Monday, March 31, 2008

கல்வி




இந்தியாவில் தனியார் கலிவிக் கூடங்களுக்கும், அரசின் கல்விக் கூடங்களுக்கும் மாபெரும் வேருபாடுகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. பொருளாதாரத்தில்
உயர்ந்தவர்களும் ஓரளவிற்கு நடுத்தர வருமானத்தில் கசங்கி மூச்சு பிடித்து வெளிவர முடிவோருக்கும் மட்டும்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடிகிறது.

நகர்ப்புறங்களில் தெருவிற்குத் தெரு தனியார் பள்ளிக்கூடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்தும் பலருக்கும், இன்று கல்வியைக்
கற்பிப்பது என்பது ஒரு சேவையல்ல; வணிகம்.

இவர்களில் சிலர் ஆறக்கட்டளை என்ற போர்வையில் தங்களின் இந்த கல்வி வணிகத்தைத் தொடங்கி வருமான வரி கட்டாமல் / அல்லது குறைவாக கட்டி அரசை ஏமாற்றி வருகிறார்கள்.

ஆனால் நமது அரசு கல்விக்கூடங்களில் அதிகம் சுண்ணாம்பு கூட பூசாத பழைய கட்டடங்களாகவே காட்சியளிக்கிறது. தமிழ் நாட்டின் வெப்பநிலை எல்லோரும் அறிந்ததே. அரசு கல்விக்கூடங்களில் மின்விசிறிகள் போதுமானதாக இல்லை; பழைய மேசைகள்; உடைந்த நாற்காலிகள், என அவல நிலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

புதிய தனியார் பள்ளிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகும்
வேகத்திற்கு அரசின் கல்விக்கூடங்களின் வளர்ச்சி மிக மிகக் குறைவு.

இன்றும் சிற்றூர்ப்புறங்களில் செருப்புக் கூட இல்லாமல் ஏழைக் குழந்தைகள் சாலைகள் வழியே கல்விக்கூடங்களுக்குப் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று வரும் காட்சி எல்லோர் மனதையும் உருக்கும். கல்வியைக் கற்றுக்கொடுக்க; கற்றுக்கொள்ள நல்ல சூழ்நிலைகள் அரசு கல்விக்கூடங்களில் அதிகம் இருப்பதில்லை.

இது போன்ற கல்விச் சார்ந்த சிக்கல்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமது ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி உயர்தரமாக இருந்தால் தான் வருங்காலத்தில் உயர்ந்த படிப்பிற்குச் சென்று வெற்றி பெற முடியும்.

கோடீசுவரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகள் மற்றும் கல்வி கற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளில் ஒரு பத்து விழுக்காடு கூட அரசின் கல்விக்கூடங்களில் இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது.

அரசு கல்விக்கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் வசதியானவர்களைப் பார்த்து வருந்துவதால், இளம் வயதிலேயே இவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கை குறைந்து விடுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுகிறது மாணவிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனையும் ஆங்கிலப் பள்ளியில் (கான்வென்டில்) படிக்கும் மாணவன் ஒருவனையும் சந்தித்துப் பேசிப் பார்த்தால் அந்த இருவருக்கிடையில்
பேச்சாற்றலிலும், அறிவுத்திறனிலும் பல வேறுபாடுகளை நாம் அறிந்து கொள்ள முடியும். கல்வியின் தரத்தால்த் தான் இந்த இரண்டு மாணவர்களிலும் இதுபோன்ற வேறுபாடுகளுக்கு காரணம் என்ற உண்மையை எல்லோராலும் உணர முடியும்.

பல காவல் நிலையங்களையும் அரசு செப்பனிட்டு புத்தம் புதிய கட்டடங்களாக
அவைகளை அழகு படுத்தின என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் அதற்கு பதிலாகவோ அல்லது அந்த செலவோடு செலவாகவோ ஏன் கலிவிக்கூடங்களை செப்பனிடுவதில் அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது பொதுமக்களுக்கு புரியாத ஒரு புதிராகவே உள்ளது.

வெகுவிரைவாக அரசின் எல்லா கல்விக் கூடங்களையும் தனியார் நிறுவனத்தினர்களின் கட்டடங்களை விட எல்லா வசதிகளும் நிறைந்த கட்ட்டங்களாக, கல்வி கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் ஏற்ற அழகிய சூழ்நிலைகளை அமைத்து இன்றைய அரசு விரைவில் மாற்றுமென்று நம்புவோம்.

சரி.. தமிழ்நாட்டிலிலுள்ள கல்விக்கூடங்களில் தமிழ் வழிக் கல்வியைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்!

வெள்ளையர்கள் இந்நாட்டை விட்டு சென்ற பிறகும் அந்தக் கொள்ளையர்களின் மொழியில் பேசினால்தான் தங்களுடைய பிள்ளைகள் அறிவாளிகள் என்று போற்றப்படுவார்கள் என்ற சிந்தனை நமது சமுதாயத்தில் படித்தோருக்கும் படிக்காதோருக்கும் பொதுவாக இன்னமும் மனதில் பதிந்துள்ள ஒரு முட்டாள்தனம்.

அதே நேரத்தில் ஆங்கிலம் சுத்தமாக தேவையில்லை என்று சொல்லவும் முடியாத
நிலைக்கு இந்திய மக்கள் எல்லோருமே தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்ற உணமையை மறுக்கவும் முடியவில்லை.

தமிழை இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றாக்கியது இப்போதைய தமிழக அரசின் மிக
மிக பெருமைக்குறியதோர் சரித்திரமே! ஆனால் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலேயே தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றென பறைசாற்றி பல ஆண்டுகளாகியும் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக நமது தமிழை இன்று வரை தமிழ் மக்களாகிய நம்மால் உயர்த்த முடியவில்லையே என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இருப்பினும் இதற்காக கடுமையான முயற்சிகள் செய்துவரும் எல்லோரையும் நாம் வாழ்த்தி வணங்கி பாராட்டாமல் இருக்கவும் முடியாது. ஆனால் தமிழ் மொழியை இந்திய நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டுமென்ற ஒரு நிருபந்தம் என்றோ உருவாகி விட்டது என்பதை யாராலும் என்றும் மறுக்கவே முடியாது.

ஏன்? எப்படி?

தாய்மொழியான தமிழிலேயே பன்னின்ரண்டாவது வரை அல்லது பட்டப் படிப்பு வரை படித்த பிறகு தமிழ் மொழியிலேயே மருத்துவம், பொறியியல் போன்ற அனேகத் துறைகளில் தமிழ்ல் படிக்கத் தமிழ்நாட்டிற்குள்ளோ அல்லது இந்தியாவில் எங்காவதோ படிக்க மாபெரும் வசதிகள் நமக்குள்ளதா?

தமிழை இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக உயர்த்தினால் தான் இந்தியாவில் இருக்கும் எல்லா பல்கலைக் கழகங்களிலும் மருத்துவம் உட்பட எல்லாத் துறைகளுக்கும் தனித்தனி பாடங்கள் அமைக்கப்பட்டு எல்லோரும் தமிழிலேயே தங்கள் கல்வியைப் படித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஆதலால், இன்று செம்மொழியாய் விளங்கும் நமது தமிழ் மொழி, இந்தியாவின்
ஆட்சி மொழியாகும் பொன்னாள் வருவதற்குள் எல்லாத் துறைகளிலும் தமிழிலேயே பாடங்கள் பயில் எல்லா ஏற்பாடுகளையும் நமது அரசாங்கமும் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து தமிழ் மொழியின் மீது நேசம் கொண்ட எல்லோரும் முன் வந்து செயல்பட்டால் நம் தமிழுக்கும், நமது தமிழ் இனத்திற்கும் வெற்றி நிச்சயம்!

தோழமையுடன்
என் சுரேஷ்

9 comments:

  1. //வெகுவிரைவாக அரசின் எல்லா கல்விக் கூடங்களையும் தனியார் நிறுவனத்தினர்களின் கட்டடங்களை விட எல்லா வசதிகளும் நிறைந்த கட்ட்டங்களாக, கல்வி கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் ஏற்ற அழகிய சூழ்நிலைகளை அமைத்து இன்றைய அரசு விரைவில் மாற்றுமென்று நம்புவோம்.//

    நண்பரே!
    அரசால் முடியும் ஆனால் செய்யுமெனும் நம்பிக்கை எனக்கில்லை. ஏனேனில் அரசியல்வாதிகள் கல்வி வியாபாரிகளாக உள்ளனர். இந்த வேறுபாடுதான் அவர்கள் வியாபாரம் செழிக்க ஏதுவாக உள்ள ஊட்டம்.
    அந்த ஊட்டத்தைக் குறைந்து தம் தொழில் வாட அவர்கள் விடார்.

    ReplyDelete
  2. நண்பரே,

    வெற்றி கிடைக்கும் வரை விளையாட்டு (Play till we win!!) - என்ற உறுதியோடு போராடினால் எந்த வெற்றியும் சாத்தியம் தான்!

    தோழமையுடன் - என் சுரேஷ்

    ReplyDelete
  3. //
    கோடீசுவரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகள் மற்றும் கல்வி கற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளில் ஒரு பத்து விழுக்காடு கூட அரசின் கல்விக்கூடங்களில் இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது.//
    நிச்சயமான உண்மை.
    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளோடு, அதற்கு இணையாக அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.இவற்றிலும் போதிய வசதிகள் மற்றும் கல்வி கற்றுக்கொள்ளும் சூழ்நிலைகள் இல்லை.

    ஆசிரியர் மாணவர் விகிதம் 1:80 என இருந்தால் எப்படி அனைவருக்கும் சமமாக கற்றுக் கொடுக்க முடியும்?

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்திற்கு லட்சங்களில் ஏலம் விடும் நிலை உள்ளது.

    அதிகப்படியான,தரமற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரிகள் என கல்விப் பிரச்சனைக்கு காரணங்கள் பல....

    தேவையான பதிவு...
    சிறப்பான பதிவு...

    ReplyDelete
  4. அன்புள்ள திரு குரு,

    உங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

    நிலமை மாறுமென்று
    எதிர்பார்ப்போம்.

    இல்லையேல்
    எதிர்த்து போரிட்டு மாற்றுவோம்.

    தோழமையுடன் என் சுரேஷ்

    ReplyDelete
  5. சுரேஷ்,
    அரசால் மட்டுமே இது முடியும். அர்சும் இலவச செருப்பு, சைக்கிள், சீருடை,உணவு,புத்தகம்..என்று பல திட்டங்களை போட்டு செயல்படுத்துகிறது. கல்வி அதிகாரிகள் முனைந்து செயல்பட்டாலே நல்லது நடக்கும். பெரும்பாலும் கல்வி அதிகாரிகள் இதில் முனைப்புக் காட்டுவது இல்லை.மக்களின் பங்கும் இதில் முக்கியமானது.

    சமூகத்தை மாற்றுவது என்பது ஆட்சியளர், அதிகாரிகள் மற்றும் மக்கள் அனைவரும் கூடி செயல்பட வேண்டிய விசயம்.


    காசு வாங்காத கான்வென்ட்... அசத்தல் அரசுப்பள்ளி!
    http://nallathunadakattum.blogspot.com/2008/02/blog-post_23.html

    ReplyDelete
  6. நட்சத்திர வார வாழ்த்துக்கள் சுரேஷ்! சொல்லவேயில்ல??

    ReplyDelete
  7. அன்புள்ள தோழி சேது,

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    வெறும் ஒரு வார காலத்திற்கு நட்சத்திரமாக இருப்பதை எப்படி சொல்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

    அப்படியே அதை சொல்லவும் மறந்து விட்டேன், சேது:-)

    தோழமையுடன் - என் சுரேஷ்

    ReplyDelete
  8. Anonymous5:42 PM

    America ponta naadukalil Govt. thaanae Pallikalaiyum nadathukirathu..
    antha nilai entu ithirunatil varum

    kastam thaan - ingu ellaam viyaparam

    ReplyDelete
  9. Anonymous5:46 PM

    தமிழில் கல்வித் தகவல்களை தொகுத்துத் தர கல்விமலர் www.kalvimalar.com இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. பார்த்தீர்களா. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சரியான நேரத்தில் உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவிலும் அது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...