Saturday, August 18, 2007

எறிந்து விட்டீர்களே...


எஜமானரே
எங்களை எறிந்து வீட்டீர்களே!

ஆண்டுகள் பல
அயராமல் உழைத்தும்
அந்நியராகிவிட
நாங்களின்று விலாசம் தெரியாத சொற்கள்
ஆம்!
நேற்று எறியப்பட உங்களின் பற்கள்!

நினைத்துப் பார்க்கிறோம்...
உங்களில் எத்தனை நினைவுகள்!

எங்களைக் கண்டபோது தான்
உங்களுக்கு அறிவு பிறந்ததென்றார்கள்!

உங்களின் கோபங்களில்
எங்களில் எத்தனை துடிப்புகள்!

உங்களின் ருசிக்கென உணவை அரைத்துழைத்த
இயந்திரச் சக்கரங்களில் மூத்தவர்கள் நாங்கள்

இன்று ஒருவேளை எங்கள் நிலைகண்டு
இன்பமாய் சிரிக்கலாம் நீங்கள்!

இனி வரும் இனிய உணவுப்பொழுதுகளில்
இனியவரே எங்களை நீங்கள் நினைப்பீர்கள்!

எங்களில் காயம் வந்ததற்கு
எப்படி ஐயா நாங்கள் காரணம்?

பாசத்தை நீங்கள் காட்டியதெல்லாம்
எங்களை சுத்தம் செய்வதில் மட்டும் தானே?

வந்து
இரண்டே நாட்களில் அழகிழக்க
ஒவ்வொரு நாளும் முறையிடும்
பாவமந்த பல்துலக்கி!

முன்வரிசை கீழ்வரிசை அழகர்களுக்காவது
நல்லதோர் பலதுலக்கியை
வேலைக்கு வையுங்கள்..
மாதமொன்று போதும் - அதை
மென்மையாய் பயன்படுத்துங்கள்
அந்த வரிசை அழகர்களுக்காவது
எங்கள் நிலை வராமலிருக்கட்டும்!

உங்களின் எத்தனை சந்தோஷங்களிலும்
துக்கங்களிலும் உங்களோடு
பயணித்திருக்கிறோம்?

நீங்கள் பேசின யாவும்
எங்களுக்குத் தெரியும்
பற்கள் எங்களை பயந்தே பலவேளை
நீங்கள் சத்தமாகச் சிந்திக்கவில்லை!

இத்தனை வருட சேவைக்கு பின்
எங்களின் ஓய்வின்று
உங்கள் மருத்தவரின்
குப்பைத்தொட்டியில் தான்!
அவருக்குத் தெரியுமா
நாங்கள் குப்பையிலிருக்கும்
வைரங்களென்று!

ஒரு சமாதானம்!
எங்களை எறிவதற்கு முன்னால்
நகைச்சுவையாய் பலரிடம்
எங்களுக்கு நன்றி சொன்னீர்கள்!
நன்றி ஐயா
நன்றி..!!!!

ஒரு மொழி
அதன் பழைமையாகி விட்ட
அகராதி புத்தகமொன்றை
எறிந்து விட்டது!

இன்று குப்பையிலிருக்கும் நாங்கள்
நாளை எங்கிருப்போமோ!

உங்களுக்கு சேவை செய்ததில்
எங்களுக்கு மகிழ்ச்சியே!

மீண்டுமொரு சமாதானம்
உங்கள் மகிழ்ச்சியில் மகிழ்ந்தே...
நீங்கள் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்தி
உங்களுக்கு முன்னமே
பற்களில் மூத்தவர் நாங்கள்
மங்களமாய்
சென்றுவிட்டோம்!

இருப்பினும் எஜமானரே
எங்களை எறிந்து விட்டீர்களே!

6 comments:

  1. Anonymous3:50 PM

    Arbutham!!!
    Parkkal kooda manthai thanthu athanin velipadugal sonna vitham romba arumai!

    ReplyDelete
  2. சுரேஷ்,
    என்ன இது..திடீரென்று பல்லின் மீது
    கரிசனம்!

    சும்மாவா சொன்னார்கள் நம்ம முன்னோர்கள்!
    பல்லுப்போனா சொல்லுப்போச்சுன்னு!
    ஆனா அது..அந்தக்காலம். சும்மா கழற்றி வீசிவிட்டு
    தெத்து ஆனாலும் எத்து ஆனாலும்
    தத்து(பல்...பொய்ப்பல்) கட்டி
    மெய்ப்பல்லா காட்டிக்கலாமே!(என்னைப்போல:‍)))

    இது என்ன சொந்த அனுபவமா?
    எங்களை என்று சொல்லும்போது
    ஒன்றுக்கும் மேற்பட்ட வைரங்களை
    இழந்த எஜமானர் என்று யூகிக்க முடிகிறது.
    நானும்கூட இருப்பதைத் தக்கவைக்க‌
    எவ்வளவு பாடுபட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்!
    பல்லைப் பத்தி வல்லுவதக்குன்னு
    எழுதிப்பிட்டீங்க..அடுத்து என்ன‌
    கண்..காது..மூக்கு இப்டிப் போகுமா?

    கல்லுப்போல பல்லு பெற்று
    பலகாலம் வாழ்க!
    ஆல்பர்ட்,
    அமெரிக்கா.

    ReplyDelete
  3. என்ன ஆச்சு அண்ணா பல்லு விழுந்துடுச்சா என்ன :-)?

    ReplyDelete
  4. என்ன அண்ணா?

    உங்களின் சிந்தனைக்களங்கள் விருத்தியடைந்துகொண்டே போகின்றனவே? நல்லதுதான்.
    கவிஞனுக்கும் படைப்பாளிகளுக்கும் எல்லைக்கோடுகள் இல்லைதான்.

    தங்களின் கவிதையும், பார்வையும் இரசித்துப் புன்னகைக்கவைக்கின்றன. வாழ்த்துக்கள் அண்ணா..

    காதலுடன்
    ராஜா

    ReplyDelete
  5. அன்பிற்கினிய அல்பர்ட் அண்ண, தம்பி ராஜா, தங்கை ஜஸீலா,

    எனது 64 வயது ஆசிரியரின் இரண்டு பற்கள் எடுக்கப்பட்டு அதைப் பற்றின கவலையில் என்னிடம் பேசினார்.

    அதைத் தொடர்ந்து அவர் அந்த பற்கள் தன்னிடம் பேசினால் எப்படியிருக்குமென்று என்னிடம் எழுதச் சொல்ல அந்த எண்ணங்களை பதிவு செய்தேன். அவ்வளவே!

    பின்னூட்டமிட்டு ஊக்கம் தந்த உங்கள் எல்லோருக்கு எனது நன்றி பல!

    பாசமுடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  6. I see the Proffessionalism in your writings. kaal nootraanduGALUkku maelaaga kavithai ezhudhupavarai ponra saralamaana nadai ungaludayadhu. more then that I see a real poets feelings in you. vaazhththukkal.
    THAMBI
    Anthony Muthu

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...