Monday, March 31, 2008
இதோ ஒரு மாமனிதர்....!
மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் தீவிரவாதிகள் என முத்திரைக்
குத்தப்படுவார்களேயாயின், அந்தத் தியாக தீவிரவாதிகள் என்றென்றும் வாழ்க! மக்களையும் அவர்களது உரிமையையும், மக்களின் அமைதியையும், அவர்களது வாழ்வாதாரஙக்ளையும் சிதைக்கும் பயங்கரவாத தீவிரவாதிகள் ஒழிக! ஒழிக!.... என்று திரு வி.கே.டி பாலன் அவர்கள், "தாகம்" - இதழில் அவரின் கட்டுரையொன்றின் கடைசி பத்தியில் இப்படி எழுதியதை வாசித்தபோதே என் கண்களுக்குள் அனல் அடித்தது.
தமிழ் நாட்டின் தெற்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் திருச்செந்தூர் என்ற கிராமத்தில் 26.01.1954 அன்று திரு. பாலன் பிறந்தார். இவரது பெற்றோர் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாவர். அவர்கள் கூலி வேலை செய்யும் இடத்தில் கிடைக்கக்கூடிய உணவும் உடைகளுமே அவர்களது அத்தியாவசிய தேவைகளைப் பூரத்தி செய்வனவாக இருந்தன.
கிராமத்து ஆரம்பக் கல்விகளின் அடிப்படையில் இவருக்கு 8- ஆம் வகுப்பு வரையிலும் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நடந்த சமூகக் கொடுமைகளும் பரம்பரையாக செய்து வந்த அடிமை மனப்பானமை கொண்ட கூலித்தொழிலையும் செய்ய திரு பாலனது மனம் இடம் தரவில்லை. உடுத்தியிருந்த வேட்டி, சட்டையோடு வெறும்கையுடன் பெற்றோரிடமும், ஊராரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைப் பட்டினத்தை நோக்கி பயணச் சீட்டும் இன்றி இரயிலேறினார், திரு. பாலன்.
1981-ம் வருடம் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அங்குள்ள நடைபாதைகள் தாம் வசதியில்லாத பலருக்கு வாசஸ்தலம். எழும்பூர் இரயில் நிலையமே அவருக்கும் வசிப்பிடமாகியது.
ஒரு நாள் இரவு 12 மணியளவில் உறங்கிக்கொண்டிருந்த, இல்லை! பசி மயக்கத்தில் இருந்த திரு பாலனின் உடம்பில் அடி விழுந்தது. விழித்துப் பார்த்தால் எதிரில் ஒரு போலீஸ்காரர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த போலீஸ்காரர் சிறிது தூரத்தில் இன்னொருவனை அடித்து எழுப்பிக் கொண்டிருந்தார். இதுவே சரியான சமயம் என நினைத்து பிடித்தார் ஓட்டம். சிறிது நேரத்தில் திரும்பிப் பார்த்த போது, போலீஸ்காரரை காணவில்லை.
ஓடி ஓடிக் களைத்துப்போன திரு பாலன், திசை தெரியாமல் நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் ஒரு இடத்தில் வரிசையாக ஆட்கள் அமர்ந்து கொண்டும், உறங்கிக்கொண்டும் இருந்ததை பார்த்தார். அந்த வரிசையில் அவரும் போய் அமர்ந்து கொண்டார். அந்த இடமே பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதி அங்கேயே அமர்ந்து உறங்கிப் போனார். பொழுது புலர்ந்தது. விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20பேர், பின்னால் 200பேர்.
அப்போது ஒருவர் அருகில் வந்து "இடம் தருவாயா தம்பி, ரூ2/- தருகிறேன்" என்றார். (அப்போது முழுச்சாப்பாடு ஒன்றின் விலை ரூ2/- ஆகும்). பணத்தைப் பெற்றுக்கொண்டு இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தை விட்டு வெளியே வந்த திரு பாலன் சுற்றும் பார்த்தார், அப்போது தான் அவர் கண்ணில் பட்டது "அமெரிக்க தூதராலயம்" என்ற பெயர்ப்பலகை!
பாதுகாப்புக்கும் உறங்குவதற்கும் வருமானத்துக்கும் இனி இதுவே சிறந்த வேலை என முடிவெடுத்து விடுகிறார், திரு. பாலன்.
தூதராலயத்திற்கு வரும் பயண முகவர்களுடன் பழக்கம் ஏற்படுகிறது. அங்கு வரிசையில் நிற்கும் மற்றவர்களுக்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுக்கவும் மற்றும் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யவும், விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளைச் சுமந்து சென்று வழியனுப்புவது வரையிலும் பாலன் பொறுப்பேற்கிறார்.
திரு.பாலனை நம்பி எத்தனை இலட்சங்களும் கடன் கொடுக்கப் பல விமான முகவர்கள் முன்வந்தனர். இவற்றையே மூலதனமாகக் கொண்டு 17.01.1986 அன்று மதுரா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.
தமிழகத்தில் முதன் முறையாக பயணச் சுற்றுலாத் துறையில் 365 நாட்களும், 24 மணி நேர சேவையை அறிமுகப்படுத்தினார். எந்த நாட்டிற்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திலும், உடனடியாக அனைத்து உள்ளூர் மற்றும், சர்வதேச விமானச் சீட்டுகளைத் தரும் நிறுவனமாக மதுரா டிராவல்ஸை உயர்த்தியுள்ளார்.
தமிழக அரசின் சுற்றுலாக் கழக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருப்பது இவருடைய அனுபவத்திற்கு கிடைத்த கௌரவமாகும். தமிழக முதல்வருக்கு எனது நன்றிகள்!
1987 முதல் 2007 வரை உலக நாடுகளில், கலை நிகழ்ச்சிகள் பலவற்றை இவர் நடத்தினதால்
LIMCA Book of Records இதை பதிவு செய்து இவருடைய நிறுவனத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமையாகும்.
இவருக்கு தமிழக அரசின் பண்பாட்டுக்கலைப் பரப்புநருக்கான " கலைமாமணி" விருதினை மேதகு ஆளுநர் பாத்திமா பீவி வழங்க, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் பொன்னாடை போர்த்தித் தங்கப் பதக்கம் வழங்கினார். மீண்டும் தமிழக முதல்வருக்கு நன்றிகள்!
இவரை ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் கொண்டு வெளிவரும் "மதுரா வெல்கம்" என்ற ஆங்கிலக் காலாண்டு சுற்றுலா வழிகாட்டி இதழ் மிகவும் பிரபலமானது.
இவரது மதுரா வெளியீடு ( Madura Publication) தமிழ்நூல் பதிப்புரையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.
Madura Institute எனும் சுற்றுலாப் பயணம் தொடர்பான பயிற்சிப் பள்ளியையும் நிறுவியுள்ளார். இதில் உடல் ஊனமுற்றவர்களுக்குக் கட்டணமின்றிப் பயிற்சி அளிப்பதோடு உடனடி வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
2001 ஆம் ஆண்டில் இணையத்தில் www.worldtamilnews.com "தமிழ்க் குரல்" எனும் வானொலியை உருவாக்கினார். இந்தியாவின் முதல் இணைய வானொலியாகவும் உலகின் முதல் தமிழ் இணைய வானொலி எனும் பெருமையையும் தமதாக்கி கொண்டார், திரு. வி.கே.டி. பாலன்!
"தூர்தர்ஷன்" சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் பொதிகை லைவரிசையில் "வெளிச்சத்தின் மறுபக்கம்" எனும் மனித நேயத் தொடர் முந்நூறாவது வாரத்தைத் தாண்டி சாதனை செய்தது. இப்போது அதே நிகழ்ச்சி "இவர்கள்" என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சியில் தொடர்கிறது.
சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டே தன்னை வழிநடத்திக் கொண்டு வரும் இவர் சுற்றுலா - மனிதம் என்பவைகளுக்கு மாத்திரமே அதிகம் முன்னுரிமை தந்து வாழ்பவர்.
இவரது தாய் திருமதி இசக்கியம்மாள், தந்தை அமரர் திரு கன்னையா, மனைவி திருமதி. சுசீலா, பிள்ளைகள் இருவர் மகள் சரண்யா, மகன் ஸ்ரீஹரன்.
இன்றும் எளிமையான கதர் சட்டை, கதர் வேட்டி, நெற்றியில் சந்தனம்- குங்குமம் காலில் இரப்பர் செருப்புடன் உழைத்து வரும் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் ( பி ) லிமிட்டெடின் தலைவர், நிர்வாக இயக்குனர். திரு.வி.கே.டி பாலன் பாராட்டுக்குறியவர்.
வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு!
நமது தமிழ்மணத்தில் திரு அந்தோணி என்ற சகோதரனைப் பற்றி "யாரிவர்" என்ற தலைப்பில் நானும் என்னோடு கவிஞர் மதுமிதா, திருமதி அருணா, என்றும் அன்புடன் திரு பாலா, என பலரும் எழுதி, திரு அந்தோணிக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டதும்,
பலர் திரு அந்தோணிக்கு உதவினதும், தொடர்ந்து உதவி வருவதும் பலருக்கும் அறிந்ததே!
கழுத்திற்கு கீழ் உணர்வில்லாமல் தலையும் இரு கைகளும் மட்டும் வைத்துக் கொண்டு எப்படியாவது ஒரு வேலை செய்ய வேண்டும், சம்பாதிக்க வேண்டும், என்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் திரு அந்தோணி போராடி வருகிறார்.
அழகி.காம் www.azhagi.com நிறுவனர், திரு பா. விஸ்வநாதன் இரவு பகலாக தொடர்ந்து வேலை செய்து வெகு சில நாட்களுக்குள்ளாகவே திரு அந்தோணியைப் பற்றின தகவல்கள் அனைத்தும் கொண்ட வலைதளம்(website) ஒன்றை தயார் செய்தார். அதையும் தமிழ்மணம் வழியாக பலரும் அறிந்திருப்பீர்கள், அந்த வலைதளத்தையும் பார்த்திருப்பீர்கள்.
திரு அப்துல் ஜப்பார் ஐயா, (பிரபல கிரிகக்ட் வர்ணனையாளர்,
நமது இணைய நண்பர்/சகோதரர் திரு ஆசிப் மீறான் அவர்களின் தந்தை), "இவர்கள்"
என்ற மக்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியில் திரு அந்தோணியை நேர்காணல் செய்யக்கோரி திரு.வி.கே.டி பாலனிடம் பேச சொன்னார்.
நான் "அப்பா" என்று அன்புடன் அழைக்கும் திரு அப்துல் ஜப்பார்
ஐயாவின் உபதேசம் படி திரு வி.கே.டி பாலன் அவர்களை தொடர்பு கொண்டேன்.
"உடனே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார் திரு வி.கே.டி. பாலன்! நான் வியந்து போனேன்!
நேர்காணல் பதிவிற்கு சென்றதும், திரு அந்தோணிக்கு, வீட்டிலிருந்தே கணினி வழியாக
மாதம் 3000 ருபாய் சம்பளத்திற்கு ஒரு வேலைக்கு தனது நிறுவனத்தில் தேர்வு செய்த
நியமனக் கடிததை கொடுத்தார் திரு. வி.கே.டி பாலன்!
கடந்த 25 வருட காலங்களுக்கு மேல் இருந்த இருள் சூழ்ந்த வறுமைக்கு விடுதலை தந்து
தனது வாழ்க்கையில் நம்பிக்கையின் விளக்கேற்றி வைத்த திரு. வி.கே.டி பாலன் ஐயாவின் கருணை உள்ளம் கண்டு நெகிழ்ந்து போனார், திரு. அந்தோணி!
இந்த நற்செய்தியைக் கேட்டு இணையதளத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து வரும் பதிவர்கள்
எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். தமிழ்மண நிர்வாகிகள் அனைவரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்!
பலவேறு இடங்களில் பதிவர்கள் பலர் இருப்பதனால், பதிவர்கள் & தமிழ்மணம் சார்பில் இதயம் நிறைந்த நன்றிகளை நான் தாழ்மையோடு திரு வி.கே.டி பாலன் அவர்களுக்கு
இங்கே சமர்ப்பிக்கிறேன். திரு.வி.கே.டி பாலன் ஐயாவை போற்றுகிறேன்!
இறைவன் அவரைத் தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டுமென்று பிரார்த்திக்கிறேன்!
இவருக்கு மடல் அனுப்ப நினைக்கும் நல்ல உள்ளங்களே, அவரின் மின்னஞ்சல்:
india@maduratravel.com
தோழமையுடன்
என் சுரேஷ்
உங்கள் பதிவின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம்....?
ReplyDelete"இதோ ஒரு மனிதர்...!" என்பதை
"இதோ ஒரு மாமனிதர்...!"என்று மாற்றலாம்....
எந்த பின்புலமும் இல்லாமல்
உண்மையான் தம் சுய உழைப்பால் முன்னேறிய ,திரு .வி கே டி .பாலன் போன்றவர்களே சமுதாய வளர்ச்சிக்கு மிக உதவுபவர்கள்..
சொந்த உழைப்பில் முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்....
பகிர்விற்கு நன்றி..
நட்சத்திர வார வாழ்த்துக்கள்...
திரு.சுரேஷ்
//
ReplyDelete"இதோ ஒரு மனிதர்...!" என்பதை
"இதோ ஒரு மாமனிதர்...!"என்று மாற்றலாம்....
//
திரு பாலனுக்கு இது நிச்சயம் பொருந்தும் ! அவரிடம் தொலைபேசி என் நன்றியைத் தெரிவித்து விடுகிறேன்.
அந்தோணிக்கு உதவி கேட்டு நான் எழுதிய பதிவின் சுட்டியை பல வாரங்கள் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் வைத்திருந்த தமிழ்மணம் நிர்வாகக் குழுவுக்கும் நன்றி தெரிவிப்பது எனது கடமையாகும். மற்றும் அந்தோணிக்கு உதவிய / அவருக்காக பிரார்த்திக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
இது ஓர் அவசியமான பதிவு, சுரேஷ் !
என்றென்றும் அன்புடன்
பாலா
அன்புள்ள திரு பேரரசன் & நண்பர் திரு பாலா
ReplyDeleteஉங்களின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.
"இதோ ஒரு மாமனிதர்" என்று இந்த பதிவின் தலைப்பை மாற்ற நீங்கள் இருவரும் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தருகிறது.
மிக்க நன்றி!
உடனே அந்த நல்ல மாற்றத்தை செய்கிறேன்.
கண்டிப்பாக நாம் நல்ல மனிதர்களைப் போற்ற வேண்டும். தொடர்ந்து போற்றுவோம்!
தோழமையுடன் - என் சுரேஷ்
1987 ல் .இவருடன் ஒரு பயண விடயமாக உரையாடிய போது; மிகப் பண்பாக ஆலோசனை தந்தார்.
ReplyDeleteஅப்போ இவர் பின் புலம் எதுவும் தெரியாது. இவரிடம் பயன் பெற்ற நன்பர் ஒருவர் சிபார்சிலே; இவருடன் தொடர்பு கொண்டேன்.
இவர் வளர்ச்சி, உதவும் தன்மையைப் போற்றியே ஆகவேண்டும்.
1987 ல் .இவருடன் ஒரு பயண விடயமாக உரையாடிய போது; மிகப் பண்பாக ஆலோசனை தந்தார்.
ReplyDeleteஅப்போ இவர் பின் புலம் எதுவும் தெரியாது. இவரிடம் பயன் பெற்ற நன்பர் ஒருவர் சிபார்சிலே; இவருடன் தொடர்பு கொண்டேன்.
இவர் வளர்ச்சி, உதவும் தன்மையைப் போற்றியே ஆகவேண்டும்.
அன்புள்ள திரு யோகன்,
ReplyDeleteஉங்களின் இனிய பின்னூட்டத்திற்கு நன்றி.
தொழமையுடன் என் சுரேஷ்
இன்னும் நிறையத் தியாகத் தீவிரவாதிகள் உருவாகி தவிக்கும் அனைத்து உயிர்களுக்கும் உதவ வேண்டும் என்பதே என் ஆசை!
ReplyDeleteஅன்புடன் அருணா
அன்புள்ள அருணா,
ReplyDeleteஎப்போதும் பின்னூட்டமிட்டு எல்லோரையும் எழுத ஊக்கம் தரும் உங்களுடைய அன்பு உள்ளத்தை போற்றுகிறேன்.
இனிய பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.
தோழமையுடன் என் சுரேஷ்
நட்சத்திர வார வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteதிரு பாலனைத் தொலைக்காட்சியில் அதுவும் பொதிகை சானலில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
பிறிதொரு தடவை அவரையும் ஒருவர் நேர்காணலை காண வாய்ப்பு கிடைத்தது.
மிகவும் அற்புதமான மனிதர்.எளியோரிடம் அவர் கொண்டுள்ள அன்பு வெளிப்படையாகத் தெரிகிறது. அவரைப் பற்றி செய்திகள் நீங்கள் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
//நட்சத்திர வார வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteதிரு பாலனைத் தொலைக்காட்சியில் அதுவும் பொதிகை சானலில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
பிறிதொரு தடவை அவரையும் ஒருவர் நேர்காணலை காண வாய்ப்பு கிடைத்தது.
மிகவும் அற்புதமான மனிதர்.எளியோரிடம் அவர் கொண்டுள்ள அன்பு வெளிப்படையாகத் தெரிகிறது. அவரைப் பற்றி செய்திகள் நீங்கள் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.//
அன்புள்ள வல்லிசிம்ஹன்,
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே!
எனது வாழ்நாளில் செய்த சில நல்ல விஷயங்களை பட்டியலிட்டால், அதில், திரு.வி.கே.டி பாலன் ஐயாவைப் பற்றின பதிவு இட்டது கண்டிப்பாக வருமென்று உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களிடமிருந்து வருகின்ற பின்னூட்டங்கள் காண்கின்றபோது என் மனதிற்கு தோன்றுகிறது.
நல்லவர்களை நிச்சயமாக நாம் தொடர்ந்து போற்றுவோம்.
தோழமையுடன் என் சுரேஷ்
சுரேஷ்,
ReplyDeleteபொதிகை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். உங்கள் பதிவுகளின் மூலம் அவரைப்பற்றிய பல நல்ல செய்திகளை அறிந்தேன். நல்லவர்களை வலைச்சரத்தில அறிமுகப் படுத்தும் நல்ல செயல் பாராட்டுக்குறியது.
சுரேஷ்,
ReplyDeleteபொதிகை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். உங்கள் பதிவுகளின் மூலம் அவரைப்பற்றிய பல நல்ல செய்திகளை அறிந்தேன். நல்லவர்களை வலைச்சரத்தில அறிமுகப் படுத்தும் நல்ல செயல் பாராட்டுக்குறியது.
திரூ பாலன் அவர்களின் வெளிச்சத்திற்கு அப்பால் மனதை தொட்ட நிகழ்ச்சி . அவரின் பின்புலம் முந நே ருவதற்கு தடை இல்லை ena unarthiyathu முன்னேற உதவும் உள்ளமும் போற்றற்குரியது
ReplyDeleteவாழ்க அவரது நல்ல உள்ளம் வளர்க அவரது பணி
அன்புடன்
வைரமணி
பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி திரு வீரமணி!
ReplyDeleteஅன்பு நன்றி வணக்கம்