
அந்தோணி முத்து!
25 வருடங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக அந்தோணி என்ற ஒருவர் இருப்பதாக (அழகி தமிழ் - பா விஸ்வாநாதன் மூலம்) அறிந்ததும் எனது ஆசிரியர் மைக்கல்ராஜ், தாயார் திருமதி சுமதி மைக்கல்ராஜ், மற்றும் எனது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி சுரேஷ் - நாங்கள் மூவரும் அவரைக் காண ரெட் ஹில்ஸ் என்ற இடத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று நேரடியாக கண்டு வந்தோம்.
"யாரிவர் " என்ற கவிதை ஒன்றை எழுதி வலைப்பதிவு நண்பர்களிடம் அந்தோணி முத்துவைப் பற்றி அறிவித்தேன். அவரின் நிலைப் பற்றி நான் அனுப்பின புகைப்படங்களும் சொல்ல முடியாத செய்திகளை அறிவித்தன!
வலைப்பதிவாளர்கள், அழகி தமிழ்- பா விஸ்வநாதன், சிங்கப்பூர் அன்பு, சீனா ஐயா, சக்தி ஐயா, ஆல்பர்ட் அண்ணன், என்றென்றும் அன்புடன் பாலா, ஹரன் (துபாய்) என பலநூறு பேர்கள் என்றென்றும் பாலாவின் வங்கி வழியாகவும் பிறகு அந்தோணிக்கு நேரடியாகவும் உதவி செய்தனர். (எனது மனநிலை கவலையால் இருப்பதால் பலருடைய பெயர்கள் விட்டுப்போய் விட்டது, தயவாக மன்னிக்கவும்)
தேவையான மடிகணினி, இயந்திர நாற்காலி என அடிப்படை தேவைகள் முடிந்த அளவு வலைதள நண்பர்களும் மற்ற பல அன்புள்ளங்களம் அளித்து அந்தோணி சந்தோஷமாக இருந்தார்.
இருள் நிறைந்த அறை விட்டு இயந்திர நாற்காலியில் தானே வெளியேச் சென்று தினமும் சூரியனைக் கண்டு வரும் மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷ வார்த்தைகள் மறக்க முடியாதவை!
என்னை மகனாக நேசிக்கும் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எனக்கு ஒரு மடல் எழுதி ( அப்போது அவர் துபாயில் இருந்தார்) திரு. வி.கெ.டி பாலன் ஐயாவை தொடர்பு செய்யச் சொன்னர். செய்தேன்!
திரு.வி.கே.டி. பாலன் ஐயா அவர் மக்கள் தொலைக்காட்சியில் அந்தோணி முத்துவை நேர்காணல் செய்து இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி அந்தோணி, அந்தோணியின் வீட்டிலிருந்து கொண்டே ஒரு வேலை செய்யும் சௌகரியத்தையும் செய்து கொடுத்து மதுரா க்ரூப் என்ற அவருடைய நிறுவனத்திலிருந்து அன்று முதல் தனது சிறப்பான ஓர் தொழிலாளியாக நியமித்து கௌரவித்தார்
இந்நேரத்தில் திரு அப்துல் ஜப்பார் ஐயாவையும் திரு வி.கே.டி பாலன் ஐயாவையும் நன்றியோடு வணங்குகிறேன்!
ஏறத்தாழ எல்லா நாளேடுகளும், வார இதழ்களும் அந்தோணியின் நேர்காணலை பதிவு செய்தது.
இணயதளத்தோடு அல்ல, தமிழோடு இணையதளத்தை தொடர்பு கொண்ட பிற்கு, அந்தோணிக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் மிக மிக சந்தோஷமாக இருந்தது.
எனக்கு நேரம் இல்லாத தவிக்கும் போதெல்லாம் வலைப்பதிவாளர் திருமதி அருணா அவர்களோடு அந்தோணியிடம் பேச சொல்வேன். அவர்கள் முடிந்த போதெல்லாம்
பேசி வந்தார். திருமதி அருணா அப்படி ஒரு தாயன்பு கொண்டவர்!
கழுத்திற்கு கீழ் இரண்டு கைகளைத் தவிற எல்லாம் வேலை செய்யாத போதும் உழைத்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த அந்தோணி முத்து கடந்த ஓரிரு மாதங்களாக எப்போதும் ஏற்படும் மூச்சுத் திணறல் ( வீசிங்க் ) காரணமாக கஷ்ட்டப்பட்டு வந்தார். குடும்பத்தாரோடு சேர்ந்து நாங்களும் இது எப்போதும் போல் சரியாகி விடும் என்று நினைத்தோம்.
அந்தோணி அதிகமாக கஷ்ட்டப்படுவதைக் கண்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படு அவருக்கு தீவிர சிகிட்சை அளித்து வந்த போதும் நிர்பந்தமாக அவர் தனது இல்லத்தின் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் தன்னை கொண்ட செல்ல அடம் பிடித்த போது வேறுவழியின்றி அவருடைய குடும்பத்தர் அதற்கு சம்மதித்தனர்.
விஷயம் தெரிந்ததும் திரு பாலன் ஐயாவோடு தொடர்பு கொண்டேன். அத்தனை மருத்தவ தகவல்களை அவரிடம் சேர்க்க ஏற்பாடு செய்யச் சொன்னார், செய்தேன்.
எனது தற்போதைய வேலை அழுத்தம் காரணமாக அந்தோணியை மருத்துவமனை சென்று காண முடியவில்லை என்ற குற்ற உணர்வு என்னை கொன்று கொண்டிருந்தது. இருப்பினும் என்னால் முடிந்தவைகளை எல்லாம் தொலைபேசி வழி செய்து வந்தேன்.
அந்தோணி முத்துவின் சகோதரிகளில் ஒருவர் (திருச்சபை கன்னியஸ்த்ரி) அவர்களின் பரிந்துரையின் பேரில் நேற்று காலை இசபெல்லா மருத்துவமனைக்கு அந்தோணியை மாற்ற தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யும் நேரம் இதற்குமேல் அந்தோணி கஷட்டப்பட வேண்டாம் என்று அவரின் அழகிய உயிர் மலரை இறைவன் இந்த புமியின் மனிதத்தோட்டங்களிலிருந்து எடுத்துக்கொண்டார்.
ஆரம்பம் முதல் நேற்று வரை அந்தோணியை நேரடியாக சந்தித்தோர், உதவி செய்தோர் என எல்லோருக்கும் எனது நன்றிகளை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.
நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கத் தான் இறைவன் அந்தோணி முத்துவைப் போன்றோரை படைக்கிறார் என்றும் இதுபோன்று கஷ்ட்டப்படுபவர்கள் அதிக காலம் வாழ்வதில்லை என்றும் என் மனது சொன்னது!
அந்தோணி இனி இங்கு இல்லை என்ற விஷயம் தெரிந்ததும், திரு பாலன் ஐயா, " சுரேஷ், அந்தோணியின் வலியும் கஷ்ட்டமும் அவருக்கு மட்டுமே தெரியும். இறைவன் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக் செய்வார், நீங்கள் தயவாக உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருங்கள்" என்று மிக மிக உறுதியோடு என் இதயத்தில் பதிவு செய்தார்.
என்னை தொடர்பு கொண்ட பலருக்கும் பாலன் ஐயா சொன்ன அதே வாசகத்தை சொல்லிக்கொண்டே என்னை ஆறுதல் செய்தேன்
இன்று மீண்டும் அந்தோணியின் வலைதளத்தை பார்த்தேன்.
இந்த பதிவு எழுதும் நேரம் தற்போது அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கிறது!
இதை வாசித்து ஒரு நொடி நீங்கள் கண்களளை மூடி அந்தோணியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய அன்போடு அழைக்கிறேன்!
இனி என்று?
இன்றாவது அந்தோணியின் வலைப்பூவை வாசியுங்கள். மரணம் ஒருவனின் எழுத்தை கோபுரத்திற்கு கொண்டு போகும். அந்தோணி உயிருடன் தற்போது இல்லை என்றாலும், அந்தோணி முத்து என்ற அவருடைய பெயர் கோபுரத்தில் எழுதப்படட்டும் உங்களால்!
அவரின் வலைப்பூ http://positiveanthonytamil.blogspot.com/2008/03/blog-post_23.html
என்றென்றும் அன்புடன்
என் சுரேஷ்
பின் குறிப்பு: நான் ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய ஆர்ம்பிக்கும்போதும் அதை ஒரு ப்ராஜக்ட் என்பேன். முடிந்ததும் ப்ராஜக்ட் ஓவர் என்பேன். ஆனால் அந்தோணியின் ப்ராஜக்ட் தீரவில்லை, அதை இறைவனின் பாதத்தில் தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன். மரணத்திற்கு பிறகு ஆத்மா இறைவனிடம் செல்லும் என்பது உண்மையெனில் எனக்கு இனி அந்தோணியைப் பற்றி கவலையில்லை!
அந்தோணியை நாம் சொர்கத்தில் சந்திப்போம்!