - பா விஸ்வாநாதன் மூலம்) அறிந்ததும் எனது ஆசிரியர் மைக்கல்ராஜ், தாயார் திருமதி சுமதி மைக்கல்ராஜ், மற்றும் எனது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி சுரேஷ் - நாங்கள் மூவரும் அவரைக் காண ரெட் ஹில்ஸ் என்ற இடத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று நேரடியாக கண்டு வந்தோம்.

"யாரிவர் " என்ற கவிதை ஒன்றை எழுதி வலைப்பதிவு நண்பர்களிடம் அந்தோணி முத்துவைப் பற்றி அறிவித்தேன். அவரின் நிலைப் பற்றி நான் அனுப்பின புகைப்படங்களும் சொல்ல முடியாத செய்திகளை அறிவித்தன!

வலைப்பதிவாளர்கள், அழகி தமிழ்- பா விஸ்வநாதன், சிங்கப்பூர் அன்பு, சீனா ஐயா, சக்தி ஐயா, ஆல்பர்ட் அண்ணன், என்றென்றும் அன்புடன் பாலா, ஹரன் (துபாய்) என பலநூறு பேர்கள் என்றென்றும் பாலாவின் வங்கி வழியாகவும் பிறகு அந்தோணிக்கு நேரடியாகவும் உதவி செய்தனர். (எனது மனநிலை கவலையால் இருப்பதால் பலருடைய பெயர்கள் விட்டுப்போய் விட்டது, தயவாக மன்னிக்கவும்)

தேவையான மடிகணினி, இயந்திர நாற்காலி என அடிப்படை தேவைகள் முடிந்த அளவு வலைதள நண்பர்களும் மற்ற பல அன்புள்ளங்களம் அளித்து அந்தோணி சந்தோஷமாக இருந்தார்.

இருள் நிறைந்த அறை விட்டு இயந்திர நாற்காலியில் தானே வெளியேச் சென்று தினமும் சூரியனைக் கண்டு வரும் மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷ வார்த்தைகள் மறக்க முடியாதவை!

என்னை மகனாக நேசிக்கும் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எனக்கு ஒரு மடல் எழுதி ( அப்போது அவர் துபாயில் இருந்தார்) திரு. வி.கெ.டி பாலன் ஐயாவை தொடர்பு செய்யச் சொன்னர். செய்தேன்!

திரு.வி.கே.டி. பாலன் ஐயா அவர் மக்கள் தொலைக்காட்சியில் அந்தோணி முத்துவை நேர்காணல் செய்து இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி அந்தோணி, அந்தோணியின் வீட்டிலிருந்து கொண்டே ஒரு வேலை செய்யும் சௌகரியத்தையும் செய்து கொடுத்து மதுரா க்ரூப் என்ற அவருடைய நிறுவனத்திலிருந்து அன்று முதல் தனது சிறப்பான ஓர் தொழிலாளியாக நியமித்து கௌரவித்தார்

இந்நேரத்தில் திரு அப்துல் ஜப்பார் ஐயாவையும் திரு வி.கே.டி பாலன் ஐயாவையும் நன்றியோடு வணங்குகிறேன்!

ஏறத்தாழ எல்லா நாளேடுகளும், வார இதழ்களும் அந்தோணியின் நேர்காணலை பதிவு செய்தது.

இணயதளத்தோடு அல்ல, தமிழோடு இணையதளத்தை தொடர்பு கொண்ட பிற்கு, அந்தோணிக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் மிக மிக சந்தோஷமாக இருந்தது.

எனக்கு நேரம் இல்லாத தவிக்கும் போதெல்லாம் வலைப்பதிவாளர் திருமதி அருணா அவர்களோடு அந்தோணியிடம் பேச சொல்வேன். அவர்கள் முடிந்த போதெல்லாம்
பேசி வந்தார். திருமதி அருணா அப்படி ஒரு தாயன்பு கொண்டவர்!


கழுத்திற்கு கீழ் இரண்டு கைகளைத் தவிற எல்லாம் வேலை செய்யாத போதும் உழைத்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த அந்தோணி முத்து கடந்த ஓரிரு மாதங்களாக எப்போதும் ஏற்படும் மூச்சுத் திணறல் ( வீசிங்க் ) காரணமாக கஷ்ட்டப்பட்டு வந்தார். குடும்பத்தாரோடு சேர்ந்து நாங்களும் இது எப்போதும் போல் சரியாகி விடும் என்று நினைத்தோம்.

அந்தோணி அதிகமாக கஷ்ட்டப்படுவதைக் கண்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படு அவருக்கு தீவிர சிகிட்சை அளித்து வந்த போதும் நிர்பந்தமாக அவர் தனது இல்லத்தின் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் தன்னை கொண்ட செல்ல அடம் பிடித்த போது வேறுவழியின்றி அவருடைய குடும்பத்தர் அதற்கு சம்மதித்தனர்.

விஷயம் தெரிந்ததும் திரு பாலன் ஐயாவோடு தொடர்பு கொண்டேன். அத்தனை மருத்தவ தகவல்களை அவரிடம் சேர்க்க ஏற்பாடு செய்யச் சொன்னார், செய்தேன்.

எனது தற்போதைய வேலை அழுத்தம் காரணமாக அந்தோணியை மருத்துவமனை சென்று காண முடியவில்லை என்ற குற்ற உணர்வு என்னை கொன்று கொண்டிருந்தது. இருப்பினும் என்னால் முடிந்தவைகளை எல்லாம் தொலைபேசி வழி செய்து வந்தேன்.

அந்தோணி முத்துவின் சகோதரிகளில் ஒருவர் (திருச்சபை கன்னியஸ்த்ரி) அவர்களின் பரிந்துரையின் பேரில் நேற்று காலை இசபெல்லா மருத்துவமனைக்கு அந்தோணியை மாற்ற தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யும் நேரம் இதற்குமேல் அந்தோணி கஷட்டப்பட வேண்டாம் என்று அவரின் அழகிய உயிர் மலரை இறைவன் இந்த புமியின் மனிதத்தோட்டங்களிலிருந்து எடுத்துக்கொண்டார்.

ஆரம்பம் முதல் நேற்று வரை அந்தோணியை நேரடியாக சந்தித்தோர், உதவி செய்தோர் என எல்லோருக்கும் எனது நன்றிகளை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.

நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கத் தான் இறைவன் அந்தோணி முத்துவைப் போன்றோரை படைக்கிறார் என்றும் இதுபோன்று கஷ்ட்டப்படுபவர்கள் அதிக காலம் வாழ்வதில்லை என்றும் என் மனது சொன்னது!

அந்தோணி இனி இங்கு இல்லை என்ற விஷயம் தெரிந்ததும், திரு பாலன் ஐயா, " சுரேஷ், அந்தோணியின் வலியும் கஷ்ட்டமும் அவருக்கு மட்டுமே தெரியும். இறைவன் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக் செய்வார், நீங்கள் தயவாக உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருங்கள்" என்று மிக மிக உறுதியோடு என் இதயத்தில் பதிவு செய்தார்.

என்னை தொடர்பு கொண்ட பலருக்கும் பாலன் ஐயா சொன்ன அதே வாசகத்தை சொல்லிக்கொண்டே என்னை ஆறுதல் செய்தேன்

இன்று மீண்டும் அந்தோணியின் வலைதளத்தை பார்த்தேன்.

இந்த பதிவு எழுதும் நேரம் தற்போது அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கிறது!
இதை வாசித்து ஒரு நொடி நீங்கள் கண்களளை மூடி அந்தோணியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய அன்போடு அழைக்கிறேன்!

இனி என்று?

இன்றாவது அந்தோணியின் வலைப்பூவை வாசியுங்கள். மரணம் ஒருவனின் எழுத்தை கோபுரத்திற்கு கொண்டு போகும். அந்தோணி உயிருடன் தற்போது இல்லை என்றாலும், அந்தோணி முத்து என்ற அவருடைய பெயர் கோபுரத்தில் எழுதப்படட்டும் உங்களால்!

அவரின் வலைப்பூ http://positiveanthonytamil.blogspot.com/2008/03/blog-post_23.html

என்றென்றும் அன்புடன்
என் சுரேஷ்

பின் குறிப்பு: நான் ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய ஆர்ம்பிக்கும்போதும் அதை ஒரு ப்ராஜக்ட் என்பேன். முடிந்ததும் ப்ராஜக்ட் ஓவர் என்பேன். ஆனால் அந்தோணியின் ப்ராஜக்ட் தீரவில்லை, அதை இறைவனின் பாதத்தில் தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன். மரணத்திற்கு பிறகு ஆத்மா இறைவனிடம் செல்லும் என்பது உண்மையெனில் எனக்கு இனி அந்தோணியைப் பற்றி கவலையில்லை!

அந்தோணியை நாம் சொர்கத்தில் சந்திப்போம்!

29 comments:

  1. மனம் பதைக்கிறது. கை நடுங்குகிறது.

    சித்திரவதையில் இருந்து விடுபட்ட தம்பிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. ஆழ்ந்த வருத்தங்கள். ஏற்கனவே உடல் முற்றிலும் இயலாத நிலையில் மூச்சுத் திணறலுடன் அவர் வாழ்வது அவருக்கு மேலும் துன்பமே, அமைதியாக அவருடைய துன்ப வாழ்வில் விடைபெற்றது அவருக்கு மன அமைதியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  4. அவர் உடல் தானம் செய்ய விரும்பி இருந்தார். :(
    http://positiveanthonytamil.blogspot.com/2010/05/blog-post_13.html

    ReplyDelete
  5. Anonymous2:11 PM

    Dear Suresh,

    God creates each person for some purpose.
    As you said Antony was born to make few people as divine persons.
    I pray for him and May his soul rest his peace.


    K.Yogaraj

    ReplyDelete
  6. அன்பின் சுரேஷ்

    அருமை அந்தோணி முத்து மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்பிருந்தே தொடர்பில் இருந்தார். சேர்ந்தும் தொடர்பில் இருந்தார். அருமை நண்பர் மருத்துவர் புருனோ மருத்துவ மனையில் அனைத்து உதவிகளூம் செய்தார். இருப்பினும் இறைவன் ஏதோ காரணத்திற்காக தன்னருகே அழைத்துக் கொண்டான்.

    அந்தோணி முத்துவின் ஆன்மா சாந்தி அடையவும் - அல்லல் படும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவும் - எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழை அவர்து குடும்பத்தார் மீது எப்பொழுதும் பொழியவும் பிரார்த்தனைகள்.

    நல்வாழ்த்துகள் சுரேஷ்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  8. Anonymous6:48 PM

    your words which thought me to bear pain and to despise wounds and pain... i don't have words to describe the values of your emotion....

    ReplyDelete
  9. Anonymous6:49 PM

    your words which thought me to bear pain and to despise wounds and pain... i don't have words to describe the values of your emotion....
    By
    Jeyasekaran.R
    RGCE

    ReplyDelete
  10. அம்மா என்று அழைக்கும் குழந்தை... சேர வேண்டிய இடத்தில் இப்போது.....அங்கேனும் அமைதியாக இருக்கட்டும்.

    ReplyDelete
  11. Anonymous8:19 PM

    அவரது ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    prabha

    ReplyDelete
  12. Anonymous8:23 PM

    வெகு காலத்துக்குப் பின் இன்று இந்தச் செய்தியை வாசித்தபோது நான் அழுதேன். வேறு எதுவும் சொல்லத்தெரியவில்லை

    Abdul Jabbar

    ReplyDelete
  13. Anonymous8:29 PM

    அன்புத் தம்பியே அந்தோணி,

    அண்ணா, அண்ணா என்று
    அன்பொழுக அழைப்பாயே !
    ஆண்டவன் உன்னை
    அழைத்துக் கொண்டானே !

    இனி ! எப்போ காண்பேன்
    என் அன்புத்தம்பியை

    தம்பிகள் இல்லாதவன்
    என்று நான்
    த‌வித்திருக்கையில்
    தமிழன்னை என்
    தங்கத் தம்பிகளில்
    தித்திக்கும் சொந்தமென‌
    தந்தாளே உன்னை
    தனியாக ஏன் என்
    தம்பியே உன்னைப் பிரித்தெடுத்தாள்

    கவிதைகள் என்றால்
    கரும்புச்சுவை போல உனக்கு
    கசக்கிப் பிழிந்து அழகாக‌
    அனுபவிப்பாயே தம்பி
    அணுவணுவாகக் கவிதையை

    கணகளில் ஈரம்
    நெஞ்சினில் பாரம்
    நினைவெல்லாம் சோகம்
    முத்துக்களில் முத்தாம் என்
    முத்தான தம்பி அந்தோனியின்
    அவசரமான பயணம் அறிந்து

    தாய்த் தமிழகத்தின்
    தலைநகராம் சென்னையிலே
    செங்குன்றின் குளிர்மையிலே
    சித்தம் நிறைய உன்னை
    அருமை நண்பர் சீனாவுடனும்
    அன்பு மனைவியுடனும்
    உன்னை நான் சந்தித்த போது
    உன் கண்களில் பொங்கிய
    உன்னதமான ஒளியை இன்னமும்
    மறக்கவே முடியவில்லையே !

    எப்பொது என் மனவோசையை
    எழுத்தாகத் தாளில் வடிக்கும் போதும்
    முந்தி வந்து விழும் மின்னஞ்சல்
    முத்தான முத்தே உந்தனது அல்லவா ?
    இனி எப்போ காண்பேன்
    இனியவன் உந்தன் பின்னூட்டத்தை

    அன்புத் தம்பி கண்ணான உறவாக‌
    அன்புநிறை சுரேஷின் மூலமாக‌
    அடைந்தேன் உந்தன் அன்பான் உறவை
    அழகி எனும் அற்புத எழுத்துருவை
    ஆக்கிய நல்லறிஞன் தம்பி விஷியின்
    அற்புதமான உறவல்லவா நீ

    பாலன் ஜயா அவர்களின்
    பாலகனைப் போல‌
    பாசத்துடன் பழகிய‌
    பாசத்திருவுருவே உன் மீது
    பாசக்கயிற்றை வீச அந்தக்
    பாழான காலனுக்கு எப்படி வந்தது
    துணிச்சலென அறியேன்

    மின்சார சக்கர வண்டியிலே
    முதன்முதலாய் வலம் போது
    நீ வரைந்த கவிதை
    என்னிதயத்தை ஈரத்தினால்
    வெள்ளமாக்கியது
    உன் உணர்வுகளை
    அழகுமிகு தமிழன்னை மொழியதிலே
    அப்படியே இறைத்திருந்தாயே !
    இனி எப்போ காண்பேன் அத்தகைய‌
    இனியதோர் கவிதைக் கடலை

    இயலாமை என்னும் உணர்வு உன்
    இதயத்தில்
    இல்லாமல் போகும் வண்ணம்
    முயற்சியின் பயனாக‌
    முழுவெற்றி அடைந்தவனே
    உன் மனதின் வைராக்கியத்தில்
    அரைவாசி அடைந்தாலும்
    என் வாழ்க்கை வெற்றி என்பேன்

    தமிழன்னை ஈன்ற புதல்வர்களிலே
    தங்கமகனடா நீ
    த‌ரணியிலே உன் போன்ற‌
    வீரநெஞ்சம் கொண்டோர்
    விளைந்திட அவள் வரம்
    தந்திட வேண்டும்

    அன்புத் தம்பியே என்
    அந்தோணி முத்தே !
    நீ மறையவில்லையடா
    உன்னை விதைத்திருக்கிறார்கள்
    உன்னிலிருந்து இன்னும் ஆயிரம்
    உன்னதமான தமிழ்ப்பூக்கள் மலரும்
    உன் நினைவைச் சுமந்தபடி
    உன் வாசம் பரப்பும்

    உன் அண்ணன் கைவிரல்கள்
    உன் நினைவைச் சுமந்தபடி
    உனக்காக எழுதிக் கொண்டேயிருக்கும்
    ஆமாம் ! எனக்கிந்த உலகில் நிரந்தர‌
    மறைவு வரும்வரை என்னெழுத்துக்களில்
    உன் வாசம் மிளிரும்.

    இதுவே இந்த அண்ணனின்
    இதயம் நிறைந்த கண்ணீர் அஞ்சலி
    கர்த்தருடன் ஜக்கியமாகி விட்டாய்
    கருணை மழையாக பொழிந்திடுவாய்

    துயரத்துடன்
    அண்ணன் சக்தி

    ReplyDelete
  14. அந்தோணிமுத்து இறந்து விட்டார் என்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. தனது வாழ்க்கை துன்பத்தின் மறுபதிப்பாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையும், அன்பையும் போதித்த அந்தோணிமுத்துவுக்கு மரணம் கண்டிப்பாக விடுதலையை தந்திருக்கிறது. அவரைப்பற்றி நான் ஒரு 25 நிமிட ஆவணப்படம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்காக எடுத்திருந்தேன். ஒளிபரப்பான வீடியோ பதிவைக் கேட்டிருந்தார் கடைசிவரை என்னால் தரமுடியவில்லை. நண்பர்கள் யாராவது கேட்டால் ஒளிபரப்பான பதிவை அலுவலகத்தில் இருந்து பெற முயற்சி எடுப்பேன். என்னை தொடர்பு கொள்ள 9962584171.

    ReplyDelete
  15. Anonymous11:32 AM

    மனம் மிக கனக்கிறது ஐயா.

    இறைவனிடம் சேர்ந்தார் என்பதில் ஒரு மகிழ்ச்சி. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன். அவர் வாழ்க்கை பலருக்கு ஒரு பாடமாக, உந்து சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

    உங்களைப் போல் மனிதநேயம் உள்ளோரை நினைக்கும் போது இறை நம்பிக்கை அதிகமாகிறது. அவருக்கு உற்ற துணையாய் இருந்த உங்கள் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக!

    ஜயந்தி கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  16. Anonymous11:32 AM

    சுரேஷ் அந்தோனிமுத்துவின் ஆதமா சாந்தியடையட்டும். உங்கள் அனைவருக்கும் மன ஆறுதல் கிடைக்க இறையருள் கிடைக்கட்டும்

    வேதா

    ReplyDelete
  17. Anonymous11:35 AM

    Anna......................

    I read all that you (an ocean of love) have written. I am happy that my anthony has merged into the Lotus heart of the Lord. I am very happy.

    But, as a normal human being, still living in this earth, I AM DEVASTATED and SHATTERED (becos, just like you, I had a very very intimate and special relationship with him talking so many hours on so many things which he loved and relished).

    He did volunteer to talk to me again two times (I did not venture to talk to him anything on my own fearing that he talking anything to anybody might disturb his physical condition) on Thursday and Friday. Sairam...

    I am passing on my 1000s of hugs to you, anna. I know you need many more of them now to comfort you. Eventhough you have written about Balan Aiyya's statement, I know about your heart. You need many hugs. Sairam...

    Just the day before he got admitted in hospital (Saturday 14/8/10 night around 10pm), he was talking to me for an hour or so and he was in a very happy mood. He told me that after talking to me earlier that day and before, his katti-vali (the pain he started experiencing in his stomach since the start of this year) vanished totally.

    I will send another mail shortly (just one of the so many hundreds of mail I wrote to him), as I wish to share it with you, at this hour of need. Kindly ack. receipt of that mail too...

    Tons of love, as ever.

    With prayers and warm regards

    viswanathan
    Love all! Serve all!

    ReplyDelete
  18. Anonymous11:39 AM

    like vishy anna said you hv written all that you can about Bro Anthony…a heart-touching note!!!

    Though it is difficult to accept his loss, but I’m thanking God that He has given an opportunity to you to bring Anthony’s life from dark to see the light for 3 years…

    After you met him…there was only prosperity for him in all aspects. The pains you took for him…talking long hours to console him, getting him new things and what not…hats off to you for the great job you did for Anthony!!!

    I humbly feel…it’s God’s plan… and being His children…we have to accept it joyfully!!! Becoz as you said Anthony has reached the throne of God.

    Mrs.Vijayalakshmi Suresh

    ReplyDelete
  19. http://positiveanthonytamil.blogspot.com/2010/05/blog-post_09.html

    மனசு விக்கித் தவிக்கிறது சகோதரர். செயலிழந்து போனேன். அவஸ்தையில் இருந்தபடியால் இறைவனடி சேர்ந்தது அவருக்கு நல்லதெனினும், இத்தனை நாள் வருடம் இவரை பற்றி அறியாதிருந்திருக்கிறேனே....

    எல்லாம் அவன் செயல் படி எனினும் அதில் மரணம் மட்டும் எப்பொழுதுமே 'ஏற்றுக் கொள்ளா மனதாகவே நிகழ்கிறது.

    அவரின் ஆத்மா மேன்மையையும் உங்களின் மன ஆறுதலையும் வேண்டியவனாய் மட்டும்....

    வித்யாசாகர்

    ReplyDelete
  20. சுரேஷ் அந்தோனிமுத்துவின் ஆதமா சாந்தியடையட்டும்.
    உங்கள் அனைவருக்கும் மன ஆறுதல் கிடைக்க இறையருள் கிடைக்கட்டும்.
    vetha.

    ReplyDelete
  21. இவ்வுலகில் அவர் அனுபவித்த உடல் உபாதைகளுக்கு நிரந்தர தீர்வு...:(

    ReplyDelete
  22. எனது அன்பு உள்ளங்களே,

    பின்னூட்டங்களால் சமாதானம் செய்து உங்கள் மனதின் அன்பு விலாசங்களை என்னோடு பகிர்ந்தமைக்கு எனது நன்றிகளை தாழ்மையோடு சமர்ப்பிக்கிறேன்!

    உங்களுக்கு ஆறுதல் கூறி நானும் ஆறுதல் அடைகிறேன்.

    எனக்கு பழக்கமில்லாத பலரின் பின்னூட்டங்களும் தனி மடல்களும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளும் என்னை வியக்க வைத்தது!

    “அண்ணா, உங்களால் தான் நான் அறியப்பட்டுகிறேன்” என்று அந்தோணி சொல்லும்போதெல்லாம், “இல்லை தம்பி இப்போதெல்லாம் அந்தோணியைப் பற்றி யாராவது பேசினால் எனது பெயர் அங்கே வருகிறது, அவ்வளவு தான்” என்பேன்.

    அந்தோணியின் ஆத்மா இப்போதாவது நான் சொன்னதை சம்மதிக்கும் என்று நம்புகிறேன்!

    எனது மன்நிலை நன்கு அறிந்த பிரபலமான பலர் எனக்கு அளித்த உபதேசங்களால் என் மனம் தற்போது கட்டுக்குள் இருக்கிறது! அவர்களுக்கு நன்றி!

    அந்தோணியைப் போன்றோர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் கொடுப்பதில்லை என்று மீண்டும் உணர்ந்து கொண்டேன்.

    அந்தோணியைப் போன்ற பிறப்புக்களை மானுடத்திற்கு மனிதத்தின் ஊற்றை உருவாக்கத் தான் இறைவன் இந்த பூமிக்கு அன்பளிப்பாய் தருகிறார் என்று நம்புகிறேன்.

    இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவரே என்றும் மீண்டும் உணர்கிறேன்!

    இறைவன் என்னை இந்த பூமியில் இருந்து விண்ணகத்திற்கு அழைக்கும்போது நான் காணத்துடிக்கும் பட்டியலில் அந்தோணிமுத்துவும் இடம் பெற்று விட்டார்.
    ஆனால்…
    இதற்கு மேல் அந்த பட்டியலில் யாரும் வேண்டாம் என்ற உறுதியான பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பிக்கிறேன்.

    இந்நேரத்தில் மீண்டும் நமது தாய்மொழியை வாழ்த்துகிறேன்.

    தமிழ் என்ற நமது மொழி இல்லையேல் நாமெல்லாம் இந்த கணினி வழி ஒன்று பட்டிருப்போமோ?

    இறைவா உமக்கு நன்றி!

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  23. ஆழ்ந்த இரங்கல்கள். படித்ததுமே மனம் கனக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவருக்கு உதவிய நல்லுள்ளங்களை வணங்குகிறேன்.

    ReplyDelete
  24. Anonymous1:56 PM

    Though "Anthony Muthu" left us, His Positive Thoughts lines live with us.
    ARUL

    ReplyDelete
  25. Anonymous10:51 PM

    God creates each person for some purpose, Antony was born to make few people as divine persons

    Dear sir,
    I am Rasathi, Anthony muthu vin thangai. I have gone through all the way you traveled with him in his life, feeling, pain, happiest moments etc .Even though it is a short period (just three years you people had a touch with him) it is a ‘GOLDEN ERA’ of his life time that too at 11th hour i.e 3/38 of life time. Thank you so much. You only (Mr.N.Suresh, Mr.Balan, Vishi, Jappar ayya, Aruna, Sakti ayya, Mathumitha, Singapore Anbu, Cheena ayya, Albert, Bala, Haran) torched, induced & exposed that candle’s light to the world . Here I wish to say that our sister’s family (poulina,uncle Dharmaraj and their only daughter Amala who are at red hills) preserved that candle in every moments and also his friends Domnic, James, Gomathi and John mama who encouraged to stand, move & erect this candle from childhood. We failed to light it . But you did it. It is wonderful and greatest to see that it was shining by the grace of Almighty where you were used as vital tools. Thank GOD. For the human vision you look as any thing and once again we proud of your good heart and thank you for all the help rendered by your circle. I thank you, thank you,,,,,,,,,,all of you on behalf of my family and friends. God may pour HIS choicest blessings up on you all.
    Let us unite in our prayer asking his soul to rest in peace.

    ReplyDelete
  26. ஒரு ஆன்மாவின் வலி என்ன என்பதை அந்தோணி மட்டுமே அறிவார்.

    இது ஒரு விடுதலை எனினும் தங்கள் உதவியும் போற்றுதலுக்குரியது.

    அன்னாரின் ஆன்மா வலி களைந்து நிம்மதி அடைதல் நமக்கும் நிம்மதி தருவதாகும்.

    ReplyDelete
  27. என்னால் இதை நம்ப முடியவில்லை. சில முறை என்னிடம் அவர் பேசியுள்ளார். எனது
    மனோதத்துவ மையத்துக்கு வந்து சில விஷயங்கள் பற்றி நேரில் அறிய/பேச
    விரும்பினார். நானே முடிந்தால் உங்கள் இருப்பிடம் வருகிறேன்-என்ற போது அவர்
    இல்லை நான் வருவதே முறை என்று மறுத்தார். என் மனதில் நானே சென்று சந்தித்து அளவளாவி மகிழ வேண்டும் என்ற எண்ணம்
    இருந்தபோதிலும் எண்ணத்துக்கும் செயலுக்குமான இடைவெளி, இன்ன பிற
    காரணங்களால்....தற்சமயம் நான் குற்ற உணர்வுக்கு ஆளாகி இருக்கிறேன். எதையும்
    தள்ளிப் போடக் கூடாது என்று புத்திக்குத் தெரிந்தாலும் வாழ்வு எப்படியோ
    வழி மறிக்கிறதே!அவரது வலைப் பூ மென்மையானது-மேன்மையானது. சமீபத்தில் ஆகஸ்ட் 6 அன்று அவரது
    மின்னஞ்சல் எனக்கு வந்தது. இனிமையானவர்-இனி என்று காண்பேன்? இறைவன் அந்த இனிய
    முத்துவை தன் இதயத்தில் திரும்ப எடுத்துப் பதித்துக் கொண்டான்!

    ReplyDelete
  28. நண்பருக்கு,
    அந்தோணி முத்து பற்றிய அந்த ஆவணப்படத்தை அலுவலகத்தில் இருந்து கேட்டுப் பெற்று விட்டேன். அந்தோணிமுத்துவின் அக்கா ஒருவர் சேலத்திலிருந்து அழைத்திருந்தார். அவரது எண்ணை எங்கேயோ எழுதி வைத்து தொலைத்து விட்டேன். என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னால் உடனடியாக அனுப்பி வைக்கிறேன்.
    தொடர்புக்கு - 9962584171

    ReplyDelete
  29. Anbulla kanagaraj,

    Shortly you will get a call from Anthony Muthu's Brother in Law

    Thanks for all your kindness.

    May God bless.
    Anbudan
    N Suresh

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...