மதுவிலக்கு இலாததால் ஏற்படும் பண்பாட்டு சீரழிவு உடல்நலக்கேடு, வறுமை போன்றவற்றைக் கணக்கிட்டால், நமது நாடு முழுவதுமே உடனடி மதுவிலக்கு வந்து விடாதா என்ற ஏக்கம் மாறி, உடனடியாக முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுச்சி அலையாய் வீசும்.
முழு மதுவிலக்கு கொண்டு வருவதில் ஏன் தாமதம்?
கள்ளச்சாராயச் சாவுகளும் மதுக் கடத்தலும் கொடிகட்டிப் பறக்குமோ என்ற சிந்தனையாலா?
மதுவிற்பனையால் இப்போது கிடைத்து வரும் வருமானம் போய் விடுமோ என்ற வினாவினாலா?
வணிகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நமது நாட்டில் வெளிநாட்டோர்கள் பலர் இங்கு வந்து போகும் நிலையில், முழு மதுவிலக்கைக் கொண்டுவந்தால் வணிகம் பாதிக்குமோ என்ற ஐயத்தாலா?
சிக்கலிருக்கும் இடத்தில் தீர்வு இல்லாமல் போகாது!
நமது நாட்டின் காவல் துறையினருக்குக் கள்ளச் சாராயத்தை வேரோடு அழித்துவிட்டு அதை அறவே வளராமல் கண்காணிப்பதற்கான திறமைகளுண்டு. மதுவிற்கு அடிமையானவர்களுக்குச் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் விடுதலை கொடுக்கலாம்
மதுவின் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்தலாம்.
மதுவை விற்று கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்தமுடியும் என்ற நிலை இந்தியாவிற்கு இல்லை.
அன்றும் இன்றும் என்றும் முழு மதுவிலக்கு என்ற கொள்கையைக் கொண்ட சவுதி அரேபிய அரசின் கருத்துக்களை கேட்டு, இந்த நல்ல விலக்கால் வணிகம் பாதிக்காமல் காப்போம். சவுதி அரேபிய நாட்டிடம் கேட்க வேண்டாமென்றால், நமது நாட்டிலேயே உள்ள அறிஞர் பெருமக்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக அமைத்து அவர்களின் பரிந்துரைகளை ஏற்று முழு மதுவிலக்கை வெற்றி பெறச் செய்யலாம்.
மதுவால் போதை வெறி கொண்டிருந்தால், அது மக்களின் அறியாமையை பலமடங்கு பெருக்கி விடும்; சிந்திக்கும் திறன் தொலைந்து விடும்; முழு மதுவிலக்கைக் கொண்டு வரவில்லையென்றால் ஒவ்வொரு நாளும் பல உயிர்களை இழக்க நேரிடும்.
அடுத்த தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் மனதிற்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் ஓர் அரசால் எந்த நாட்டிற்கும் ஆபத்து தான் என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.
மக்களுக்கு எதெல்லாம விருப்பமோ அவற்றையெல்லாம் கொடுக்காமல், மக்கள் எதை விரும்ப வேண்டுமோ அவற்றைக் கொடுப்பதே சிறப்பு என்ற கருத்திற்கிணங்க முழு மதுவிலக்கைச் செயல்படுத்த அரசு உடனடியாக ஆய்வு செய்யுமென்று நம்புவோம்
“கள்ளுண்ணாமை” யை வலியுறுத்தும் வள்ளுவரை மக்கள் மறந்து விடலாமா?
மகாத்மா காந்தி எதிர்த்த மதுவை அவரின் படம் போட்டு அச்சடிக்கப்பட்ட பணம் செலுத்தி மது வாங்கும்போது யாருக்கும் மனம் வலிக்கவில்லையா?
மது வேண்டாமென்று உபதேசம் செய்த தந்தை பெரியார், ஐயா காமராஜர், பேரறிஞர் அண்ணாதுரை ஐயா ஆகியோரை மறக்க முடியுமா?
1970க்கு முன்பாகத் தமிழகத்தில் முழு மதுவிலக்கு இருந்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்திலும் மகாத்மா காந்தி பிறந்த குஜராத்திலும் மட்டுமே மதுவிலக்கு அக்காலத்தில் இருந்திருக்கிறது.
மகாத்மா பிறந்த மண்ணில் இன்னமும் மதுவிலக்கு தொடர்கிறது.
“இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்” என்று பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் கூறினார்.
இந்திய மக்கள் எல்லோரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று கூடி, வெற்றி பெரும் வரை போராடும் கொள்கையைக் கடைபிடித்துத் தீவிரமாய் உழைத்தால் உண்மையாகவே இந்தியா ஒளிரும்!
தோழமையுடன்
என் சுரேஷ்
No comments:
Post a Comment
என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...