Wednesday, September 5, 2007
நிஜங்களின் கோலங்கள்
அவளையின்று அழைக்க
அடைபட்ட கிளிமொழி
பதற்றமாய் சொன்னது
" அவர் இருக்கார்"....!
உயிர் தோழிக்கா இந்நிலை!
புன்னகையின் பெட்டகம்
சுதந்திரத்தின் விரிந்த சிறகுகளென
எத்தனை வியப்புகளிருந்தது அவளில்..!
தோழியவளின் திருமணமிட்ட வேலியால்
எத்தனையோ வருடங்களாய் இந்நிலையிது
அவனில் பற்றவைத்தது கவலைகளை!
புன்னகையால் மறைத்தாளவள்
அடிமையென்பதை!
பிள்ளைகளால் இருக்கிறது இல்லறம்
என்கிறது நிஜம்!
பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
ஒளிந்துகொள்ளும் அவளின் வேதனைகள்!
பெண் சுதந்திரப் போராட்டம்
இவளிலிருந்து இனி என்று ஆரம்பித்து.....!!!!
Tuesday, September 4, 2007
மீண்டும் கல்விக்கூடத்தில்...!
நேரமும் செல்வமும் அன்று தடைசெய்த
கல்விப்பயணம்
தொடர்கிறதின்று
மீண்டும் மாணவனல்ல
நீயென்றும் மாணவனேயென்று
மறந்துபோன அந்தகால நினைவுகள்
மறவாமல் மனமெங்கும் பூக்களைத்தூவ
மனதின் வர்ணங்களெல்லாம் தெளிந்துணர்த்த
மறக்கவில்லை எதையும் நானின்று!
நிஜங்கள்
மனதின் மென்மையான பிரதேசங்களில்
தியானத்திலிருப்பதை
மறதியென்று பெயரிடல்
சரியாயென்று
கலைந்த தவங்கள் மகிழ்ச்சியிலின்று!
Monday, September 3, 2007
இறைவா...!!!
நீ என்னை மறப்பதுமில்லை
என்னை விட்டு விலகுவதுமில்லை!
சிரித்தால் என்னோடு சிரிக்கும் உலகம்
அழுதால் எனக்கு தனிமையை அனுப்பும்
என்னோடு நீயிருப்பதை அறியாமல்!
உமையென்றும் நினைத்து வாழும்
உள்ளமெனக்கென்றும் தாரும்
என்னுயிர் இறைவா!
உம்மை அறிவதால்
உண்மை அறிகிறேன்
உமது பணிகளைச் செய்வதிலேயே
நான் நிஜ மகிழ்ச்சியடைகிறேன்
உமது சித்தத்தின்படி வாழ்வதினாலென்
கவலைகள் கரைந்து மகிழ்கிறது
எனது மறைவான பிரதேசங்களிலுமென்
தவறுகளை வெளிப்படுத்துகிறீர்
நகையாக ஆசைப்பட்ட உலோகமெனக்கு
சோதனைகளும் கவலைகளும் - இனி
கொஞ்சகாலமே
சோதனைகளை வெல்ல
உமது கிருபைகள் மட்டும் போதும்
சோதனைகளில் வென்றுதும்
என்னிலுள்ள உம்மை காண்கிறேன்
இறைவா
என்னை உமது கண்களென்றாய்
எனக்கினி ஏது பயம்!