Thursday, April 3, 2008

உணர்வுகள் தொடரும்...

ஓவ்வொரு நாளும் எத்தனையோ உறவுகள் ஒரு கடைசி கையெழுத்திட்டதும் முடிவிற்கு வந்து விடுகிறது. இதில் முக்கியமானதொன்று மணமுறிவு (விவாகரத்து).

தங்களின் அப்பாவும் அம்மாவும் இனி மேலும் கணவன் - மனைவி அல்ல என்று அறிந்ததும் வியந்துபோய் நிற்கும் குழந்தைகளின் கண்களை கூர்ந்து கவனித்தால் அவை பல உண்மைகளை நமக்குச் சொல்லும். யார் மனமும் உருகும்!

நமது சட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மணமுறிவு கொடுப்பதில்லை. கடைசிவரை மனுதாரர்களை சேர்த்து வைக்கத்தான் நீதியரசர்கள் முயல்கிறார்கள். ஆனால் மணமுறிவு கோரும் கணவன் - மனைவி இருவரின் மனங்களும் மன்னிக்கும் நற்குணத்தை முழுவதுமாய் மறந்து, பகையில் நிலைத்து, பிரிந்தாக வேண்டுமென்ற பிடிவாதத்தில் வேரூன்றி நிற்கும்போது தான் வேறெந்த வழியுமின்றி மணமுறிவை நமது நீதியரசர்கள் கவலையோடு வழங்குகிறார்கள்.

கார்டியன் & வார்டு சட்டம் 1890இன் படி சில கலந்தாய்வுகள் செய்த பின்னர்க் குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பதென்றும், தாயோ, தந்தையோ எப்போதெல்லாம் குழந்தைகளைச் சந்தித்து கொள்ளலாமென்றும், வாழ்நாள் (ஜீவனாம்சத்) தொகை எவ்வளவு கொடுக்க வேண்டுமென்றெல்லாம் நீதியரசர்கள் உபதேசிக்க அதன்படி நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் கண்டு வேதனைப்பட்டுக் குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குள்ளாகிறது.

சாவதை விட வாழ்வதே மேல்! புழுங்கிக் கசங்கி வாழ முடியாமல் ஒவ்வொரு நொடியும் கொடுமையில் வாழ்வதை விட மனைவியோ, கணவனோ மணமுறிவுகோரி விண்ணப்பிப்பதில் தவறேயில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்னமே ஒருவருக்கொருவர் தங்களின் பொய் முகத்திரையைக் கிழித்து இது தான் நானென்ற உண்மையைச் சொல்லியும், இது தான் நீயென்ற புரிதலோடும் திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினால் மணமுறிவை ஓரளவிற்குத் தவிற்க்க முடியும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக பொய்யான குற்றச்சாற்றுகளைக் கோர்த்து
மணமுறிவை கோரி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

சில காலங்களுக்கு முன் மணமுறிவு வழக்குகள் நமது நாட்டில் மிகக் குறைவாக இருந்தன. ஆனால் இன்று மணமுறிவு வழக்குகள் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவில் கணவன், மனைவி சண்டைகள் அதிகரித்தது என்று ஒருபோதும் அர்த்தமாகாது. கல்வி அறிவால் தங்களின் உரிமைகளை மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இது ஒரு நல்ல விஷயமென்றாலும் மணமுறிவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குள்ளாகிறது.

மணமுறிவினாலும், தற்கொலைகளாலும் தாய் - தந்தையரைப் பிரிந்து வாழும் பிள்ளைகளின் நிலை மிகவும் கடினம். கல்விக்கூடங்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களில், இந்தக் குழந்தைகளிடம் அவர்களின் தாயைப் பற்றியோ, தந்தையைப் பற்றியோ யாராவது கேட்க, தங்களின் பாதிப்பை வெளியே சொல்ல முடியாமலும் மனதில் எழும் கவலைத் தீயின் வேதனையைத் தாங்க முடியாமலும் திடீரென்று அழத்தொடங்கும் இந்தப் பிஞ்சு மனங்களை யார் தேற்ற முடியும்!

இதுபோன்ற பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகளுக்குப் புதிய மாற்றங்களைப் பற்றின ஒரு பயம் வந்துவிடுகிறது. தாங்கள் கைவிடப் பட்டோமே என்ற கவலை மனதிலெங்கும் நிறைகிறது. எதிலும் ஒரு ஈடுபாடின்றித் தவிக்கத் தொடங்குகிறார்கள். அப்பாவை இழந்தவர்கள் அம்மாவின் கோபத்தையும், மற்றவர்கள் அப்பாவின் கோபத்தையும் தொடக்க காலங்களில் சகிக்க முடியாமல் கதறுகிறார்கள்.

இந்த நிலையிலிருக்கும் குழந்தைகளுக்குத் தேர்ச்சி பெற்ற மனநல மருத்துவர்களின் உபதேசங்களும், வழிநடத்துதலும் கண்டிப்பாக தேவை.

கணவனும் மனைவியும் மணமுறிவால் பிரிந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் நாகரீகம் வழக்கத்தில் இருந்தால் தான், இந்த பிள்ளைகளின் மனதில் எந்த விதமான பகையோ, வெறுப்புணர்ச்சியோ இல்லாமல் வளர்ந்து முன்னேறுவார்கள்.

இதுபோல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெரிய அளவிற்குப் பாசம் காட்ட இந்தச் சமூகம் முன்வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இவர்களின் மனதைக் காயப்படுத்தும் விதமான வினாக்களை மட்டும் கேட்காமலிருந்தாலே போதுமானது.

இன்று, புகழ்பெற்றவர்களின் பிள்ளைகள் மட்டுமின்றி சாதாரணமானவர்களின் பிள்ளைகளும் இதுபோன்ற பிரிவின் கொடுமையால் வாடுகிறார்கள். என்றாவது தங்களின் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இவர்களின் பிரார்த்தனைகள் தொடர்கிறது. மணமுறிவு வாங்கின பலர், சில காலங்களுக்குப் பிறகு தங்களின் தவறான தீர்மானங்களை நினைத்து குற்ற உணர்ச்சிகளால் இரகசியமாய் தங்களுக்குள்ளேயே குமுறுகிறார்கள் என்பது யாரிடமும் சொல்ல முடியாத ஓர் உண்மை!

தோழமையுடன்
என் சுரேஷ்

6 comments:

  1. Anonymous5:19 PM

    intaya soolnilaiyil thevaiyana / padikka vendiya ontu

    இந்தக் குழந்தைகளிடம் அவர்களின் தாயைப் பற்றியோ, தந்தையைப் பற்றியோ யாராவது கேட்க, தங்களின் பாதிப்பை வெளியே சொல்ல முடியாமலும் மனதில் எழும் கவலைத் தீயின் வேதனையைத் தாங்க முடியாமலும் திடீரென்று அழத்தொடங்கும் இந்தப் பிஞ்சு மனங்களை யார் தேற்ற முடியும்!


    இதுபோன்ற பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகளுக்குப் புதிய மாற்றங்களைப் பற்றின ஒரு பயம் வந்துவிடுகிறது. தாங்கள் கைவிடப் பட்டோமே என்ற கவலை மனதிலெங்கும் நிறைகிறது. எதிலும் ஒரு ஈடுபாடின்றித் தவிக்கத் தொடங்குகிறார்கள்

    மணமுறிவு வாங்கின பலர், சில காலங்களுக்குப் பிறகு தங்களின் தவறான தீர்மானங்களை நினைத்து குற்ற உணர்ச்சிகளால் இரகசியமாய் தங்களுக்குள்ளேயே குமுறுகிறார்கள் என்பது யாரிடமும் சொல்ல முடியாத ஓர் உண்மை!

    may be true

    ReplyDelete
  2. நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள்...விரிவான அறிமுகம் நன்றாக இருந்தது...

    ReplyDelete
  3. IT IS NOT MAY BE TRUE
    IT IS TRUE!

    THANKS - N SURESH

    ReplyDelete
  4. நிலவு நண்பனே,
    எனது அன்பு தம்பியே!

    உனது பின்னூட்டம் கண்டு மகிழ்கிறேன்.

    பாசமுடன் அண்ணன்

    ReplyDelete
  5. //கணவனும் மனைவியும் மணமுறிவால் பிரிந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் நாகரீகம் வழக்கத்தில் இருந்தால் தான், இந்த பிள்ளைகளின் மனதில் எந்த விதமான பகையோ, வெறுப்புணர்ச்சியோ இல்லாமல் வளர்ந்து முன்னேறுவார்கள்.//

    மிக நன்று சொன்னீர்கள் !

    ReplyDelete
  6. Anonymous7:55 AM

    அழகாகவும் அருமையாகவும் விவேகத்துடன் கூடிய கருத்துக்கள்..

    வாழ்த்துகள்

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...