Wednesday, June 20, 2007
Saturday, June 16, 2007
கனகமணி
(கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று, விபத்து ஒன்றில், பார்வையற்ற எனது தோழியின் இறப்புச் செய்தி கேட்டதும் எனது மனதில் எழுந்த உணர்வுகள்...)
கனக இதயமும்
மணியான சொல்லும்
இணைந்த பெண்மணி
எங்கள் கனகமணி!
ஒவ்வொரு சிந்தனையிலும்
புதுப்பார்வைகளைப் பொழிந்த
தைரியத் திருமகள் உனக்கு ஏனோ
பார்வை தரவில்லையே இயற்கை!
அக்கா! தோழி!
என்ற பாச உறவில்
எனைப் பார்த்த கனகமணி
என்றோ இறந்து போனதை
இன்றே நானறிய
நானுமின்று
குருடனாகிவிட்டேனே!
கடைசியில்
எங்கள்
கனகத்தை
மணியை
கனகமணியை
இந்த உலகம்
தகனம் செய்து விட்டதே!
மனமுருகும் மனமுடையோள் - நீ
எரிந்துருக
நெருப்பும் உருகியிருக்குமே!
அழுதேன்!
அழுத கண்ணீரில்
அதிசயமாய் - நீ
அவதரிக்க மாட்டாயா
என்று
இன்றெல்லாம்
அழுதேனே!
அழுது ஓயாத என்
இதயத்தின் கண்ணீர்
மௌனமென்று
இன்றுதானே
நானுணர்ந்தேன்!
மனசில் மெல்லிய
பிரதேசங்களெங்கும்
நிறைந்த
நினைவுகள் மறக்குமா
உந்தன்
சிரிக்கும் சத்தம்!
காதுகள் மறந்து விடுமோ
உந்தன்
கர்ஜிக்கும் உரிமைக்குரல்!
மணிக்கணக்காய்
என்னிடம் நீ
தொலைபேசியில்
ஒரு வருடமாய் பேசினபோது
என்னையுந்தன்
குறிப்பேடாய் மாற்றுகிறாய்
என்பதை
நான் உணரவில்லையே!
உன் வாழ்க்கை
முடிந்து விட்டது
என் வாழ்க்கையில்
நான் உன்னை
ஒரு முறை கூட
காணாமல்!
நீ
சொன்ன எதையும்
கேட்க - அதற்கு
நேரம் ஒதுக்க
உன்னோடு அழ
சிரிக்க
தைரியம் தர
சமாதானம் செய்ய
இதற்கு தான்
எனது பிறப்போ!
அப்படியென்றால்
எனக்கெதற்கு
இனி வாழ்க்கை!
உன்னை இடித்த அந்த
ஓட்டுனர் தான் குருடன்
எங்கள் மெல்லிய பூவின் மீது
மலையை வீழ்த்தின மூடன்!
எப்படியெல்லாம்
துடி துடித்தாயோ
அழுதாயோ - எங்கள்
தங்கமே!
ஓர் ஆயுள் முழுதும்
பேசவேண்டியதை
தொலைபேசியிலேயே
ஒரு வருடமாய்
என்னிடமே பேசின நீ
எனை விட்டுத் தொலைந்து போனாயே!
இறுதியாக நீ பயணித்த போது
உன் தம்பி என்னை
உன் தோழன் என்னை
தேடியிருப்பாயே!
நீ
உயிரோடிருந்தபோது
உன் இல்லத்திற்கு
எத்த்னையோ முறை
நீ அழைத்தும்
உனைக்காண
வரவில்லையே
ஒரு நாளும் நான்!
நீ
உயிரிழந்த செய்தி
அறியாததால்
உந்தன்
இறுதிப் பயணத்திற்கு
மௌனமாய்
அழுது வழியனுப்பவும்
வரவில்லையே நான்!
என்னை மன்னித்து விடு
என்னை மன்னித்து விடு...
இன்று
என்னிடமே
நான்
முடிவாய்
ஒரு பொய் சொன்னேன்
"கனகமணி இன்றும் உயிரோடு தான் இருக்கிறாள்"!
Wednesday, June 13, 2007
ஓவியம் வரைந்த கவிதைகள்...
அன்பர்களே...
எனது அடுத்த கவிதைத் தொகுப்பு, " ஒவியம் வரைந்த கவிதைகள்" இன்று திருமகள் நிலையத்தார் வெளியிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்..
அன்புடன்
என் சுரேஷ்
Tuesday, June 12, 2007
Friday, June 1, 2007
வாழ்க்கை!
எனக்காக அழுதவனின் கண்களில்
ஆனந்தக் கண்ணீரைக் காண என் வியர்வைத்துளிகள்!
என் கண்களில் கண்ணீரைக் கண்டு மகிழ்ந்த
கனிவற்ற மனிதர்களுக்கு எந்தன் மன்னிப்பு!
சுயவிலாசமற்ற அனாதைகள்
எல்லோருக்கும் நானே மூத்த சகோதரன்!
இனி எதற்கு வாழ்க்கையென்ற முடிவிற்கு வருவோர்
மறுவாழ்வுபெற சகோதர பாசத்துடன் என் வாழ்க்கை!
நான் வாழ வேண்டும்; நீண்ட ஆயுள் எனக்கு வேண்டும்
ஏழைகளின் முகத்தில் புன்னகைக் கண்டு மகிழ!
இது போன்ற அறிக்கைகளையும் ஆசைகளையும்
பிரார்த்த்னைகளாய் கேட்டு மகிழ காத்திருக்கிறார் இறைவன்!
என் உயிரே!
என் துணையே
நீயின்று என்னோடில்லையே!
உந்தனுயிர்
மோட்சமடைந்தாலும்
எந்தன் பேனா
கவிதைக் கண்ணீரில்
மூழ்கினாலும்
என் கண்களில் வெளிவரும்
ஏக்கத்தின் நினைவுச்சாரல் மட்டும்
எனைக் கண்டு
புன்னகைத்துக் கொண்டே இருக்கிறது!
வாழ்ந்த காலத்தில்
கனவிலும் வந்ததேயில்லை
பிரிவென்ற ஓர் உண்மையை - ஆனால்
ஓவ்வொரு நொடியியிலுமுந்தன்
நினைவுகளின் முகில்களுக்குள்
தொலைந்து போகிறேன்
நானும்
நீயில்லாதயென் வாழ்க்கையும்!
உனைப் பிரிந்து
உனையே நினைத்துருகி
வாழுமென் தனிமைப் புத்துலகத்தில்
புரிந்து கொண்டேன் ஓர் உண்மை
நீ என்னோடிருக்கையில் தான்
நானும் ஜிவனோடிருந்தேன்