Thursday, November 1, 2012

Monday, July 9, 2012

அன்றொரு நாள் காலை...


நான் பெரிய கோடீஸ்வரன் என்று என்னிடமே பலர் சொல்லக் கேட்க சுகமாக இருக்கும். 

அன்பை பகிர்ந்து கொடுக்கவும், பாசத்திற்கு நேரம் ஒதுக்கவும், நன்றியுணர்வை அறிவிப்பதிலும் தான் நான் கடனாளி. 

ஆனால் பொருளாதாரத்தில் அல்ல.

இந்த வகையில் நான் பெரிய கோடீஸ்வரனா என்றால், தன்னடக்கத்துடன் என் பதில். “ ஆம் இறைவனின் கருணையால்” என்பேன்.

சென்னைக்குள் எனது பயணங்கள் காரிலும் ஆட்டோ ரிக்ஷாவிலும் சில வேளைகளில் அரசு பேருந்துக்களிலும் இருக்கும்.

கடந்த மாதம் ஒரு நாள் காலை வேளை நான் அரசு பேருந்தில் அமர்ந்திருக்கிறேன்.  அதிசயமாக அன்று அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இல்லை. 

இன்னமும் சென்னையின் வெப்பம் குறையவில்லையே என்ற பரிதவிப்போடு ஜன்னலோரம் அமர்ந்து சென்னை சிங்காரச் சென்னையாக என்று தான் மாறப்போகிறதோ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க…

பேருந்தில் என் பின்பக்கமிருந்து ஒரு சத்தம்….  “  ஐயோ பணம் காணலயே.. ஐயோ ஊருக்கு போகவேண்டுமே”

திரும்பி பார்த்தேன். 

குறைந்தபட்சம் நாற்பது வயது கொண்ட ஒருவர்.  அவரின் அப்போதைய மனநிலையால் அவரின் இரத்த அழுத்தம் ஏறிக்கொண்டே இருப்பதை அவரின் முகத்தை பார்த்து அறிந்து கொண்டேன்.  என்ன பதில் சொல்லி அவரை ஆறுதல் படுத்த என்று அறியாமல் அப்படியே அவரை பார்த்திருந்தேன். 

அதற்குள் அவருடைய மனைவி அவரிடம் ஓடி வந்து.

-        பணம் எங்கே வைத்தீர்கள்
-        பின் பாக்கட்டில் தான்
-        அங்கே வைக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல..
-        வண்டி ஏறும்போதே ஒருவன் என்னை இடிச்சான்.  அப்போதே எனக்கு சந்தேகம். 
-        சரி இப்ப சென்டரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எப்படி ஊருக்கு போறது…         
          எவ்வளவு பணம் இருந்தது?
-        ஆயிரத்தி ஐநூறு ரூபாய்…

அவர்களிடம் இருக்கும் பைல்கள், மற்றும் ரத்த சோதனை செய்த இடது கைகளிலிருக்கும் அடையாளம்  இவையெல்லாம் வைத்து நான் பார்க்கையில், அவர்கள் மருத்துவமனையிலிருந்து தான் வருகிறார்கள் என்று உடனே புரிந்து கொண்டேன்.

நான் அந்த பெண்ணிடம். 

-        அம்மா, அவர் பணத்தெ தொலைத்தார்.  ஆனால் நீங்க அவரிடம் கோபமாக பேசினால்      அவருக்கு இன்னும் பதற்றம் தானே வரும்
-        என்ன சார் செய்றது…! இப்ப நாங்க ஊருக்கு போகனுமே.  ஆனால் என் கணவர் நான் என்ன          சொன்னாலும் எப்போதும் கோபப்படமாட்டாறு.

அவர்கள் அப்படி ஒரு பதில் சொனனதில் எனக்கு கொஞ்சம் கூட ஒரு நகைச்சுவை உணர்வு வரவில்லை.  ஏனெனில் அவர்கள் இருவரும் அன்புள்ளவர்களாகவும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசமுள்ளவர்களாகவும் அறிந்து கொண்டேன்.

எனது பர்ஸில் என்ன பணம் உள்ளது என்று பார்த்தேன்.  இரண்டு கிரெடிட் கார்டும், தொள்ளாயிரத்தி ஐம்பத்தி ஐந்து ரூபாயும், கொஞ்சம் சில்லறை காசுகளும் இருந்தது.

என்னிடமிருந்த அந்த பணத்தை அனைத்தையும் எடுத்து அவரிடம் கொடுத்தேன். 

-        சார் வேண்டாம் சார்
-        அப்பறம் எப்படி ஊருக்கு போவீற்கள்?
-        வழியனுப்ப என் மாமனார் வருவார்.  அவர் வழியனுப்ப வரும்போதெல்லாம் ஆயிரம்     இரண்டாயிரம் என்று என் மனைவியிடம் கொடுப்பது வழக்கம்.  அது போதும்.  பதற்றத்தில்     என் மாமனார் வருவதும் அவர் பணம் தருவதும் எனக்கு ஞாபகமில்லாமல் போனது.     மன்னிக்கவும் சார்.
-       பரவாயில்லை இந்த பணமும் இருக்கட்டும்.  ஒருவேளை உங்கள் மாமனார் வரவில்லை     என்றலோ, ஒருவேளை பணம் தராமல் இருந்தாலோ என்ன செய்வீர்கள்
-       வேண்டாம் சார். ப்ளீஸ்…
-       சரி இது என்னுடைய விசிட்டிங்க் கார்ட்.  ஒருவேளை உங்களுடைய மாமனார் வரவில்லை     என்றால் என்னை தொலைபேசியின் தொடர்பு கொள்ளுங்கள்.  நான் என் உதவியாளர் வழி       உங்களுக்கு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பணம் அனுப்புகிறேன்.
-       மிக்க நன்றி சார்.

கொஞ்சம் நேரத்தில் என்னருகே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் பேருந்திலிருந்து இறங்கினார்.  அப்போது அந்த பெண்மணி

-        சார் நான் இங்கே உட்காரட்டுமா?
-        அதற்கென்ன வாங்க தாயீ… உட்காருங்க..
-        ரொம்ப நன்றி சார்.
-        எதற்கு நன்றி.  உங்கள் கணவர் என்னிடம் பண உதவி பெறவில்லையே?
-        சார் நீங்க உதவி செய்ய முன்வந்தீர்களே… அந்த பாவி என் கணவரின் பணத்தை திருடினானே    என்று சென்னையை திட்ட ஆரம்பித்தேன்.  ஆனால் நீங்க உதவி செய்ய முன் வந்ததும்      நிறுத்தி விட்டேன்.
-        பரவாயில்லைம்மா… சரி என்ன உங்களுக்கு உடம்பு சரியில்லையா ?  உங்களுடைய         கணவருக்கு என்ன வேலை? எந்து ஊர் நீங்க?
-        சார் நாங்க விவசாயம் செய்கிறோம்.  ஜோலார்ப்பேட்டை தான் எங்க ஊரு.  எங்களுக்கு     திருமணமாகி எட்டு வருஷமாச்சு குழந்தை இல்லை.  ஒரு குழந்தை இறந்து பிறந்தது.     இரண்டாவது குழந்தை அபாஷன் ஆயிடிச்சு.  சரி ஜோலார்ப்ப்ட்டையை விட சென்னையில்     வைத்தியம் நன்றாக இருக்கும் என்பதால் தான் இங்கே வைத்தியம் ஆரம்பித்தோம்.     வைத்தியத்தின் தொடர்ச்சியாக இது சென்னைக்கு எங்களின் மூன்றாவது பயணம். அப்பா,    பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்.  நான் சென்னைக்கு வருவதை       அறியும்போதெல்லாம் எங்களை   வழி அனுப்ப சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார்.
-        உங்கள் இருவருக்கும் என்ன வயது?
-        சார் அவருக்கு முப்பத்தி எட்டு.  எனக்கு முப்பத்தி மூன்று
-        கவலையை விடுங்க. உங்களுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லை.  உங்களுக்கு           இறைவனின் ஆசியால் மருத்துவம் சரியாகி குழந்தை பிறக்கும். கவலைப்படாதீங்க.
-        சார், குழந்தை இல்லாமல் எங்க ஊரிலே ஒரு கல்யாணத்திற்கோ கோவிலுக்கோ கூட போக      முடியல.   இன்னும் குழந்தை இல்லையா? யாருக்கு பிரச்சனை…  அது இது என்று        கேள்விகளால் எங்களை கொலையே செய்கிறார்கள். 
-        இன்னமுமா இப்படி நம்ம நாட்டிலே…
-        ஆமாம் சார்.
-        நீங்க இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இருவரும் பத்திரமாக சென்று வாருங்கள்.       அப்பா வரவில்லை என்றால் எனக்கு போன் செய்யுங்க.  சரியா?
-        எங்கப்பா கண்டிப்பா வருவார் சார்.
-        சரி, அப்படியென்றால், பத்திரமாக நீங்கள் ஊர் சென்றதும் எனக்கு போன் செய்யுங்க

வணக்கம் சார், வணக்கம் சார் நன்றி நன்றி என்று மாறி மாறி இருவரும் என்னிடம் சொல்ல நான் எந்த உதவியும் செய்யாமல் இவர்கள் எனக்கு ஏன் இந்த வணக்கமும் நன்றியும் சொல்கிறார்கள் என்று வியந்தேன்.

பகல் பதினொன்று மணிவரை என் அலைபேசியை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் அவர்களின் அழைப்பு வரவில்லை.

மாலை நான்கு மணிக்கு அந்த பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்…

-        சார் பத்திரமாக நாங்க ஊருக்கு வந்து விட்டோம், ரொம்ப நன்றிங்க சார்
-        பிறகு அவர்களின் கணவரும் நன்றி சார். எப்போதாவது எங்க ஊருக்கு ஒரு முறை வாங்க சார்
-       அடுத்த முறை சென்னைக்கு வரும்போது நாம் சந்திப்போம். நன்றி… நீங்கள் பத்திரமாக வீடு     சேர்ந்த செய்தி அறிந்ததில் மகிழ்ச்சி

இந்த சம்பவத்தை என் நண்பரிடம் அலுவலகத்தில் சொன்ன போது என்னை அவர் பாராட்ட ஆரம்ப்த்தார். அதற்கு நான்…

“நண்பா,  நான் என்ன உதவி செய்தேன்.  என் உதவியை அவர்கள் வாங்கவில்லையே.  அவர்கள் நினைத்திருந்தால் என்னிடம் இருந்த பணத்தை வாங்கியிருக்கலாமே.  அதை அவர்கள் செய்யவில்லையே… உண்மையான தமிழ் விவசாயிகள் அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத அன்புள்ளத்தை நீ பாராட்டு.  அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்” என்றேன்.

இதை வாசிக்கும் உங்களுக்கு என் இனிய அன்பு கட்டளை….

இந்த சிவகுமார் – கௌரிலக்ஷ்மி தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறக்க உங்களின் ஒரு சிறுபிரார்த்தனையை தயவாக செய்யுங்கள்.

ததாஸ்து
ஆமென்
ஆமின்
(அப்படியே ஆகட்டும்!!!)

அன்புடன்
என் சுரேஷ்

Thursday, May 17, 2012

அந்தப் பெண் காவலர்...


ஐந்து வருடங்களுக்கு முன்னர்…

அன்று மாலை மிகவும் களைப்பாக தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டேன்.

சென்னையை நோக்கின எனது ஒன்றரை மணிநேர பயணத்தில், காரிலேயே களைப்பால் உறங்கிவிட்டேன்.

கார் ஓட்டுனர் பழனி என்றும் நல்ல பார்த்தசாரதி.

நாங்கள் வீடு வந்து சேர இன்னமும் இருபது நிமிடம் இருக்கும் நேரம் எனது அலைபேசி அடித்தது.

என் அலுவலகத்தின் தலமை நிர்வாக இயக்குனர் தான் அழைக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

-        Hi Suresh, I am going for an urgent business meeting to Taj. 
         I want you to be there with me. 
         That English team really needs your convincing presentation. Please come to my home straight.
-        Sir, Sir…

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதை இந்த பைத்தியக்காரன் காலையிலேயே சொல்லித் தொலைத்திருக்கலாமே! - என்று புலம்பினேன்.

என்ன தான் உயர்ந்த பதவி எனினும் ஒரு தொழிலாளி என்பவன் அடிமை தான்! - என்று மீண்டும் என் மண்டைக்கு அறிவு சொன்னது!

களைப்பு, வெறுப்பு, கோபம், புலம்பல் என என் மனநிலை என்னை கரைத்துக்கொண்டிருந்தது.

" பழனி! வண்டியை அப்படியே ஓர் யூடேர்ண் அடித்து விட வேண்டியது தான்.
முதலாளி கட்டளை. பழனி! ஒன்று செய்யுங்கள், மீட்டிங்கிற்கு நான் அவருடன் காரில் செல்கிறேன். என்னை நீங்கள் அவரின் வீட்டின் சாலையின் எதிரில் இறக்கி விட்டு நீங்கள் இந்த காரிலேயே உங்கள் வீட்டிற்கு சென்று காலை வாருங்கள். நடக்க இயலாத உங்கள் மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றீர்களே”  என்றேன்.

“ரொம்ப நன்றி சார்” - பழனியின் முகத்தில் சந்தோஷம் காண்பதில் எனக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சி.

தலமை நிர்வாக இயக்குனரின் வீட்டிற்கு எதிரே பழனி என்னை இறக்கி விட்டார்.

பழனி காரில் புறப்பட்டார்.

அப்போது நேரம் இரவு 7.30.

அந்த இடத்தில் அப்படி ஓர் இருட்டு.

நான் அங்கிருந்து சாலையை கடந்து (Road Crossing செய்து) தான் எதிரில் உள்ள என் முதலாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

அதற்காக முயற்சிக்கிறேன். ஆனால் நந்தனத்தில் உள்ள அந்த சாலையில் ஒன்றின் பின் ஒன்றாக வரும் வாகனங்கள் என்னை சாலை கடக்க அனுமதிக்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

என்னடா இது! என்று வெறுப்புடன் இருக்க என்னருகே காக்கி உடையில் ஓர் இளம் பெண் காவலாளர் அயர்வோடு நிற்பதைக் கண்டேன்.

அவர் மிக வாட்ட சாட்டமுடனும் அழகாகவும்  இருந்தார். ஆனால் அவர்களின் முகத்தில் சொல்ல முடியாத ஓர் உணர்வு இருந்தது. அவர்கள் என்னையே பார்ப்பதாக நான் புரிந்து கொண்டேன்.

அவரிடம் சென்றேன்.

- மேடம் என்னிடம் நீங்கள் ஏதாவது பேச வேண்டுமா?

- இல்லை

- ஏன் அழுகுறீர்கள்?

- வயிற்று வலி தாங்க முடியவில்லை சார். வெளி நாட்டிலிருந்து ஒரு பிரசிடண்ட் சென்னைக்கு வந்திருக்காங்க… அவங்க கார் இந்த சாலை கடந்து தொலைக்கர வரைக்கும் நான் இங்கு நின்று தான் ஆக வேண்டும்.

- இது என்ன கொடுமை. இதற்கு ஓர் ஆண் காவலரையே இந்த பணிக்கு போட்டிருக்கலாமே

- ஆண்களுக்கு இணையாக சம்பளம் வாங்கறீங்க தானே! அப்போ நீங்களும் எங்களைப் போன்று பொறுப்பெடுங்கள் - என்றால் எங்களிடம் என்ன பதில்?

- உங்களுடைய பிரச்சனை என்னவென்று நான் புரிந்து கொண்டேன். மேடம் நீங்க என்னோடு தயவாக வாங்க; எதிரிலுள்ள அந்த வீட்டிற்கு தான் நான் செல்கிறேன்.

- சரி வருகிறேன்.

முதலாளி தன் வீட்டுக் கதவைத் திறந்ததும் என்னையும் அந்த பெண் காவலாளரையும் அதிசயத்தோடு பார்த்தார்.

வடநாட்டுக்கார முதலாளியின் மனதில் என்னமோ ஏனோ - ஒரு பயம்.

வடிவேலு அண்ணனின் ஸ்டையில் என் மனம் சொன்னது “ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்” 

சில நொடிகளுக்குப் பிறகு..

நான் எனது சாதாரண குரலில், எந்த அர்த்தமற்ற வெட்கமுமின்றி என் முதலாளியின் மனையிடம் சொன்னேன்.

-Madam she has severe stomach pain.  May be it’s due to her period timings but I don’t know as she finds it shy to tell.  Please speak to her and kindly take care of her.  I just met her on the road while crossing.

அந்த வடநாட்டு முதலாளியம்மா அன்புடனும் கனிவுடனும் அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.

பத்தே நிமிடங்களில் காக்கி உடை மாறி, ஒரு புதிய சுரிதாரில் அந்தப் பெண் காவலர் வந்தார்.

அதற்குள் அந்த வீட்டில் வேலை செய்யும் சாந்தி அக்கா, ஒரு கோப்பை காப்பியும் மூன்று பிஸ்கட்டும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு அன்போடு கொடுத்தார்கள்.

கொஞ்சம் காப்பியும் ஒரு பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு பாவம் அந்த காவல் அதிகாரி எல்லோருக்கும் நன்றி சொல்லி புறப்பட்டார்கள்.

இல்லை இல்லை தனக்கு குறித்துள்ள அந்த சாலைக்கு ஓடினார்கள்!

பெண்களுக்காக போராடும் பலரும் கூட பெண்களின் அடிப்படை தேவைகளைப் பற்றி உணர்ந்து கொள்வதில்லை என்று அந்த பெண் காவலாளர் என்னிடம் சொன்னது நான் முன்னமே இதை வாசிக்கும் உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன், மன்னிக்கவும்.

நானும் முதலாளியும் மீட்டிங்கிற்கு புறப்படும் நேரம்.... முதலாளி அம்மா … என்னிடம்-

-Is she your relative?
-Yes
-How
-We both are Tamilians!

Wednesday, May 2, 2012

ஜெயந்தி என்ற அவள்...

அன்பர்களே… வணக்கம்! இறைவனின் கருணையால் எனது முதல் நாவல், “ஜெயந்தி என்ற அவள்…”, திருமகள் நிலையத்தினர் வெளியிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பணிவன்போடு தெரிவிக்கிறேன்! இதுவரை வெளியான எனது எட்டு கவிதைத் தொகுப்புகளுக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கும் நீங்கள் தந்த ஆதரவும் ஊக்கமும் தான் இந்த முதல் நாவல் எழுத எனக்கு உதவிற்று என்றால் அது மிகையாகாது! தொடர்ந்து உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் இந்த நாவலை வெளியிடும் திருமகள் நிலையத்தாரின் இணையதள விலாசம் www.thirumagalnilayam.com. இன்னமும் ஓரிரு வாரங்களில் தமிழ் புத்தகங்கள் விற்கப்படும் எல்லா இடங்களிலும் இந்த புத்தகம் எளிதாக கிடைக்க திருமகள் நிலையத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் நாவல் எனது ஆறுமாத உழைப்பும் தவிப்பும் பொறுமையும் கண்டு இறைவன் தந்த பரிசு என்றே நன்றியோடு உணர்கிறேன். இந்த கதைக்கான ஒரு கருவை என்னுயிர் நண்பர் ஒருவரோடு பேசும்போது ஒரு முறை பகிர்ந்தேன். அந்த இனியவர் தந்த அழுத்தமான ஊக்கம் தான் இந்த புத்தகம் என்பதை ஒரு நாளும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த நாவலில் யாராலும் போற்றப்படும் ஜெயந்தி என்ற கதாபாத்திரமும், ஆச்சரியமான மனிதம் நிறைந்த இலக்கியன் என்ற ஒரு கதாபாத்திரமும் நம்மிடம் பல செய்திகளை சொல்கிறார்கள். நமது சிந்தனையை பல விலாசங்களுக்கு அவர்கள் கொண்டு செல்கின்றனர்; நமது சிந்தனைகளை புனிதமாக்கின்றனர்! இந்த நாவலை நீங்கள் வாசித்த பின்னர் உங்களினிய கருத்துக்கள் என்னைத் தேடி வருமென்ற நம்பிக்கையில்… என்றென்றும் அன்புடன் என் சுரேஷ்

Thursday, January 19, 2012

மழைச்சாரல்... ( என் சுரேஷின் சிறுகதைகள்)


அணிந்துரை

தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் இலக்கியம் பல கிளைகளைக் கொண்டது. இலக்கியம், செய்யுள் வடிவத்திலும் உரைநடை வடிவாகவும் படைக்கப்படுகின்றன. இவை கலை வடிவம் கொண்டவை.

இலக்கியம், காலத்தை வென்று வாழக்கூடியது. உலக வரலாற்றையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது.

இலக்கியம் படைப்பாசிரயரோடு தொடர்புடையது. படைப்பாளர் அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்வுகள், கிடைக்கும் அனுபவங்கள், உணர்ச்சிமிக்க கலை வடிவங்களாக வடிக்கப்பெற்று, அவை கவிதையாக, புதினமாக, நாடகமாக, சிறுகதையாக அமைகின்றன.

இக்கால இலக்கியங்களில் புதினமும் சிறுகதையும் சிறந்து விளங்குகின்றன.

புதினம் நெடுங்கதை அல்லது பெருங்கதை என்றும், சிறுகதை சிறியகதை என்றும் பொருள்படும்.

புதினத்தை விட சிறுகதையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சுவையான ஒரு நிகழ்ச்சி, கவர்ச்சியான ஒரு காட்சி, ஒருவரின் தனிப்பண்பு, ஒரு சிறு அனுபவம், வாழ்க்கையில் பெறுகின்ற வெற்றி, அறவுணர்வு ஆகிய இவற்றை உணர்த்தும் கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும்.

“மழைச்சாரல்…” என்ற இத்தொகுப்பு பதினெட்டு சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவமாக அமைந்துள்ளன. படைப்பாளருக்கு கிடைக்கின்ற சூழல் அனுபவத்தின் பயனைப் படிப்பவ்ர்களும் பெறக்கூடும்.

இத்தொகுப்பிலுள்ள கதைகளில் கதாசிரியரே பாத்திரமாகிவிடுகிறார். படைப்பாளரே கதைமாந்தர்களில் ஒருவராகி கதை கூறும் முறை, கதை கூறும் உத்திகளில் ஒன்றாகும். இம்முறையினை அறிஞர் மு.வ. அவர்களின் புதினங்களில் காணலாம்.

திரு என் சுரேஷ் அவர்களின் சிறுகதை முதல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் அணிவகுப்பில் இவர் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!

இச்சிறுகதைகளில் குறிப்பிடக்கூடிய பகுதிகள் பல இருப்பினும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

“ சென்னை கிராமம் இன்னமும் மிச்சம் இருப்பது இங்கிருக்கும் ஓலை வீடுகளில் தான்” என்று சிங்காரச் சென்னையை ஆய்வு செய்கிறார்.

“அரசே மது விற்கிறது” என்று ஒரு கேள்வியும், “ கள்ளச் சாராயம் ஏழைகளின் உயிரை அழித்தால் பரவாயில்லையா?” என்றொரு எதிர் கேள்வியையே பதிலாகவும் தருகிறார், “மழைச்சாரல்” எனும் கதையில்.

“விமான நிலையத்தில்” எனும் தலைப்பில், கோட்டை கட்டி ஆண்ட சரித்திரம் கம்பி வலைக்குள்ளும், அகதிகளாகவும் வாழும் நிலையைச் சுருக்கியுரைத்து சுருக்கென்று சுடுகிறது.

“ஓர் அலைபேசி அழைப்பில்”, “நீங்கள், அலைபேசி வழியாக, ‘ அம்மா சாப்பிட்டீர்களா?’ என்று ஒற்றைக் கேள்வியைத் தூக்கி வீசுகிறது. நெஞ்சம் பற்றி எரிகிறது. நாம் ஒரு பொழுதுகூட இவ்வாறு எண்ணிப் பார்க்கவில்லையே என்று நெஞ்சம் பதைக்க வைக்கிறது. தாய்ப்பாசத்தை நாம் மிகவும் சாதாரணமாகக் கருதிக் கொண்டிருக்கின்றோம்! என்று நமது குறையைத் திருத்துகிறது. இதனை படைப்பாளரின் வெற்றியாகக் கருதலாம்.

“பூங்காவில் ரிஸ்வானா” எனும் கதையில்,

‘பூங்காவில் ஆங்காங்கே பச்சை நிழல்’

‘அவள் கண்ணின் அழகே அவள் இளமையானவள், அழகி, இனிமையானவள் என்னும் செய்தி’

‘மாற்றங்களை நான் ஆசைப்பட்டால் அது முதலில் என்னிடமிருந்தல்லவா ஆரம்பிக்க வேண்டும்?” என்னும் இடங்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.

‘ உயர்ந்த சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் அரசின் நலத்திட்டங்களில் பல உயர்சாதி ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை’ எனும் சமூகச்சிந்தனை கருத்துக்கள் நெஞ்சைத் தொடுகின்றன.

பலவிடங்களில் ஆசிரியரின் மனக்குமுறலைக் காணமுடிகிறது. அத்தகைய குமுறலே அவரின் படைப்புகளுக்கு மூலமாக இருக்கக் காண்கிறேன்.

திரு. என் சுரேஷ் அவர்களின் படைப்புக்கு வாசகர்கள் அவரை ஆதரித்து மேலும் மேலும் எழுதத்தூண்ட வேண்டும்.

வாழ்த்துக்களுடன்,

முனைவர் இர. வாசுதேவன் MA., Mphil., Ph.d.