Tuesday, April 1, 2008
ஐந்து பெற்ற அரசர்கள்!!!!
திருமணமாகி ஒரு மாதம் முடிவதற்குள் சமுதாயத்தின் முதல் கேள்வி "விசேஷமொன்றும் இல்லையா?" அல்லது பூச்சி, புழு ஒண்ணும் தங்கவில்லையா? பூச்சி என்று ஆணையும், புழு என்று பெண்ணையும் குறிப்பிடுகிறார்களா இவர்கள்!
முதல் குழந்தை பிறந்து ஒரு சில மாதங்கள் முடிந்ததும் "குழந்தைக்கு ஒரு துணை வேண்டாமா? அடுத்த குழந்தை எப்போது?" என்று சமுதாயத்தின் அடுத்த தேவையற்ற கேள்விகள் வீடு தேடி வரும்!
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ எழுபது விழுக்காடு மக்கள் கிராமத்தில் தான் வாழ்கிறார்கள். இந்த எழுபது விழுக்காடு மக்களில் அதிகமும் வறுமையின் கொடுமையில் தான் வாழ்ந்து கரைகிறார்கள்.
நகரத்தில் வாழும் மக்களிலும் கணினி, மருத்துவம் மற்றும் அதிக லாபம் தரும் விளம்பரம் போன்ற துறைகளில் இருப்பவர்களைத் தவிர்த்து பலரும் பொருளாதார ரீதியாக மிகவும் கவலைக்கிடமான சிக்கலில் தான் உள்ளனர் என்பதே நிதர்சனமான உணமை!
பட்டுச்சட்டை போல் ஆடையணிந்தவனின் பட்டினி வயிற்றை யாரறிவார்?
இலவசங்களை புறக்கணிக்கும் ஒரு மனிதனாவதுண்டா நமது ஏழை சமூகத்தில்? அடுத்த கேள்வி, அவர்களுக்கு அது சாத்தியமா? தாகத்தால் வறண்டு தவிப்பவனுக்கு ஒரு வாய் தண்ணீர் இலவசமாக கிடைத்தால் அவன் அதை குடிக்காமல் இருக்கத் தான் இயலுமா?
சரி.. இந்த வறுமைக்கு காரணம் தான் என்ன
- இன்னமும் ஏழை மக்கள் மீது மேல்க்குடி மக்கள் தொடரும் ஒடுக்குமுறை, பொறாமை....
- உயர்ந்த படிப்பு இல்லாததனால் கிடைக்கும் குறைந்தபட்ச சம்பளம்
- நேரத்தை வீணடிக்காமல் உயர்ந்த படிப்பு படித்து அதிக சம்பளம் வாங்க வேண்டுமென்ற
எண்ணமின்மை
- திரைப்பட நடிகர்களை / நடிகைகளை ஆராதனை செய்து நேரத்தை வீணடித்து, திரைப்படம்
பார்த்து, மீண்டும் மீண்டும் அதே ஆராதனையை தொடர்வது
- தங்களின் பொருளாதார பலவீன நிலையை சுத்தமாக மறந்து குழந்தைகளைப் பெற்றுக்
கொண்டே வருவது. அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏழை அவதாரம் கொடுப்பது.
- கடன் வாங்கி - மஞ்சள் நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், கல்யாணம் போன்ற செலவுகளைச்
செய்ய இந்த சமூகம் ஏழை மக்களை உளரீதியாக நிர்ப்பந்தப்படுத்துவது.
- மதுபானத்திற்கு அடிமையாவது
எனக் காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதில் முக்கியமான தவறு என்பது தங்களின் பொருளாதார நிலையை மறந்து ஏழ்மையிலிருந்து மீண்டும் ஏழ்மைக்கு தங்களைத் தள்ளும் ஒரு தவறைத் திரும்பத் திரும்ப செய்வது தான். குடும்பக் கட்டுப்பாடின்றி தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான் அந்தத் தவறு.
எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு தொடங்கியதன் பின்னர் குடும்பக் கட்டுப்பாடு பற்றின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்பு இருந்தது போல் இப்போதெல்லாம் ஏனோ காண முடிவதே இல்லை!
திருமணமானதும் கணவன் தான் ஒரு ஆணென்று நிரூபிக்கவும், மனைவி தான் ஒரு மலடியல்ல என்ற செய்தியை இந்தச் சமுதாயத்திற்குச் சொல்லவே குழந்தைப் பிறப்பு என்பதை ஒரு நிர்பந்தமாக்கி வைத்திருக்கிறார்கள்.
திருமணம் கண்டிப்பாய் எல்லோருக்கும் தேவை. திருமணத்திற்கு பிறகு மழலைச் செல்வங்களும் கண்டிப்பாய் தேவை. பொருளாதார அவல நிலையை மறந்து குழந்தைப் பெற்றுக்கொள்வதால் தான் இங்கே பிறந்து விழுந்ததும் "ஏழைக் குழந்தை" என்று முத்திரை இடப்படுகிறது. அந்தக் குழந்தை அங்கிருந்து அந்த முத்திரை அளிப்பதற்குள் படும் பாடுகள்...!
அதிகமும் ஏழையினம் அந்த முத்திரையோடே வளர்ந்து ஏழையாகவே வாழ்ந்து, இறந்துவிடுகிறார்கள்!
"ஐந்து பிள்ளை பெற்றால் அரசனும் ஆண்டியாவன்" என்றே கேட்டு பழகி வந்த நமது மக்கள் ஏன் இன்னமும் அதை உணர்ந்து கொள்ளவில்லை! இதற்கு தேவையான விழிப்புணர்வை இந்திய அரசு கொண்டு வந்து வெற்றி கண்டுள்ளாதா?
விஞ்ஞான வளர்ச்சி இவ்வளவாக வளர்ந்தும், இலவசமாய் அரசு மருத்துவமனைகள் கொடுத்தும், ஏன் ஆணுறை மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகள் மக்கள் உபயோகப்படுத்துவதில்லை?
ஏன் பலரும் தேவைப்பட்டால் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை அதிகமாய் செய்ய முன் வருவதில்லை?
குடும்பக் கட்டுப்பாட்டின் விழிப்புணர்வை அரசு மட்டும் செய்தால் போதாது; நல்லெண்ணம் கொண்ட எல்லாத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டும்.
இந்திய நாடு வறுமையிலிருந்து வெளிவர வேண்டும்.
தோழமையுடன்
என் சுரேஷ்
No comments:
Post a Comment
என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...