Monday, July 9, 2012

அன்றொரு நாள் காலை...


நான் பெரிய கோடீஸ்வரன் என்று என்னிடமே பலர் சொல்லக் கேட்க சுகமாக இருக்கும். 

அன்பை பகிர்ந்து கொடுக்கவும், பாசத்திற்கு நேரம் ஒதுக்கவும், நன்றியுணர்வை அறிவிப்பதிலும் தான் நான் கடனாளி. 

ஆனால் பொருளாதாரத்தில் அல்ல.

இந்த வகையில் நான் பெரிய கோடீஸ்வரனா என்றால், தன்னடக்கத்துடன் என் பதில். “ ஆம் இறைவனின் கருணையால்” என்பேன்.

சென்னைக்குள் எனது பயணங்கள் காரிலும் ஆட்டோ ரிக்ஷாவிலும் சில வேளைகளில் அரசு பேருந்துக்களிலும் இருக்கும்.

கடந்த மாதம் ஒரு நாள் காலை வேளை நான் அரசு பேருந்தில் அமர்ந்திருக்கிறேன்.  அதிசயமாக அன்று அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இல்லை. 

இன்னமும் சென்னையின் வெப்பம் குறையவில்லையே என்ற பரிதவிப்போடு ஜன்னலோரம் அமர்ந்து சென்னை சிங்காரச் சென்னையாக என்று தான் மாறப்போகிறதோ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க…

பேருந்தில் என் பின்பக்கமிருந்து ஒரு சத்தம்….  “  ஐயோ பணம் காணலயே.. ஐயோ ஊருக்கு போகவேண்டுமே”

திரும்பி பார்த்தேன். 

குறைந்தபட்சம் நாற்பது வயது கொண்ட ஒருவர்.  அவரின் அப்போதைய மனநிலையால் அவரின் இரத்த அழுத்தம் ஏறிக்கொண்டே இருப்பதை அவரின் முகத்தை பார்த்து அறிந்து கொண்டேன்.  என்ன பதில் சொல்லி அவரை ஆறுதல் படுத்த என்று அறியாமல் அப்படியே அவரை பார்த்திருந்தேன். 

அதற்குள் அவருடைய மனைவி அவரிடம் ஓடி வந்து.

-        பணம் எங்கே வைத்தீர்கள்
-        பின் பாக்கட்டில் தான்
-        அங்கே வைக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல..
-        வண்டி ஏறும்போதே ஒருவன் என்னை இடிச்சான்.  அப்போதே எனக்கு சந்தேகம். 
-        சரி இப்ப சென்டரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எப்படி ஊருக்கு போறது…         
          எவ்வளவு பணம் இருந்தது?
-        ஆயிரத்தி ஐநூறு ரூபாய்…

அவர்களிடம் இருக்கும் பைல்கள், மற்றும் ரத்த சோதனை செய்த இடது கைகளிலிருக்கும் அடையாளம்  இவையெல்லாம் வைத்து நான் பார்க்கையில், அவர்கள் மருத்துவமனையிலிருந்து தான் வருகிறார்கள் என்று உடனே புரிந்து கொண்டேன்.

நான் அந்த பெண்ணிடம். 

-        அம்மா, அவர் பணத்தெ தொலைத்தார்.  ஆனால் நீங்க அவரிடம் கோபமாக பேசினால்      அவருக்கு இன்னும் பதற்றம் தானே வரும்
-        என்ன சார் செய்றது…! இப்ப நாங்க ஊருக்கு போகனுமே.  ஆனால் என் கணவர் நான் என்ன          சொன்னாலும் எப்போதும் கோபப்படமாட்டாறு.

அவர்கள் அப்படி ஒரு பதில் சொனனதில் எனக்கு கொஞ்சம் கூட ஒரு நகைச்சுவை உணர்வு வரவில்லை.  ஏனெனில் அவர்கள் இருவரும் அன்புள்ளவர்களாகவும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசமுள்ளவர்களாகவும் அறிந்து கொண்டேன்.

எனது பர்ஸில் என்ன பணம் உள்ளது என்று பார்த்தேன்.  இரண்டு கிரெடிட் கார்டும், தொள்ளாயிரத்தி ஐம்பத்தி ஐந்து ரூபாயும், கொஞ்சம் சில்லறை காசுகளும் இருந்தது.

என்னிடமிருந்த அந்த பணத்தை அனைத்தையும் எடுத்து அவரிடம் கொடுத்தேன். 

-        சார் வேண்டாம் சார்
-        அப்பறம் எப்படி ஊருக்கு போவீற்கள்?
-        வழியனுப்ப என் மாமனார் வருவார்.  அவர் வழியனுப்ப வரும்போதெல்லாம் ஆயிரம்     இரண்டாயிரம் என்று என் மனைவியிடம் கொடுப்பது வழக்கம்.  அது போதும்.  பதற்றத்தில்     என் மாமனார் வருவதும் அவர் பணம் தருவதும் எனக்கு ஞாபகமில்லாமல் போனது.     மன்னிக்கவும் சார்.
-       பரவாயில்லை இந்த பணமும் இருக்கட்டும்.  ஒருவேளை உங்கள் மாமனார் வரவில்லை     என்றலோ, ஒருவேளை பணம் தராமல் இருந்தாலோ என்ன செய்வீர்கள்
-       வேண்டாம் சார். ப்ளீஸ்…
-       சரி இது என்னுடைய விசிட்டிங்க் கார்ட்.  ஒருவேளை உங்களுடைய மாமனார் வரவில்லை     என்றால் என்னை தொலைபேசியின் தொடர்பு கொள்ளுங்கள்.  நான் என் உதவியாளர் வழி       உங்களுக்கு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பணம் அனுப்புகிறேன்.
-       மிக்க நன்றி சார்.

கொஞ்சம் நேரத்தில் என்னருகே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் பேருந்திலிருந்து இறங்கினார்.  அப்போது அந்த பெண்மணி

-        சார் நான் இங்கே உட்காரட்டுமா?
-        அதற்கென்ன வாங்க தாயீ… உட்காருங்க..
-        ரொம்ப நன்றி சார்.
-        எதற்கு நன்றி.  உங்கள் கணவர் என்னிடம் பண உதவி பெறவில்லையே?
-        சார் நீங்க உதவி செய்ய முன்வந்தீர்களே… அந்த பாவி என் கணவரின் பணத்தை திருடினானே    என்று சென்னையை திட்ட ஆரம்பித்தேன்.  ஆனால் நீங்க உதவி செய்ய முன் வந்ததும்      நிறுத்தி விட்டேன்.
-        பரவாயில்லைம்மா… சரி என்ன உங்களுக்கு உடம்பு சரியில்லையா ?  உங்களுடைய         கணவருக்கு என்ன வேலை? எந்து ஊர் நீங்க?
-        சார் நாங்க விவசாயம் செய்கிறோம்.  ஜோலார்ப்பேட்டை தான் எங்க ஊரு.  எங்களுக்கு     திருமணமாகி எட்டு வருஷமாச்சு குழந்தை இல்லை.  ஒரு குழந்தை இறந்து பிறந்தது.     இரண்டாவது குழந்தை அபாஷன் ஆயிடிச்சு.  சரி ஜோலார்ப்ப்ட்டையை விட சென்னையில்     வைத்தியம் நன்றாக இருக்கும் என்பதால் தான் இங்கே வைத்தியம் ஆரம்பித்தோம்.     வைத்தியத்தின் தொடர்ச்சியாக இது சென்னைக்கு எங்களின் மூன்றாவது பயணம். அப்பா,    பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்.  நான் சென்னைக்கு வருவதை       அறியும்போதெல்லாம் எங்களை   வழி அனுப்ப சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார்.
-        உங்கள் இருவருக்கும் என்ன வயது?
-        சார் அவருக்கு முப்பத்தி எட்டு.  எனக்கு முப்பத்தி மூன்று
-        கவலையை விடுங்க. உங்களுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லை.  உங்களுக்கு           இறைவனின் ஆசியால் மருத்துவம் சரியாகி குழந்தை பிறக்கும். கவலைப்படாதீங்க.
-        சார், குழந்தை இல்லாமல் எங்க ஊரிலே ஒரு கல்யாணத்திற்கோ கோவிலுக்கோ கூட போக      முடியல.   இன்னும் குழந்தை இல்லையா? யாருக்கு பிரச்சனை…  அது இது என்று        கேள்விகளால் எங்களை கொலையே செய்கிறார்கள். 
-        இன்னமுமா இப்படி நம்ம நாட்டிலே…
-        ஆமாம் சார்.
-        நீங்க இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இருவரும் பத்திரமாக சென்று வாருங்கள்.       அப்பா வரவில்லை என்றால் எனக்கு போன் செய்யுங்க.  சரியா?
-        எங்கப்பா கண்டிப்பா வருவார் சார்.
-        சரி, அப்படியென்றால், பத்திரமாக நீங்கள் ஊர் சென்றதும் எனக்கு போன் செய்யுங்க

வணக்கம் சார், வணக்கம் சார் நன்றி நன்றி என்று மாறி மாறி இருவரும் என்னிடம் சொல்ல நான் எந்த உதவியும் செய்யாமல் இவர்கள் எனக்கு ஏன் இந்த வணக்கமும் நன்றியும் சொல்கிறார்கள் என்று வியந்தேன்.

பகல் பதினொன்று மணிவரை என் அலைபேசியை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் அவர்களின் அழைப்பு வரவில்லை.

மாலை நான்கு மணிக்கு அந்த பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்…

-        சார் பத்திரமாக நாங்க ஊருக்கு வந்து விட்டோம், ரொம்ப நன்றிங்க சார்
-        பிறகு அவர்களின் கணவரும் நன்றி சார். எப்போதாவது எங்க ஊருக்கு ஒரு முறை வாங்க சார்
-       அடுத்த முறை சென்னைக்கு வரும்போது நாம் சந்திப்போம். நன்றி… நீங்கள் பத்திரமாக வீடு     சேர்ந்த செய்தி அறிந்ததில் மகிழ்ச்சி

இந்த சம்பவத்தை என் நண்பரிடம் அலுவலகத்தில் சொன்ன போது என்னை அவர் பாராட்ட ஆரம்ப்த்தார். அதற்கு நான்…

“நண்பா,  நான் என்ன உதவி செய்தேன்.  என் உதவியை அவர்கள் வாங்கவில்லையே.  அவர்கள் நினைத்திருந்தால் என்னிடம் இருந்த பணத்தை வாங்கியிருக்கலாமே.  அதை அவர்கள் செய்யவில்லையே… உண்மையான தமிழ் விவசாயிகள் அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத அன்புள்ளத்தை நீ பாராட்டு.  அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்” என்றேன்.

இதை வாசிக்கும் உங்களுக்கு என் இனிய அன்பு கட்டளை….

இந்த சிவகுமார் – கௌரிலக்ஷ்மி தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறக்க உங்களின் ஒரு சிறுபிரார்த்தனையை தயவாக செய்யுங்கள்.

ததாஸ்து
ஆமென்
ஆமின்
(அப்படியே ஆகட்டும்!!!)

அன்புடன்
என் சுரேஷ்

1 comment:

  1. Anonymous4:47 PM

    very nice sir, I like this story

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...